ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.13


எங்களது பல்கலைக்கழக வரலாற்றில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், முகம் தெரியா நண்பர்கள் வெளியிட்ட துண்டறிக்கையை படித்துவிட்டு 27-01-1965 நாளன்று கூடிய கூட்டம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளாமல் தாங்களே முடிவெடுத்து தன்னிச்சையாக அந்த கண்டனப் போராட்ட ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்துகொண்டதால் அதை ஒரு மௌனப் புரட்சி என்றே சொல்வேன்.எங்களது ஊர்வலம் பல்கலைகழகத்தின் Eastern Hostel முன் வாசலில் தொடங்கி சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலக கட்டிடத்தைத் தாண்டி. விடுதிகளுக்கும் பல்கலைக் கழகத்திற்கும் குடி நீர் தந்துகொண்டிருந்த சாலையின் இருமருங்கிலும் இருந்த குளங்களைத் தாண்டி ஊக்கொலி (Slogan) எழுப்பியபடி நகர்ந்தது.

ஊர்வலம் அடுத்து துணைவேந்தர் அவர்களது இல்லத்தை நெருங்கியபோது அவர் ஊரில் இல்லை எனத் தெரிந்தும் ஊக்கொலி எழுப்பிய எங்கள் குரல் உச்சத்தை தொட்டது. பின்னர் பல்கலைக்கழக வரவேற்பு வளையம் தாண்டி உள்ள நாற் சந்தியை தாண்டி வலப்புறம் எங்களது ஊர்வலம் நகர்ந்தது.

நாங்கள் ஊர்வலம் சென்ற பல்கலைக்கழக சாலையும் அதற்கு நேர் மேற்கே உள்ள பொறியியற் கல்லூரி மற்றும் உணவு விடுதிக்கு செல்லும் சாலையும், இடப்புறம் சிவகிரி மற்றும் கவரப்பட்டு செல்லும் சாலையும், வடக்கே சிதம்பரம் செல்லும் சாலையும் சந்திக்கும் இடம் தான் அந்த நாற்சந்தி.

இந்த இடத்தை நான் குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அதை பின்னர் சொல்வேன்.

வலப்புற சாலையில் நேரே சென்று அந்த சாலையின் முடிவில் சிதம்பரம் நகருக்கு செல்ல எங்களது ஊர்வலம் இடப்புறம் திரும்பியது.அங்கிருந்து மிக அருகில் தான் சென்னை செல்லும் இரயில் பாதை இருந்தது. இப்போதும் இருக்கிறது. அப்போதெல்லாம். இரயில்கள் வரும்போது அங்குள்ள கதவை பூட்டிவிடுவார்கள். இரயில்கள் செல்லும்வரை காத்திருக்கவேண்டும். இப்போது மேம்பாலம் கட்டிவிட்டார்கள்.

எங்களது ஊர்வலம் அந்த இருப்புப்பாதை கதவு அருகே சென்றபோது அங்கே அதிக அளவில் காவல் படையினர் குவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். எங்கள் ஊர்வலத்தை அந்த கேட் அருகே நெருங்கவிடாமல் காவல் துறையினர் தடுப்பதை அதே ஊர்வலத்தில் சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த என்னால் பார்க்கக முடிந்தது. ( அன்று 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பின்னர் அறிந்தோம்.)

முன்னால் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் அவர்களையும் மீறி முன்னேறியபோது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. எங்கும் ஒரே புகை மூட்டம். கண்களில் எரிச்சல். இளங்கன்று பயமறியாதது அல்லவா? அதையெல்லாம் சட்டை செய்யாமல் மாணவர்களாகிய நாங்கள் அதையும் மீறி முன்னேறினோம். அப்போதுதான் அந்த ‘டுமீல். டுமீல்’ என்ற சத்தம் கேட்டது.

‘ஏய். சுடுராங்கடா. திரும்பி ஒடுங்கடா’ என்று யாரோ கத்த, நிராயுதபாணியான, நாங்கள் வேறொன்றும் செய்யத் தோன்றாமல் கால் பிடறியில் இடிபடும் அளவுக்கு திரும்பி ஓடிவந்து, நான் முன்னர் குறிப்பிட்ட நாற்சந்தியில் நின்றோம். அதுவரை ஒழுங்காய் ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த மாணவர்கள் கலைந்து கும்பல் கும்பலாக நிற்கத் தொடங்கினார்கள்.

அப்போதுதான் அந்த கோரக் காட்சியைப் பார்த்தோம். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து ஒரு மாணவர் சைக்கிள் ஓட்டிவர அதன் பின்னால் அமர்ந்திருந்தவர் ஒரு கையால் மற்றொரு கையால் பிடித்துக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார்.

அவரது தோள்பட்டையிலிருந்த வழிந்துகொண்டிருந்த இரத்தம் அவரது உடையைத் தாண்டி சைக்கிளில் உள்ள டயரில் பட்டு அது சுற்றும்போது இரத்தம் பரவி டயரையே சிகப்பு வண்ணமாக்கி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சைக்கிளை ஓட்டி வந்தவர், குண்டடிபட்டு இன்னொரு மாணவர் இருப்புப்பாதை அருகே கிடப்பதாக சொன்னார். சைக்கிளில் குண்டடி பட்டு சிகிச்சைக்காக பல்கலைக் கழக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவரின் பெயர் நெடுமாறன் என்று பின்னால் தெரிந்துகொண்டோம்.

எல்லோரும் வருத்தத்தோடு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்தஇளம் கல்வியியல்  (B.Ed.)  படித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் (அவரது பெயர் இன்னும் நினைவில் இருக்கிறது.ஆனால் அதை இங்கு தெரிவிப்பது அவசியமல்ல என எண்ணுகிறேன்) வந்து ‘நண்பர்களே! ஊர்வலத்தில் எந்த வித எச்சரிக்கையும் தராமல் காவலர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் நமது சக மாணவர் ஒருவரை இழந்துவிட்டோம்.

இன்னொருவர் தோள்பட்டையில் குண்டு பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறார். மேற்கொண்டு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இங்கு நின்று தீர்மானிக்கவேண்டாம். எல்லோரும் சர்.சி.பி.இராமசாமி ஐயர் நூலக கட்டிடத்தின் முன் வாருங்கள் அங்கு கூடி முடிவெடுப்போம் வாருங்கள்.’ என்று கூறிவிட்டு சென்றார். நாங்கள் எல்லோரும் சோகத்தோடும், கோபத்தோடும் ஓட்டமும் நடையுமாக திரும்பவும் வந்த வழியே சென்று நூலக கட்டித்தின் முன் கூடினோம்.


தொடரும்20 கருத்துகள்:

 1. அன்று என்றோ எங்கோ நடந்துள்ள, உள்ளத்தை உருக்கிடும் துயர சம்பவங்களைத் தங்களின் எழுத்துக்களில் இப்போது படிக்கும்போதே, ஏதோ இன்று இப்போது இங்கு நடந்தது போன்றதோர் உணர்வினை ஏற்படுத்துகிறது.

  தங்களின் உணர்ச்சிபூர்வமான எழுத்துக்களுக்குப் பாராட்டுகள்.

  இதுபோன்ற தங்களின் கட்டுரைகள் மேலும் தொடரட்டும். இதனால் அனைவருக்கும் இதுவரை நடந்துள்ள வரலாறுகளை முழுவதுமாக அறியும் வாய்ப்பு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! என்றோ நடந்திருந்தாலும் அந்த நிகழ்வுகள் பசுமரத்தாணிபோல் மாந்தில் படிந்துவிட்டபடியால் அவைகளை என்னால் மறக்க இயலவில்லை.

   நீக்கு
 2. முடிவெடுத்த விடயம் அறிய தொடர்கிறேன் நண்பரே..
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. போராட்டம் என்றாலே பதைபதைப்பான ஒன்றுதான். இன்றும் பழைய நினைவுகளை மறக்காமல் வைத்து இருக்கும் உங்களை பாராட்டுகிறேன். ( சென்னையில் இருக்கும் உங்களோடும் பிற பதிவர்களோடும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், ஒன்றிரண்டு பேருடன் மட்டுமே பேச முடிந்தது. நீங்கள் இந்த புயல்,வெள்ளத்தில் சிக்கி மீண்டமைக்கு வாழ்த்துக்கள். இங்கும் இண்டர்நெட் இணைப்பு விட்டு விட்டு வருகிறது )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! மனதை பாதித்த நிகழ்வுகளை எங்ஙனம் மறக்க இயலும்?

   (நான்கு நாட்கள் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இப்போது இணைய இணைப்பு கிடைத்திருக்கிறது. என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததற்கு நன்றி!)

   நீக்கு
 4. 144 தடை உத்தரவு இருந்தாலும், மாணவர்களை துப்பாக்கியால் சுடும் அளவுக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது வியப்பை அளிக்கிறது. நியாயமான கோரிக்கைக்கு சுட்டுக் கொல்லப்படுவதாக இருந்தால் இந்தியாவை வெள்ளையனே ஆண்டிருக்கலாம். வெள்ளையன்தானே, அவன் அப்படித்தான் இருப்பான் என்ற எண்ணமாவது இருக்கும். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி பின்னர் எழுத இருக்கிறேன். யார் ஆண்டாலும் பொது மக்கள் அவர்களுக்கு காக்கைகள் போலத்தான். நினைக்கும்போது சுட்டுத்தள்ளிவிடுவார்கள்.

   நீக்கு
 5. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் அன்று செய்த/நடந்த செயல்களின் நியாய அநியாயங்கள் எப்படித் தோன்று கின்றன ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கேள்வி எழுப்பியமைக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! ‘இத்தனை ஆண்டுகளுக்குப்பின் அன்று செய்த/நடந்த செயல்களின் நியாய அநியாயங்கள் எப்படித் தோன்று கின்றன ஐயா’ என்று கேட்டிருக்கிறீர்கள். அப்போதைய மாணவர்களாகிய நாங்கள் நியாயமாக நடந்துகொண்டது பற்றியும் அன்றைய ஆட்சியாளர்கள் அநியாயமாக நடந்துகொண்டது பற்றியும் எனது பதிவிலேயே சொல்லிவருகிறேன்.

   இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் ஊர்வலம் போனது நியாயம் என்றும் அவர்களை அன்றைய ஆளும் கட்சித் தொண்டர்கள் தாக்கியது அநியாயம் என்று நான் இன்றும் உரத்த குரலில் சொல்வேன்.

   ஊர்வலத்தில் சென்ற மாணவன் ஒருவனை தங்களது கருத்துக்கு ஒத்துப்போகவில்லை என்பதற்காக தாக்கியதை கண்டித்து நாங்கள் அன்று ஊர்வலம் சென்றது நியாயம் என்றும் எங்களின் மேல் கண்ணீர் புகை குண்டுகள் வீசி ,பின்னர் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு மாணவனை காயப்படுத்தியும் இன்னொரு மாணவனின் உயிரைப்பறித்ததும் அநியாயம், அநியாயம் என்று ஒரு முறை என்ன பலமுறை இன்று மட்டுமல்ல, எப்போதும் சொல்வேன்.

   ஐயா! ‘தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.’ என்பார்கள். அந்த வலியை அனுபவித்த என்னைப் போன்றோர்களுக்குத்தான் தெரியும். நீங்களெல்லாம் அப்போது பணியில் இருந்திருப்பீர்கள். எனவே உங்களுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை.

   எங்களுடைய கருத்தை இந்த சனநாயக நாட்டில் சொல்ல உரிமையில்லை என்று அரசு நினைத்தால் அதை எதிர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் பிறப்புரிமை என்றும் அந்த செயல் நியாயமே என்றும் எப்போதும் சொல்வேன். அதைத்தான் நாங்கள் அன்று செய்தோம்.

   நீக்கு
 6. அறியாத பல தகவல்களை தந்து செல்கிறது இந்த தொடர்.
  தொடருங்கள் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!

