புதன், 6 ஏப்ரல், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.23


1967 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் மாநில சட்டசபைக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தபோது, கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம்) தார்வார் மாவட்டத்தில் கதக் (Gadag) என்ற ஊரில் தேசிய விதைக் கழகத்தில் விதைப் பெருக்க அலுவலராக (Seed Production Assistant) ஆக நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன். (இப்போது கதக் தனி மாவட்டமாக ஆகிவிட்டது.)



எனக்கு அந்த தேர்தலின் போது தான் முதன் முதலாக வாக்களிக்கும் உரிமை வந்தது. எனது பெயர் எங்கள் ஊரில் உள்ள வாக்கு சாவடியில் வாக்காளராக சேர்க்கப்பட்டிருந்தும் என்னால் வாக்களிக்க இயலவில்லை. காரணம் 1966 டிசம்பர் திங்களில் தான் நான் தேசிய விதைக் கழகத்தில் பணியில் சேர்ந்ததால் உடனே விடுப்பு எடுத்து வர இயலவில்லை. மாணவர்களாகிய எங்களை கொடுமைப்படுத்தி இன்னலுக்கு ஆளாக்கிய காங்கிரசின் வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க இயலாமல் போய்விட்டதை எண்ணி வருந்தினேன்.

வாக்களிக்கும் தினத்தன்று நான் 800 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் மனதளவில் தமிழ் நாட்டில் தான் இருந்தேன். 1965 ஆம் ஆண்டு மாணவர்களாக இருந்த பெரும்பான்மையோர் காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்துகொண்டு இருந்தனர் என எனக்குத் தெரியும். இருப்பினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இருந்தேன்.

தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவித்த நாளன்று தார்வார் மாவட்டத்தில் உள்ள ஹுல்லூர் (Hullur) என்ற சிற்றூருக்கு ஆய்வுக்காக சென்றிருந்தேன்.

ஆய்வு முடிந்தபின் மாலை 'கதக்' திரும்பு முன் தேர்தல் நிலவரம் அறிய நான் ஆய்வுக்கு சென்ற பண்ணையின் உரிமையாளரிடம் ‘எங்கள் மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின் நிலவரத்தை தங்கள் வானொலி பெட்டியில் கேட்க தந்து உதவ முடியுமா?’ எனக் கேட்டேன். அவர் அப்போதுதான் மைசூர் மாநில தேர்தல் முடிவுகள் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். அவரும் ‘சரி கேளுங்களேன்.’ என்று சொல்லி வானொலி பெட்டியைக் கொடுத்தார்.

நான் சென்னை வானொலி நிலைய செய்திகளைக் கேட்க ஆரம்பித்தபோது அப்போதுதான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட விவரங்களை சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

முதன் முதல் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் பூங்கா நகர் தொகுதியில் (Park Town) தி.மு.க.கூட்டணியில் இருந்த சுதந்திரா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் டாக்டர் H.V.ஹண்டே அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமதி T.N.அனந்த நாயகி அவர்களை தோற்கடித்து வெற்றி கண்டிருக்கிறார் என்று சொன்னபோது நான் என் நிலை மறந்து, இருக்கும் இடம் மறந்து துள்ளிக்குதித்து என் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினேன்.பின்பு என் நிலை உணர்ந்து அமைதியானேன். ஆனாலும் எனது மகிiழ்ச்சியை கொண்டாட அருகில் நண்பர்கள் இல்லையே என வருந்தினேன்.

எனது செயலைக் கண்ட அந்த பண்ணையின் உரிமையாளர் ‘என்ன செய்தி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்?’ என கன்னடத்தில் கேட்டார். எனக்கு அப்போது கன்னடம் பேசத் தெரியாவிட்டாலும் பேசுவதை புரிந்துகொண்டு காங்கிரஸ் தோற்றுவிட்டது என ஆங்கிலத்தில் சொன்னேன்.

அதைக்கேட்டதும் அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அப்புறம் தான் தெரியும் அவர் ஒரு காங்கிரஸ்காரர். என்று! அவர் என்னிடம், ‘என்ன சார். காமராஜ் அவர்களின் மாநிலத்தில் காங்கிரசை தோற்கடித்துவிட்டீர்களே?’ என்று சொன்னபோது என்னால் எதற்காக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது என கன்னடத்தில் விளக்க இயலவில்லை. எனக்கு அப்போது தெரியாது பெருந்தலைவர் காமராஜ் அவர்களும் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்று. ஒரு வேளை அதையும் தெரிந்து சொல்லியிருந்தால் அந்த காங்கிரஸ்காரர் என்ன சொல்லியிருப்பாரோ!

முதல் வெற்றி ஆளுக்கட்சிக்கு எதிராக சென்றது என அறிந்தாலும் மற்ற இடங்களில் நிலவரம் எப்படி எனத்தெரியாமல் 'கதக்' கிற்கு திரும்பினேன். அப்போது என்னிடம் வானொலிப்பெட்டியும் இல்லை. இப்போது போல் தொலைத்தொடர்பு சாதனங்களும் இல்லை.எனவே முடிவு தெரியாமல் இரவு முழுதும் அதைப்பற்றி யோசித்துக்கொண்டே உறங்கினேன்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஆங்கில நாளேடுகளைப் பார்த்தபோது தெரிந்தது மாணவர்கள் விரும்பிய முடிவை மக்கள் அளித்திருந்தனர் என்று.

234 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி 52.59 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 179 இடங்களில் வெற்றி பெற்றது என்றும் அதில் தி.மு.க 137 இடங்களிலும்.சுதந்திரா கட்சி 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் ,முஸ்லீம் லீக் 3 இடங்களிலும், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், தி.மு.க ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடின என்றும் செய்திகள் தெரிவித்தன.

ஆனால் காங்கிரசோ 232 இடங்களில் போட்டியிட்டு 41.10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்றும் கூட்டணி இல்லாமல் 32 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், 1 இடத்தில் போட்டியிட்ட ஃபார்வோர்ட் பிளாக் அந்த இடத்திலும் 246 இடங்களில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர் என்றும் நாளேடு தெரிவித்திருந்தது.

13 இடங்களில் போட்டியிட்ட குடியரசு கட்சியும், 24 இடங்களில் போட்டியிட பாரதீய ஜன சங் கும் ( இன்றைய பிஜேபி யின் பழைய பெயர் ) ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது உபரித் தகவல்.

விருத்தாசலம் ( எனது ஊர் ) தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் அமைச்சர் திரு பூவராகன் அவர்களைத் தவிர முதலமைச்சர் திரு பக்தவத்சலம் உட்பட அனைவரும் அநேக புது முகங்களிடம் அப்போது தோற்றுப் போயினர்.

பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் கூட தி.மு.க வேட்பாளரான மாணவர் தலைவன் சீனிவாசனைவிட சுமார் 1285 வாக்குகள் குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.


தொடரும்



18 கருத்துகள்:

  1. //234 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி 52.59 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 179 இடங்களில் வெற்றி பெற்றது என்றும் அதில் தி.மு.க 137 இடங்களிலும்.சுதந்திரா கட்சி 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் ,முஸ்லீம் லீக் 3 இடங்களிலும், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், தி.மு.க ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடின என்றும் செய்திகள் தெரிவித்தன//

    தங்களது நினைவாற்றலுக்கு எமது சல்யூட் நண்பரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நிகழ்வுகள் நினைவில் உள்ளன. ஆனால் துல்லியமான புள்ளி விவரங்களை இணையமே தந்து உதவியது. எனவே தங்களின் பாராட்டுக்கு நான் உரியவன் அல்லன்.

      நீக்கு
  2. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முடிவுகளல்லவா அவை.

    நீங்கள் உங்கள் ஊருக்குப் போய் ஓட்டுப் போட்டிருந்தால் ஒரு சமயம் பூவராகன் வெற்றி பெற்றிருக்காமல் போயிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேர்தல் முடிவுகள் தான் அவைகள். ஐயா! நான் அப்போது எங்கள் ஊருக்கு சென்று வாக்களித்திருந்தாலும் திரு பூவராகவன் தான் வெற்றி பெற்றிருப்பார். காரணம் அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த தி.மு.க வேட்பாளரை விட8867 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

      நீக்கு
  3. மாபெரும் அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்திய அன்றைய தேர்தல் முடிவுகளை அழகாக அசத்தலான புள்ளி விபரங்களுடன் விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்.

    தங்களுக்கு அன்று ஏற்பட்டுள்ள சந்தோஷ உணர்வுகளையும் நன்கு உணர முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிவு தொடரட்டும் .... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அப்போதிருந்த மனநிலை யார் வெற்றி பெறவேண்டும் என்பதல்ல. யார் வெற்றிபெறக்கூடாது என்பது தான். சக மாணவனை பறி கொடுத்ததால் ஏற்பட்ட உணர்வு அது.

