புதன், 23 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.14


எங்களில் ஒரு மாணவரை துப்பாக்கி சூட்டில் இழந்துவிட்டு செய்வதறியாது திகைத்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தபோது, ‘மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்க எல்லோரும் சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலக கட்டிடத்தின் முன் கூடி முடிவெடுப்போம் வாருங்கள்.’ என்று கூறிவிட்டு சென்ற மாணவரை தொடர்ந்து, நாங்கள் எல்லோரும் சோகத்தோடும், கோபத்தோடும் ஓட்டமும் நடையுமாக திரும்பவும் வந்த வழியே சென்று நூலக கட்டிடத்தின் முன் கூடினோம்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டபமும் அலுவலகங்களும் உள்ள ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் என அழைக்கப்படும் மிகப் பெரிய கட்டிடத்திருக்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சர்.சி.பி.இராமசாமி ஐயர் அவர்கள் பெயரில் இருக்கும் அந்த பெரிய நூலகம். அந்த நூலகத்தின் முன் நாங்கள் கூடினோம்.
பல்கலைக்கழக ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்
சர்.சி.பி. இராமஸ்வாமி ஐயர் நூலகம்


அந்த நூலகத்தின் நுழைவு வாயிலிலிருந்த படிக்கட்டில் நின்றுகொண்டு அந்த மாணவர் நிகழ்த்திய ஆவேச உரை அங்கிருந்த எல்லோரையும் மேலும் உணர்ச்சி வசப்பட வைத்தது.

அவர் பேசும்போது ‘தோழர்களே! பல்கலைக் கழகத்திற்குள் காவலர்கள் துணைவேந்தர் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் துணைவேந்தரின் அனுமதி பெறாமல் துப்பாக்கி சூடு நடத்த முடியாது.

துணைவேந்தர் ஊரில் இல்லாதபோது யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? நிச்சயம் பதிவாளர் (Registrar) தான் அனுமதி கொடுத்திருக்கவேண்டும்.அப்படி அவர் அனுமதி கொடுத்ததால் தான் இப்போது நாம் நம்மில் ஒருவரை இழந்து நிற்கிறோம். இதை சும்மா விடக்கூடாது. வாருங்கள். நியாயம் கேட்க அவரது வீட்டிற்கு செல்வோம்’ என்றதும் கூடியிருந்த மாணவர்களில் பாதி பேர் அவரைப் பின்பற்றி பதிவாளர் வீட்டை நோக்கி ஆவேசத்தோடு ஓடதொடங்கினார்கள்.

அதற்குள் எங்களின் துக்கத்தை தெரிவிக்க ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தின் (ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ) கட்டிடத்தின் மேல் ஏறி அங்கிருந்த இருந்த கொடிக்கம்பத்தில் ஒரு கருப்பு கொடியை ஏற்றிவிட்டார்.

மீதி இருந்த மாணவர்கள் நூலகத்திற்கு அருகில் இருந்த Eastern Hostel இன் முன் வாயில் கதவருகே ‘இதற்கு ஒரு நீதி கிடைக்கும் வரை எழுந்து செல்வதில்லை எனக் கூறிக்கொண்டு தரையில் அமர்ந்துவிட்டனர். நானும் அவர்களோடு எனது வகுப்புத் தோழர்களோடு அமர்ந்துவிட்டேன். நாங்கள் அங்கே உட்கார்ந்தபோது மணி பகல் 12. யாருமே எதுவும் பேசாமல் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் அமர்ந்திருந்தோம்.

அதற்குள் பதிவாளரைத் காண சென்ற நண்பர்கள் அவர் அங்கு இல்லை எனக் கூறிக்கொண்டு திரும்பி வந்து எங்களோடு அமர்ந்துகொண்டனர்.

(பதிவாளரை சந்திக்க சென்ற மாணவர்களில் சிலர் அவர் இல்லாததால் தங்களின் கோபத்தை அவர் வீட்டின் மீது காண்பித்தார்கள் என்பதை பின்னர் நாளேடுகள் மூலம் தெரிந்துகொண்டேன்.)

நாங்கள் உணவருந்தும் 14 உணவகங்களிலும் (Mess) எங்களுக்காக உணவை சமைத்து வைத்துவிட்டு அங்குள்ள ஊழியர்கள் காத்திருந்தனர். அங்கு குழுமியிருந்த அனைவருமே (சுமார் 3000 மாணவர்கள்) சாப்பிட செல்லவில்லை.

விடுதி ஊழியர்கள் வந்து ‘எல்லோருக்கும் சமைத்த சாப்பாடு வீணாகிவிடும்.வந்து சாப்பிட்டுவிட்டு திரும்புங்கள்.’ என்று கேட்டுக்கொண்டும் கூட பல்கலைக் கழகத்திலிருந்து யாரேனும் வந்து அந்த துயர நிகழ்வு பற்றி எங்களிடம் பேசினாலோழிய யாரும் எழுந்திருக்கப்போவதில்லை என்று கூறி அமர்ந்துவிட்டோம்.

ஆனால் பிற்பகல் இரண்டு மணி வரை யாருமே வரவில்லை. சுமார் 2.30 மணிக்கு சிதம்பரம் நகரசபை தலைவர் எங்களைப் பார்க்கவந்தார். அவர் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு (Syndicate) உறுப்பினரும் கூட. மாணவர்களை சந்திக்க வேறு யாரும் முன் வராத நிலையில் ஒரு மாணவனின் உயிர் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் எங்களை சமாதானப்படுத்த வந்தார்.

அவர் எங்களைப்பார்த்து ‘நடந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’ என்று ஆரம்பித்ததுமே அதுவரை அமைதியாய் இருந்த அனைவரும் கோபமாக உரத்த குரலில் ‘எங்களுக்கு நீதி வேண்டும்?’ என்று சொல்ல ஆரம்பித்தோம்.

அவரும் பொறுமையாக எல்லோரையும் அமைதியா இருக்க சொல்லிவிட்டு ‘என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றதும் எங்களில் ஒருவர் எழுந்து ‘எங்களுக்கு வேண்டியது இழந்த உயிருக்கு பதில் ஒரு உயிர்.’ என்றார்.

அதற்கு அவர் ‘உங்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். நடந்த துயர நிகழ்வு குறித்து விசாரிக்க ஆவன செய்கிறேன். ஆனால் சாத்தியமில்லாத ஒன்றை கேட்பது சரியில்லை. என நினைக்கிறேன்.’ என்றதும் மாணவர்கள் ஒரே குரலில் அப்படியென்றால் எங்களிடம் பேசவேண்டியதில்லை. என்று சொன்னதும் அவர் எங்களிடம் பேசிப் பிரயோசனமில்லை என்பதை புரிந்துகொண்டு ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டார்.

நாங்கள் அங்கேயே உட்கார்ந்திருந்தபோது திரும்பவும் உணவகங்களில் உள்ள ஊழியர்கள் வந்து ‘தயை செய்து வந்து சாப்பிட்டு விட்டு வாருங்கள். இல்லாவிடில் 3000 பேருக்கு சமைத்த உணவை குப்பையில் கொட்டவேண்டி வரும். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிக்கை (Notification) பற்றி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம்.


தொடரும்


22 கருத்துகள்:

 1. அந்த அறிவிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பதை சீக்கிரம் சொல்லுங்கள். அப்புறம் நீங்கள் எல்லோரும் சமைத்த உணவை சாப்பிட்டீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! உங்களின் கேள்விக்கான பதில் அடுத்த பதிவில்!

   நீக்கு
 2. //‘எங்களுக்கு வேண்டியது இழந்த உயிருக்கு பதில் ஒரு உயிர்.’ //

  மிகவும் உணர்ச்சி வசமான கோரிக்கையாக உள்ளது.

  மாணவர்கள் நல்ல பசியுடன் இருந்தும், சாப்பிடச்சொல்லி அழைப்புகள் அடுத்தடுத்து வந்தும், நீண்ட நேரம் உணவுகளை ஏற்காமல் புறக்கணித்தது, அவர்களின் உணர்ச்சிமிக்கக் கொந்தளிப்பினைக் காட்டுவதாக உள்ளது.

  //ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிக்கை (Notification) பற்றி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம்.//

  இதைப்படிக்கும் எங்களுக்கும் அடுத்து என்ன நடந்ததோ என்ற அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

  தொடரட்டும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர். பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அன்று நடந்ததை இன்று நினைத்தாலும் அதே உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது என்பது உண்மை.பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி!

   நீக்கு
 3. "ஒரு மாணவர் வந்து பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு அறிவிக்கை (Notification) பற்றி சொன்னதும், எல்லோரும் அதிர்ச்சியடைந்தோம்"
  அடக்குமுறை அதிகாரத்தை அறிவிப்பாய் பலகையில் ஒட்டியிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
  தங்களது நிலைபாட்டை அறிய அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
  கடந்து வந்த பாதையை பதிவாக தரும்நேர்த்தி வெகு அழகு அய்யா!
  தொடர்கிறேன்.
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு
 4. பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள விடயத்தை காண ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 6. இந்த மாதிரியான நிகழ்வுகளில் எங்கிருந்தோ ஒரு தலைவன் உதயமாகிறான் மேலும் ஒரு கூட்டத்தில் உணர்ச்சி பொங்கப் பேசி பிறரை ஆவேசமாய் அழைக்க அங்கே சிந்திக்காமல் ஒரு தொண்டர் படை உருவாகிறது நீங்கள் சொல்லும் நிகழ்வுகள் என்னை இப்படிச் சிந்திக்க வைக்கிறது Mob psychology சிந்திக்க விடாது. இது அனுபவமும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியென்றாலும் கூட, உடன் படித்த மாணவனை அநியாயமாய் பறிகொடுத்தவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் அவரக்ல் எடுத்த நிலைப்பாடு சரியென்றே தோன்றும்.

   நீக்கு
 7. விறுவிறுப்பான தொடர்போல் செல்கிறது இந்த வரலாற்றுப் பதிவு! தொடர்கிறேன்!
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!

   நீக்கு
 8. ஒரு மொழிப்போரின் உணர்ச்சி மயமான உச்சகட்டம், ஒரு இளம் மாணவரின் உயிரின் இழப்பு எனும்போது வருத்தமாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 9. வியக்க வைக்கும் ஒற்றுமையான போராட்டம்;காரணம் அனைவரின் உணர்ச்சிக் கொந்தளிப்புமே.கடைசியில் கொக்கியோடு விட்டு விட்டீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! கொக்கி போட்டால் தானே பிடித்து வைத்திருக்கமுடியும்! என்ன நடந்தது என அறிய தயை செய்து அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.

   நீக்கு
 10. அன்புள்ள அய்யா,
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 11. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் திரு சாமானியன் அவர்களே! தங்களது வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  தங்களது பதிவை படித்து எனது கருத்தை வெளியிடுவேன்.

  பதிலளிநீக்கு