சனி, 5 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.19

மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பிப்ரவரி 12 ஆம் நாள் கைவிட்ட காரணத்தால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. எங்களது அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 50 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. நாங்களும் திரும்பவும் வகுப்புக்களுக்கு செல்லத் தொடங்கினோம்.தமிழக மக்களுக்கும் இந்தி மொழி பேசாத மக்களுக்கும் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று வானொலி மூலம் உரை நிகழ்த்தும்போது தந்த வாக்குறுதிகளுக்கிணங்க, மய்ய அரசு, அலுவல் மொழிகள் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் எடுக்கத் தொடங்கியபோது எதிர்பார்த்ததுபோல அவைகள் இந்தி ஆதரவாளர்களால் தீவிரமாக எதிர்க்கப்பட்டன.

அதே ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தக் கூடாது என்று பொதுக் கூட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதோடு மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக்கொள்கையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் பிப்ரவரி 19 ஆம் நாள் 106 காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து சட்டத்திருத்தம் எதுவும் கொண்டுவர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்றத்தில் இது பற்றி ஏதும் விவாதிக்காமல் மார்ச் 12 ஆம் நாள் பிரதமரைத் தனியாக சந்தித்து பேசினர்.

காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் ஆகிய இரண்டு கட்சிகளுமே மொழிப் பிரச்சினையில் தங்கள் கட்சிகளுக்குள் உள்ள மாறுபட்ட நிலை பொதுமக்களுக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தால் நாடாளுமன்றத்தில் அது பற்றி விவாதிக்க தயங்கினார்கள் என்பதுதான் உண்மை.

பிப்ரவரி 22 ஆம் நாள் காங்கிரசின் செயற்குழுக் கூட்டத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அலுவல் மொழி சட்டத் தில் திருத்தம் கொண்டுவர வற்புறுத்தியபோது, இந்தி ஆதரவாளர்களான திருவாளர்கள் மொரார்ஜி தேசாய், ஜகஜீவன் ராம், ராம் சுபாக் போன்றவர்கள் உடனேயே எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள்.

கடைசியில் காங்கிரஸ் செயற்குழு இந்தி அமலாக்கத்தை குறைக்கும் வகையில் மும்மொழித் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பொதுச்சேவை தேர்வுகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது இந்த முடிவுகள் பிப்ரவரி 24 ஆம் நாள் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

ஆனால் மும்மொழித் திட்டம் தென்னிந்தியாவிலோ அல்லது இந்தி பேசும் மாநிலங்களிலோ தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் பொதுச்சேவை தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தப்படவேண்டும் என்ற பரிந்துரை சாத்தியமற்றது என்பதால் அரசு அலுவலர்கள் அதை வரவேற்கவில்லை.

இருப்பினும் அலுவலக மொழி சட்டம் திருத்தப்படும் என்று தென்னகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே சலுகை மட்டுமே ஆறுதலாக இருந்தது. ஆனாலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

ஏப்ரல் திங்களில் திருவாளர்கள் குல்சாரிலால் நந்தா, A.K. சென், சத்தியநாராயண் சின்கா, மகாவீர் தியாகி, M.C. சாக்ளா மற்றும் S.K. பாட்டீல் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு கூடி இது பற்றி விவாதித்தனர். ஆனால் இந்த குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

அந்த குழு விவாதத்திற்குப் பிறகு எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாமல், ஆங்கிலமும் இந்தியும் இணையாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படவேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும் பொதுச்சேவை தேர்வுகளில் இட ஒதுக்கீடு மற்றும் மாநில மொழிகளில் தேர்வை நடத்துவது போன்றவைகளுக்கு அந்த குழு ஆதரவளிக்கவில்லை. ஆனால் பண்டித நேரு அவர்களின் வாக்குறுதியை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அலுவல் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய வரைவுத் திருத்தத்தை (Draft Amendment) அந்த குழுவினர் தயாரித்தனர்.

மாநிலங்களிடையேயும், மாநில மற்றும் மய்ய அரசுகளிடையேயும் இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் பயன்படுத்தவும் பொறுப்புறுதி (Guarantee) அளிக்கும் வகையில் சட்ட முன்வரைவு (Bill) தயாரிக்கப்பட்டது.

