சனி, 28 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 6

தமிழில் புரோ நோட் எனப்படும் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது உள்ள தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு இல்லை.இதை ஆங்கிலத்தில் Demand Promissory Note என சொல்வார்கள். எங்களுக்கு ஐயா சொல்லிக்கொடுத்த பிராமிசரி நோட் இதோ.

தென்னாற்காடு ஜில்லா, விருத்தாசலம் தாலுக்கா, தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் நடனசபாபதி ஆகிய நான், மேற்படி ஊரைச்சேர்ந்த குப்புசாமி மகன் இராமசாமிக்கு எழுதிக்கொடுத்த பிராமிசரி நோட்டு.
ஐயா, நான் எனக்காகவும்,எனது குடும்ப செலவுக்காகவும் தங்களிடம் வாங்கிய அசல் ரூபாய் 2000 த்தை (இரண்டாயிரத்தை), 6 சதவிகித வருஷ வட்டியோடு தாங்கள் விரும்புகிறபோது தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன்.

கையொப்பம்

தேதி (ரெவின்யு ஸ்டாம்ப்பில்)

நெட்டெழுத்து உட்பட

கையொப்பம்


சாட்சிகள்

1.
2.

கிராமத்தில் அந்த காலத்தில் எழுத படிக்கத்தெரியாதவர்கள் இருந்ததால் பிராமிசரி நோட்டை எழுதத்தெரிந்தவர்கள் எழுதிக்கொடுப்பது வழக்கம். அப்படி எழுதிக்கொடுப்பவர்கள் நெட்டெழுத்து உட்பட என எழுதி கையொப்பம் இடவேண்டும். கடன் வாங்குபவர் கையெழுத்து இடுவது வழக்கம். கடன் வாங்குபவர் கையெழுத்து போடத்தெரியாவிட்டால் கைரேகை இடுவது வழக்கம். பிராமிசரி நோட்டுகள் மூன்று ஆண்டுகளுக்குப்பின் காலாவதி ஆகிவிடும் என்பதால் மூன்று ஆண்டுகளுக்குள் முழு பணத்தையும் தரமுடியாவிட்டால் ஒரு பகுதி பணத்தையாவது கொடுத்து பிராமிசரி நோட்டின் பின்புறம் வரவு வைக்கவேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்கியவர் மீது வழக்கு தொடரமுடியாது.

இதை ஐயா சொல்லிக்கொடுத்தபோது இது எப்படி எனக்கு உபயோகமாக இருக்கும் என நினைத்தது உண்டு. ஆனால் வங்கியில் சேர்ந்த பிறகு இந்த பிராமிசரி நோட்டில் எழுதப்படவேண்டிய வாசகங்கள் வேறு வகையில் கைகொடுத்தது என்பது ஆச்சரியமான உண்மை.

1970- ல் அதாவது வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதிற்கு பிறகு வங்கிகளில் உள்ள விண்ணப்பங்கள், கடன் பத்திரங்கள் போன்றவைகள் அந்தந்த மாநில மொழியில் இருக்கவேண்டும் என அரசு அறிவித்தபோது எங்கள் வங்கியும் அவற்றை தமிழில் அச்சடிக்க விரும்பி அந்த பணியை ஒரு தமிழ் நாட்டில் உள்ள ஒரு அச்சகத்திற்கு வழங்கியது.

அப்படி அச்சடிக்கப்பட்டவைகள் எங்கள் கிளைக்கு வந்தபோது நான் தற்செயலாக Demand Promissory Note- ஐ பார்த்தபோது அதில் ஒரு முக்கியமான சொல் விடுபட்டிருந்ததை பார்த்தேன்.அந்த படிவத்தில் Order என்ற வார்த்தைக்கான தமிழாக்கம் இல்லை. ஒரு Demand Promissory Note -ல் On Demand, Promise, Order என்ற மூன்று சொற்களும் கட்டாயம் இருக்கவேண்டும். அதாவது தாங்கள் விரும்புகிறபோது , தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது, திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றவை இருக்கவேண்டும். வங்கிக்கு வந்த படிவத்தில் 'தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது' என்ற வார்த்தை இல்லாததால் அது Demand Promissory Note ஆக கருதமுடியாது. தவறுதலாக அந்த படிவத்தில் கடனாளியிடம் கையெழுத்து வாங்கி கடன் கொடுத்தால் பின்னால் கோர்ட்டுக்கு போக நேர்ந்தால் வங்கிக்குத்தான் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனே எங்கள் கிளை மேலாளரிடம் காண்பித்தேன்.

அவருடைய தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் நான் காண்பித்த குறையை ஒத்துக்கொண்டு உடனே அந்த படிவங்களை மேற்கொண்டு உபயோகத்தில் விடாதிருக்க ஆவன செய்தார்.

அந்த நேரத்தில் எங்கள் ஐயா சொல்லிக்கொடுத்தது எப்படி உதவியாக இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் என்னால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வடுவூர் குமார் அவர்களே!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.

  ““““வங்கிக்கு வந்த படிவத்தில் 'தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது' என்ற வார்த்தை இல்லாததால் அது Demand Promissory Note ஆக கருதமுடியாது.““““““

  இது பற்றி ஒன்றும் எனக்குத் தெரியாது.

  ஒரு கல்வியின் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு இப்பதிவை விடச் சிறந்த எடுகோள் வேறெதுவாக இருக்க முடியும்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அப்போதெல்லாம் சிற்றூர்களில் அவசரத்திற்கு பணம் தேவைப்பட்டால் பணம் உள்ளோரிடம் கடன் வாங்குவார்கள். அப்படி கடன் வாங்கும்போது ’புரோநோட்’ எழுதத் தெரியாமல் விழிக்கக்கூடாதே என்பதற்காக அதை சொல்லிக்கொடுத்தார் எங்கள் ஆசிரியர். மேலும் படிக்கத்தெரியாதவர்களுக்கு எழுதிக்கொடுத்து அதற்காக வருமானம் பெறவும்வழி வகை செய்தார்.
   ’புரோநோட்’ பற்றி தெரிந்ததால் தான் பின்னால் வங்கிப் பணியில் சேர்ந்தபோது வங்கிக்கு நேர இருந்த இக்கட்டை தடுக்க முடிந்தது.

   நீக்கு