எங்களது அப்பா தீவிர சைவராக இருந்ததால் எங்களுக்கு சைவக்கடவுளர்களின் பெயரையே வைத்திருந்தார்கள். சைவராய் இருந்தும் எங்கள் ஊரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கும் தர்மகர்த்தாவாக இருந்தார்கள்.
இறைப்பணியோடு மருத்துவப்பணியும் செய்து வந்ததால் எங்கள் ஊரில் காலரா நோய் வந்து மக்கள் கஷ்டப்பட்டபோது காலரா மருந்தை தபால் மூலம் வரவழைத்து நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் எந்த வித கட்டணமும் வாங்காமல் கொடுத்து பல உயிரைக்காப்பாற்றியிருக்கிறார்கள்.(மருத்துவ வசதிகள் நகரில் உள்ளவர்களுக்கே கிடைக்காத காலம் அது)
அதுவுமல்லாமல் பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து எண்ணற்ற பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு யாரோ சொல்லிக்கொடுத்த அந்த வைத்தியத்தை அவர்கள் இறக்கும் வரையில் எந்தவித ஆதாயத்தையும் எதிர்பாராது, எந்த நேரத்தில் வந்தாலும் முகம் சுளிக்காது வைத்தியம் செய்திருக்கிறார்கள். இதற்காகவே இரவில் வருபவர்களுக்காக திண்ணையிலேயே மருந்துடனும் ஒரு சொம்புவில் தண்ணீருடனும் படுத்துக்கொள்வார்கள். காரணம் நடு இரவில் வருபவர்களால் வீட்டில் உள்ளவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதுதான்.
எங்கள் ஊரிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலும் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்ததால் இரவு நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்பவர்களும் அறுவடை காலங்களில் காவலுக்கு செல்பவர்களும் பாம்பு கடித்து எங்கள் வீட்டிற்கு எந்த நேரத்திலும் சிகிச்சைக்கு வருவது வழக்கம். பாம்பு கடிக்குமல்லாமல் நண்டுவாக்கிளி, ஜலமண்டலம் போன்ற கொடிய ஜந்துக்களின் கடிக்கும் அவர்கள் அந்த பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அப்பாவால் மரணத்தின் பிடியில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அநேகம்.
அப்பா செய்து வந்த அந்த பச்சிலை வைத்தியத்தை அவருக்கு பிறகு எங்கள் வீட்டில் யாரும் தொடராது ஒரு துரதிருஷ்டம் என நான் நினைக்கிறேன்.
நினைவுகள் தொடரும்
வே. நடனசபாபதி
வணக்கம்.
பதிலளிநீக்குஇந்நிகழ்வைச் சமீபத்தில் தங்களின் பின்னூட்டம் வாயிலாக அறிந்தேன்.
அன்று மருத்துவம் சேவை. இன்று வணிகம்.
அவ்வளவுதான்.
தொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நீங்கள் சொவது சரியே. இன்று மருத்துவம் படிப்பதே பொருள் ஈட்டத்தான். சேவை செய்ய அல்ல.
நீக்கு