வெள்ளி, 8 ஜனவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.15


மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களாகிய நாங்கள் 27-01-1965 ஆம் ஆண்டு நடத்திய கண்டன ஊர்வலத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவன் ஒருவனை பறிகொடுத்தோம் என்பதையும், அதற்கு நீதி கேட்டு எங்கள் பல் கலைக் கழகத்தின் Eastern Hostel இன் முன் வாயில் கதவருகே நாங்கள் அமர்ந்திருந்தபோது சிதம்பரம் நகரசபை தலைவர் வந்து பேசியும் எங்களை சமாதானப்படுத்தமுடியாமல் திரும்பிவிட்டார் என்று சொல்லியிருந்தேன்.



நாங்கள் அங்கேயே உட்கார்ந்திருந்தபோது திரும்பவும் உணவகங்களில் உள்ள ஊழியர்கள் வந்து ‘தயை செய்து வந்து சாப்பிட்டு விட்டு வாருங்கள். இல்லாவிடில் 3000 பேருக்கு சமைத்த உணவை குப்பையில் கொட்டவேண்டி வரும். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிக்கை (Notification) பற்றி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம் என்றும் சொல்லியிருந்தேன்.

பல்கலைக்கழகமும் அதோடு, நாங்கள் தங்கியிருந்த Eastern Hostel. பொறியியல் மாணவர்கள் தங்கியிருந்த Western Hostel மற்றும் Ladies Hostel ஆகியவைகளும் மற்றும் அனைத்து உணவகங்களும் கால வரையின்றி உடனே மூடப்படுவதாகவும், விடுதிகளில் தங்கியுள்ள எல்லா மாணவர்களும் மாலை 6 மணிக்குள் விடுதியை காலி செய்துவிட்டு அண்ணாமலை நகரை விட்டு வெளியேறவேண்டும் என்றும் மீறி தங்கினால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்றும் அறிவிக்கை
தெரிவிப்பதாக அந்த மாணவர் சொன்னபோது எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம்.

மேற்கொண்டு என்ன செய்வது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, சில மாணவர்கள் ‘நாம் யாரும் அறையைக் காலி செய்து வெளியேறவேண்டாம். இங்கேயே இருந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடரலாம்,’ என்றார்கள்.

ஆனால் வேறு சிலர், ‘ விடுதியை மூடிவிட்டால் நிச்சயம் குடிநீர், மின்சாரம் போன்றவைகள் துண்டித்துவிடுவார்கள். அப்போது நம்மால் இங்கு இருக்க இயலாது. மேலும் பல்கலைக்கழகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் பலருடைய உயிருக்கு யாரும் பொறுப்புறுதி (Guarantee) தர இயலாது. மேலும் இங்கு தங்கினால் மேலும் பல இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே நாம் இங்கிருந்து வெளியேறி மற்ற இடங்களில் இருந்து போராட்டத்தை தொடர்வதே நல்லது.’ என்று கருத்து தெரிவித்தார்கள்.

இப்படி எல்லோரும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவர் வந்து ‘காவல் துறையினர், அவர்களது பேருந்துகளில் சாரி சாரியாக அதிக அளவில் பல்கலைக் கழகத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். பல்கலைக்கழகம் முழுதும் அவர்கள் இருக்கப்போவது உறுதியாகிவிட்டது.’ என்றார்.

அதற்குள் மணி 4 ஆகி விட்டதால், வேறு வழியின்றி அனைவரும் சரி வெளியேரலாம் என கிளம்ப தீர்மானித்தபோது, உணவக ஊழியர்கள் திரும்பவும் வந்து கொஞ்சமாவது சாப்பிட்டு செல்லுங்கள். இனி. எங்கு போய் சாப்பிடப்போகிறீர்களோ? நீங்கள் சாப்பிடாமல் சென்றுவிட்டால் 3000 பேருக்கு சமைத்த உணவு இங்கும் வீணாகிவிடும்..’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

எல்லோரும் விருப்பமில்லாமல் அவரவர் உணவகத்திற்கு சென்று பேருக்கு சாப்பிட்டுவிட்டு ( பசி கடந்தபின் மாலை 4 மணிக்கு எப்படி நிறைவாக சாப்பிட இயலும்.அதுவும் துக்க நிலையில்) அவரவர் அறைக்கு திரும்பி ஒரு சிறிய கைப்பையில் தேவையானவைகளை எடுத்துக்கொண்டோம்.

திரும்ப எப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு வருவோம் எனத் தெரியாத நிலையில் சுமார் 5 மணி அளவில் விடுதியை விட்டு சிதம்பரம் நகரை நோக்கி நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் எதிரே அநேக காவல்துறையினர் அண்ணாமலை நகரை நோக்கி வருவதைக் கண்டோம்.

இரயில் செல்ல விரும்பியவர்கள் அண்ணாமலை நகரை அடுத்த சிதம்பரம் இரயில் நிலையம் சென்றார்கள். சிதம்பரம் சென்றவர்களுக்குத் தெரியும் அது எவ்வளவு சிறிய இரயில் நிலையம் என்று. ஒரே நேரத்தில் அநேகம் பேர் இரயில் நிலையம் சென்றதால் அங்கு நடைமேடையில் நிற்கக்கூட இடம் இல்லை.

அதுபோலவே பேருந்தில் செல்ல நினைத்தவர்கள் ஒரே நேரத்தில் பேருந்து நிலையம் சென்றதால் சிதம்பர நகரமே மாணவர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. நானும் பேருந்து நிலையம் சென்று விருத்தாசலம் செல்லும் பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்டேன்.



தொடரும்


28 கருத்துகள்:

  1. தொடர் மேலும் சஸ்பென்ஸ்ஸுடன் விரைவில் முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. படிக்க வேண்டிய எதிர்பார்ப்புகள் மேலும் அதிகமாகி உள்ளன. தொடரட்டும். காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களே! நடந்த நிகழ்வுகளை விவரித்தவுடன் தொடர் முடிவுக்கு வரும். ஆனால் எதற்காக இந்த போராட்டம் தொடங்கியதோ அது முடிவுக்கு வந்துவிட்டதாக தெரியவில்லை.

      நீக்கு
  2. நல்ல வேகமுடன் செல்கின்றது தங்களது தகவல்கள் அடுத்து ரயில் நிலையத்தில் நடந்தது என்ன ? என்பதை அறிய ஆவலுடன் நானும்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLEGEE அவர்களே! இரயில் நிலையத்தில் அன்று ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அடுத்து நடந்த நிகழ்வுகள் அநேகம். அதில் எனக்குத் தெரிந்தை எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  3. அய்யா...

    சுதந்திரத்துக்கு பிறகான தமிழக மற்றும் தென்னிந்திய வரலாற்றை " முன், பின் " என பிரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தலைமுறை சரியாக அறிந்திருக்கவில்லை...

    அந்த குறையை நிவர்த்தி செய்வதோடு, அடுத்து என்ன என்ற ஆவலைத்தூண்டும்படியாக செல்கிறது உங்கள் பதிவு...

    தொடருவோம்

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கு நன்றி திரு சாமானியன் சாம் அவர்களே!

      நீக்கு
  4. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போராட்டங்களுக்கும் தமிழ்ப்பற்றுக்கும் பேர் போனது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தொடுத்த கேள்விக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழை வளர்த்த பல்கலைக்கழகம் என்பதையும் அங்கு சேர்ந்தாலே தமிழ் உணர்வு தானே வரும் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழுக்கு ஊறு வரும்போது தமிழ் உணர்வாளர்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்துவது இயல்பானது தானே. ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அங்கு படித்தவர்கள் யாரும் சோடை போனதில்லை என்பது தான் அது.

      நீக்கு
  5. தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஜல்லிக் கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த செய்தியை படித்துவிட்டு, தங்கள் பதிவினைத் தொடர்ந்தேன்....
    இந்தி எதிர்ப்பு போராட்டம்
    திணிப்புக்கு எதிரான போராட்டம். தங்களால் இந்த வரலாறு மனதில் வாய்ப்பாடாக மாறி வருகிறது அய்யா.
    திணிப்பும் இனிப்பும் ஒருசேர பெற்றேன் இன்று.
    (திணிப்பு=இந்தி எதிர்ப்பு போராட்டம்
    இனிப்பு = தமிழர்களின் மரபு வழி வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! இனிப்பான செய்தியை பகிர்ந்துகொண்ட தங்களுக்கு பாராட்டுக்கள்!

