வியாழன், 4 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.16திடீரென பல்கலைக்கழக விடுதியை காலி செய்ய சொன்னதும் நானும் அறையை காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று விருத்தாசலம் செல்லும் பேருந்தில் ஏறி ஊருக்கு புறப்பட்டேன். எங்களது போராட்டம் காரணமாக பல்கலைக் கழகம் மூடப்பட்டுவிட்டது என்று ஊருக்கு போனவுடன் அப்பாவிடம் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற பயம் அப்போது எனக்கில்லை.அதற்கு காரணம் எங்கள் அப்பா எங்களுக்கு கொடுத்திருந்த முழு சுதந்திரம் தான். தனது பிள்ளைகள் தவறாக எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்கள் அப்பாவிற்கு இருந்தது. எனவே நடந்ததை அப்பாவிடம் சொன்னால் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

மேலும் அன்று அப்பா எங்கள் ஊரில் இல்லை. தஞ்சையில் உள்ள ஆபிரகாம் பண்டிதர் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள தஞ்சை அருகே உள்ள பாபநாசத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது எனது அண்ணன் ஞானப்பிரகாசம் அவர்கள் அங்கு கால் நடை மருத்துவராக பணி புரிந்து வந்தார்.

பேருந்தில் அமர்ந்தவுடன் பகல் முழுதும் வெயிலில் நடந்தும், நின்றும், உட்கார்ந்திருந்ததாலும் ஏற்பட்ட அசதியால் உறங்கிவிட்டேன். விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்ததும் விழித்துக்கொண்டு இறங்கி, ஊருக்கு செல்லும் பேருந்து இருக்கிறதா என விசாரித்தேன்.

அப்போதுதான் புறப்பட்டுப்போய்விட்டது என கேள்விப்பட்டதும் விருத்தாசலத்திலேயே இரவு தங்கி காலையில் ஊருக்கு செல்லலாம் என எண்ணி அப்போது வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன்,

அங்கு வந்திருந்த அத்தான் (எனது அக்கா (பெரியம்மா மகள்) வின் கணவர்) அவர்கள் நான் ஊருக்கு திரும்பியதன் காரணம் கேட்டுவிட்டு, ‘உங்களையெல்லாம் படிக்க அனுப்பித்தால் இப்படித்தான் போராட்டம் நடத்தி நேரத்தை வீணாக்குவீர்களா?’ என்று செல்லமாக கடிந்துகொண்டார். அவரிடம் நடந்த விவரத்தை சொல்லிவிட்டு உறங்க சென்றுவிட்டேன்,

காலையில் எழுந்து ஊருக்கு செல்லும் முதல் பேருந்தில் ஏறி ஊர் சென்றடைந்தேன். அம்மாவும் அப்பாவும் ஊருக்கு சென்றுவிட்டதால் சகோதரிகள் மட்டும் இருந்தார்கள். ஊருக்கு வரும் நாளேடுகள் மூலம் எங்கள் பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கி சூடு பற்றியும், அதை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றி படித்துக்கொண்டு இருந்தேன்.

எங்கள் பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி செய்தி தெரிந்தவுடன் அடுத்த நாள் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் உள்ள மாணவர்கள் பொங்கி எழுந்து ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களை நடத்த தொடங்கிவிட்டார்கள்.

அடுத்த இருவாரங்களில் தமிழகத்தில் கலவரங்கள் அதிகமாக அரசு அதை ஒடுக்க நினைக்க காவல் துறையை ஏவி மாணவர்கள் நடத்திய ஊர்வலங்கள் தடுத்து நிறுத்தியும் தடியடி மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தியதாலும் நிலைமை மேலும் மோசமாகியது. அதனால் தமிழகத்தில் இருந்த கல்வி நிலையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.

போராட்டத்தின் போது இரயில் நிலையங்கள், மய்ய அரசு அலுவலகங்களில் இருந்த பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்தும் சில இடங்களில் கொளுத்தியும் சில இடங்களில் தந்திக் கம்பங்களை வெட்டிச்சாய்த்தும் இரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தும் மாணவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் அப்போது இருந்த முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள்
மாணவர்களின் அந்த போராட்டத்தை ஒரு உணர்ச்சி பூர்வ போராட்டமாக பார்க்காமல் சட்டம் ஒழுங்கு என்ற கோணத்தில் பார்த்து போராட்டத்தை அடக்க துணை இராணுவத்தை வரவழைத்தார். அவர்களின் கடும் நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களோடு பொது மக்களும் சேர்ந்துகொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

காவல் துறையினர் இரவிலே கல்லூரி விடுதிகளில் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த மாணவர்களையும் அடித்து இழுத்து சிறை செய்தனர். அப்போது மாணவர்களைப் பார்க்க வந்து இரவில் அங்கு தங்கியிருந்த மாணவர்களின் உறவினர்கள் கூட தாக்கப்பட்டனர்.

சென்னை கல்லூரி ஒன்றில் தனது மகனைப் பார்க்க வந்து தங்கியிருந்த ஒரு இராணுவ உயர் அலுவலர் இது குறித்து கூட அப்போது நாளிதழில் அஞ்சல் எழுதியிருந்தார். அந்த சமயத்தில் பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு சரியான உணவு கூட தரப்படுவதில்லை என அறிந்து, அது பற்றி முதல்வரிடம் ஊடகவியலார்கள் கேட்டதற்கு அப்போதைய முதல்வர் கிண்டலாக ‘பின்ன என்ன சிறையில் பிரியாணியா போடுவார்கள்? என்று சொன்னதுமல்லாமல், தன்னை சந்திக்க வந்த மாணவர்களின் சார்பாளர்களையும் (Representative) சந்திக்க மறுத்து மேலும் மாணவர்களின் உசுப்பிவிட்டார்.

தொடரும்


23 கருத்துகள்:

 1. சும்மா வந்ததல்ல இந்த சுதந்திரம் என்பது போல, இந்த இந்தி திணிப்பை எதிர்த்த போராட்டத்திலும் நிறைய விஷயங்கள் உள் அடங்கி இருக்கின்றன என்பதை, உங்களது இந்த தொடர் விளக்குகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி அறியாத சிலர், அதை கொச்சைப்படுத்துவதால் அது பற்றி விரிவாக எழுதத் தொடங்கினேன். இந்த பதிவு இதுவரை அறியாதிருந்த தகவல்களை பலருக்கு தெரிய வைத்திருக்கும் என எண்ணுகிறேன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இரா எட்வின் அவர்களே!

   நீக்கு
 3. அந்தக்காலக் கட்ட போராட்டங்களையும், அவற்றின் தீவிரங்களையும், அவை தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எப்படிப் பரவியது என்பதையும், மாணவர்களின் ஒன்றுபட்ட சக்தியுடன் பொதுமக்களும் சேர்ந்துகொண்ட விபரங்களையும், ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் கருணையின்றி நடந்து கொண்டதையும் மிக நன்றாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்.

  இதில் பாதி விஷயங்கள் 1965-1966 இல் நானே நேரில் பார்த்து அனுபவித்து அறிந்துள்ளதால், என்னால் இவற்றை ஓரளவு நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

  நெடுநாட்கள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த ஓர் மிகப்பிரபலமான தேசியக்கட்சியினை, தமிழகத்தை விட்டே விரட்டிய பெருமை, இந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தையே சேரும் என்று பலரும் சொல்வார்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள். மேலும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அந்த போராட்டத்தில் ஈடுபட்டு, அதில் சக மாணவர்கள் பட்ட துன்பத்தை நேரில் பார்த்தவன் என்பதால் என்னால் அதை விரிவாக சொல்லமுடிகிறதென எண்ணுகிறேன். தேசியக் கட்சி தமிழகத்தில் தேய்ந்துபோனதற்கு காரணம் அன்றைக்கு அது ஆணவப்போக்குடன் நடந்துகொண்டதால் தான்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 5. அறியாத சரித்திர நிகழ்வுகள் தங்களால் அறிந்து வருகிறேன் நண்பரே தொடர்கிறேன்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 6. வரலாற்றை தொடர்ந்து படித்து வருகிறேன். அய்யா!
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில்குமார் அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 8. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமே சரியோ தவறோ தமிழ் நாட்டில் பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது என்றால் மிகை ஆகாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே! அந்த போராட்டம் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் மாற்றம் கொண்டு வந்ததென்பது உண்மை தான்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு அழ.பகீரதன் அவர்களே!

   நீக்கு
 10. கட்டுரையைப் படித்த பிறகு, இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
  "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
  கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?"
  அரசாங்கத்தின் உதவியின்றி மொழியை வளர்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உண்மைதான். இங்கே அரசின் உதவியால் மட்டுமே மொழியை வளர்க்கமுடியும். அதே நேரத்தில் அரசு நினைத்தால் ஒரு மொழியை அழிக்கவும் முடியும்.

   நீக்கு
 11. நினைத்துப் பார்க்கிறேன் அய்யா,
  தமிழர்களின் ஒன்றுபட்ட தமிழ்மொழி உணர்வினை இப்படியும் கொச்சைப் படுத்தி பேசிய அன்றைய முதல்வரின் "‘பின்ன என்ன சிறையில் பிரியாணியா போடுவார்கள்?" ஆணவப் பேச்சினை!
  சரளமான நடையில் மிரள வைக்கிறீர்கள் அய்யா! நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

   நீக்கு