ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.18


மய்ய அரசின் இந்தி திணிப்பு பற்றி காங்கிரசிற்குள்ளும் தீவிர கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.1965 ஆம் ஆண்டு சனவரி 31 நாளன்று அப்போதைய மைசூர் மாநில முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா, மய்ய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித்தலைவர் காமராஜர், வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ் ஆகியோர் மைசூரில் ஒன்றுகூடி இது பற்றி விவாதித்தனர்.பின்னர் அவர்கள் மய்ய அரசிடம் ‘இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணித்தால் அது நாட்டுப் பிரிவினைக்கு அடிகோலும்; எனவே இந்தித் திணிப்பை விலக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் திரு மொரார்ஜி தேசாய் போன்ற இந்தி ஆதவாளர்கள் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. மேலும் திரு மொரார்ஜி அவர்கள் வட்டார உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது மக்களிடையே உண்மை நிலையை விளக்கி நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்த தமிழக காங்கிரசார் முயற்சிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மய்ய அரசின் உள்துறை அமைச்சர் திரு குல்சாரிலால் நந்தா அவர்களோ மேலும் ஒரு படி சென்று தமிழக முதல்வர் பக்தவத்சலம் ‘சிறப்பாக’ நிலைமையைக் கையாள்வதாகவும் அவரது பாறை போன்ற உறுதிக்கும் பாராட்டுகள் வேறு தெரிவித்தார்.

கலவரங்கள் பிப்ரவரி முதல் வாரம் முழுவதும் தொடர்ந்தன. பிப்ரவரி 6 ஆம் நாளன்று மாணவர் தலைவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் சாதகமான முடிவுகள் எட்டப்படாததால் பேச்சு வார்த்தைகள் முறிந்துபோக வன்முறை தொடர்ந்தது. பின்னர் அந்த போராட்டம் மாணவர்கள் கையை விட்டு போய்விட்டது.

அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தும்,பயன் ஏற்படவில்லை. ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள், பொது வேலைநிறுத்தங்கள், இந்திப் புத்தகங்கள் எரிப்பு, இந்திப் பலகைகள் அழிப்பு, அஞ்சலகங்கள் முன் ஆர்பாட்டங்கள் என்பன தொடர்ந்து, மேலும் கலவரங்கள் ஏற்பட்டன.

பிப்ரவரி 11 ஆம் நாள் அன்று மய்ய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படாததால் அவரும், அவருடன் அமைச்சர் ஓ.விஅழகேசனும் பதவி விலகினார்கள்.

அவர்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்த உடனேயே அவர்களது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அப்போது குடியரசுத்தலைவராக இருந்த முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

நிலைமை மோசமாக போய்க்கொண்டு இருப்பதை ஒரு வழியாய் உணர்ந்த திரு சாஸ்திரி அவர்கள் பின்னர் தனது நிலையிலிருந்து பின்வாங்கி அதே நாள் அகில இந்திய வானொலி மூலம் உரை நிகழ்த்தினார். அதில் தமிழகத்தில் நடைபெறும் வன்முறை பற்றி அறிந்து தான் அதிர்ச்சி அடைவதாகவும், காலம் சென்ற பிரதமர் பண்டிதர் நேரு அவர்களின் உறுதி மொழி காப்பாற்றப்படும் என்றும் கூறிவிட்டு கீழேயுள்ள ஐந்து வாக்குறுதிகளைத் தந்தார்.

1. ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்கு தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டார மொழி அல்லது ஆங்கிலத்தை பயன்படுத்த முழுமையான தன்னுரிமை (Freedom) கொண்டிருக்கும்.
2. இரு மாநிலங்களுக்கிடையே தொடர்பு ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய வட்டார மொழியில் இருக்கும்.
3. இந்தி பேசாத மாநிலங்கள் மய்ய அரசோடு ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முழு உரிமை உண்டு. இந்த நிலை இந்தி பேசாத மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படமாட்டாது.
4. மய்ய அரசின் அலுவல்கள் யாவிலும் ஆங்கிலமும் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
5. இந்திய அரசு பணிக்கான (IAS) தேர்வு ஆங்கிலத்தில் தொடர்ந்து நடத்தப்படும்.


அவரது வாக்குறுதிகள் பதற்றத்தைத் தணித்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவின. போராட்டம் நடத்திய மாணவர் சங்கமும் பிப்ரவரி திங்கள் 12 ஆம் நாள் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.ஆனாலும் அந்த தகவல் பல இடங்களை அடையாததால் பிப்ரவரி 13 ஆம் நாள் வரை அந்த போராட்டம் சில இடங்களில் தொடர்ந்தது. மேலும் பிப்ரவரி திங்கள் 16 ஆம் நாள் மய்ய அமைச்சர்கள் திரு சி.சுப்பிரமணியனும் திரு ஓ. வி. அழகேசனும் தங்கள் பதவி விலகலைத் திரும்பப் பெற்றனர்.

இருந்தபோதும் பிப்ரவரி மற்றும் மார்ச் திங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. மார்ச் திங்கள் 7 ஆம் நாள் அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் திரும்பப் பெற்றது.

அதனால் மாணவர் சங்கமும் மார்ச் திங்கள் 14 ஆம் நாள் தனது போராட்டத்தைக் கைவிட்டது. ஆனால் இந்தி திணிப்பில் திரு லால் பகதூர் சாஸ்திரியின் இந்த பின் வாங்கும் நடவடிக்கை வட இந்தியாவில் இந்தி ஆதரவாளர்களின் (வெறியர்களின்) கோபத்தை தூண்டியது. அப்போதிருந்த ஜன சங் கட்சி தில்லியின் தெருக்களில் ஆர்பாட்டம் நடத்தி ஆங்கில பெயர்பலகைகளைத் தார் கொண்டு அழித்தது.

(இந்த ஜன சங் கட்சிதான் 1977 ஆம் ஆண்டு நாட்டில் நிலுவையில் இருந்த நெருக்கடி நிலைமை விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், ஸ்தாபன காங்கிரஸ், பாரதீய லோக் தள், பாரதீய கிரந்தி தள்,சுதந்திரா கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி ஜனநாயக காங்கிரஸ் மற்றும் காங்கிரசில் இந்திரா காந்தியை எதிர்த்துக்கொண்டிருந்த ‘இளம் துருக்கியர்கள்’ (Young Turks) ஆகியோருடன் சேர்ந்து ஜனதா கட்சியாக உருவெடுத்து தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. பின்னர் கொள்கை ரீதியாக ஏற்பட்ட வேறுபாடு காரணமாக தனியாகப் பிரிந்து 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் நாள் பாரதீய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.)


தொடரும்


22 கருத்துகள்:

 1. Trip down memory lane. Those born after 1965 would understand what went wrong during those tumultuous period . History nicely retold with all minute details, without any exaggeration ... facts and only facts ... History retold like a true Historian. One should read all blogs under this topic to understand A to Z of insidious attempts to impose Hindi/ how that was opposed tooth and nail by all in Madras state ( especially students ).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நான் தந்திருக்கும் தகவல்கள் எனது நினைவிலிருந்தும் இணையத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை. எனவே முழுப் பாராட்டையும் நான் பெறுவது சரியாக இருக்காது

   நீக்கு
 2. பிரமிப்பான அரிய விடயங்கள் நண்பரே தொடர்கிறேன்.
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  அறியாத விடயங்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திரு ரூபன் அவர்களே! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

   நீக்கு
 4. தி.மு.க. மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியிலும் தலைவர்கள், மாணவர்கள் போராட்டம் காரணமாக, அவரவர் தாய்மொழிக்கு ஆதரவாக இருந்துள்ளனர் என்று தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இந்தி திணிப்பை எல்லோரும் எதிர்த்தார்கள் என்பதை தாங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 5. //அவர்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்த உடனேயே அவர்களது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறு திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அப்போது குடியரசுத்தலைவராக இருந்த முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். //

  பாராட்டப்பட வேண்டிய குடியரசுத்தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள். நாட்டு நிலைமையை நன்கு உணர்ந்து துணிந்து செயல்பட்டுள்ளார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அப்போதைய குடியரசுத்தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் ‘இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்து போகவேண்டாம் என்றால் அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுகொள்வதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்.’ என்று சொன்னதாக சொல்வார்கள் இது குறித்து விரிவாக சதுக்க பூதம் அவர்கள் தனது Tamil Fuser என்ற வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பாராட்டுக்கு உரியவர் தான்.

   நீக்கு
 6. //அவரது வாக்குறுதிகள் பதற்றத்தைத் தணித்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவின. போராட்டம் நடத்திய மாணவர் சங்கமும் பிப்ரவரி திங்கள் 12 ஆம் நாள் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.//

  மிகப்பெரிய போராட்டம், பல்வேறு இழப்புகளுக்குப் பிறகாவது, ஓரளவு வெற்றியடைந்தது கேட்க மனதுக்கு நிம்மதியாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி கந்தசாமி அவர்களே! வரலாறு சோகமானது என்றாலும் அதை அறிவதால் தானே நமக்கு நடந்த உண்மை தெரிகிறது.

   நீக்கு
 8. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க.நமது வரலாற்று நூல்களில் இடம் பெற வேண்டியனவற்றைத் தாங்கள் தரும் முறை அருமையாக உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. தெரிந்திராத விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நன்றி. பள்ளிப் பாடத்திட்டத்தில் அரசாங்கம் இத்தகைய விவரங்களை மாணவர்களுக்கு கட்டாயப்பாடமாக வைத்தால்தான் வரும் தலைமுறையினருக்கும், எதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்பது புரியும். இல்லையேல் ஹிந்திதான் "ராஷ்டிரா பாஷா" என்று அனைவரும் நம்புவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தாங்கள் கூறுவதுபோல் பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்த போராட்டம் பற்றி நிச்சயம் சேர்க்கவேண்டும். ஆனால் அரசு அதை செய்யாது. ஏனெனில் மய்ய அரசின் நோக்கமே இந்தியை திணிப்பது தான். இல்லாவிடில் CBSE Plus Two பாடத்தில் இந்தி திணிப்பு போராட்டத்தின் போது அதை கேலி செய்து திரு R.K. லக்ஷ்மண் வரைந்த கேலிச் சித்திரத்தை சேர்ப்பார்களா? ( பார்க்க இந்த
   இணைப்பை ) அதுவும் தற்போதைய அரசு முந்தைய காங்கிரஸ் அரசை விட இன்னும் அதி தீவிரமாக இந்தியை திணிக்க முயற்சிப்பார்கள்.

   நீக்கு
 11. பள்ளிப் பாட புத்தகங்களில் தமிழ் மொழி தற்போதைய நிலையில் இருப்பதற்கான வரலாற்றுப் பின்னணிபோதிப்பிக்கப் படவேண்டும் ஜஸ்ட் ஃபாக்ட்ஸ்...!

  பதிலளிநீக்கு


 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! உண்மைதான். பள்ளிப் பாடங்களில் தமிழின் தற்போதைய நிலை பற்றி குறிப்பிட்டால் எப்படி தமிழ் புறக்கணிக்கப் படுகிறதென்ற உண்மை மாணவர்களுக்கு தெரிய வரும்.

  பதிலளிநீக்கு

 13. //இந்திய அரசு பணிக்கான (IAS) தேர்வு ஆங்கிலத்தில் தொடர்ந்து நடத்தப்படும்.//அருமை! கீழ் காணும் அறிவிப்பு மிக முக்கியமாக கவனிக்க படவேண்டியது. மத்திய அரசின் முந்தைய அறிவிப்பு அனைத்து மத்திய அரசு தேர்வுகளும் இந்தியில் மட்டும் தான் நடத்த படும் என்பது. அதாவது ஒரு சில வருடத்தில் ஆங்கில வழி கல்வி மற்றும் ஆங்கிலம் பயன்பாடு முற்றிலும் அழிக்கபடும் என்பது

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதுக்கபூதம் அவர்களே! தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இல்லாவிடில் என்னதான் மய்ய அரசு உறுதிமொழி கொடுத்தாலும் இந்தி வெறியர்கள் எப்படியாவது இந்தியை நம் மேல் திணிக்க முயற்சிப்பார்கள். எனவே விழிப்புடன் இருந்து ஆங்கிலமே தொடர அனைவரும் பாடுபடுவோம்.

   நீக்கு