திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி - தொடர் பதிவுகனவு என்பது நம் ஆழ்மனதில் உள்ளவைகளின் வெளிப்பாடு 
நாம் உறங்கும்போது சிலசமயம் நம்மையறியாமல் நம்முடைய 
மனதில் ஏற்படும் உருவங்கள்,எண்ணங்கள், உணர்ச்சிகள்,மற்றும் புலனுணர்வுகளின் தொடர்ச்சிதான் கனவுகள் என்கிறார்கள் அறிவியலார்கள். ஆனாலும் இன்னும் கனவைப்பற்றிய 
ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

நாம் கனவு காண்பவைகளில் 90 விழுக்காடு கனவுகளை மறந்துவிடுகிறோம் என்றும் மூன்று வயதிற்கு மேற்பட்ட 
அனைவரும் (கண் பார்வையாற்றவர்கள் கூட) கனவு 
காண்கிறார்கள் என்றும், சிலர் கனவுகளை வண்ணத்திலும் 
சிலர் அவைகளை கருப்பு வெள்ளையிலும் காண்கிறார்கள் 
என்றும், மேலும் நமக்குத் தெரிந்தவையும் நாம் பார்ப்பதும் 
தான் கனவில் வருகின்றன என்றும் கனவு காண்பது 
மனச்சிதைவு (Psychosis) ஏற்படுவதை தடுக்கிறது என்றும் கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் 
சொல்கின்றன.

பல்லி விழும் பலன் போல் கனவுகளுக்கும் பலன் 
சொல்லப்படுகிறது. கனவுப் பலன்களை சொல்ல அநேக 
இணய தளங்களும் உள்ளன. கவிஞர் கண்ணதாசன் அவர்கள்  
கூட கனவுக்கு பலன் உண்டு என்கிறார். ஆனால் இது எந்த 
அளவுக்கு சரியானது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 
ஏனெனில் நம் எண்ணங்களின் தொடர்ச்சிதானே 
கனவுகளாக வருகின்றன.

அது சரி. கனவைப்பற்றி நான் ஏன் இவ்வளவு விரிவாக 
எழுதுகிறேன் என்பதற்கு காரணம் உண்டு. அபுதாபிவாசியும் தேவக்கோட்டைக்காரருமான நண்பர் திரு KILLERGEE 
அவர்கள் தன்னுடைய வலைப்பதில் அவருடைய கனவில் 
தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களைப் பார்த்ததாகவும் 
அவர் கேட்ட கேள்விக்கு பதில் தான் சொன்னதாகவும் 
எழுதியிருந்தார்.

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இந்த கேள்விகளை 
என்னையும் சேர்த்து மொத்தம் 10 பதிவர்களிடம் காந்தி மகான் கேட்டிருந்தால் எங்களது பதில்கள் எவ்வாறு இருந்திருக்கும் 
என்பதை எங்களது வலைத்தளத்தில் வெளியிடவேண்டும்   
என அன்புக் கட்டளையிட்டிருந்தார். தொடர் பதிவிட தயக்கம் 
இருப்பினும் நண்பரின் கட்டளையை மீறமுடியுமா என்ன?

எனவே காந்தியவர்கள் என் கனவில் வரவேண்டும் என்னை 
அவர் அந்த கேள்விகளைக் கேட்கவேண்டும் என 
எண்ணியபடியே நேற்றிரவு படுக்க சென்றேன். இரவில் 
காந்தியடிகளும் கனவில் வந்தார். ஆனால் அவர் 
திரு KILLERGEE யிடம் பேசியதுபோல் என்னிடம் 
குஜராத்தி மொழியில் பேசவில்லை. தமிழில்தான் 
பேசினார். அவர் தான் தென் ஆப்பிரிக்காவில் 
தில்லையாடி வள்ளியம்மை போன்ற தமிழர்களோடு 
இருந்தபோது தமிழை எழுத, படிக்க, பேசக் கற்றுக் 
கொண்டவராயிற்றே! அதனால் எனக்கு எந்த 
மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லாமல் போயிற்று. 
இதோ அவர் கேட்ட கேள்வியும் எனது பதில்களும்.


1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று 
நினைக்கிறாய்?

மறுபிறவி என்று ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை 
ஐயா. அப்படி ஒன்று இருந்தால்(?) திரும்பவும் தமிழகத்தில் 
பிறக்கவே விருப்பம்.

2. ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக 
வந்துவிட்டால், சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

முதற்கண் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு 
உறுதி செய்யப்படும். வேளாண்மை தொழிலுக்கு முன்னுரிமை 
தரப்படும். தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த 
சட்டம் கொண்டு வரப்படும். மேலும் நாட்டின் எதிர்கால 
குடிமக்களை உருவாக்கும் ஆரம்பப்பள்ளி மற்றும் 
நடுநிலை/உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், நாட்டை 
கடினமான சூழ்நிலையில் கண்ணுறங்காமல் பாதுகாத்து 
வரும் இராணுவ வீரர்களுக்கும் நல்ல ஊதியம் தரப்படும். 
மக்கள் வரிப்பணத்தில் படித்து வெளி நாடு செல்பவர்களை 
நம் நாட்டிலேயே தங்கி பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும். சோம்பேறித்தனத்தை வளர்க்கும் இலவச திட்டங்கள் 
அனைத்தும் ஒழிக்கப்படும்.

3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு 
தெரிவித்தால், என்ன செய்வாய்?

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இதற்கு எதிர்ப்பு 
தெரிவிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வெளிநாட்டு 
செல்வதின் நோக்கத்தை இங்கேயே நிறைவேற்றுவதால்

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் 
வைத்திருக்கின்றாயா?

முதியவர்கள் இறுதி காலத்தில் யாரிடமும் கையேந்தாமல் 
கௌரவமாக வாழசமூக நல பாதுகாப்பு மற்றும் 
சமூக ஈட்டுறுதி (Social security & Social insurance) சட்டம் 
கொண்டுவரப்படும்.

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

மக்களின் தேவைகள் யாவையும் நிறைவேற்றி நாட்டை 
வளமான பாதையில் கொண்டு சென்றால், அரசியல் செய்ய 
ஆட்கள் இருக்கமாட்டார்கள். எனவே அரசியல்வாதிகளே 
இல்லாமல் இருக்க வழி செய்வதுதான் அவர்களுக்கான 
புதிய திட்டம்!

6. மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் 
போனால்?

தவறான மதிப்பெண்கள் தருவோருக்கு கடுமையான 
தண்டனையை ஏற்படுத்தி மாணவர்கள் நீதி மன்றம் 
நாடவேண்டிய சூழ்நிலையை அறவே தவிர்க்கப்படும்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?

அறிவியலுக்கு தேவையான கட்டமைப்புக்களை ஏற்படுத்தி 
நமது அறிவியலார்கள் ஆராய்ச்சி செய்து புதிய 
கண்டுபிடிப்புகளை கொடுக்க ஊக்குவிக்கப்படும்.அவர்களது 
ஆராய்ச்சியில் அறவே அரசின் தலையீடு இருக்காமல் பார்த்துக்கொள்ளப்படும்.

8. இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் 
செய்வார்களா?

நாட்டில் அனைவரையும் கல்வி அறிவு 
கற்றவராக/பெற்றவராக மாற்றிவிட்டால், பிறகு வரும் 
ஆட்சியாளர்கள் மக்களுக்கு நன்மை தரும் எந்த 
திட்டத்தையும் மாற்றத் துணியமாட்டார்கள்.

9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

நாடு தன்னிறைவு பெற்று எல்லாத் துறைகளிலும் மற்ற 
நாடுகளை விட  முன்னேறி,அவைகள் நம்மிடம் உதவி 
கேட்டு வரும் நாட்களை உண்டாக்குவதே புதுமைதானே.


10. எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. 
ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை 
செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி 
கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி 
வேண்டுமென இறைவன் கேட்டால்?

ஐயா நான்தான் முதலிலேயே  மறுபிறவி என்று ஒன்று 
இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று 
சொல்லிவிட்டேனே. எனவே இறைவன் என்னிடம் 
கேட்டால் பிறவா வரம் தாரும் பெம்மானே 
என்றுதான் இறைஞ்சுவேன்.  


எனது பதில்களைக் கேட்ட தேசத்தந்தையும் மகிழ்வுடன் 
என்னை வாழ்த்திச் சென்றார். நானும் மகிழ்வோடு 
இருக்கும்போது என்னங்க. விடிஞ்சுடுத்து.இன்னுமா 
தூங்கறீங்க?’ என்ற என் மனைவியின் குரல் கேட்டு 
விழித்தேன். அட! விடியற்காலையில் கனவு 
கண்டிருக்கிறேன்! கனவிற்கான பலன் உண்மையாய் 
இருப்பின் ஒருவேளை நான் சொன்னவை/விரும்பியவை 
நடக்குமோ?

நண்பர் திரு KILLERGEE அவர்களின், ஒவ்வொரு 
பதிவரும் 10 நண்பர்களை எழுத அழைக்கவேண்டும். 
என்ற இன்னொரு அன்புக் கட்டளையை நிறைவேற்ற 
முடியாதவனாக இருக்கிறேன். அவர் என்னை 
மன்னிக்க வேண்டுகிறேன்.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 2. வணக்கம் நண்பரே,,, தங்களின் பதில்கள் ஆழமான கருத்தாக இருப்பதோடு தங்களின் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்ற தங்களின் எண்ணமும் வெளிப்படுகிறது அருமையான சிந்தனைகளின் வெளிப்பாடு.
  அதிகாலை கனவு பலிக்கும் எனக்கேட்டிருக்கிறேன் ஆகவே இது பலித்தால் எனக்கு பூரண சந்தோஷமே காரணம் நமது நண்பரொருவர் இந்தியாவை ஆள்கிறார் என்பது வலைப்பூ சகோதரர்கள் அனைவருக்கும் பெருமையான விசயமே...
  எனது கருத்துக்கு மதிப்பளித்து இத்தனை அழகான ஆழமான பதில்களை கொடுத்தமைக்கு நன்றி
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! இந்த பாராட்டு உங்களையே சேரும். ஏனெனில் நீங்கள் தானே பதில் தர சொன்னீர்கள்.

   நீக்கு
 3. உங்களுக்கே உரிய அனுபவம், நிதானமான நடை இவற்றோடு பதில் சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு
 4. அருமையான பதில்கள் ஐயா. அனைத்து பதில்களும் சீரிய சிந்தனையுடைய பதில்கள்.
  3,5 பதில்கள் பிரமாதம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

   நீக்கு
 5. நீங்கள் அதிகாலையில் கண்ட கனவு பலித்து கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் அமலாக வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

   நீக்கு
 6. வலைச்சரத்தில் தங்களது பதிவுஅறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள். கனவில் வந்த காந்தியைக் கண்டேன். மறுமொழிகளை ரசித்தேன்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  பதிலளிநீக்கு


 7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களே! வலைச்சரத்தில் எனது பதிவு அறிமுகம் பற்றிய தகவலை அறிவித்தமைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  அருமையான கேள்விகள். அதற்கேற்ற பதில்கள். ஆனால் அரச பீடத்தில் ஏறிவிட்டால் இவைகளை நடைமுறைப் படுத்த முடியுமா?ஆனாலும் பாவம் காந்தியார்! ஒரு நல்ல ஆத்மாவை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நந்திதா அவர்களே! ‘எண்ணம் போல் வாழ்’ என்பார்கள். ஆகவே நினைப்பது நடக்கும் என நம்புவோம்.

   நீக்கு
 9. Good ideas. If implemented, there will be a reverse migration to India from other countries.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N. கோவிந்தராஜன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

   நீக்கு