செவ்வாய், 30 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 45வாடிக்கையாளர்களில் பலர் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள், சிலர் என்னிடம் கோபப்பட்டிருக்கிறார்கள்,சிலர் அச்சுறுத்தியிருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில், வாடிக்கையாளர்களும் நானும் 2 இல் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் சிலர் என்னை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். நான் குறிப்பிட இருக்கும் வாடிக்கையாளர் என்னிடம் அவ்வாறு நடந்துகொண்டபோது  நான் காரணமல்ல என்றாலும், என்னை அவமானப்படுத்துவதின் மூலம் அவருடைய வங்கியின் மேல் ஏற்பட்ட கோபத்தை என்னிடம் காண்பித்தார் என நினைக்கிறேன்.

நான் அப்போது எங்கள் வங்கியியில் வட்டார மேலாளராக (Regional Manager) பணியாற்றிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் காலை 10 மணிக்கு எங்களது தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு தொலைப்பதிவு (Telex) வந்தது.

அதில் எனது வட்டாரத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றூர் கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த கிளை பற்றி ஒரு புகார் கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வாடிக்கையாளர், தான் வங்கியில் கட்டிய  ரூபாய் 2000 த்தை தனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும். அது குறித்து கிளை மேலாளரிடம் கேட்டதற்கு அவர் அப்படி ஏதும் பணம் கட்டப்படவில்லை என்று சொல்லிவிட்டதால், அது குறித்து தீவிரமாக விசாரித்து தான் கட்டிய பணத்தை கணக்கில் வரவு வைக்க ஆவன செய்யுமாறும், தனது பணத்தை கணக்கில் வரவு வைக்காத காசாளர் மற்றும் மேலாளர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், தலைமை அலுவகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதனால்  என்னை உடனே அந்த கிளைக்கு சென்று ஆய்வு செய்து அந்த வாடிக்கையாளரின் புகார் சரிதானா என விசாரித்து, விரிவான அறிக்கை தருமாறு அந்த தொலைப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

அந்த கிளை நான் பணியாற்றிய இடத்திலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.  இதுபோன்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தால் உடனே அங்கு செல்லவேண்டும் என்பது அப்போது எங்கள் வங்கியில் இருந்த விதி.

எனவே உடனே ஆய்வுக்கு என்னோடு வரும் அலுவலரோடு காரில் புறப்பட்டேன். முதலில் கிளைக்கு சென்று விசாரித்துவிட்டு பின்பு மேலாளரையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த வாடிக்கையாளரிடம் பேச எண்ணியதால் முதலில் கிளைக்கு சென்றேன்,

காலை 11 மணிக்கு கிளம்பிய நாங்கள் அந்த ஊரை அடையவே மதியம் 1.30 மணி ஆகிவிட்டது.கிளை மேலாளரிடம் அந்த புகார் பற்றி விசாரித்தென். அதற்கு அவர் அந்த வாடிக்கையாளர் பணம் ஏதும் கட்டாமலேயே அடிச்சீட்டு (Counterfoil) ஒன்றை காண்பித்து குறிப்பிட்ட தேதியில் தான் பணம் கட்டியதாகவும், ஏன் அதை தனது கணக்கில் வரவு வைக்கவில்லை என்று தினம் வந்து தகராறு செய்வதாக சொன்னார்.

மேலும் அந்த அடிச்சீட்டில் வங்கியின் முத்திரை இருந்தாலும், காசாளரின் சுருக்கொப்பம் (Initial) இல்லை என்றும் கூறினார். நான் அந்த கிளையின் காசாளரிடம் அது பற்றி விசாரித்தபோது, அவர் தான் பணத்தை ஒவ்வொரு  வாடிக்கையாளரிடமிருந்தும் பெறும்போது தவறாமல் முத்திரை இட்டு சுருக்கொப்பமிட்டு கொடுப்பதாகவும், அந்த வாடிக்கையாளர் வைத்திருக்கும் அடிச்சீட்டில் தனது சுருக்கொப்பம் இல்லாததால், தான் அந்த பணத்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

நான் மேலாளரிடம்  வங்கி காசாளர் சுருக்கொப்பமிடாதபோது எப்படி அந்த அடிச்சீட்டில் வங்கியின் முத்திரை உள்ளது?’  என கேட்டதற்கு அவர் தெரியவில்லை. சார். ஆனால் அந்த வாடிக்கையாளர் ரூபாய் 2000 த்தை தான் நேரடியாக காசாளரிடம் கொடுக்கவில்லை என்றும், கிளையில் உள்ள கடைநிலை ஊழியரிடம் கொடுத்து பணத்தை கட்ட சொன்னதாகவும் அவர்தான் அந்த அடிச்சீட்டை கொடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் அந்த ஊழியரோ தன்னிடம் அந்த வாடிக்கையாளர் பணம் ஏதும் தரவில்லை. என்று சொல்கிறார். என்று கூறினார்.

உடனே அந்த ஊழியரை அழைத்து விசாரித்தபோது அவர், தன்னிடம் அந்த வாடிக்கையாளர் பணம் தரவில்லை என்றும், மேலும் காசாளர் இருக்கும்போது தன்னிடம் பணம் தந்ததாக கூறுவது ஏன் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.

சரி மேற்கொண்டு ஆய்வு செய்யுமுன்பு, அந்த வாடிக்கையாளரை அவரது இருப்பிடத்தில் சந்தித்து அவரது தரப்பு நியாயத்தையும் கேட்போம் என நினைத்து மேலாளரிடம், அந்த வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார்?’ எனக் கேட்டேன்.

அவர் அந்த வாடிக்கையாளர் இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெயின் ரோடில் உள்ள பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கிறார். அவர் இந்நேரம் கடையில் தான்  இருப்பார்.’ என்றார்.

சரி. அங்கே போய் அவரை பார்க்கலாம். நீங்களும் என்னுடன் வாருங்கள். எனக்கூறி அவரை அழைத்துக்கொண்டு  அந்த வாடிக்கையாளரின் கடைக்கு சென்றேன்.
 தொடரும்

18 கருத்துகள்:

 1. அனுபவம் பலவிதம்! சுவையும்பலவிதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

   நீக்கு
 2. என்ன நடந்திருக்கும் என்று "பிடிபட"வில்லை... அறிய தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. I never thought bank would encounter such problem. Whenever a person deposits cash there should be an entry at the same spot. I cannot understand where this could go wrong. Waiting to see how this unfolds.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்களது ஐயம் நியாயமானதே. பணத்தை வங்கியில் காசாளரிடம் கொடுத்து இரசீது பெற்றிருந்தால் தவறு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கோ அவ்வாறு நடக்கவில்லை. அதனால்தான் இந்த சிக்கல்.

   நீக்கு
 4. கடைநிலை ஊழியர் விளையாடி விட்டாரா?
  மாறுபட்ட அனுபவம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பொறுத்திருங்கள் உண்மை அறிய!

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே! அப்புறம் என்னவாயிற்று என்பது அடுத்த பதிவில்!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மதுரைத்தமிழன் அவர்களே!

   நீக்கு
 8. வங்கியில் கட்டிய ரூபாய் 2000 த்தை விட அதனை விசாரிக்க அதிகம் பண மற்றும் பயணச்செலவுகள், அலைச்சல், விசாரணை என சிரமங்கள் மிகுதி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வங்கியின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க ஏற்படும் செலவை கணக்கு பார்க்க முடியுமா என்ன?

   நீக்கு
 9. வங்கியில் வேலை பார்த்த நண்பரின் அனுபவம்-காசாளர் பணியில் ஒருநாள் இருப்பில் 5 ரூ அளவில்(சரியான தொகை மறந்துவிட்டேன்) அதிகமிருந்ததை குறித்து கணக்கு முடித்து விட்டார். பல நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர் ஒருவர் மேல்குறிப்பிட்ட தொகையில் வங்கியில் இருக்க வேண்டிய சலான் பகுதி (Foil) யை காண்பித்து வேறு ஏதோ விபரம் கேட்க , வங்கியில் இருக்க வேண்டியது எப்படி அவரிடம் உள்ளது என்று அந்த தேதி ஆவணங்களை ஒப்பிட்டபோது நண்பர் அதிக இருப்பு என்று குறித்திருந்ததுடன் ஒத்திருந்தது. நடந்தது என்னவென்றால், பணம் பெற்றுக்கொண்டு சலானில் கையெழுத்து இல்லை என்பதால் அவரிடம் கொடுக்க திருப்பி கொடுக்காமல் சென்றதன் விளைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேலூரான் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் நடக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர் கொண்டு வந்த அடிச்சீட்டில் எழுதப்பட்டிருந்த தேதியில், காசாளருடைய குறிப்பேட்டில் அந்த தொகை வரவு வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை அந்த வாடிக்கையாளர் பணத்தை கட்டிவிட்டு, செலுத்து சீட்டையும் (Challan) எடுத்து சென்றிருந்தால் அன்றைய நாளில் கணக்கு முடிக்கும்போது, கணக்கில் வராமல் அந்த தொகை இருப்பது தெரிந்திருக்கும். ஆனால் வங்கியின் ஆவணங்கள் படி அன்று கணக்கு சரியாக (Tally ஆகி ) இருந்தது.

   நீக்கு