சனி, 7 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 2

கடலூர் (முந்தைய தென்னார்க்காடு) மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே இருக்கும் தெ.வ.புத்தூர் என்கிற தெற்கு வடக்கு புத்தூர்தான் நான் பிறந்த ஊர்.
ஊர் என்று பேர் தானே ஒழிய நான்கு பெரிய தெருக்களும் ஒரு சின்ன தெரு மட்டுமே உண்டு. விவசாயம் தான் முதன்மைத்தொழில். ஊருக்கு சரியான பாதை கிடையாது.(நான் சொல்லுவது ஐம்பதுகளில்) அருகிலுள்ள விருத்தாசலம் போக சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று கருவேப்பிலங்குறிச்சியில் பஸ் ஏறவேண்டும்.வழியில் ஊரருகே உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் இருந்தால் வெள்ளம் வடியும் வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லாவிடில் தெப்பகட்டை மூலம் ஆற்றை தாண்டலாம். (தெப்பக்கட்டை என்பது ஒரு பெரிய மரத்துண்டில் இருபுறமும் கயறு கட்டி இருவர் பிடித்துக்கொண்டு நீந்தி வருவர். பயணிகள் கட்டையை இருகைகளாலும் கோர்த்துப்பிடித்துக்கொண்டு அவர்கள் கூடவே சென்றால் அக்கரையை அடைந்துவிடலாம்.) நினைத்துப்பார்த்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. ஆனால் எல்லோரும் அவ்வாறுதான் மழைக்காலங்களில் பயணம் செய்தோம். (பல முயற்சிக்கு பிறகு 1957 -ல் ஒரு தரைப்பாலம் கட்டி அதை பலமுறை வெள்ளம் அடித்துக்கொண்டு போனபின் தற்போது பெரிய பாலம் கட்டிவருகிறார்கள்.)
ஊரில் ஒரே ஒரு துவக்கப்பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அதற்கு மேல் படிக்க ஒன்று எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள விருத்தாசலம் செல்லவேண்டும் அல்லது பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெண்ணாடம் (அ) பதின்மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் செல்லவேண்டும். இதன் காரணமாகவே பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. தற்போது நிலைமை மாறியிருக்கிறது. ஊரில் இருந்த பள்ளிக்கு கட்டிடம் ஏதுமில்லை.

ஊருக்குள் நுழைந்ததும் உள்ள பெரிய ஏரியின் கரையில் இருந்த ஆலமரம் தான் பள்ளிக்கூடம். அதன் கீழ்தான் எல்லா வகுப்புகளும் நடந்தன. பள்ளியை நடத்தியவர் ஐயா என மரியாதையுடன் ஊர் பெரியவர்களாலும் பயத்துடன் மாணவர்களாலும் அழைக்கப்பட்ட திரு சாமிநாத ஐயர்  ஆவர்.அவரிடம்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.அவர் நடத்திய பாடங்கள் அப்போது வேம்பாய் கசந்தாலும் பிற்காலத்தில் அவை எவ்வாறு உதவியது என்பதை பின் விவரிக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை அவரைப்போன்ற ஆசிரியரை நான் இதுவரை பார்க்கவில்லை.
நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

10 கருத்துகள்:

  1. Nostalgic trip was pretty good... reminded me the movie Autograph...vasu

    பதிலளிநீக்கு
  2. உங்களது கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. its a nice post. But those good villages are now dying and urbanisation towards Chennai is spreading.

    பதிலளிநீக்கு
  4. குப்பன்_யாஹூ said...
    its a nice post. But those good villages are now dying and urbanisation towards Chennai is spreading.
    தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இப்போதைய இளைஞர்கள் கிராமங்களை தெரிந்துகொள்ளவே இந்த பதிவு. வரவுக்கு நன்றி.
    வே.நடனசபாபதி

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் சார்.ஒவ்வொருவரும் இவ்வாறு தன்னைப்பற்றி பதிவு செய்வது ஊர், கலாச்சாரம்,வாழ்க்கை இன்ன பிற அனைத்தையும் ஆவணப்படுத்த ஏதுவாகும்.விருத்தாசலம் சுற்றியுள்ள செம்மண் வாழ்வு இன்னும் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தான் நினைக்கிறேன். வே.சபாநாயகம்,இரத்திண கரிகாலன்,பொன்ற ஒரு சிலர் மட்டுமே அதை செய்து வருகின்றனர்.உங்கள் வருகை வளமாகுக.

    பதிலளிநீக்கு
  6. வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்கள் சார்

    பதிலளிநீக்கு
  7. "ஞாபகம் வருதே... said...
    வாழ்த்துக்கள் சார்.ஒவ்வொருவரும் இவ்வாறு தன்னைப்பற்றி பதிவு செய்வது ஊர், கலாச்சாரம்,வாழ்க்கை இன்ன பிற அனைத்தையும் ஆவணப்படுத்த ஏதுவாகும்."

    வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி. திரு வே.சபாநாயகம் அவர்கள் எனது மூத்த சகோதரர் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வேர்டு வெரிஃபிகேஷனை சோதனைக்காக வைத்துள்ளேன். விரைவில் எடுத்துவிடுகிறேன். நன்றியுடன், வே.நடனசபாபதி

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்.

    ஆசிரியப்பயிற்சி படிக்கும் போது மிக நன்றாகப் படிக்கும் என் சக மாணவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது இது போன்றதொரு அனுபவம் கிட்டியது.

    நான் பிறந்ததில் இருந்தே நகரத்தில் இருந்தவன்.

    ஆகவே முதலில் நான் வியந்தது, இப்படிப் பட்ட கிராமத்தில் இருந்து இச்சிறுபள்ளியில் படித்து ஆயிரத்து நூறுக்குமேல் இவனால் வாங்க முடிந்திருக்கிறதே என்பதுதான்.

    உங்கள் பதிவு நோக்க அக்கிராமத்தில் சென்று வந்த நினைவை மீட்டெடுத்தேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு