எனது பள்ளிப் பருவத்திலும், கல்லூரி நாட்களிலும் பின்னர் மாநில அரசின் வேளாண்மைத்துறையிலும் மற்றும் மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைக் கழகத்திலும், நாட்டுடைமையாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியிலும் பணி புரிந்தபோது மேற்கொண்ட பயணங்கள் அநேகம்.
அதனால் தான் என்னவோ ‘எனது எண்ணங்கள்’ பதிவர் நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை பயணங்கள் முடிவதில்லை என்ற கேள்வி பதில் கொண்ட தொடர் பதிவை எழுத பணித்திருக்கிறார் போலும்.
இந்த தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவு எழுத பதிவர்களை அழைக்கும் வழக்கம் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பமானபோது ,அவைகளை படித்து இரசித்துக் கொண்டிருந்த என்னை தொடர் பதிவை எழுத திரு சென்னை பித்தன் அவர்கள் அழைத்ததால் நான் எழுதிய முதல் தொடர்பதிவு நண்பேண்டா என்ற என்ற தொடர் பதிவு தான்.
பின்னர் அவரது அழைப்பின் பேரில் முத்தான மூன்று மற்றும் மழலை உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவுகளையும், மின்னல்வரிகள் திரு பால கணேஷ் அவர்கள் அழைப்பை ஏற்று மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்ற தொடர் பதிவையும் எழுதியுள்ளேன்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர் திரு குட்டன் அவர்களின் அழைப்பின் பேரில் எனது முதல் கணினி அனுபவம் பற்றிய தொடர் பதிவையும், வலைச்சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அன்புக்கட்டளையை ஏற்று முதல் பதிவின் சந்தோசம் என்ற தொடர் பதிவையும் எழுதினேன்.
பிறகு ஓராண்டு காலம் கழித்து திரு மதுரைத்தமிழன் அவர்கள் அந்த பழக்கத்தை திரும்பவும் ஆரம்பித்து வைத்து திரு சொக்கன் சுப்ரமணியம் அவர்களை அழைக்க அவர் அபுதாபியில் இருக்கும் நண்பர் தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களை அழைக்க அவர் என்னை தொடர் பதிவிட அழைக்க நான் கடைசியாக எழுதிய தொடர் பதிவு என்னைக் கேட்டால்? என்பதாகும்.
திரும்பவும் நண்பர் தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்கள் என்னை கனவில் வந்த காந்தி என்ற தலைப்பில் தொடர் பதிவிட அழைக்க நான் கடைசியாக எழுதிய தொடர் பதிவு கனவில் வந்த காந்தி தான்.
மீண்டும் நண்பர் தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்கள் என்னை கடவுளைக் கண்டேன் என்ற தலைப்பில் தொடர் பதிவிட 2015 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 12 ஆம் நாள் பணித்திருந்தார். நான் அந்த பதிவை எழுதுவதாக வாக்களித்தபோதும் இதுவரை எழுதவில்லை. அவர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கூடிய விரைவில் நிச்சயம் எழுதுவேன்
நண்பர் திரு தி தமிழ் இளங்கோ அவர்கள் என்னை பயணங்கள் முடிவதில்லை என்ற தலைப்பில் தொடர் பதிவிட அழைத்தாலும் பதிவின் தலைப்பை தொடரும் பயணங்கள் என்று மாற்றியே எனது பதில்களைத் தந்திருக்கிறேன்.
1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
விருத்தாசலம் இரயில் சந்திப்பிலிருந்து மேட்டூருக்கு எங்கள் அப்பா அம்மாவுடன் சென்ற எனது முதல் இரயில் பயணம் இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. அப்போது நான் (1952 ஆம் ஆண்டு) மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.எனது மூத்த அண்ணன் திரு மகாலிங்கம் அவர்கள் மேட்டூரில் புனல் மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவரைப் பார்க்க எங்கள் ஊரான தெற்கு வடக்குப் புத்தூரிலிருந்து மாட்டுவண்டியில் விருத்தாசலம் இரயில் சந்திப்பு சென்று அங்கிருந்து இரவு இரயிலில் சேலம் செல்லும் இரயிலில் சென்றோம். இரவு நேரமாதலால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. அப்பா மேட்டூருக்கு இரயில் பயணச் சீட்டு எடுத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் மறு நாள் காலை சேலம் சந்திப்பை அடையுமுன்பு அங்கிருந்து மேட்டூர் செல்லும் இணைப்பு இரயில் புறப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி மேட்டூருக்கு பேருந்தில் பயணிக்க வேண்டியதாயிற்று. அப்போது நான் இரயிலில் தான் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து அழுதது நினைவில் இருக்கிறது.
2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் என்றால் அரியலூரில் 1955 ஆம் ஆண்டு இரண்டாம் படிவம் (7 ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பு மாணவர்களோடு கல்லணைக்கு இன்பச் சுற்றுலா சென்றதுதான். பள்ளி ஏற்பாடு செய்திருந்த அந்த பயணத்தில் இரு ஆசிரியர்கள் உடன் வர அரியலூரிலிருந்து இலால்குடி வரை இரயிலில் சென்று இரவு இலால்குடி உயர்நிலைப்பள்ளியில் தங்கி காலையில் நடந்தே கல்லணை சென்று வந்தோம்.
மாலை 6 மணிக்கு புறப்பட்ட இரயிலில் சக மாணவர்களோடு சிரித்து பேசிக்கொண்டு இருந்ததும், டால்மியாபுரம் என்கிற கல்லக்குடி பழங்கானத்தம் என்ற இரயில் நிலையம் அடைந்ததும் அதன் அருகில் இருந்த பசுங்காரை தொழிற்சாலை (Cement Factory) முழுதும் ஒளிர்ந்துகொண்டிருந்த மின் விளக்குகளை பார்த்து அதிசயித்ததும், மறு நாள் கல்லணையை சுற்றிப்பார்த்துவிட்டு காவிரியில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் குளித்துவிட்டு திரும்பவும் நடந்தே இலால்குடி வந்து இரயிலேறி அரியலூர் வந்ததும் என்னால் மறக்க முடியாத பயணம்.
ஆனால் இதைவிட என்னால் மறக்கமுடியாத பயணம் ஒன்று உண்டென்றால் நான் மேற்கொண்ட குதிரைப்பயணம் தான். 1967 ஆம் ஆண்டு தேசிய விதைக் கழகத்தில் (National Seeds Corporation Ltd.) கர்நாடக மாநிலத்தில் (அப்போது மைசூர் மாநிலம்) உள்ள ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூர் என்ற ஊரில் பணியாற்றியபோது, அண்டை மாவட்டமான கலபுரகி யில் (அப்போதைய பெயர் குல்பர்கா) இருக்கும் சேடம் என்ற ஊருக்கு அருகே உள்ள ஒரு சிற்றூரில் பயிரிடப்பட்டிருந்த வீரிய மக்காச் சோள விதைப்பண்ணையை பார்வையிட சென்றேன், (வீரிய விதைகளுக்கு சான்று அளிக்கும் (Hybrid Seed Certification) பணியில் அப்போது இருந்தேன்.)
சிந்தனூலிருந்து காலை அரசுப் பேருந்தில் புறப்பட்டு ரெய்ச்சூர் வழியாக 238 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த குல்பர்கா சென்று அங்கு திரும்பவும் பேருந்து மூலம் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சேடம் என்ற ஊரை அடையும்போது மாலை ஆகிவிட்டது.
அங்கிருந்த அரசு வேளாண் அலுவலர் நான் செல்லவேண்டிய ஊருக்கு பேருந்து வசதி இல்லாததால் தனது அலுவலக ‘ஜீப்’பை தந்துதவினார். அந்த ஜீப் ஓட்டுனர் என்னை அந்த பண்ணையில் இறக்கிவிட்டு சேடத்திற்கு திரும்பிவிட்டார். நான் அந்த பண்ணையை பார்த்து எனது அறிக்கையை எழுதிவிட்டு திரும்ப சிந்தனூர் செல்லவேண்டும் என்றதற்கு அந்த பண்ணையின் விவசாயி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Shahabad இரயில் நிலையம் சென்று Wadi இரயில் சந்திப்பு சென்று ரெய்ச்சூர் போய் சிந்தனூர் செல்லலாம் என்றார்
அதற்குள் இருட்டத் தொடங்கிட்டது. எப்படி செல்வது என யோசித்தபோது Shahabad இரயில் நிலையம் செல்ல அவர் தனது குதிரையை தருவதாக சொன்னார். எனக்கு ‘குதிரையில் பயணித்து பழக்கமில்லை’ என்று சொன்னதிற்கு ‘கவலை வேண்டாம். எனது குதிரை சாதுவானது. எனது ஆளும் கூடவே வருவார். மேலும் நிலவொளி இருப்பதால் பயமில்லாமல் நீங்கள் பயணிக்கலாம்.’ என்றார்.
அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தயங்கிக்கொண்டே குதிரையங்கவடி (Stirrup) யில் கால் வைத்து கஷ்டப்பட்டு ஏறி சேணத்தில் அமர்ந்தேன். அந்த உதவியாளர் லகானை (Rein) பிடித்துக்கொள்ள எனது குதிரை சவாரி தொடங்கியது. நான் நினைத்தது போல் அது என்னை கீழே தள்ளவில்லை. சிறிது தூரம் சென்றதும் அவர் அந்த லகானை என்னிடம் கொடுத்துவிட்டு கூடவே நடந்து வந்தார்.
அதற்குப் பிறகு நடந்ததுதான் வேடிக்கை. நன்றாக சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த குதிரை திடீரென அந்த சிற்றூர் சாலையை விட்டிறங்கியது. என்ன நடக்குமோ என நான் பயந்துபோனேன். ஆனால் அது அமைதியாக அருகில் பயிரிட்டிருந்த கொண்டை கடலை (Bengal Gram) பயிரை மேயத் தொடங்கிவிட்டது.
உடனே அந்த உதவியாளர் வந்து அதை தாஜா செய்து சாலைக்கு கொண்டுவந்ததும் சிறிது தூரம் சாலையில் சென்றுவிட்டு திரும்பவும் வயலில் இறங்கிவிட்டது. இப்படியே 5 கிலோ மீட்டர் தொலைவு வரை அது வயலில் இறங்கி பயிரை மேய்வதும் பின்னர் சாலைக்கு வருவதுமாக இருக்க நானும் அப்போதெல்லாம் பந்தயக்குதிரை ஓட்டுபவர் போல் முன்னால் சாய்ந்து விழாமல் இருந்து ஒரு வழியாக ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் இரயில் நிலையம் சென்றடைந்தேன். பின்னர் இரயில் ஏறி ரெய்ச்சூர் வந்து பின்னர் பேருந்தில் ஏறி சிந்தனூர் வந்து விட்டேன். இன்று வரை அந்த குதிரைப் பயணம் தான் என்னால் மறக்க இயலாத பயணம்.
3.எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
அலுவலக பணியாக செல்லும்போது தனியாகவே பயணிக்க வேண்டியிருக்கும். இரயிலிலோ பெருந்திலோ செல்லும்போது சன்னல் ஓர இருக்கையைத்தான் விரும்புவேன்.
4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை
பயணத்தின் போது இசை கேட்பதில் விருப்பம் இருப்பதில்லை.
5.விருப்பமான பயண நேரம்
கூடியவரை இரவுப் பயணம் தான் பிடிக்கும். ஏனெனில் பகல் நேரத்தை பயணத்தில் வீணாக்க விரும்புவதில்லை.
6.விருப்பமான பயணத்துணை.
சில பயணங்களுக்கு தனியே செல்ல வேண்டியிருக்கும் எனவே துணிவே துணை!
7.பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
பகலில் பயணம் செய்ய வேண்டியிருந்தால் கல்கியின் நாவல்கள் போன்று ஒன்றை கொண்டு செல்ல விருப்பம்.
8.விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அப்படி ஏதும் இல்லை.
9.பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
முன்பெல்லாம்( இளைஞனாக இருக்கும்போது ) ‘மன்னிக்க வேண்டுகிறேன்.’ என்ற பாடல். இப்போது அந்த பழக்கம் இல்லை.
10.கனவுப் பயணம் ஏதாவது ?
ஒழுங்குக்கும் கட்டுப்பாடிற்கும் பெயர் போன சிங்கப்பூர் நகரை பார்க்கவேண்டும் என்ற ஆசை 2004 ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது. 2004 ஆம் ஆண்டில் அந்த ஊரைப் பார்த்து விட்டதால் இப்போது எதுவும் இல்லை.
நண்பர் திரு தி, தமிழ் இளங்கோ அவர்கள் கேட்டுக்கொண்டபடி இதோ பதிவிட்டுவிட்டேன். திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னதுபோல் தொடர் பதிவிட நண்பர்கள் தயங்குவதால் நான் யாரையும் அழைக்கப் போவதில்லை.
அருமையான பயணம்! ரசனை மிகுந்ததாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குத ம 1
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P. செந்தில்குமார் அவர்களே!
நீக்குநினைவுகளைத் தூண்டிய பதிவு.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!
நீக்குவணக்கம் நண்பரே தங்களது பயண அனுபவங்களை முன்னுரையாக விளக்கம் கொடுத்து விட்டு அடுத்து கேள்விகளுக்கு ரத்தினச்சுருக்கமாக பதில் தந்தது சிறப்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமேலும் எல்ல விபரமும் சொன்னீர்கள் 2014 நவம்பரில் நான் அழைத்து ‘’கனவில் வந்த காந்தி’’ தொடர் பதிவில் தாங்கள் கலந்து கொண்டதை மறந்து விட்டீர்களே...
தமிழ் மணம் 2
வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குதாங்கள் என்னை தொடர் பதிவிடச் சொல்லி, நான் பதிவிட்ட ‘கனவில் வந்த காந்தி ‘பற்றியும் செப்பமற்ற படி (Rough Copy) யில் எழுதி வைத்திருந்தேன்.ஆனால் செவ்வைப்படி (Fair Copy) செய்து பதிவேற்றும்போது எப்படியோ விட்டுப்போயிற்று.தவறை சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி! தவறை உடனே சரி செய்துவிட்டேன்.
//இந்த தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவு எழுத பதிவர்களை அழைக்கும் வழக்கம் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பமானது.//
பதிலளிநீக்குஆமாம். நானும் 2011 இல் சக பதிவர்களின் அன்புத்தொல்லைக்காக ஏழு தொடர்பதிவுகள் எழுத நேர்ந்தது.
(1)
உணவே வா! உயிரே போ!! [சமையல் பற்றிய நகைச்சுவை]
முத்துச்சிதறல் திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
(2)
”பெயர் காரணம் [நகைச்சுவை]”
’கற்றலும் கேட்டலும்’ திருமதி. ராஜி அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html
(3)
”மூன்று முடிச்சு”
’மணிராஜ்’ திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_18.html
(4)
”முன்னுரை என்னும் முகத்திரை”
’முத்துச்சிதறல்’ திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html
(5)
”ஊரைச்சொல்லவா.. பேரைச்சொல்லவா! ”
[திருச்சி பற்றிய அலசல்]
’காகிதப்பூக்கள்’ திருமதி. ஏஞ்சலின் அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html
(6)
”மழலைகள் உலகம் மகத்தானது”
அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்
ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html
(7)
நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி!
[இந்த 2011 வருடத்தில் நான்]
’மணிராஜ்’ திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்காக!
http://gopu1949.blogspot.in/2011/12/2011.html
(8)
அதன்பின் 2012-இல்
அவர்கள் உண்மைகள் +
திருமதி. ஷக்தி ப்ரபா ஆகிய இருவருக்காகவும்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’
http://gopu1949.blogspot.in/2012/03/1.html
(9)
அதன்பின் 2013-இல்
(இரண்டு தொடர்பதிவுகள்)
நம் மூன்றாம் சுழி வலைப்பதிவர்
திரு. அப்பாதுரை அவர்களுக்காக
‘என் வீட்டு ஜன்னல் கம்பி
ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்’
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
(10)
நம் காகிதப்பூக்கள் திருமதி. ஏஞ்சலின்
மற்றும்
திருமதி. ஆசியா ஓமர்
ஆகிய இருவரின் வேண்டுகோளுக்காக
‘பொக்கிஷம்’ தொடர்
http://gopu1949.blogspot.in/2013/03/1.html
-=-=-=-=-=-=-
இந்தப் பத்து தொடர் பதிவுகளுக்குப்பின்பும் என்னை பலரும் பல தலைப்புகளில் தொடர்பதிவு எழுத அழைத்திருந்தார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் அவற்றை நான் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர்கள் அனைவரும் என்னை மன்னிப்பார்களாக !
>>>>>
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தாங்கள் 10 தொடர் பதிவுகள் எழுதியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.அவைகளைப் படித்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன்.
இந்தத் தங்களின் பதிவினில், கேள்விக்கான தங்களின் பதில்கள் மிகவும் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் உள்ளன.
பதிலளிநீக்குபாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
//ஒழுங்குக்கும் கட்டுப்பாடிற்கும் பெயர் போன சிங்கப்பூர் நகரை பார்க்கவேண்டும் என்ற ஆசை 2004 ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது. 2004ஆம் ஆண்டில் அந்த ஊரைப் பார்த்து விட்டதால் இப்போது எதுவும் இல்லை. //
எனக்கும் இந்த ஆசை மிகவும் உள்ளது. வாய்ப்புகளும் உறவினர் பலரின் அன்பான அழைப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளன. இருப்பினும் ஏதோ ஒரு தயக்கம் என்னுள் உள்ளதால் ஒத்திப்போட்டுக்கொண்டே வருகிறேன்.
12 வயதில் இலால்குடி முதல் கல்லணை வரை நடந்தே சென்றுள்ளது கேட்க ஆச்சர்யமாக உள்ளது.
>>>>>
நீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அப்போது காலில் செருப்பு இல்லாமல் இலால்குடியிலிருந்து கல்லணை வரை நடந்து திரும்பியதை இன்று நினைக்கும்போது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இளம் வயதும், நண்பர்களோடு புதிய இடத்தை பார்க்கும் ஆவலும், நேரத்தையோ தூரத்தையோ பொருட்படுத்தவில்லை என நினைக்கிறேன்.
//திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னதுபோல் தொடர் பதிவிட நண்பர்கள் தயங்குவதால் நான் யாரையும் அழைக்கப் போவதில்லை. //
பதிலளிநீக்குமிகவும் பாராட்டத்தக்க செயல். மிக்க நன்றி, சார். :)
பாராட்டுக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்குசிறப்பான பதில்கள். இப்பதிவுகள் மூலம் உங்களது வித்தியாசமான குதிரைப் பயணம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குஆகா...! அருமை ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
நீக்குஎனது பயணத்தில் உங்களின் கருத்து வேண்டும் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குசனவரி 17 ஆம் நாளன்று ஊரில் இல்லாததால் தங்கள் பதிவை என்னால் பார்க்க இயலவில்லை. இன்று படித்துவிட்டு எனது கருத்தைத் தந்திருக்கிறேன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அற்புதமான பயண அனுபவம்... பகிர்வுக்கு நன்றி.த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் ரூபன் அவர்களே!
நீக்குHappy to read the writing.The flow is simple and enjoyable.
பதிலளிநீக்குBest wishes!
வருகைக்கும்,பாராட்டுக்கும், நன்றி Mywish நண்பரே!
நீக்குதொடர் பயணத்தில் கலந்துகொண்டேன். மன நிறைவாக இருந்தது.
பதிலளிநீக்குதொடர் பயணத்தில் கலந்துகொண்டு பாராட்டியமைக்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குகுதிரைப் பயணம் அனுஅவக் கட்டுரை மிக அருமை. வடக்கு கர்னாடகா மக்கள் கள்ளம் கபடம் இல்லா வெள்ளந்தி மக்கள். ஆனால் நகைச்சுவை உணர்வு மிக்கர்வள். தாங்கள் மந்த்ராலயமும் சென்று இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! இதுவரை நான் மேற்கொண்ட பயணங்களில் என்னால் மறக்கமுடியாத பயணம் அந்த குதிரைப்பயணம் தான்.
நீக்குசிண்டிகேட் வங்கியில் சேருவதற்கு முன் நான் கர்நாடகாவில் (அப்போது மைசூர் மாநிலம்) தார்வார், கதக், சாந்தூர் (பெல்லாரி) சிந்தனூர்(ரெய்ச்சூர்), ஜம்கண்டி (பிஜப்பூர்), கட்டபிரபா(பெல்காம்) போன்ற வட கர்நாடக மாவட்டங்களில் உள்ள ஊர்களிலும் பெங்களூருவிலும் பணியாற்றியுள்ளேன். நீங்கள் சொல்வதுபோல் வட கர்நாடக (பாம்பே கர்நாடகா என சொல்வார்கள்) மக்கள் கள்ளம் கபடில்லாத வெள்ளந்தியான மக்கள். அவர்களிட்ம் பேசிப் பேசித்தான் கன்னடத்தை மூன்றே மாதங்களில் கற்றுக்கொண்டேன்.
எனது NSC பணி பற்றி எழுதும்போது நிச்சயம் அவர்களைப்பற்றி எழுதுவேன். சேடம் சென்றபோது மந்த்ராலயம் செல்ல இயலவில்லை. காரணம் அப்போதெல்லாம் வீரியவிதை பெருக்கும் விவசாயிகளின் நிலங்களுக்கு விதைகள் குறிப்பிட்ட தரத்தில் உண்டாக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அடிக்கடி செல்லவேண்டும். எனவே அடுத்த மாநிலத்திற்கு செல்லும் வாய்ப்பு இல்லை. ஆனால் மகான் இராகவேந்திரர் பிறந்த எங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரிக்கு சென்றிருக்கிறேன். (நான் வேளாண் அறிவியல்) படித்தது புவனகிரிக்கு அருகில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பதை தாங்கள் அறிவீர்கள். மந்த்ராலயம் மற்றும் ஸ்ரீசைலம் ஆகிய இடங்களுக்கு செல்ல உத்தேசம்.
தொடர் பதிவு ஓட்டத்தின் ஜோதி தரிசனம் நிறைவு
பதிலளிநீக்குசிங்கார எழுத்து, ஓங்கார ஒளி! அருமை அய்யா!
எனக்கும் எழுத காலம் கை கொடுக்க வில்லை!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!
நீக்குஎனது அன்பான வேண்டுகோளுக்கு ஒரு பதிவினைத் தந்த அய்யா V.N.S. அவர்களுக்கு நன்றி. நீங்கள் எந்த தலைப்பினில் எழுதினாலும் அது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குலால்குடி – கல்லணை நடை பயணம். இப்போது நினைத்தாலும் முடியாது. நான் சிறுவனாக இருந்தபோது,, எங்கள் தாத்தா ஊரில் இருந்த ஒரு மணல்மேட்டிலிருந்து, நீங்கள் குறிப்பிடும் டால்மியாபுரம் சிமெண்ட் பாக்டரி விளக்குகள் வெளிச்சத்தினை இரவில் கண்டு ரசித்து இருக்கிறேன்.
உங்களது குதிரைப்பயணம் உண்மையிலேயே மறக்க முடியாத ஒன்றுதான்.
நானும் தொடர்பதிவு எழுதுவதாகவோ அல்லது மற்றவர்களை அழைப்பதாகவோ இல்லைதான். ஆனால் இப்போது வலைப்பக்கம் நிறையபேர் வருவதில்லை என்பதாலும், வலைப்பக்கம் வரும் நண்பர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதாலும் தொடர் பதிவை எழுதினேன்; மற்றவர்களையும் அழைத்தேன் அய்யா!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! எனது பயணங்கள் பற்றி எழுத வாய்ப்பு தந்த தங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
நீக்குதொடர் பதிவு எழுத சக பதிவர்களை அழைத்ததில் தப்பில்லை. அவ்வாறு அழைக்கும்போது அந்த பதிவர்கள் இதுவரை அவர்கள் பதில் சொல்லாத/ எழுதாத புதிய தகவல்களை நாம் பெற வாய்ப்புண்டு. ஆனால் சிலர் நேரமின்மை காரணமாகவோ அல்லது விருப்பமின்மை காரணமாகவோ தொடர் பதிவிட இயலாமல் போகலாம். அதனால் தான் நான் மற்ற பதிவர்களை அழைத்து அவர்களுக்கு தர்மசங்கடம் தர விரும்புவதில்லை. மற்றபடி நீங்கள் என்னை அழைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே.
சுவையான பயணங்கள்! பதில்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!
பதிலளிநீக்குமலரும் நினைவுகள்! அருமை!
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
நீக்கு