சனி, 26 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.22


1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு போராட்டம் ஒருவழியாக தற்காலிகமாக முடிவுக்கு வந்ததால், தமிழகத்தில் அமைதி திரும்பியது போல் இருந்தாலும் அது புயலுக்குப்பின் அமைதி போன்றது தான் என்பதை அப்போதைய அரசு உணரவில்லை.
மாணவர்களின் மேல் காவல் துறையினரை ஏவி அரசு இழைத்த கொடுமை மக்களின் மனதை விட்டு மறையாததால், பெரும்பான்மையோர் மனதில் குறிப்பாக மாணவர்கள் மனதில் மய்ய அரசின் மீதும் மாநில அரசின் மீதும் இருந்த கோபம் தணியாமல் நீறு பூத்த நெருப்புபோல் கனன்று கொண்டிருந்தது.

ஆனால் அந்த அசாதாரண அமைதியை எல்லாம் சரியாகிவிட்டது என காங்கிரஸ் அரசு எடுத்துக்கொண்டது. அவர்கள் அப்படி நினைத்ததற்கு காரணம் 1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த தர்மபுரி இடைத் தேர்தலின் முடிவு தான்.

அந்த இடைத் தேர்தலில் காங்கிரசும் தி.மு.கவும் போட்டியிட்டன. இந்தி திணிப்பு போராட்டதிற்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் நிச்சயம் தோற்கும் என அனைவரும் நினைத்தனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சக மாணவனை துப்பாக்கி சூட்டில் பறிகொடுத்து வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த நாங்களும் காங்கிரஸ் தோற்கும் என நினைத்து தேர்தல் முடிவுக்காக காத்திருந்தோம்.

அப்போதெல்லாம் இப்போது போல் உடனுக்குடன் தகவலை அறிவிக்கும் தொழில் நுட்ப வசதி இல்லாததால், தேர்தல் முடிவுகள். வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளூரில் அறிவிக்கப்பட்டாலும், அந்த தகவல் மாலையில் திருச்சி வானொலி செய்தி மூலமே மாநிலம் முழுதும் மக்களை சென்றடையும்.

முடிவு அறிவித்த நாளன்று மாலை நாங்கள் விடுதியில் வானொலி அறிவிப்பைக் கேட்க ஆவலுடன் காக்திருந்தோம். தர்மபுரித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்ற செய்தியைக் கேட்டதும் எங்கள் அனைவருக்கும் ஏற்பட்ட வருத்தமும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சமல்ல.காங்கிரஸ் தோற்றால் கொண்டாடலாம் என நினைத்து பட்டாசுகள் வாங்கி வைத்திருந்த மாணவர்களுக்கு அந்த முடிவு ஏமாற்றத்தையே அளித்தது.

அப்போது தமிழகத்தில் சட்ட மன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிர் வரிசையில் இருந்த கலைஞர் கருணாநிதி தர்மபுரி தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவித்தபோது ‘தமிழ்நாட்டில் தான் தர்மபுரி இருக்கிறதே தவிர தர்மபுரியில் தமிழ் நாடு இல்லை’ என்று சொன்னார்.

அதற்குப் பிறகு 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் நடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தர்மபுரி தேர்தல் முடிவு முடிந்த முடிவல்ல என்று தெரிவித்தன.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தந்தை பெரியார் ஆதரிக்க, திராவிட முன்னேற்ற கழகம், மூதறிஞர் இராஜாஜி அவர்களின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் தமிழரசுக் கழகம் ஆகியவைகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் தனித்து போட்டியிட்டது.

தி.மு.க தலைமையிலான கூட்டணி உருவாக அறிஞர் அண்ணாவும் மூதறிஞர் இராஜாஜி அவர்களும் காரணமாக இருந்தனர். காங்கிரசை ஆதரித்து ஜெமினி ஸ்டுடியோஸ் வாசன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் நாகேஷ் ஆகியோரை வைத்து ‘வாழ்க நம் தாயகம்’ என ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டார். சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள்.

அப்போது பரங்கிமலை தொகுதியில் (தற்சமயம் ஆலந்தூர் தொகுதி) தி.மு.க வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி‌.ஆரை நடிகவேள் எம்.ஆர் .ராதா சுட்டதாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எம்.ஜி‌.ஆர் களத்திற்கு வாக்கு சேகரிக்க வர இயலாத நிலையில் அவர் கழுத்தில் கட்டுடன் இருக்கும் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு அதை தி.மு.க வாக்கு சேகரிக்க பயன்படுத்திக்கொண்டது.

அந்த தேர்தலில் அறிஞர் அண்ணா சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. தென் சென்னை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஒருவேளை தி.மு.க பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என அவர் நினைக்கவில்லையோ என்னவோ?

அந்த தேர்தலில் திமு.க கூட்டணி வெற்றி பெற மாணவர்கள் பெரும் பங்காற்றினர் என்பது உண்மை. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் மாணவர் படை சென்று மக்களிடம் குறிப்பாக தாய்மார்களிடம் இந்தி திணிப்பு போராட்டத்தில் ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்ட தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டிக்கொண்டனர். பல இடங்களில் காலில் விழுந்து வாக்கு கேட்டனர்.

அதோடு அப்போது சென்னை போன்ற நகரங்களில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாடு காரணமாக அடித்தட்டு மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டமும் கோபமாக மாறி அரசுக்கு எதிராக திரும்பிவிட்டது.அந்த தேர்தலில் தான் அறிஞர் அண்ணா அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு படி (1.5 கிலோ) அரிசியை ஒரு ரூபாய்க்கு தருவதாக வாக்களித்தார்.

அந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு வேட்டையாடினார்கள்.

‘மறக்கமுடியுமா என்ற திரைப்படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய ‘காகித ஓடம் கடல் அலைமீது போவதுபோல மூவரும் போவோம்’ என்ற பாடலை பயன்படுத்தி அண்ணா இராஜாஜி இஸ்மாயில் ஆகியோர் காகித ஓடத்தில் பயணிப்பது போன்ற கேலிசித்திரத்தை காங்கிரஸ் வெளியிட்டது. அதாவது காகித ஓடம் நீரில் மூழ்குவதுபோல் அவர்களின் தேர்தல் பயணமும் இருக்கும் என்பதை குறிப்பால் உணர்த்தி கேலி செய்தது.

திமுக வும் காமராஜர் அண்ணாச்சி கடலை பருப்பு விலை என்னாச்சு?’ ‘பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?’ என்று பதிலுக்கு குரல் எழுப்பி மக்களின் கோபத்தை தூண்டிவிட்டனர்.

பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அரசியல் கட்சிகள் எதிர்பார்க்காத, ஆனால் மாணவர்கள் விரும்பிய முடிவை மக்கள் அளித்திருந்தனர்.தொடரும்
23 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தி.மு.க வின் ஆரம்பமா எனத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் முடிவு என்பது மட்டும் உண்மை.

   நீக்கு
 2. \\கழுத்தில் கட்டுடன் இருக்கும் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு அதை தி.மு.க வாக்கு சேகரிக்க பயன்படுத்திக்கொண்டது\\

  இதுதான் மக்களின் நாடித்துடிப்பை அறிந்த அரசசியல்வாதிகள் தொடர்கிறேன் நண்பரே...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

   நீக்கு
 3. அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் எழவில்லை. தமிழ்நாடும் மாநிலக் கட்சிகளின் பிடியில் சிக்கியது. இன்னும் மீளவில்லை. அதன் பின் LOTS OF WATER HAS FLOWN UNDER THE THAMES. இது நல்லதற்கா இல்லையா என்று இன்னும் தீவிரக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. திமுக வின் நூறு நாள் சாதனை என்று எனக்கு அப்போது தோன்றியதை எழுதி வைத்தேன் பிற்காலத்தில் பதிவாகவும் வெளியிட்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! மக்களின் நாடித்துடிப்பை அறியத் தவறியதால் தான் காங்கிரஸ் ஆட்சியை தவற விட்டது.

   நீக்கு
 4. தொடர்ந்து தங்களது பதிவினைப் படித்துவருகிறேன். அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

   நீக்கு
 5. இப்போதைய பொதுத்தேர்தல் நெருங்கும்போது இந்தப்பதிவினைத் தாங்கள் வெளியிட்டுள்ளது சிறப்பாக உள்ளது. அன்று தோற்றுப்போய் வெளியேறிய காங்கிரஸ், மீண்டும் தமிழகத்தில் தனியாகத் தலைகாட்டவே முடியவில்லை.

  >>>>>

  பதிலளிநீக்கு
 6. //பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அரசியல் கட்சிகள் எதிர்பார்க்காத, ஆனால் மாணவர்கள் விரும்பிய முடிவை மக்கள் அளித்திருந்தனர். //

  மாபெரும் அரசியல் மாற்றம் நிகழ்ந்ததில் எல்லோருக்கும் அன்றும் இன்றும் மகிழ்ச்சியே. பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் கருத்துகளுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அப்போது நிகழ்ந்த மாற்றம் அன்றைக்கு ஆண்டுகொண்டிருந்தவர்களே ஏற்படுத்திக்கொண்டது.

   நீக்கு
 7. ஐய எப்படி இருக்கிறீர்கள் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தங்கள் வலைப்பக்கம் வந்து.பழைய அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. முந்தைய பகுதிகளையும் விரைவில் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! வணக்கம், நலமே. நீண்ட நாட்களுக்குப் பின் எனது வலைப் பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி! எனது முந்தையாய் பதிவுகளை படிக்க இருப்பதற்கு நன்றி

   நீக்கு
 8. போராட்டம் தொடரட்டும்
  பதிவுகளைத் தொடர்ந்து
  படிக்கிறோம் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு அஜித் சுனில்கர் ஜோசப் அவர்களே!

   நீக்கு
 9. thiru bhaktavatsalam the then c.m commented as follows.... epidemic has crept into tamilnadu...
  how true the statement is.. dravidian regime had brought disasters only ji

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு Nat Chander அவர்களே! திரு பக்தவத்சலம் அவர்கள் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று தி.மு.க வெற்றி பெற்றபோது ‘Epidemic has crept into Tamilnadu’ என்று சொல்லவில்லை. ‘A virus has spread in Tamilnadu’ என்று சொன்னதாக நினைவு. அது தொற்று நோய் (Epidemic) / நுணங்கி (virus) என்று தெரிந்தும் 1971 ஆம் ஆண்டு நடந்த நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க வோடு கூட்டு வைத்துக்கொண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட நிற்கவில்லை என்பதும், தற்போது நடக்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திரும்பவும் கூட்டு வைத்துக்கொண்டு அவர்களிடம் ஒரு சில தொகுதிகளுக்காக பேரம் பேசிக்கொண்டு இருப்பதும் “Politics makes strange bedfellows’ என்ற சொற்றொடரைத்தான் நினைவூட்டுகிறது.

   நீக்கு
 10. அன்றைய (1967) அரசியல் நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. பள்ளிச்சிறுவனான நான் மற்றைய சிறுவர்களோடு வீதிவீதியாக கறுப்பு சிவப்பு கொடியேந்தி ஓட்டு கேட்டது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 11. // விரும்பிய முடிவை மக்கள் அளித்திருந்தனர். //

  வாய்ப்புகள் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்காது. கிடைத்தவாய்ப்புகளிலிருந்து அனைத்து பயன்களும் மக்களை சென்று சேர்ந்துருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி. அரசியல் என்றாலே ஏமாற்று வேலை என்ற நிலைக்கு நாட்டை கொண்டுவந்துவிட்டார்கள். குழந்தைகளுக்கு “முன்மாதிரி” என்று அடையாளம் காட்டக்கூட யாரும் இல்லாத நிலை உள்ளது.

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அரசியல் வாதிகள் பதவிக்கு வருவதே தங்களை வளப்படுத்திக்கொள்ளத்தானே! அவர்கள் எப்படி மக்கள் பயன்பெறும் திட்டங்களை கொண்டு.வருவார்கள்.

  பதிலளிநீக்கு
 13. Interesting blog; describing in detail events that preceded 67 elections ; Almost all important events covered without exception. That students played a major role in the defeat of congress has been recorded sincerely. Anger of students and oratorical skills of DMK leaders who could capture the imagination of masses with attractive slogans ( one important slogan omitted here ....KAKKA MANAVAR ENNA KOKKA / Mr.Kakkan was the then HOme minister.) I think DMK promised three measures of rice for one rupee . This was subsequently toned down to MOONRU PADI ILATCHIYAM ORU PADI NICHAYAM ....
  On the whole a must read blog .

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் குறிப்பிட்டது போல் சில ஊக்கொலிகளை (Slogan) எழுதாமல் விட்டுவிட்டேன். 'ஐய்யய்யோ பொன்னம்மா; அரிசி விலை என்னம்மா; கக்கா மாணவர்கள் என்ன கொக்கா' போன்றவைவைகள் தான் அவைகள். தி.மு.க முதலில் ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி தருவதாக வாக்களித்து பின்னர் நீங்கள் சொன்னதுபோல் ‘மூன்று படி இலட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று அறிஞர் அண்ணா சொன்னதையும் ஆரம்பத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி தரும் திட்டத்தை கோவையிலும் சென்னையிலும் ஆரம்பித்ததை எழுதாமல் விட்டுவிட்டேன்.

   எல்லா இடங்களிலும் ஒரு படி அரிசி திட்டத்தை அமல் படுத்தாமல் இரண்டு இடங்களில் மட்டும் ஆரம்பித்ததை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் ‘ஒரு கண்ணுக்கு வெண்ணை மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பா?’ எனக் கேட்டபோது ‘ஒரு
   வெற்றிலைக்கு இப்போது சுண்ணாம்பு போட ஆரம்பித்திருக்கிறோம். பின்னர் அடுத்த வெற்றிலைக்கு சுண்ணாம்பு போடுவோம்.’ என்று அண்ணா சொன்னது நினைவுக்கு வருகிறது.

   இந்த பதிவு இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றியதால் அவைகளையெல்லாம் விரிவாக எழுதவில்லை. இருப்பினும் விட்டுப்போனவற்றை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

   நீக்கு