வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 2

காளமேகப்புலவர் சிலேடைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். இந்த பாட்டில் மக்கள் பயன்படுத்திவந்த எண் அளவைகளைவைத்து அவர் ஆடியிருக்கும் சொற்சிலம்பம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

நம் பழந்தமிழர் உபயோகித்த பல அளவைகள் இப்போது வழக்கத்தில் இல்லை. அந்த அளவைக்குறிக்கும் சொற்களும் இப்போது வழக்கொழிந்துவிட்டன். அதனால்தான் அளவைகளை அமைத்து காளமேகப்புலவர் பாடிய இந்த பாடலை கீழே தந்திருக்கின்றேன்.


முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் --விக்கி

இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரைஇன்று ஓது.


அதாவது, நமக்கு இறைவன் கொடுத்த இரண்டு கால்களுடன் மூன்றாவது காலான ஊன்றுகோல் வைத்து நடக்கின்ற முதுமைப்பருவம் வருமுன்பு, நம்முடைய தலையில் நரை தோன்று முன்பு, எம தூதர்களைக்கண்டு அஞ்சுவதற்கு முன்பு, விக்கல் எடுத்து இருமுவதற்கான வேளை வருமுன்பு, சுடுகாட்டிற்கு செல்லுமுன்பு, காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் ஏகாம்பரநாதரை துதிப்பாயாக என்பதே இதன் பொருள்.

இந்த பாடலை கூர்ந்து கவனித்தால் முக்கால், அரை, காலரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா மற்றும் கீழரை போன்ற என அளவைகள் உள்ளது தெரியும். நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த அளவைகளைப்பற்றி தெரியும்? உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

11 கருத்துகள்:

 1. இருமா,கீழரை,ஒருமா, Pl explain in mathematical terms. These are new terms for me. Thanks. Govindarajan

  பதிலளிநீக்கு
 2. ஐயா,
  நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது அடுத்த ஆண்டு நேரடியாக மூன்றுக்குத் தேர்வு பெற வேண்டும் என்பதற்காக, எனக்குத் தனிப் பயிற்சி கொடுத்தார்கள். அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்த வாய்ப்பாடுகள்-மாகாணி, அரைக்கால் முண்டாணி ஆகியவை.இப்பொது எத்தனை பேருக்கு இதெல்லாம் தெரியும்?(when you have calculator in hand,who needs these tables?!)

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி. திரு கோவிந்தராஜன் அவர்களே!
  ஒருமா என்பது 1/20,
  இருமா என்பது 1/10
  கீழரைக்கு சரியான அளவு மறந்துவிட்டது. தெரிந்ததும் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி,திரு மதுரை சொக்கன் அவர்களே!
  நீங்கள் சொல்வது சரி.
  அந்தகால அளவைகள் இப்போது தேவையில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தது எனபதை தெரிவிப்பதே எனது பதிவின் நோக்கம்.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் நினைவோட்டங்களை எழுதும்போது படிப்பவர்கள் சலிப்படையாமல் இருக்க இடையிடையே இது போன்ற பயனுள்ள தகவல்களையும் தந்து அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றும் தங்கள் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிலேடை வெண்பா போன்றவை மிக அருமை. தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி. வாழ்த்துக்கள் அய்யா.

  பதிலளிநீக்கு
 6. தங்களது வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! உண்மையைச்சொல்லப்போனால் என்னுடைய நினைவோட்டங்கள் என்னைத்தவிர மற்றவர்களுக்கு சுவாரசியமாய் இருக்கும் என எண்ணமுடியாது. அதனால்தான் இடையிடையே மற்ற பதிவுகளை இடுகின்றேன். தங்களுடைய பாராட்டுக்கு மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. முக்கால் = 3/4
  முன்னரை = 1/2
  அக்கால் = 1/4
  அரைக்கால் = 1/8
  இருமா = 2/32 = 1/16
  ஒருமா = 1/32
  கீழரை = 1/64
  சேர் = 1/128

  பதிலளிநீக்கு
 8. முக்கால் = 3/4
  முன்னரை = 1/2
  அக்கால் = 1/4
  அரைக்கால் = 1/8
  இருமா = 2/32 = 1/16
  ஒருமா = 1/32
  கீழரை = 1/64
  சேர் = 1/128

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள திரு நாராயணன்,
  தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. படித்த பாடல்தான்.

  இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகம்தானே!

  இவ்வளவைகள் சென்ற நூற்றாண்டுவரை நிலத்தை அளக்கப்பயன்பட்டவை.

  தொடர்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்ந்து பதிவை வாசிப்பதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு