புதன், 20 மே, 2009

நினைவோட்டம் 11

முன்பே எழுதியிருந்தபடி எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் வெளியூர் சென்று படிக்க வேண்டிய நிலை. விருத்தாசலம் பள்ளியில் சேர்ந்தால் ஹாஸ்டல் இல்லாததால் வீட்டிலிருந்து தினம் 5 மைல்(8 கிலோமீட்டர்) நடந்து சென்று வரவேண்டும். அதனால் அங்கு சேர்க்க அப்பாவுக்கு விருப்பமில்லை. அரியலூரில் வழக்கறிஞராக இருந்த எனது மாமா வீட்டில் தங்கிக்கொண்டு அரியலூர் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த சமயத்தில் எங்களது அப்பாவைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். எங்கள் அப்பா விவசாயி ஆனாலும் கூட நாங்கள் மேலே படிக்க வேண்டும் என விரும்பினார். அவர் மாயவரத்தில் மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் தாத்தா இறந்துவிட்டதால் மேலே படிக்காமல் விவசாயத்தை பார்க்க ஊரிலேயே தங்கிவிட்டதால் தான் படிக்காததை தன் பிள்ளைகளாவது படிக்கவேண்டும் என என்னையும் எனது அண்ணன்களையும் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படித்து வெவ்வேறு துறைகளில் நாங்கள் பணிபுரிய உதவினார். அதனால்தான் எனது அண்ணன்களில் மூத்தவர் மின்சார வாரியத்தில் தலைமைப்பொறியாளராகவும், இரண்டாமவர் வேளாண் மரபியல் ஆராய்ச்சியாளராகவும், மூன்றாமவர் கல்வியாளராகவும், நான்காமவர் கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராகவும் நான் வங்கியாளனாகவும் ஆக முடிந்தது.

அப்பா ஒரு தீவிர சைவ பக்தர். தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அதுபோல் மாலையில் 'அனஷ்டானம்' செய்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்துதான் சாப்பிடுவார்கள். இந்த வழக்கத்தை அவர்கள் இறக்கும் வரையில் தொடர்ந்து வந்தார்கள்.
எனக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் நான் மூன்றாவது படிக்கும்போதே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு மட்டுமல்ல எங்கள் ஊரிலிருந்து உயர்நிலை பள்ளியில் படித்துவந்த மூன்று நான்கு பேருக்கும் இரவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் சொல்லிக்கொடுத்தார்கள். அப்போதெல்லாம் மின் இணைப்பு இல்லை. வீட்டில் லாந்தர் விளக்கில்தான் படித்தோம். இரவு சாப்பாடு ஆனதும் திண்ணையில் அமர்ந்து நாங்கள் விளக்கை சுற்றி உட்கார்ந்து கொண்டு அப்பா சொல்லிக்கொடுத்ததை எழுதியதும் படித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

நினைவுகள் தொடரும்
வே. நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. வணக்கம்.

    ஹ ஹ ஹா

    கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி என்பதைத் தங்கள் தந்தையார் உணர்ந்திருக்கிறார்.

    நீங்களும் உணர்த்திவிட்டீர்கள்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! என் தந்தை தான் மேலே படிக்கமுடியாமல் போனதாலும், சொத்தை விட கல்வியே முக்கியம் என எண்ணியதாலும், தன் பிள்ளைகள் அவசியம் மேலே படிக்கவேண்டும் நினைத்தார். எனவே ஔவைப் பாட்டியின் கொன்றை வேந்தன் பாடலை தாங்கள் இங்கு எடுத்துக்காட்டாக தந்தது சரியே.

      நீக்கு