   நீக்கு
 7. உங்கள் எழுத்தில் மாணவர்களின் எழுச்சியை,அன்று நடந்த பயங்கரத்தை, அனைவ ரின் கோபத்தைப் படம் பார்ப்பது போல் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 8. Your narrative style may not be ornamental but definitely interesting and one does not get bored reading your blogs.The events preceding the students agitation against imposition of Hindi,is still green in my mind.Unprecedented anger of the student community resulted in overthrow of the then Govt. Historical events can be reproduced any number of times and rights and wrongs would not change with passage of time. we still speak of atrocities committed by British many many years ago. we still talk of riots that took place during 1984 resulting in massacre of thousands of sikhs; we still talk of world wars/ bombs dropped in Japan etc etc.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! சரியாய் சொன்னீர்கள். நடந்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே எத்தனை தடைவை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனெனில் அவரை வரலாற்று நிகழ்வுகள். மேலும் உணர்ச்சி பூர்வமான இந்த நிகழ்வில் நானும் ஒரு அங்கமாக இருந்ததால் அதை இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்பதால் அதை எழுதிக்கொண்டிருக்கிறேன் தங்களைப் போன்றோர்கள் தரும் ஊக்கத்தினால்.

   நீக்கு
 9. வணக்கம் ஐயா.

  வரலாறுகள் இதுபோன்று நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவரின் பார்வைகளில் இருந்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கங்களின் அறிக்கையில் இருந்தும் அலுவலர்களின் குறிப்புகளில் இருந்துமே வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுவருகிறது.
  1857 ஆம் ஆண்டு ஆங்கில அரசுக்கு எதிராக, ஆங்கிலப் படையில் பணியாற்றிய இந்திய வீரர்களின் போர், சிப்பாய்க் கலகம் என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.(Sepoys Rebllion)
  இதற்கு முன்பே, 1806 இல் வேலூர் கோட்டையில் இதுபோன்ற புரட்சி நடைபெற்றது.

  இதனை, சிப்பாய்க்கலகம் என ஆங்கிலேய அரசின், அலுவலர்களின் குறிப்புகள்குறித்தன. ஆனால் இந்தியாவை, இந்தியரைப் பொருத்தவரை இதனை முதல் இந்தியச் சுதந்திரப் போர் என்றே குறிப்பட வேண்டும்.

  இன்று வரை பள்ளிப் பாடப்புத்தகங்கள் உட்பட இதனைச் சிப்பாய்க்கலகம் என்றே குறிக்கக் காண்கிறேன்.

  இது, ஆட்சி, அரசு, அலுவலர் குறிப்புகளைக் கொண்டு வரலாறு எழுதப்படுவதால் நேரும் பிழை.

  அதை ஆதாரமாகக் கொள்ளலாம் எனினும், மக்களின் பார்வை, அக்காலத்தில் இருக்கும் வேறு சான்றுகள் இவற்றையும் கவனத்தில் கொள்ளாததால், அடிமை முறைக்கு எதிரான இந்தியர்களின் போர் , கலகம் என்பதாகச் சுருங்கிக் கற்பிக்கப்படுகிறது.

  இது போன்ற மக்களின், பங்கேற்பாளர்களின் பார்வையிலான வரலாறுகள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்திற்காகப் பதிவோடு தொடர்பில்லாத செய்தியைக் குறித்துப் போனேன்.

  பொறுத்தாற்றுங்கள்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே! ஆனால் துரதிர்ஷ்டவசமாக வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அரசுக்கு பெரும் பங்கு இருப்பதால் அரசை ஆளுபவர்களின் மன ஓட்டத்தின்படியே/விருப்பத்தின்படியே வரலாறு எழுத(திருத்த)ப்படுகிறது. அரசு செய்யும் தவறுகளை/பிழைகளை சுட்டிக்காட்ட யாரும் முன் வராததால் தவறான தகவல்களே வருகால சந்ததியினருக்கு தரப்படுகின்றன. மக்களின், பங்கேற்பாளர்களின் பார்வையிலான வரலாறுகள் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை தங்களின் பின்னூட்டத்தில் தெரிவித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நிகழ்வின்போது அதில் கலந்து கொண்டவர்களுள் நானும் ஓருவன். பலரும் இதை இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்றே குறிப்பிடுகிறார்கள். நீங்கள் தான் மிகச் சரியாக ''இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் '' என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

   நீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு விய பதி அவர்களே! நீங்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. தாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் B.E(Chem) படித்த திரு பதி அவர்கள் தானா என அறிய ஆவல்.

   நீக்கு