      நீக்கு
  4. மாணவர்களை முன்னிறுத்தி வாய்ப்பேச்சால் திமுக வெற்றி பெற்றனர். இன்றைய நிலையை நோக்கும் போது மக்கள் ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு காங்கிர்சைத் தோற்கடித்தது தவறோ என்னும் எண்ணம் வலுக்கிறது அதே காங்கிரசிடம் திமுக கூட்டு இப்போதும் சரியான ஆல்டர்னேட் தெரியாமல் மக்கள் குழம்பி இருப்பது தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      //மாணவர்களை முன்னிறுத்தி வாய்ப்பேச்சால் திமுக வெற்றி பெற்றனர். //

      அப்படி மாணவர்களை முன் நிறுத்தும்படி அப்போதைய அரசு நடந்துகொண்டதால் தான் திமுக வெற்றி பெற்றது என்பதை புரிந்துகொண்டால் இந்த கருத்தே எழுந்திருக்காது என் கருத்து.

      //இன்றைய நிலையை நோக்கும் போது மக்கள் ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு காங்கிரசைத் தோற்கடித்தது தவறோ என்னும் எண்ணம் வலுக்கிறது//

      அப்படி தோற்கடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தி இங்கே கூடி புகுந்திருக்கும்.


      ஒன்று மட்டும் சொல்வேன். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ஒருவேளை நீங்கள் படிக்கும்போது உங்களில் ஒருவரை காங்கிரஸ் அரசு சுட்டு வீழ்த்தியிருந்தால் உங்கள் மன நிலை எப்படியிருந்திருக்கும் என யோசித்து பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

      நீக்கு
  5. அன்றைய அரசியல் நிலவரத்திற்கும், இன்றைய காட்சி அரசியலுக்கும்தான் எவ்வளவு வேறுபாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! காலங்கள் மாறும். காட்சிகள் மாறும். கோலங்கள் மாறும். கொள்கையும் மாறும் என்பது தானே நடைமுறை.

      நீக்கு
  6. அன்றைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடிந்தது. அன்று செய்த தவறுக்கு இன்னும் தண்டனை அனுபவித்துக்கொண்டே இருக்கிறோம்.
    அருமையான பதிவு அய்யா!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திருS.P.செந்தில்குமார் அவர்களே! People always get what they deserve என்பார்கள்.இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாமென எண்ணுகிறேன்.

      நீக்கு
  7. அற்புதமான கட்டுரை.இன்றய சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள் வேண்டியது.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கர்னல் கணேசன் அவர்களே!

      நீக்கு
  8. நான் அரசியலை
    தவிர்கிறேன் நண்பரே....
    அதனால் இப்பதிவில்
    கருத்து சொல்ல
    தோன்றவில்லை....
    மன்னிக்கவும் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கு நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே! இந்த பதிவு அரசியல் பற்றியது அல்ல. தமிழ் நாட்டில் 1938 ஆண்டிலேயே இந்தி திணிக்கப்பட்டது என்பதையும் அதை தொடர்ந்து நடந்த போராட்டங்கள் பற்றியும் எழுதும்போது அதன் விளைவுகளையும் எழுதும்படி ஆயிற்று. மற்றபடி இது அரசியல் பேசும் பதிவு அல்ல. இந்த போராட்டத்தில் 1965 ஆம் ஆண்டில் நானும் பங்கு கொண்டதால் அது பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  9. As is your wont minute details have been furnished. The fall of Congress was celebrated by one and all. However the defeat of Mr.Kamaraj was something that saddened even Mr.Annadurai, DMK Chief,who is said to have lamented the event . All said and done, some injudicious decisions taken by the then Congress Govt resulted in total rout of the party . Congress was banished totally. Nearly 50 years down the line, the party is yet to regain its past glory.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் சரியான முறையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கையாளதாதலால் தான் அப்போது காங்கிரஸ் ஆட்சியை விட்டு இறங்க நேரிட்டது. அவரின் அன்றைய அணுகுமுறையால் தான் இன்றைக்கு நாடாண்ட கட்சி இந்த நிலையில் இருக்கிறது.
      நீங்கள் சொல்வது சரியே. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தேர்தல் தோல்வியை அறிஞர் அண்ணா அவர்களே விரும்பவில்லை.

      நீக்கு