1966 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 27 ஆம் நாள் மாலை, அதற்கு முந்தைய ஆண்டு அதே நாளன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்த மாணவர் திரு இராஜேந்திரனுக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி செலுத்த அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் (Open Air Theatre) மாணவர்கள் அனைவரும் கூடினோம்.
அதே திறந்தவெளி அரங்கில் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக நாங்கள் அதற்கு முன்பு பலமுறை கூடியிருக்கிறோம்.அங்கு திரையிடப்படும் ஆங்கில திரைப்படங்களைக் காணவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மற்றும் பின்னணிப் பாடகர்கள் திரு P.B. ஸ்ரீநிவாஸ், திருமதி ஜானகி ஆகியோர் எங்களது உணவு விடுதி விழாவில் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்க வந்த போதும் மாணவர்களுக்கே உரித்தான கும்மாளத்தோடும், ஆரவாரத்தோடும் கூடி களித்திருக்கிறோம்.
ஆனால் அன்று மூவாயிரம் மாணவர்களுக்கு மேல் குழுமியிருந்தபோது எந்த வித ஆரவாரமும் செய்யாமல் மௌனமாக அமர்ந்திருந்தோம். ஓராண்டுக்கு முன் நடந்த அந்த துயரமான நிகழ்வு அனைவர் மனதிலும் நிழலாடியதால் எவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.எங்கும் ஒரே அமைதி.
அரங்கின் மேடையில் சோகமாக திரு இராஜேந்திரனின் பெற்றோரும் அவர்களுடன் விழா ஏற்பாடு செய்திருந்த எங்களின் சார்பாக ஒரு சார்பாளரும் (Representative) பாவலரேறு திரு பெருஞ்சித்திரனார் அவர்களும் அமர்ந்திருந்தனர்.
அந்த நினைவஞ்சலியில் மாணவ சார்பாளர், மறைந்த சக மாணவர் ‘திரு ராஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் மௌன அஞ்சலி செலுத்துவோம்.’ என்று சொன்னபோது அனைவரும் எழுந்து நின்று மறைந்த நண்பருக்கு மரியாதை செலுத்தினோம். அதன் பின் எங்களது சார்பாளர், திரு ராஜேந்திரனின் பெற்றோர்களிடம் திரட்டிய நிதியை எங்களின் சிறிய காணிக்கை என சொல்லி வழங்கியபொது, அவர்கள் வாய்விட்டு அழுது பெற்றுக்கொண்டபோது எங்களாலும் துக்கத்தை அடக்கிக்கொள்ள இயலவில்லை. .
பிறகு திரு பெருஞ்சித்திரனார் அவர்கள் உணர்ச்சி பொங்க பேசினார். பேசினார் என்பதைவிட எங்களை சாடினார் என்பதே பொருந்தும். அவர் அவ்வாறு பேசியதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில் அவர் ஒரு தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்ட ஒரு போராளி.
பாவலரேறு திரு பெருஞ்சித்திரனார் அவர்கள் பற்றி தெரியாதவர்களுக்காக..
சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரைச் சேர்ந்த பெருஞ்சித்தினாரின் இயற்பெயர் மாணிக்கம். தனது தந்தையின் பெயரை இணைத்து துரைமாணிக்கம் என முதலில் வைத்துக்கொண்டார். பின்னர் புதுவையில் அஞ்சல் துறையில் சேர்ந்த பிறகு அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை மாற்றி பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.
தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தாம் நடத்தி வந்த தென்மொழி இதழில் கட்டுரைகள் மற்றும் பாடல்கள் மூலம் இந்தி திணிப்பை எதிர்த்து எழுதி அந்த போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர். அவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக கூறி குற்றம் சாற்றப்பட்டு சிறைத் தண்டனை விதித்து வேலூர் சிறையில் கூட அடைக்கப்பட்டார். அவர் 20 முறை சிறை சென்றிருக்கிறார்.
தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்ற அவரின் கருத்துக்கு கீழேயுள்ள அவரது பாட்டே சான்று.
"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!
அவர் பேசும்போது, அந்த துப்பாக்கி சூடு நடந்தது பற்றியும் அதில் ஒரு மாணவர் இறந்தது பற்றியும் கேள்விப்பட்டு பதறி அன்று மாலையே தான் அண்ணாமலை நகர் வந்ததாகவும் ஆனால் ஒரு மாணவர் கூட இல்லாததால் யாரையும் சந்திக்க இயலவில்லை என்று தன் வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
‘அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் யாருக்கு பயந்து அறையைக் காலிசெய்து கிளம்பினீர்கள்? எங்கே போய்விட்டது உங்களின் வீரம், தன்மானம் எல்லாம்? என்று சாடியபோது எங்களால் குற்ற உணர்ச்சி காரணமாக வாய்மூடி பேசாமல் மட்டுமே இருக்க முடிந்தது.
‘இனி நாம் எல்லோரும் கூடி இந்தி திணிப்பை எதிர்க்காவிட்டால் அது நமக்கு பாதகமாக முடியும். நடந்தது போகட்டும் எனவே எல்லோரும் ஒன்றுபட்டு இந்தி திணிப்பை முறியடிக்க சபதம் மேற்கொள்வோம். அதுவே உயிர் தியாகம் செய்த இராஜேந்திரனுக்கு நாம் செய்யும் மரியாதை.’ என்று சொல்லி தனது ஆவேசப்பேச்சை முடித்தார். அதோடு எல்லோர் மனதிலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு கனலை மூட்டியும்விட்டார்.
அதற்கு பிறகு இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தேர்வை எழுதி படிப்பை முடித்து பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வந்துவிட்டோம். ஆனாலும் எங்களுக்குள், மாணவர்களுக்கு அரசு இழைத்த கொடுமை மனதில் மறையாமல் இருக்க, மய்ய அரசின் மீதும் மாநில அரசின் மீதும் இருந்த கோபம் நீறு பூத்த நெருப்புபோல் கனன்று கொண்டிருந்தது.
அந்த ஆண்டு முடிந்து 1967 ஆண்டும் வந்தது. பொதுத் தேர்தலும் வந்தது.
தொடரும்
பாவலரேறு திரு பெருஞ்சித்திரனார் அவர்கள் பற்றி தெரியாத எனக்கு இவையெல்லாம் மிகவும் பயனுள்ள தகவல்களாக உள்ளன.
பதிலளிநீக்குதமிழ்மொழிப்பற்றுடன் கூடிய அவரின் கவிதையும் அருமையாக உள்ளது.
>>>>>
இன்று இதைப்படிக்கும் நமக்கே உயிர் துறந்த மாணவர் திரு இராஜேந்திரன் பற்றி இவ்வளவு துக்கமும் வருத்தமும் ஏற்படும்போது, அவரின் பெற்றோருக்கு எவ்வளவு துக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதை நன்கு உணரமுடிகிறது.
பதிலளிநீக்கு>>>>>
படிக்கப்படிக்க வரலாறுகள் மிகவும் சுவாரஸ்யமாகத் தான் உள்ளன.
பதிலளிநீக்குஇதன் எதிரொளியாக 1967 இல் நடந்த அரசியல் மாற்றங்கள் என்ன என்பதையும் தங்கள் வாயிலாக அறிய ஆவலாக உள்ளோம்.
பகிர்வுக்கு நன்றிகள், சார்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! இதைப் படிக்கும் உங்களுக்கே தூக்கமும் வருத்தமும் ஏற்படுகிறதென்றால், அந்த நிகழ்வை நேரில் கண்ட என்னைப் போன்றோருக்கு எப்படியிருந்திருக்கும்? இந்தி திணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது அறியாமல் அந்த போராட்டத்தை தமிழர்களே கொச்சைப்படுத்துவதை என்னவென்று சொல்ல!
Thanks for your information. Tamil News Website
பதிலளிநீக்குவருகைக்கும், நன்றி பாராட்டியதற்கும் நன்றி சகோதரி பிரியா அவர்களே!
நீக்குIm in Dubai
பதிலளிநீக்குT.M 1
1967 தேர்தல் நிலவரம் அறிய ஆவலுடன் இருக்கிறேன் நண்பரே பதிவு நல்ல வேகம் எடுத்து இருக்கின்றது.
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!
நீக்குவரலாறு வேதனையூட்டுகிறது.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வரலாறு வேதனையளித்தாலும் அதிலுள்ள உண்மை நமக்கு கசப்பு மருந்து போல எனப்தை தாங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட்.நாகராஜ் அவர்களே!
நீக்குபெருஞ்சித்திரனார் - பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத்தவிர வேறொன்றும் தெரியாது. இப்பொழுதுதான் விக்கிபீடியாவில் அவரைப்பற்றிய விபரங்களைக் கண்டேன். பள்ளியில் தமிழ் வளரப் பாடுபட்டவர்களைப் பற்றி கற்றுத்தராவிட்டால் வரலாறு அறியாமல் மீண்டும் மீண்டும், தலைமுறைகள் செய்த தவறையே செய்ய நேரிடும். தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பாவலரேறு பெருஞ்சித்திரனார் போல் தமிழ் மேல் அளப்பரிய பற்றும் தமிழ் உணர்வும் கொண்டவர்கள் இன்னும் பலர் உண்டு. ஆனால் மய்ய மற்றும் மாநில அரசுகளுக்கு அவர்களைப் பற்றியெல்லாம் வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ள ஆவன செய்யவேண்டும் என்ற அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை
இந்தி எதிர்ப்புக் காலத்தில் இருந்த பொதுவான நிலை தெரியுமென்றாலும் உங்கள் பதிவின் மூலம் நுணுக்கமாக அறிய முடிகிறது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!
பதிலளிநீக்குதமிழகத்தில் பெரும்பாலோரால் வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ள ஒரு வரலாற்று நிகழ்வினை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பதியும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இதனை நோக்கவேண்டும் என்பதை நன்கு உணரமுடிகிறது. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குஉங்கள் பதிவினில் பெருஞ்சித்திரனார் என்றவுடனேயே அவர் உண்டாக்கிய தமிழ் உணர்வு இன்று என்ன ஆனது என்ற வருத்த உணர்வுதான் மிஞ்சுகிறது.
பதிலளிநீக்கு
நீக்குவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இப்போதெல்லாம் தமிழன் என்று சொல்லவே பலர் தயங்குகிறபோது தமிழ் உணர்வு எங்கிருந்து வரும்?
வாள் பிடித்து வாழ்வதை, விட , வால் பிடித்து வாழ்ந்துவிட எண்ணும்,
பதிலளிநீக்குஏன் தேவைப்படின், தாள் பிடித்து வாழ நினைக்கும் கூட்டம்.இன்று....
இதில் மொழிக்கும், இனத்திற்கும் எங்கே இடம் இருக்கிறது?
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திரு அவர்களே! சரியாய் சொன்னீர்கள்!
நீக்கு
பதிலளிநீக்குGreat content keep writing tamil health tips
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பாஹா அவர்களே!
நீக்கு