வியாழன், 4 டிசம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 19


பாராளுமன்ற சாலையில் இருந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள 

மாற்று சாவியை  கொண்டு வர நண்பர் திரு வாசுதேவன் புறப்பட்டபோது 

நானும் வருகிறேன் என்று சொல்லி அவரோடு எனது ஜாவா மோட்டார் 

சைக்கிளில் அந்த கிளைக்கு புறப்பட்டேன்.

 

 

1971 ஆம் ஆண்டு நடந்த அந்த நிகழ்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் 

உருண்டோடிய நிலையில் அந்த கிளை எப்படி இருக்கிறது, எந்த விதமான

கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள ஆவல் 

இருந்ததால் அவரோடு அங்கு சென்றேன்.

 

எங்கள் வங்கியின் இருப்பு பெட்டகத்தின் மாற்று சாவி அந்த பாரத 

ஸ்டேட் வங்கி கிளையில் இருப்புப் பெட்டகத்தில் இருந்ததால், அந்த 

பெட்டகத்தின் பொறுப்பாளரான தலைமை காசாளரை அணுகி எங்கள் 

வங்கி கிளை மேலாளர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து சாவியை 

பெற விரும்பி அவரை பார்க்க எண்ணினோம்.

 

அதனால் நாங்கள் அந்த வங்கிக்கு சென்று அங்கிருந்த Counter ஒன்றில் 

அமர்ந்திருந்த ஊழியரிடம் தலைமை காசாளரை பார்க்கவேண்டும். 

என்றதும், ஏன் எதற்கு எனக் கூட கேட்காமல்  உள்ளே இருந்த 

ஒரு Cabin ஒன்றைக் காட்டி அங்கிருப்பார் போய் பாருங்கள். 

என்றார்.

 

நாங்கள் அங்கு சென்றபோது அவர் இல்லை. வெளியே அமர்ந்திருந்த 

இன்னொரு ஊழியரிடம் திரும்பவும் அதே பல்லவியை பாடினோம். 

அவர் நேரே உள்ளே செல்லும் வழியைக்காட்டி அங்கிருக்கிறார் போய் 

பாருங்கள் என்றார். அப்போது அவர் கூட நீங்கள் யார்? எதற்காக 

அவரை பார்க்க விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்கவில்லை.

அது ஒரு பெரிய கிளை ஆதலால் வழியில் உள்ள ஒவ்வொருவரிடம் 

கேட்டுக்கொண்டு நாங்கள் சென்றடைந்த இடம் வங்கியின் பாதுகாப்பு

பெட்டகம் உள்ள இடம். அது திறந்திருந்தது. ஆனால் நாங்கள் உள்ளே 

செல்லவில்லை. அப்போது வெளியே வந்த ஒருவர், நீங்கள் யார்? 

ஏன் இங்கு வந்தீர்கள்?‘ எனக் கோபமாகக் கேட்டார். 

 

நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவர் மேலும் 

கோபமாக நீங்கள் ஒரு வங்கியைச் சேர்ந்தவர்கள்.இப்படித்தான் 

Strong Room (பாதுகாப்பு பெட்டகம்) உள்ள இடத்திற்கு வருவதா? 

வாருங்கள் கிளை மேலாளரிடம் செல்வோம். என் சொல்லி அழைத்து 

சென்று கிளை மேலாளர் முன் கொண்டுபோய் குற்றம் செய்தவர்களை 

நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதுபோல் நிறுத்திவிட்டார். 

 

உடனே அந்த மேலாளர் எங்களிடம் எப்படி நீங்கள் உள்ளே 

செல்லலாம்? இப்போதே உங்கள் வங்கிக்கு இது பற்றி சொல்லி 

மேல் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன். என்று உரத்த குரலில் 

சொன்னதும்  எனக்கு சப்தநாடியும் அடங்கிவிட்டது. 

 

நண்பர் திரு வாசுதேவன் டில்லியில் படித்திருந்ததால் இந்தி நன்றாக 

பேசுவார். அதுவுமல்லாமல் தில்லியில் உள்ளோர் நம்மைப்போல் 

(நான் சொல்வது 70 களில் ) தயங்காமல் வந்தது வரட்டும் என 

துணிந்து எதையும் எதிர்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். 

 

அந்த பழக்கத்தால் நான் ஒடுங்கி, நடுங்கி நின்றபோது அவர் 

தைரியமாக சார். நாங்கள் ஒன்றும் குற்றம் ஏதும் செய்யவில்லை. 

எங்களது வங்கி பெட்டகத்தின் மாற்று சாவியை வாங்க எங்கள் 

மேலாளர் கொடுத்த அனுமதி கடித்தத்துடன் தான் வந்திருக்கிறோம். 

நாங்கள் உங்கள் வங்கியின் தலைமைக் காசாளரை பார்க்கவேண்டும் 

என சொன்னபோது உங்கள் ஊழியர்கள் எதுவுமே விசாரிக்காமல் 

எங்களை உள்ளே போக சொன்னார்கள்.அதனால் தான் உள்ளே 

சென்றோம். அப்படியும் நாங்கள் Strong Room உள்ளே செல்லவில்லை.  

நாங்களும் வங்கியாளர்கள் என்பதால் எங்களுக்கும் விதி முறைகள் 

தெரியும். என்று பாதி இந்தியிலும் பாதி ஆங்கிலத்திலும் சொல்லி, 

நாங்கள் கொண்டு சென்ற கடிதத்தைக் காட்டினார். 

 

ஆனாலும் அந்த ஸ்டேட் வங்கி மேலாளர் எங்கள் கன்னோட் 

சர்க்கஸ் கிளை மேலாளருக்கு தொலைபேசியில் அழைத்து நாங்கள் 

உத்திரவு பெறாமல் அனுமதிக்கப்படாத இடத்திற்கு சென்றதாக புகார் 

செய்தார். அப்போது எங்கள் கிளை மேலாளர் எங்களிடம் 

பேசவேண்டும் என்று சொன்னபோது அந்த ஸ்டேட் வங்கி மேலாளர் 

தொலைபேசி கருவியை  நண்பர் வாசுதேவனிடம் கொடுத்தார். 

நண்பர் எங்கள் மேலாளரிடம் விவரத்தை சொல்லி நாங்கள் தப்பு 

ஏதும் செய்யவில்லை என விளக்கியதும் எங்கள் மேலாளர் ஏதோ 

சொன்னார். தவறு நடந்துவிட்டது. மன்னித்துவிடுங்கள். என 

சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.  

 

பிறகு எங்களை அந்த ஸ்டேட் வங்கி மேலாளர் சரி. இது 

போல் இனி செய்யாதீர்கள். என்று அங்கிருந்து விடுதலை 

செய்து தலைமைக் காசாளரிடம், மாற்று சாவியைக் கொடுங்கள் 

என்றார். ஆனால் எந்த ஊழியரையும் அழைத்து ஏன் இவர்களை 

யாரென விசாரிக்காமல் உள்ளே விட்டீர்கள் என கேட்கவில்லை. 

அவரால் கேட்கமுடியாது என்று எங்களுக்கும் தெரியும்!


இந்த இலட்சணத்தில் வங்கி செயல் பட்டால் நகர்வாலா என்ன 

எல்லா வாலாக்களும் பணத்தை எளிதாக ஏமாற்றி வங்கியிலிருந்து 

எடுத்து செல்லமுடியும் என நினைத்துக்கொண்டேன். பிறகு நாங்கள்

மாற்று சாவி பெற்று கிளைக்கு வந்ததும், எங்கள் கிளை மேலாளர் 

கூப்பிட்டு டோஸ் விட்டது தனிக் கதை.

 

தொடரும்







20 கருத்துகள்:

  1. இது எப்படி ? தங்களது குற்றமாகும் வங்கியில் வேலை செய்பவர்கள் யார் வந்தாலும் விசாரிக்க வேண்டியது அவர்களது கடமை இது மேலாளர் முதல் பியூன் வரை இதற்க்கு கடமைப்பட்டவர்கள் தங்களை குற்றம் சுதுமத்துவது தவறானதே.. வங்கிகளில் பணம் கொள்ளை போவதற்க்கு இப்படிப்பட்டவர்களும் ஒரு காரணமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. மிகப்பெரிய அளவில் பணம் ஏமாற்றப்பட்டு எடுத்துசென்ற பிறகும் கூட பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை என்பதைத்தான் தெரிவித்தேன்.

      நீக்கு
  2. சில அதிகாரிகளுக்கு அவர்களின் அதிகாரச் செல்வாக்கு எங்கு செலாவணியாகாது என்று நன்கு தெரியும் நல்லவர்களுக்கு loop holes தெரிந்தும் பிரயோசனமில்லை. ஆனால் அது அல்லாதவருக்குத்தெரியும்போது பல தவறுகள் நடக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  3. எந்த வங்கியிலும் கவுண்டரில் (COUNTER) இருக்கும் ஊழியர் நீங்கள் தலைமைக் காசாளரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன், அவர் இருக்கும் அறையைத்தான் காண்பித்து இருப்பார்கள். ஏன் என்று கேட்க மாட்டார்கள். ஏனெனில் வந்தவர் ஒருவேளை தலைமைக் காசாளருக்கு உறவினராகவோ அல்லது நண்பராகவோ பார்க்கவும் வந்து இருப்பார்கள்.