      நீக்கு
  6. வணக்கம்.

    இவ்வளவு விடயங்களை நினைவில் இருந்து எழுதுவது வியப்பளிக்கிறது.
    நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருக்கிறதா?

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நாட்குறிப்பு எழுதும் வழக்கம் எனக்கு இல்லை. இருப்பினும் நடந்த நிகழ்வுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து இருப்பதால் அவைகளை என்னால் திரும்ப கொண்டு வந்து பகிர்ந்துகொள்ள முடிகிறது. எனக்கு இந்த நினைவாற்றல் இருப்பதை ஒரு கொடையாக கருதுகிறேன். வங்கியில் பல பொறுப்புகளில் இருந்தபோது இந்த நினைவாற்றல் எனக்கு பல வகைகளில் உதவியிருக்கிறது.

      நீக்கு
  7. திடீரென்று விடுதியை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் குழப்பம்;முன்பே சுமக்கும் வருத்தம்;என்ன நடக்குமோ எனும் பதைப்பு இவற்றோடு ஊர்ய்க்குப் புறப்பட்டு விட்டீர்கள்.காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். திடீரென விடுதியை விட்டு வெளியேற சொன்னபோது வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற குழப்பம் இருந்தது உண்மைதான்.

      நீக்கு
  8. சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வெளியேற்றம். அடுத்து நடந்தது என்ன? அறிய ஆவலாய் இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! சரியான உவமையை சொல்லியுள்ளீர்கள்!

      நீக்கு
  9. பதில்கள்

    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  10. சிதம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் மாணவர்கள்.... யோசிக்கும்போதே அதில் உள்ள கஷ்டம் தெரிகிறது - நெய்வேலியிலிருந்து சில முறை சிதம்பரம் சென்றதுண்டு.... பேருந்து நிலையம் மிகச் சிறியது தானே....

    மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. எடுத்துக்கொண்ட பொருண்மையில் மிகவும் கவனமாக எழுதும் தங்களது பாணிஅருமை. தங்களின் நினைவாற்றல் எங்களைவியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  13. போரட்டதில் மாணவர் பங்கு பெரிது!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும், இந்தி திணிப்பு போராட்டத்தில் மாணவர்களின் பங்கு பெரியது என்று சொன்னமைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  14. Description of events that rocked Madras state then would surprise younger generation who were born on or after 1965_67

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! இந்த பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் இக்கால இளைஞர்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் தந்து, இந்தி திணிப்பை தமிழ் நாடு ஏன் எதிர்த்தது என்ற உண்மையையும் எடுத்துரைக்கும் என நம்புகிறேன். அதோடு அக்கால இளைஞர்களுக்கு இது நினைவூட்டலாகவும் இருக்கும்!

      நீக்கு
    2. Sure; unfortunately younger generation do not seem to be interested in important events like Anti Hindi agitations and Emergency days. Curiously many who were born after Emergency do not have even the faintest idea about the events that preceded imposition of Emergency and the rigors of Emergency. They need to be enlightened about such historical events that changed the destiny of the Nation. I would suggest you can write in your own inimitable style about important aspects of Freedom struggle ( Many may not know who The Mahatma was !) , Emergency etc for the benefit of those who may not know any thing about these events.

      நீக்கு
    3. மேலதிக கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்திய மக்கள் மேல் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் திணிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் பற்றி எழுதலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டீர்கள். நிச்சயம் அது பற்றி எழுதுவேன். விடுதலை காற்றை அனுபவித்துக்கொண்டிருந்த நாம் எதையெதை எல்லாம் அப்போது இழந்தோம் என்பதை இக்கால இளைஞர்கள் கொள்ளவேண்டாமா? அப்போதுதானே அவர்களுக்கு இப்போது இருக்கின்ற சுதந்திரத்தின் அருமை தெரியும். தங்களின் ஆலோசனைக்கு நன்றி!

      நீக்கு