புதன், 11 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 3

எங்கள் பள்ளி மேனேஜ்மென்ட் பள்ளி என சொல்லப்பட்ட தனியார் பள்ளி. ஐயா தான் அதற்கு தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் எல்லாம்.
ஐயா திருமணமாகாதவர் என்பதால் ஆலமரத்துக்கு அருகில் இருந்த சாவடி எனப்படும் ஒரு அறை உள்ள கட்டிடம்தான் அவரது இருப்பிடம். அதிலேயே பள்ளியின் ஆவணங்களையும் வைத்திருப்பார்.
வகுப்புகள் மரத்தின் கீழே நடத்தப்பட்டதால் காலை வேலைகளில் வெயில் அடிக்கும்போது ஆலமரத்துக்கு மேற்கு பகுதியிலும் மாலை வேலைகளில் மரத்திற்கு கிழக்குப்பகுதிக்கும் வகுப்புகள் மாற்றப்படும். மழைக்காலங்களில் அருகில் உள்ள வீட்டு திண்ணைகள் தான் எங்களது தற்காலிக வகுப்பறைகள்.

ஊரின் நடுவே செல்லும் வீதி அருகே ஆலமரம் இருந்ததால் வீதியிலிருந்து பள்ளியை பிரித்தது ஒரு வேலி மட்டுமே. மரத்தின் கீழ்தான் வகுப்பு என்பதால் அனைவரும் ஆற்று கொட்டப்பட்டிருக்கும் மணல் தரையில் தான் உட்கார்ந்து படித்தோம். கிழக்குப்பகுதிக்கும் மேற்குப்பகுதிக்கும் இடையே இருந்த இரண்டு பன்னீர் மரங்களும், அதைச்சுற்றி நடப்பட்டிருந்த கருநுச்சி செடிகளும், சாவடிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகளும் தான், எங்கள் பள்ளியின் பூங்கா. மாலையில் அனைவரும் அருகில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றவேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஐயா எங்களை அருகே உள்ள ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்து மரத்தடியில் கொட்டச்சொல்வார்.

பள்ளிக்கு விடுமுறை என்பது பண்டிகை நாட்களில் தான். ஞாயிறு விடுமுறை இல்லை. பள்ளி நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐயா விடும் வரை. அனேகமாக ஐந்து மணிக்கு பின் ஆறு மணிக்குள் வீட்டுக்கு செல்வோம். சில ஞாயிறுகளில் ஐயா விருத்தாசலம் செல்வதாக இருந்தால் அன்று காலை ஆறுமணிக்கு எல்லோரும் பள்ளி செல்லவேண்டும். ஐயா சில கணக்குகளை கொடுத்து அவைகளை வீட்டில் போட்டு வருமாறு சொல்லிவிட்டு புறப்படுவார்.

அந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஏனெனில் அன்று ஐயாவிடம் அடி வாங்காமல் வீட்டிற்கு வந்து எல்லோரும் கூடி அமர்ந்து கணக்குகளைப்போட்டுவிட்டு விளையாடச்செல்லலாம். எனவே அந்த நாளுக்குக்காக நாங்கள் காத்திருப்போம்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

3 கருத்துகள்:

 1. "Valaipookkal said...
  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்."

  நன்றி. ஆனால் இணைப்புத்தொடர்பு கிடைக்கவில்லை. எனவே சரி பார்க்கமுடியவில்லை. ஆவன செய்யவும்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு கிராமத்துப் பள்ளியின் காட்சி, உ.வே.சா.அவர்களின் என் சரித்திரத்தில் வருவது போல,

  உங்கள் எழுத்திலிருந்து அப்பிம்பத்தை மீட்டெடுத்தேன்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’ படித்ததில்லை. இனி படிக்கவேண்டும். என் வயதொத்தவர்கள் படித்த சிற்றூர் பள்ளிகள் எங்கள் பள்ளி போல்தான் இருந்திருக்கும். இப்போது எங்கள் ஊரில் நல்ல கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது.

   நீக்கு