புதன், 4 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 1

எனக்குப்பிடித்த பாடல்களை பதிவு செய்ய இருக்கிறேன். அப்படி எனக்குப்பிடித்த பாடல் ஒன்றை கீழே தந்துள்ளேன்.


இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி

என் கொணர்ந்தாய், பாணாநீ என்றாள் பாணி;

வம்பதாம் களபமென்றேன்; பூசு மென்றாள்,

மாதங்கம் என்றேன்; யாம் வாழ்ந்தே மென்றாள்;

பம்புசீர் வேழமென்றேன்; தின்னு மென்றாள்;

பகடென்றேன்; உழுமென்றாள் பழனந்தன்னைக்;

கம்பமா என்றேன்; நல்களியாம் என்றாள்;

கைம்மாஎன் றேன்; சும்மா கலங்கினாளே!



தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு அதே போல் ஒரு பொருளைக்குறிக்க பல சொல் உண்டு.
இந்த பாடலை இயற்றியவர்
பொன் விளைந்த களத்தூரைச்சேர்ந்த அந்தகக்கவி வீரராகவர் ஆகும்.
இவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாணன் என்ற கவி இராமன் என்ற சிற்றரசனைப்பாடி பரிசு பெற்று வருகிறான். அவனது மனைவி 'என்ன பரிசு கொண்டு வந்தாய்?' என்று கேட்பதுபோல் உள்ளது இந்த பாடல்.

பாணன் களபம் என்றதும் அதை சந்தனம் எனப்போருள்கொண்டு பூசிக்கொள் என்கிறாள். இல்லை இல்லை மாதங்கம் என்றதும் அதை பொன் என்று பொருள் கண்டு நன்றாக வாழ்வோம் என்கிறாள். இல்லை இல்லை வேழம் என்றதும் கரும்பு எனப்பொருள் கொண்டு தின்னுங்கள் என்கிறாள். இல்லை இல்லை பகடு என்றதும் எருமை எனப்பொருள் கொண்டு நிலத்தை உழும் என்கிறாள். இல்லை இல்லை கம்பமா என்றதும் கம்பு மா எனப்போருள்கொண்டு நல்ல களி செய்யலாம் என்கிறாள். இல்லை இல்லை கைம்மா என்றதும் வேறு பொருள் தெரியாததால் கலங்கி நிற்பதாக அருமையாக இயற்றியுள்ளார்.
உண்மையில் பாணன் பரிசாகப்பெற்று வந்தது யானை ஆகும். அது பாணிக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் வெவ்வேறு பொருளைச்சொல்லி பாணன் மூலமாக நமக்கு யானைக்கு களபம்,மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா என்ற மாற்று சொற்களும் உண்டு என்பதை அழகாக தெரிவிக்கின்றார். இதை பெருமையோடு எனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தபோது அவர் சொன்னார் நல்ல வேளை பாணன் இந்த காலத்தில் இதை சொல்லவில்லை சொல்லியிருந்தால் பாணி கைம்மாவுக்கு தோசை என்றிருப்பார். பாணன்தான் கலங்கியிருப்பார் என்றாரே பார்க்கலாம்! .

4 கருத்துகள்:

  1. மிகவும் இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரை. அந்தகக்கவி வீரராகவர் பற்றி பள்ளியில் தமிழ் துணைப்பாடத்தில் படித்ததாக நினைவு.

    இன்றைய கல்வியில் துணைப்பாடங்களோ இலக்கியச் சுவையோ எதுவும் முக்கியத்துவம் பெறாதது வருத்தமளிக்கிறது.

    அருமையான இடுகை. ரசித்துப் படித்தேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கபீர் அன்பன். அந்த காலத்தில் இருந்த தமிழாசிரியர்கள் போல் இப்போது யாரும் இல்லாததும் ஒரு குறை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    அறிந்த பாடல்தான்.

    கைம்மா என்றேன் சும்மா கலங்கினளே என்பது எத்துணை நயம்.

    (தும்பிக்) கை யை உடைய விலங்கு ஆதலின் கைம்மா

    இது போன்ற காரணப்பெயர்களும் இதில் உள.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! கைம்மா என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தை தெரிந்துகொண்டேன். நன்றி!

      நீக்கு