என் நண்பர் கிருஷ்ணனுக்கு சிவாஜி கணேசனின்
நடிப்பு என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும்
மனோகரா திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி
அவர்களின் வசனத்தை சிவாஜி பேசி நடித்ததுபோல்
பேசி, நடித்து காண்பிப்பார்.
அப்போது குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு
இருக்கும். அதில் சாரண இயக்கம் பற்றியும்,
முதல் உதவி எவ்வாறு செய்யவேண்டும்
என்பதுபற்றியும் சொல்லித்தருவார்கள்.
பெரும்பாலும் இந்த வகுப்புக்களை, ஆங்கில
பாடம் நடத்தும் வகுப்பு ஆசிரியர்கள்தான்
நடத்துவார்கள்.
இந்த பாடத்திற்கு தேர்வு இல்லை என்பதால்
யாரும் இதற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
இந்த வகுப்புகள் வகுப்பு அறையில் இல்லாமல்
வெளியே மரத்தடியில் நடக்கும்.அதில் ஆசிரியர்கள்
பாடம் நடத்தாமல், மாணவர்களை தங்களது பாடும்
அல்லது நடிக்கும் திறமையை காண்பிக்க
அனுமதிக்கப்படுவார்கள்.
ஒருதடவை அந்த திறந்தவெளி வகுப்பில்,
எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு A.K அவர்கள்
யாராவது நடித்து காண்பிக்கலாமே என்றதும்
கிருஷ்ணன் எழுந்து மனோகரா வசனத்தை
பேசி நடித்தார். அதில் புருஷோத்தமராக
என்னையும் நடிக்கவைத்தார்.நான் மனோகரா
திரைப்படம் பார்க்கவில்லை என்றாலும்
மனோகரனின் தந்தை பேசும் வசனத்தை
முன்பே எனக்கு சொல்லிக்கொடுத்து
இருந்ததால் நானும் அவருடன் பேசி நடித்தேன்(!).
(சிறிய வயதில் எங்கள் ஊரில் நடக்கும்
தெருக்கூத்தில் சிறுத்தொண்டர் நாடகம்
போடுவார்கள். நாடகம் ஆரம்பமாகுமுன்
பள்ளி சிறுவர்களாகிய எங்களை வைத்து
‘சாணக்கியன்’ ஓரங்க நாடகத்தை
எங்கள் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள்
நடத்தியிருக்கிறார். அதில் பால சாணக்கியனாக
நான் நடித்திருந்ததால் கிருஷ்ணனோடு
நடிக்க எனக்கு சுலபமாக இருந்தது.)
கிருஷ்ணனின் வசனத்தோடு கூடிய
நடிப்பைப்பாராட்டிய எங்கள் ஆசிரியர்,
அந்த மாதமே நடந்த ஒரு விழாவில்
கிருஷ்ணனுக்கு அதே வசனத்தைப்பேசி
நடிக்கும் வாய்ப்பைத்தந்தார்.
வருடாவருடம் எங்கள் பள்ளியில் நடக்கும்
மாணவர் இலக்கிய மன்றத்தில் பேச சிறந்த
தமிழ் அறிஞர்களை அழைப்பது வழக்கம்.
அந்தவருடம் மன்றத்தில் பேச அப்போது
அண்ணாமலை பல்கலை கழகத்தில்
தமிழ்த்துறை தலைவாராய் இருந்த
பேராசிரியர் திரு தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
அவர்களை அழைத்திருந்தார்கள்.
மதியம் மூன்று மணிக்கு அவர் வருவதாக
இருந்தது. எனவே எங்களை எல்லாம்
இரண்டுமணிக்கே தலைமை ஆசிரியர்
அலுவலகத்திற்கு எதிரே இருந்த மரத்தடியில்
அமர சொல்லிவிட்டார்கள்.
சிறப்பு பேச்சாளர் வரும் வரை,மாணவர்கள்
கவனத்தை திருப்பி, அமைதியாய் வைத்து
இருக்க மாணவர்களை விட்டு ஏதாவது
நிகழ்ச்சி செய்ய சொல்லலாம் என
தலைமை ஆசிரியர் முடிவெடுத்தபோது,
எங்கள் ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம்
கிருஷ்ணன் பற்றி சொல்லி, மனோகராவின்
அந்த சிறப்புக்காட்சியை நடித்துக்காட்ட
அனுமதி பெற்றுவிட்டார்.
கிருஷ்ணன், என்னை புருஷோத்தமன்
வேடத்திலும்,என் வகுப்பு தோழர் சிகாமணியை
வசந்தசேனை வேடத்திலும் நடிக்கச்சொன்னார்.
நாங்கள் ஒப்பனை ஏதும் செய்துகொள்ளவில்லை.
வழக்கமாக அணியும் சட்டை,அரைக்கால் சட்டையுடன்
மேடை ஏறினோம்.சிறப்பு விருந்தினருக்காக
போடப்பட்டிருந்த மேடை மீது கிருஷ்ணன்
அந்த நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.
கிருஷ்ணனை எனது வகுப்பு நண்பர்கள்
இராஜசேகரன் ராஸும்,இராஜாமணியும்
சங்கிலியால் கட்டி அழைத்துவந்தனர்.
(காலையிலேயே இது பற்றி சொல்லிவிட்டதால்
கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவர்கள்
வீட்டில் நாயைக்கட்டும் சங்கிலியை
எடுத்துவந்துவிட்டார்.)
நான், புருஷோத்தமன் பேசும் வசனமான
“மனோகரா! உன்னை எதற்காக அழைத்து
வரச்சொன்னேன் தெரியுமா?’” என பேசியதும்
கிருஷ்ணன்,”அழைத்துவரவில்லை. தந்தையே!
இழுத்துவந்திருக்கிறீர்கள்” என அந்த
முழு வசனத்தையும் ஏற்ற இறக்கத்தொடு
சிவாஜி கணேசன் போல் பேசிவிட்டு, ‘இங்கு என்னை
கொண்டுவந்ததின் காரணத்தை மக்கள் முன்
சொல்லத்தான் வேண்டும்’ என சொல்லி
அங்கே கூடி இருந்த மாணவர்களை பார்த்து சொன்னார்.
உடனே கூட்டத்தில் இருந்த மாணவர்கள்
சிலர் எழுந்து ஆமாம் மன்னர் காரணத்தை
கூறத்தான் வேண்டும்’என சொன்னதும்
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம்
திரைப்படத்தில் மனோகரனாக நடித்த சிவாஜி
அவ்வாறு சொன்னதும் அவையில் உள்ள சிலர்
எழுந்து’ஆமாம் மன்னர் சொல்லத்தான் வேண்டும்’
என்பார்கள். அதுபோல இருந்ததால்
ஒரே கைத்தட்டல் தான்.(திரைப்படத்தில் மக்கள்
சொல்வது போல் சொல்வதற்கு, எங்கள்
வகுப்பு மாணவர்கள் சிலரை நாங்கள் ஏற்கனவே
தயார் செய்து வெவ்வேறு இடங்களில் உட்கார
வைத்திருந்தோம் என்பது சிலரைத்தவிர
வேறு யாருக்கும் தெரியாது.)
கிருஷ்ணன் உணர்ச்சியுடன் பேசிக்கொண்டே
முன்னே செல்லும்போது, அவரை சங்கிலியால்
பிணைத்து பிடித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள்
அவரை முன்னே செல்லாமல் தடுத்து
நிறுத்தவேண்டும்.கிருஷ்ணன் பேசிக்கொண்டே
முன்னேறும்போது,நண்பர்கள் இராஜசேகரன் ராஸும்,
இராஜாமணியும்வேகமாக சங்கிலியை இழுத்துவிட்டனர்.
அதன் காரணமாக ஏற்பட்ட வலியை
பொறுத்துக்கொண்டே கிருஷ்ணன்
வழக்கம்போல் நடித்ததுதான்
அன்றைய நிகழ்ச்சியின்‘ஹைலைட்’
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது
எனக்கு ஒரே பயம். காரணம் அந்த
காட்சியில் நான் நடிக்கப்போகிறேன்
என என் அண்ணனிடம் சொல்லவில்லை.
ஒருவேளை அதற்காக திட்டுவாரோ என
பயந்தவாறே வீட்டிற்கு வந்தேன்.
நல்லவேளை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை!
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே”
பதிலளிநீக்குஉங்கள் நடிப்புப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே!
வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.
பதிலளிநீக்குஅந்த காட்சியில் கதாநாயகன் மனோகரன் என்பதால் புருஷோத்தமரின் நடிப்பைப்பற்றி எழுதவில்லை.எனினும் நான் என் பாத்திரத்தை நல்லபடியாகவே செய்தேன்.