இதற்கிடையே மார்ச் மாதம் தங்களது இந்தி திணிப்பு போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி XVII ஐ நீக்கிட திருத்தம் கொண்டுவரவும் போராடி வந்தது. மே திங்கள் 11 ஆம் நாள்  இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர் குழு பிரதமரைச் சந்தித்தது’

பாராளுமன்ற துணைக்குழு தயாரித்த சட்ட முன்வரைவு (Bill) ஆகஸ்ட் திங்கள் 25 ஆம் நாள் பாராளுமன்ற அவைத் தலைவரால், பாராளுமன்றத்தில் கலந்தாய்வு (Discussion) க்காக அனுமதிக்கப்பட்டது.

ஆனால் சூடான விவாதங்களுக்குப் பிறகு, அப்போது நடந்து கொண்டிருந்த பஞ்சாபி சுபா என்ற பஞ்சாப் பிரிவினைப் போராட்டம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை காரணம் காட்டி அந்த சட்ட திருத்தம் கொண்டுவர அது சரியான நேரம் இல்லையென கூறி அந்த சட்ட முன்வரைவு திரும்பப்பெறப்பட்டது.

தொடரும்.


18 கருத்துகள்:

 1. ஹிந்தியின் அறியாத பல அரிய விடயங்கள் தங்களால் அறிந்து தொடர்கிறேன் நண்பரே...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 2. விரிவான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

   நீக்கு
 3. // நாங்களும் திரும்பவும் வகுப்புக்களுக்கு செல்லத் தொடங்கினோம்.//

  ஓரளவு சகஜநிலை திரும்பியது கேட்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன்அவர்களே!

   நீக்கு
 4. இன்றைய தேதிக்கு இத்தகைய பிரச்சனைகள வந்தால், ஹிந்தி என்ன ரஷ்யன் மொழி வேண்டுமானாலும் அதிகார மொழியாக்கிக்கொள்ளுங்கள். எங்கள் மேல் எந்த ஊழல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு, ஜன நாயக வழியில் விட்டுக்கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது ஆங்கிலம் வேண்டாம் என்று ஹிந்திகாரன்களே சொல்லமாட்டார்கள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இன்றைய சூழ்நிலையில் நீங்கள் சொல்வது நடக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அரசியல்வாதிகள் மொழியை வைத்து அரசியல் நடத்தினார்களேயன்றி மொழியின் மேல் உள்ள பற்றினால் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே. வட இந்தியர்கள் வெளியே இந்தி மொழிமேல் பற்று இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் பிழைப்பிற்காக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள் என்பது உண்மை.

   நீக்கு
 5. sir,you are sharing graet and valuable informations.I do hope that the present younger generations who are chasing money will understand this.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி Col.கணேசன் அவர்களே! உங்களைப்போன்ற நாட்டிற்காக உழைத்த இராணுவ உயர் அலுவலரிடமிருந்து பாராட்டு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன்.

   நீக்கு
 6. இதுஒரு தகவல் கருவூலம்;தொகுத்துப் பாதுகாத்து இன்றைய தலைமுறை அறியத்தர வேண்டும்;மிக நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 7. ஒருமுறை வட மாநிலப் பயணத்தின் போதுஒரு வடக்கத்தியர் தமிழர் இந்தியை எதிர்த்தாலும் அதில் தேர்ச்சிபெறுவது முக்கியம் என்று கருதுகின்றனர் என்றார் அவருக்கும் எனக்கும் பலத்த வாக்கு வாதம் நிகழ்ந்ததுவேறு கதை. தகவல்களுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, பள்ளிச்சிறுவனாக இருந்த நான், அப்போது பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்ட , சொல்லப்படாத பல தகவல்களை உங்கள் தொடர் வழியே தெரிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 10. நண்பரே தங்களை அறிமுகப் பதிவில் இணைத்து இருக்கின்றேன் எமது தளம் வருக
  http://www.killergee.blogspot.ae/2016/03/blog-post.html
  அன்புடன் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தங்கள் பதிவில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு