வியாழன், 18 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 43திரிபோலி (Tripoli) சென்றவுடன் அந்த டாக்டர் கடிதம் எழுதியிருந்தார். தாங்கள் பணியில் சேர்ந்து விட்டதாகவும் விரைவில் காசோலை அனுப்புவதாகவும், தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் விடுதி கட்டணங்களை  தவறாமல் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இன்னும் மூன்று மாதத்திற்கு பள்ளிக்கு எந்த கட்டணமும் கட்டத் தேவையில்லை என்பதால் நானும் காசோலை வரும்போது வரட்டும் என எண்ணி என் பணியில் மும்முரமாயிருந்தேன்.

ஒரு மாதம் கழித்து அவரிடமிருந்து வந்த கடிதத்தில் இருந்த செய்தியைப் படித்ததும், அதிர்ச்சியால் இலேசாக வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது!

அந்த கடிதம் என்ன செய்தியை தெரிவித்தது என சொல்லுமுன் லிபியாவைப்பற்றி கொஞ்சம் இங்கே சொல்லலாமென நினைக்கிறேன்.

வட ஆப்பிரிக்க நாடான லிபியா, 1951 ஆம் ஆண்டு 24 டிசம்பர் இல் சுதந்திரம் பெற்ற பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரசர் இதிரிஸ் (King Idris ), 1969 இல் நடந்த இராணுவப் புரட்சியால், கர்னல் கடாஃபி என அழைக்கப்பட்ட திரு கடாஃபி (Muammar Muhammad Gaddafi) யிடம் ஆட்சியை இழந்தார்.

செப்டெம்பர் 1, 1969 லிருந்து அக்டோபர் 20,  2011 வரை ஆட்சியில் இருந்த கடாஃபி கடைசி வரை சர்ச்சைக்குரியவாக இருந்தார். ஏகாதிபத்தியத்திற்கு  எதிரானவர் என்று போற்றியவர்கள் ஒரு பக்கம் இருக்க, அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் தன்முனைப்பாட்சியர்  (Autocrat) என்றும் அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல் இருந்தது என்றும் அனைத்துலக தீவிரவாதத்தை ஆதரித்தார் என்று குற்றம் சாட்டியோரும் உண்டு.

(துரதிர்ஷ்டவசமாக 2011 அக்டோபர் 20  ஆம் தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.)

அவருடைய ஆட்சிக்காலத்தில் அவர் அமெரிக்காவோடும் பிரிட்டிஷாரோடும் நல்லுறவு கொண்டிருக்கவில்லை. அவரது வெளிநாட்டுக் கொள்கைக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் இருந்தததால்தான் லிபியாவைப்பற்றி சொல்லவேண்டியதாயிற்று.

அந்த கடிதத்தில் எனக்கு அப்படி அதிர்ச்சி தரும்படி அந்த டாக்டர் என்ன எழுதியிருந்தார் என்றால், திரு கடாஃபி தலைமையின் கீழ் இருந்த அப்போதிருந்த லிபியாவின் சட்டப்படி, முதல் ஆறுமாதத்திற்கு சம்பாதித்த பணத்தை வெளியே அனுப்ப முடியாதாம். ஆறு மாதத்திற்குப் பிறகும் சம்பாதித்ததில் பாதியைத்தான் அனுப்பமுடியுமாம்.

அதிலும் ஒரு சிக்கலாம். லிபியாவுக்கும்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நல்லுறவு இல்லாததால் அங்கு அந்த நாடுகளின் வங்கிகள் இல்லாததால் அமெரிக்க டாலராகவோ அல்லது பிரிட்டிஷ் பவுண்ட்களாகவோ அனுப்ப முடியாதாம். மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கு மட்டும் தான் பணம் அனுப்பமுடியுமாம். எப்படி பணம் அனுப்புதென்று பார்த்து நிச்சயம் அனுப்புவதாகவும் ஆனால் அதை அனுப்ப  6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை ஆகும் என்றும் எழுதியிருந்தார்.

பணம் வரவில்லையே என்று பள்ளிக் கட்டணத்தைக் கட்டாமல் இருந்துவிடாதீர்கள். நிச்சயம்  பணம் அனுப்புகிறோம்.அதுவரை குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எழுதியிருந்தார்.

இந்த செய்தியைப் படித்ததும் என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்!

மூன்று மாதங்கள் கழித்து அந்த பள்ளி,  டாக்டரின் பிள்ளைகளுக்கான கட்டணத்தை கட்டச்சொன்னால் என்ன செய்வது என அறியாமல் திகைத்தேன். அப்படி அந்த பள்ளி கட்டணம் கட்ட சொல்லி கடிதம் அனுப்பினால் அந்த டாக்டருடைய சேமிப்புக்கணக்கில்  பற்று பதிவு (Debit) செய்துதான்  பணத்தை தரவேண்டும். ஆனால் அவருடைய கணக்கில் தேவையான பணம் இல்லாததால், அப்படி செய்தால் அது தற்காலிக மிகைப்பற்றாக (Temporary Overdrawal) ஆகிவிடும்.

வங்கி விதிப்படி சாதாரணமாகவே SB கணக்கில் தற்காலிக மிகைப்பற்று (Temporary Overdrawal) தர இயலாது. அதுவும் அந்த டாக்டர் NRE வாடிக்கையாளர் ஆகிவிட்டபடியால், அந்த சேமிப்பு கணக்கு ONR (Ordinary Non Resident) கணக்காக ஆகிவிட்டது. அதில் நிச்சயம் மிகைப்பற்று தர இயலாது. அவரது உறவினர்கள் யாரையும் தெரியாததால் அவர்களையும் அந்த பணத்தை கட்ட சொல்லமுடியாது.

அதே நேரத்தில் பணம் கட்டாவிட்டால் அந்த பிள்ளைகள் பள்ளியை விட்டும் விடுதியையும் விட்டும் வெளியேற்றப்படலாம். அப்போது என்ன செய்வது என்ற கவலைகள் என்னை வதைக்கத் தொடங்கியதால் வங்கியில் எப்படி வணிகத்தைப் பெருக்குவது, வாராக் கடனை எப்படி வசூலிப்பது போன்ற கவலைகள் சுத்தமாக மறைந்துவிட்டன.

ஆழம் தெரியாமல் காலை விட்ட கதை போல ஆகிவிட்டது என் நிலை. அவரது பிரச்சினை எனது பிரச்சினையாக மாற்றப்பட்டுவிட்டது என்பதை அப்போது உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் Transfer Of Tension பற்றி எனது வங்கி பயிற்சிக் கல்லூரியில் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வந்தது!


தொடரும்

20 கருத்துகள்:

 1. முதல் வருகை;முதல் வாக்கு!

  இன்றும் முடிக்கவில்லையா?!

  வங்கி அனுபவங்களோடு உலகச் செய்திகளும் சேர்ந்து மிக சுவாரஸ்யமாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! அடுத்த பதிவில் முடிவு தெரியும்.

   நீக்கு
 2. திரிசங்கு நிலை என்பது இது தானோ...? மற்றொரு கதையையும் விரைவில் வாசிக்க ஆவலுடன் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. Doesn’t the doctor have anyone in India to help him? On what security, he expects money from the bank? I believe he knows this before going to Libya. Funny people.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அந்த டாக்டருக்கு உறவினர்கள் இருந்தார்கள். ஏனோ தெரியவில்லை அவர்களது உதவியை அவர் நாடவில்லை. அவருக்கு லிபியாவின் கடுமையான கட்டுபாடு பற்றி முன்பே அவருக்கு தெரிந்திருந்ததா என தெரியவில்லை.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 5. நமக்கான பிரச்சனைகளை சமாளிக்கவே முடியள இதில் இப்படியா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! உண்மைதான். நமக்கும் இருக்கும் பிரச்சினையில், மற்றவர்களுடையதையும் ஏற்கவேண்டுமென்றால் என் செய்ய.

   நீக்கு
 6. இதைப்படித்தபின் முற்பட்டதையும் படித்தேன் !மிகவும் சுவையாக செல்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

   நீக்கு
 7. சிரமமான சூழல்தான்! மீண்டு வந்ததை படிக்க ஆவலாக உள்ளது! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே!

   நீக்கு
 8. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 9. ம்..ம். ...தொடருங்கள் சுவையாக உள்ளது. இனிய பாராட்டு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 10. தர்மசங்கடத்தில் மாட்டுவீர்கள் என்றுதான் நினைத்தேன். அதேபோல் நடந்துள்ளது.

  என்ன செய்தீர்கள்? எப்படி மீண்டீர்கள்? திரும்பவும் தொடருமா? சீக்கிரம் சொல்லுங்க சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வரதராஜுலு.பூ அவர்களே! என்ன ஆயிற்று, எப்படி அந்த சிக்கலில் இருந்து மீண்டேன் என்பதை இன்றைய பதிவில் எழுதியுள்ளேன். தயை செய்து காண்க.

   நீக்கு