வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஆசையில் ஒரு கடிதம்? 6


கடிதம் எழுதும்போது  நாம் செய்யும் சிறிய தவறுகள் பற்றி நான் கேட்டறிந்தவைகளை முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன்.
பள்ளியில் மற்றும் கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றுத்தருகிறார்களே ஒழிய அந்த மொழியை நம்முடைய 
தினசரி வாழ்க்கையில் எந்தெந்த இடத்தில் எவ்வாறு உபயோகிக்கவேண்டும் என யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.

அரசுப் பள்ளிகளில் கடிதம் எழுதுதல் (Letter Writing)  பற்றி பாடம் நடத்தினாலும் அப்போது ஓரிரு மாதிரிக் கடிதங்களை மட்டும் 
கொடுத்து எழுத சொல்லுவார்களே தவிர மாணவர்களுக்கு 
தாங்களாகவே கடிதம் எழுத பயிற்சி தருவதில்லை. அதை 
ஊக்குவிப்பதும் இல்லை.

தனியார் பள்ளிகளில் எவ்வாறு சொல்லித்தருகிறார்கள் எனத்
தெரியவில்லை. அதனாலேயே படித்து முடித்து பணியில் 
சேரும்போது பலர் பணியேற்பு அறிக்கை (Joining Report) மற்றும் 
விடுப்புக் கடிதங்கள் (Leave Letters)கூட எழுதக்கூடத் 
தடுமாறுகிறார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை அறிவியல் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, எங்களது 
வேளாண்மை விரிவாக்கப் பேராசிரியர் திரு பாண்டுரங்கன் அவர்கள்,படித்து முடித்து பணியில் சேரும்போது எவ்வாறு 
பணியேற்பு அறிக்கை எழுதுவது என சொல்லிக்கொடுத்தார்.

என்ன இது! பாடத்தை நடத்துவதை விட்டுவிட்டு, இவர் நம்மை 
பள்ளி மாணவர்கள் போல் நினைத்து இதையெல்லாம் சொல்லித்தருகிறாரே?’என நாங்கள் நினைத்ததுண்டு. அப்போது வேடிக்கையாகத் தெரிந்த அந்த கடிதம் எழுதும் பயிற்சியின் 
உபயோகம் பணியில் சேரும்போதுதான் தெரிந்தது.

நான் அக்டோபர் 5,1966 ல் அப்போதைய தஞ்சை மாவட்டம்  
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க
அலுவலராக பணியில் சேர சென்றபோது, அங்கிருந்த அலுவலக
மேலாளர், நான் பணியில் சேர வந்திருக்கிறேன் எனத் தெரிந்ததும்
ஒரு வெள்ளைத் தாளை என்னிடம் கொடுத்து பணியேற்பு 
அறிக்கைஎழுதிக் கொடுங்கள். என சொல்லிவிட்டு என்னையே 
பார்த்துக்கொண்டு இருந்தார்.

நான் கடிதம் எழுதத் தடுமாறுவேன் என்றும், அவரது உதவியை
நாடுவேன் என்று எதிர்பார்த்து இருந்தார் போலும். எங்களுக்கு
ஏற்கனவே எங்கள் பேராசிரியர் பணியேற்பு அறிக்கை எழுத  
சொல்லிக் கொடுத்திருந்ததால், நான் சரசர வென அதை எழுதிக்
கொடுத்ததும், நீங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
படித்தவரா?’ என்றார்.

ஆமாம்.ஏன் கேட்கிறீர்கள்?’ என்றதும் ஏற்கனவே இங்கு ஒருவர்
உங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர் பணிபுரிகிறார். அவரும்
உங்களைப் போலவே வந்தவுடன் உடனே பணியேற்பு 
அறிக்கையை எழுதிக்கொடுத்தார்.அதனால் கேட்டேன். என்றார்.

அந்த நேரத்தில் எங்களது பேராசிரியர் திரு பாண்டுரங்கனுக்கு
மனதிற்குள் நன்றி சொன்னேன்.ஆனால் அதே நேரத்தில்
வேறொன்றையும் நினைத்துப் பார்த்தேன்.  

பள்ளியில் 11 ஆண்டுகள் படித்தும், பின் கல்லூரியில்  
5 ஆண்டுகள்படித்தும் பணியில் சேரும்போது தரவேண்டிய 
பணியேற்பு அறிக்கையைக்  கூட நம்மால் இன்னும் சுயமாக 
எழுதத்தெரியவில்லையே என்று.

பள்ளி மற்றும் கல்லூரிகளில்தான் கடிதம் எழுதுவது  பற்றி
சொல்லித் தருவதில்லை என்றால், சில அலுவலகத்தில்
விடுப்புக் கடிதங்களைக்கூட Cylcostyle செய்து  வைத்திருப்பதால்
சொந்தமாக கடிதம் எழுதும் திறமை வளர வாய்ப்பு இல்லை
என்பதுதான் உண்மை.

இதுபோன்ற வார்ப்புரு (Template) கடிதங்களின் உள்ள சொற்களை
எங்கு உபயோகப்படுத்தவேண்டும் எனத் தெரியாமல் உபயோகித்து
சில சமயம் சிக்கலில் மாட்டிக்கொள்வோரும் உண்டு.

எனது நண்பர் ஒருவரது அலுவலகத்தில் ஊழியர்கள் கடிதம்
எழுதும்போது, ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால்
We would be pleased to know என்று ஆரம்பித்து, பண்பட்ட முறையில்
கடிதம்  எழுதவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அலுவலகத்தில் ஊழியர் துறையில் புதிதாய் சேர்ந்த ஒரு
இளம் அலுவலர்,முன்னாள் ஊழியர் ஒருவர் குடும்பத்திற்கு ஒரு
விவரம் கேட்டு எழுதியபோது, மேலே சொன்ன  சொற்றொடரை உபயோகித்து கடிதம் எழுதிவிட்டார்.அது எந்த அளவிற்கு அந்த
குடும்பத்திற்கு மன வேதனையை உண்டு பண்ணியது என்பது
வேறு கதை. 

அப்படி அவர் என்ன எழுதியிருந்தார் என்றால்
We would be pleased to know the date of death of your husband என்று!
அவர் அவ்வாறு எழுதியதன் காரணம் அவரை சொந்தமாக
சிந்திக்கவிடாதது தான் என்பது என் கருத்து.

வங்கியில் பணிபுரியும்போது, Salutation எனப்படும் கடிதத் 
தலைப்பில் எழுதப்படும் Dear Sir போன்றவைகளை 
உயர் பதவியில் இருப்பவர்களுக்கு உபயோகிக்கக் கூடாது 
என்ற நடைமுறையை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு
புது தில்லியில் பணிபுரியும்போது எனக்குக் கிடைத்தது. 

எங்கள் வங்கியில் பொன் விழா கொண்டாட்டதிற்கான 
அழைப்பிதழை மரியாதை நிமித்தம் இந்தியக் 
குடியரசுத்தலைவர் அவர்களுக்குத் தரும்படி எங்களது 
தலைமையகம் எங்களது புது தில்லி வட்டார அலுவலகத்தை பணித்திருந்தது.

அந்த பொன்விழா அழைப்பிதழுடன் அனுப்பவேண்டிய 
கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என எங்கள் அலுவலகத்தில் 
இருந்த யாருக்கும் தெரியவில்லை. Dear Sir என 
ஆரம்பிக்கக்கூடாது என சிலர் சொல்ல. ஏன் இந்த சந்தேகம்?’ 
குடியரசுத் தலைவர் அலுவலகத்தையே கேட்டுவிடலாமென்று 
எண்ணி, அங்கிருந்த தலைமை மரபு சீர் முறை அலுவலர் 
(Chief Protocol Officer) அவர்களிடம் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது அவர் சொன்னார்   
'May it please your Excellency என்று ஆரம்பிக்கவேண்டும்' என்று.

(ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னும் அவர்களது வழக்கத்தைப் பின் பற்ற வேண்டுமா என்பதுதான் என் கேள்வி)

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மின்னஞ்சல்கள் மூலமாகவும்  குறுந்தகவல் சேவை மூலமாகவும் தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்த பின் கடிதம் எழுதுவது குறைந்து
வருகிறது என்றாலும் அது முழுதும் மறைந்து விடாது
என்பதுதான் உண்மை.

தொலைக்காட்சி வந்தபோது நம்மில் பலர் இனி வானொலி இருக்காது
என நினைத்ததுண்டு. ஆனால் வானொலி இன்னும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் எத்தனை தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டாலும் கடிதங்கள் எழுதுவது நடைமுறையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனவே நாமும் நன்முறையில் கடிதம் எழுத பழகுவோம்.

18 கருத்துகள்:



  1. கடிதம் எழுதும் முறை பற்றிய தங்கள் கருத்துரை அனைவருக்கும் பயன் தரும் ஒன்றாகும்

    விழாவில் தங்களை நேரில் கண்டு உரையாடி மகிழ்ந்தது மறக்க இயலா மகிழ்ச்சி ஆகும்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் சா.இராமாநுசம் அவர்களே!. விழாவில் தங்களை நேரில் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் கூறுவதுபோல் பலரும் கடிதம் என்று எழுதவரும்போது தடுமாறத்தான் செய்கிறார்கள். முறையான பயிற்சியின்மையே காரணம். பல புதிய விசயங்களையும் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எல்லோரும் அறிய வேண்டிய தகவல்கள்.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு விச்சு அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. The President is pleased to appoint - The President withdraws his pleasure of your appointment=

    முடிமகன் சாதாரண குடிமகனுக்கு எழுதும் மறை.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. பயன் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. //கடிதங்கள் எழுதுவது நடைமுறையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். //
    அலுவலகங்களில் மட்டுமாவது!
    //எனவே நாமும் நன்முறையில் கடிதம் எழுத பழகுவோம். //

    பழக்க ஆரம்பித்து பிட்டீர்கள்.பழகுவோம்.
    நன்று

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. நல்ல பல கருத்துக்கள் சார்...

    இவற்றை எல்லாம் குழந்தைகள் முதற்கொண்டு பள்ளியில் (சில பள்ளிகளைத் தவிர) செய்தால் நன்றாக இருக்கும்... இல்லையெனில் அந்த ஊழியர் எழுதியது போல ஆகி விடும்...

    /// அதுபோல் எத்தனை தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டாலும் கடிதங்கள் எழுதுவது நடைமுறையில் இருக்கும் என்றே நினைக்கிறேன். ///

    வெகுவாக குறைந்தே விட்டது... இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய் விடலாம்...

    பதிலளிநீக்கு
  14. அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. உங்கள் அனுபவங்கள் பேசட்டும். அடுத்தவர்களுக்கு ஒரு வழி காட்டுதலாய் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  17. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு மோகன் P அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

    பதிலளிநீக்கு