செவ்வாய், 27 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 12

‘கரோல் பாக்’ கில் உள்ள இராமானுஜம் மெஸ்
திரும்பும் வரை நாங்கள் எதுவும் பேசிக்
கொள்ளவில்லை. இரவு உணவை முடித்துவிட்டு
அறைக்குத் திரும்பியதும்,நண்பர் இராதாகிருஷ்ணன்
ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.உடனே நான் ‘வெகுதூரம்
நடந்தது களைப்பாக இருக்கிறது. காலையில்
பேசிக்கொள்ளலாம்.’எனக்கூறி மேற்கொண்டு
பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல்
படுத்து விட்டேன்.

காலையில் எழுந்ததும் நண்பர் தர்மலிங்கம் என்னிடம்
‘எனது வகுப்பு நண்பர் ஒருவர் இங்கு IARI யில்
முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டு
இருக்கிறார்.அவரை நாம் அழைத்துக்கொண்டு
சென்றால் இந்த மொழிபிரச்சினை இருக்காது.’
என்றார். நானும் முதல் நாள் பட்ட அனுபவத்தால்,
‘சரி’ என சொல்லிவிட்டேன்.

அதுபோலவே அந்த ஞாயிற்றுக்கிழமை காலை
அவரது நண்பர் எங்களது அறைக்கு வந்தார்.
அவரிடம் எங்களது அனுபவத்தை சொன்னதும்
அவர், ‘கன்னோட் பிளேஸ்’ என்பது நம்மைப்
போன்றவர்கட்கு ‘Window Shopping’ செய்ய மட்டுமே.

அங்கு எல்லாமே விலை அதிகம். மற்றும் பேரம்
பேச முடியாது. அதற்கு நீங்கள் இங்கு கரோல் பாக்,
அஜ்மல்கான் சாலையில் உள்ள கடைகளிலும்,
நாளை (திங்களன்று) இங்குள்ள Monday Market எனப்படும்
சாலையோர பிளாட்பாரத்தில் வைக்கப்படும்
கடைகளிலும் பேரம்பேசி(?) எல்லா பொருட்களையும்
வாங்கிக்கொள்ளலாம்.’ என்றார்.

அவருடன் அன்று காலை கிளம்பி, Red Fort,
கன்னோட் பிளேஸ்,Super Bazar,போன்ற இடங்களைப்
பார்த்துவிட்டு மாலையில் Red Fort ல் நடைபெற்ற
Son et lumière எனப்படும் ஒலி ஒளி காட்சியைப்
பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.
(இது பற்றி விரிவாக ‘நினைத்துப் பார்க்கிறேன்’
தொடரில் எழுத இருக்கிறேன்)

தில்லியில் வணிக நிறுவனங்கள்/கடைகள் வாரம்
ஒருமுறை விடப்படும் விடுமுறை நாளை சுழற்சி
முறையில் கடைப்பிடித்து வந்தன.அதனால் ஒவ்வொரு
பகுதியிலும் ஒரே நாளில் விடுமுறை இருக்காது.
இப்போதும் அதே முறை கடைப்பிடிக்கப்படுகிறது
என நினைக்கிறேன்.

இதனால் வாடிக்கையாளர்கள் வாரம் முழுதும்
எங்காவது ஒரு இடத்தில் தேவையானவற்றை
வாங்க முடியும்.அதோடு அல்லாமல் வாடகை இடம்
பிடித்து வணிகம் செய்ய இயலாத சிறு மற்றும்
குறு வணிகர்கள் விடுமுறை விடப்பட்டுள்ள
பகுதிகளின் பெரிய கடைகளின் முன்னே
பிளாட்பாரத்தில் தங்களின் கடையை(!)
ஆரம்பித்துவிடுவார்கள். (நம் ஊர் தியாகராயநகர்
பாண்டி பஜார் கடைகள் போல) ஆனால் இந்த
கடைகள் ஒரு நாள் மட்டுமே அந்த பகுதியில்
இருக்கும்.மேலும் அந்த கடைகள் நடக்கும்
நாளின் பெயரால் அழைக்கப்பட்டன.

இதனால் அவர்களுக்கு வாரம் முழுதும்
ஏதாவது ஒரு பகுதியில் வணிகம் செய்யும்
வாய்ப்பு கிடைப்பதால்,வருடம் முழுதும்
அவர்களால் நிரந்தர இடம் இல்லாவிடினும்
வணிகம் செய்ய முடியும்.

பொதுமக்களுக்கும்,அவரவர் பகுதியில் வாரம்
முழுதும் கடைகள் திறந்திருப்பதால் பொருட்களை
நினைத்தபோது வாங்கமுடியும்.இவ்வாறு
விடுமுறை நாட்களில் உள்ள தெருவோர கடைகளில்
எல்லா பொருட்களும் குறைந்த விலையில்
கிடைத்ததால், அன்று கூட்டமும் அலைமோதும்.

கரோல் பாக் உள்ள கடைகள் திங்கள் கிழமையில்
விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.அப்போது
நடக்கும் இந்த தெருவோர கடைகளுக்கு
Monday Market எனப் பெயர்.

தர்மலிங்கத்தின் நண்பர் சொன்ன யோசனைப்படி,
மறுநாள் மாலை பயிற்சி முடிந்து அறைக்குத்
திரும்பியதும் காபி குடித்துவிட்டு,
Monday Market க்கு கிளம்பினோம்.

அப்போது நான் சொன்னேன் ‘இங்கு எல்லாமே
பேரம்பேசித்தான் வாங்கமுடியுமாம்.நமக்கு இந்தி
தெரியாததால் எப்படி வாங்கப்போகிறோமோ?’ என்று.

உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,‘சென்ற வாரம்
பேருந்தில் நடந்ததை வைத்து,எனக்கு இந்தி
தெரியாது என நினைத்து விடாதீர்கள். அந்த
நடத்துனர் வேகமாக இந்தியில் பேசியதால்,
எனக்கு அவர் கேட்டது புரியவில்லை.இங்கு
அப்படியில்லை.சாவகாசமாக பேசி பேரம் செய்ய
நான் உதவுகிறேன்.’என்றார். வேறு வழியின்றி
நானும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.

அந்த Monday Market அஜ்மல்கான் சாலையில்,
பூசா சாலை ஆரம்பத்திலிருந்து, ஆர்ய சமாஜ் சாலை
வரையிலும்,ஏன் அதைத் தாண்டியும் சாலையின்
இருபக்கங்களிலும் உள்ள பிளாட்பாரங்களில்
விரிந்திருந்தது. .

நாங்கள் பூசா சாலையில் ஆரம்பித்து ஆர்யாசமாஜ்
சாலை வரை உள்ள எல்லா கடைகளையும்
ஒரு முறை பார்த்துவிட்டு,பின்பு தேவையானவற்றை
வாங்கலாம் எனத் தீர்மானித்து நடக்கத்தொடங்கினோம்.

கைக்குட்டைகள், புடவைகள், உள்ளாடைகள்,
சட்டைகள், பீங்கான் சாமான்கள், காலணிகள் என
நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களும்
அங்கு இருப்பதைப் பார்த்தோம்.

அப்போது அங்கு ஒரு சர்தார்ஜி இரப்பர்
காலணிகளைப் போட்டு விற்றுக்கொண்டிருந்ததைப்
பார்த்ததும், நான் எனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்க
எண்ணினேன். நான் அந்த கடை அருகே சென்றதும்
நண்பர்கள் தர்மலிங்கமும் இராதாகிருஷ்ணனும்
என்னுடன் வந்தார்கள்.

நான் அங்குள்ள செருப்பு ஒன்றை எடுத்துப் பார்த்ததும்,
நண்பர் ‘இதை வாங்க வேண்டுமா என்றார்?
‘ஆம்’ என்றதும், நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த
வணிகரிடம், ‘யே கித்னா ஹை?’
(இதன் விலை எவ்வளவு?) என்றார்.தொடரும்

8 கருத்துகள்:

 1. என்ன விலை சொன்னார்? எவ்வளவுக்கு குறைத்து வாங்கினீர்கள்? இல்லை இந்தியில் ஏதாவது குழப்பம் நேர்ந்ததா... பார்க்கலாம் என்ன தொடர்கிறதென்று. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! இந்தி பேசத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பத்தைப்பற்றி அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன்.உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாதா ......என்பது போல உள்ளது ! வெறும் நகைச்சுவைக்காக கூறினேன் . சுவாரஸ்யமாக உள்ளது . நண்பர் ராதாகிருஷ்ணன் பேரம் ஒழுங்காக நடத்தினாரா என்று அறிய ஆவலாக உள்ளது . தலை நகர் செல்ல நினைப்பவர்களுக்கு பயனுள்ள செய்திகள் தங்கள் பதிவில் கண்டேன் ....தொடரட்டும் உங்கள் பதிவு . மேலும் பல இடங்களுக்கு அழைத்து செல்வீர்கள் என எண்ணுகிறேன் . வாசு

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!இந்த பதிவு ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக மட்டுமே. அதனால் தில்லியின் மற்ற இடங்கள் பற்றி இந்த பதிவில் எழுத உத்தேசமில்லை.
  ஆனால் நான் தில்லியில் பணிபுரிந்தது பற்றி எழுதும்போது (உங்களையும் சேர்த்துத்தான்) நிச்சயம் நினைவோட்டம் தொடரில் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 5. மொழி தெரியாவிடில் படும் பாடு பற்றி சுவையாக உள்ளது சகோதரா. தொடருங்கள். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 6. கருத்துக்கு நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அடுத்த பதிவு சஸ்பென்ஸ் என்ன என்பதை சொல்லும்.

  பதிலளிநீக்கு