    அந்த கேபினில் நீங்கள் அதிக நேரம் இருந்திருந்தால் உங்களை யாரேனும் கேட்டு இருப்பார்கள் நீங்கள் போன நேரம் அந்த தலைமைக் காசாளர் இல்லாததால், அவர் வரும் வரை அறையில் காத்து இருந்து விட்டு கிளை மேலாளரைப் பார்த்து இருக்கலாம்.. வங்கி காவலாளி என்ன வேண்டும் என்று கேட்டு தடுத்து நிறுத்தி இருக்கலாம். அந்த வங்கியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. உங்கள் நேரம் , அவசரச் சூழ்நிலை இந்த மாதிரி ஆகி விட்டது என்று நினைக்கிறேன்.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நாங்கள் தலைமைக் காசாளரின் Cabin சென்று விசாரித்தபோது அங்கிருந்த ஊழியர் எங்களை அந்த Cabin இல் உட்கார சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அபப்டி சொல்லாமல் ‘உள்ளே போங்கள்.’ என்று எங்களிடம் சொன்னார். இல்லையென்றால் நாங்கள் சென்றிருக்கமாட்டோம். இப்போதும் அங்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என திரு வெங்கட் நாகராஜ் கீழே கூறியுள்ளதை பாருங்கள்.

      நீக்கு
  4. துவாரபாலகர்களைக்கடந்து வந்துவிட்டு வெறும் கையுடன் செல்ல முடியாது. உயிர் மேல் ஆசையிருந்தால் எல்லாத்தையும் எடுத்து இந்தப்பக்கம் வை என்று மிரட்டியிருக்கலாமே? அவர்கள் அலுவலகத்தில் வழக்கமான முறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் அதற்கு அடுத்தவர்கள் என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

      நீக்கு
  5. வடக்கில் குரலை உயர்த்திப் பேச வேண்டும். அப்போதுதான் காரியங்கள் நடக்கும்.

    ஒருமுறை மாணவர்களுடன் டூர் போயிருந்தபோது, ஹௌரா ஜங்க்ஷனில் இருந்த டெபுடி ஸ்டேஷன் சூப்பிரன்டென்டென்ட், எங்கள் ஸபெஷல் கேரேஜை ஸ்டேஷன் வாயிலுக்குப் பக்கத்தில் நிறுத்தச்சொன்னபோது I have no powers என்று இரண்டு மூன்று முறை சொன்னான். எனக்கு கோபம் வந்தது. குரலை உயர்த்தி How much it will cost? என்று கேட்டேன். அப்புறம் நடந்ததுதான் classic. Fifty Rupees என்றானே பாருங்கள். அந்தக் காசைக் கொடுத்தவுடன் காரியம் நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வடக்கே யாரும் யாருக்கும் பயப்படுவதில்லை. (இங்கு மட்டும் எப்போது என்ன வாழுதாம்? என்று சொல்லாதீர்கள்) எதையும் Casual ஆகவே எடுத்துக்கொள்வார்கள். ‘வாயுள்ள பிழைக்கும்.’ என்பதை செயலாக்குபவர்கள் அங்கே உண்டு.

      நீக்கு
  6. லட்சணத்தை அறிந்தேன்...

    இனி தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. தங்கள் தரப்பில் உள்ள தவறை மறைப்பதற்காக, அடுத்தவரைப் பற்றி குறை சொல்லும் பழக்கம் எப்பொழுது தான் போகுமோ?
    வங்கியில் பணிபுரியும் தங்களுக்கே இந்த அனுபவம் என்றால், வாடிக்கையாளரின் நிலமை என்னவாகும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! வங்கியாளராக இருந்தாலும், உத்திரவின்றி உள்ளே செல்வது சரியல்ல. ஆனால் எங்களை உள்ளே போக சொன்னவர்களை விட்டுவிட்டு எங்களை குற்றம் சொன்னதுதான் வேடிக்கை. என் செய்ய.

      நீக்கு
  8. இப்பவும் அதே இடத்தில் தான் வங்கி செயல்படுகிறது. CCTV கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்கள். நிறைய பேர் வந்து போகும் இடம் அல்லவா! ஆனாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவு தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! இப்போதும் அங்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என அறியும்போது கவலையாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  9. தற்போது பல இடங்களில் நேர்மைக்கு இடமில்லை. நியாயமான தங்களின் உணர்வு புரிகிறது.வேதனையான செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  10. கடமையைச் சரிவரச் செய்யாது பிநரைக் குற்றம் கூறுகிறவர்கள் தான் அதிகம்.
    சுவையாக எழுதுகிறீர்கள்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு