வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நினைவோட்டம் 39

எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு A.K அவர்கள்
‘எங்கே அதை கொண்டு வா பார்ப்போம்’
என்றதும், நாங்கள் நடுநடுங்கிவிட்டோம்.

எனக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
உடனே நான் எனது கையெழுத்து பத்திரிக்கையை
படித்துக்கொண்டிருந்த நண்பனிடம் இருந்து வாங்கி,
காலியாக இருந்த இரண்டாம் பக்கத்தில்
சமர்ப்பணம்-- எனது வகுப்பு ஆசிரியர்
திரு A.கிருஷ்ணசாமி அவர்கட்கு என
எழுதி விட்டுஆசிரியரிடம் கொடுத்தேன்.

என்னைப்போல் நண்பர் கிருஷ்ணனும் அந்த இதழ்களை
வாங்கி அவ்வாறே எழுதிக் கொடுத்தார்.

கையெழுத்து இதழ்களை வாங்கிய ஆசிரியர், இரண்டாம்
பக்கத்தில் சமர்ப்பணம் என எழுதியிருந்ததை பார்த்ததும்,
மேற்கொண்டு அந்த இதழ்களை புரட்டிக்கூட பார்க்காமல்,
கல்லூரியில் செய்முறை நோட்டுகளை வருட முடிவில்
தேர்வுக்கு கொடுக்கும்போது அதில் செய்முறை
தேர்வு நடத்தும் பேராசிரியர்கள் Certified Bonafide என
முத்திரையிட்டு கையொப்பம் இடுவதுபோல அதன்
கீழே கையொப்பம் இட்டு திருப்பிக்கொடுத்துவிட்டார்!

நல்ல வேளையாக அவர் ஒன்றும் சொல்லாததால்
நாங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

ஆனால் எங்களது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைத்து
நிற்கவில்லை. நண்பர் கிருஷ்ணன் அவரது இரண்டாவது
இதழுக்கான அட்டைப்படம் வரைய நண்பர் தம்பு
சாமியிடம் கொடுத்திருந்தார்.

அவரும் சமூகவியல் பாடம் நடத்தும்
திரு P.திருஞானசம்பந்தம் அவர்கள்
வருவதுகூட தெரியாமல்,‘மிக சிரத்தையாக’
படம் வரைந்துகொண்டிருந்தார்.

ஆனால் அதை எங்கள் ஆசிரியர் கவனித்துவிட்டு
‘என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?
அதைக்கொண்டுவா!’என்றதும் தம்புசாமி
மிகவும் தயக்கத்தோடு அதை
எடுத்துக்கொண்டு சென்றார்.

காரணம் அவர் அந்த வரைந்திருந்த அட்டையில்
ஒரு சிற்பி ஒரு பெண் சிலையை வடிப்பதுபோல்
இருந்தாலும்,அந்த சிற்பியின் உளி அந்த சிலையின்
மார்பகத்தை தொட்டுக்கொண்டிருந்ததுதான்!

(கலைநோக்கோடு பார்ப்பவர்களுக்கு அது
ஆபாசம் இல்லை என்றாலும், 1958 களில்
அது அவ்வாறு ஒத்துக்கொள்ளப்பட்டதில்லை.)

அதைப்பார்த்ததும் ஆசிரியர் திரு P.T.S அவர்கள்
மிகவும் கோபப்பட்டு அதை கிழித்தெறிந்துவிட்டு
அவரை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துவிட்டார்.
அதோடு இனி கையெழுத்து இதழே யாரும்
வெளியிடக்கூடாது என சொல்லிவிட்டார்.

உண்மையில் அந்த இதழில் ஆபாசமாக எதுவும்
எழுதப்படவில்லை.வெறும் அட்டைப்படம் மட்டும்
முடிக்கப்படாத நிலையில் இருந்தது. ஆனாலும்
எங்கள் ஆசிரியருக்கு அது தப்பாக பட்டதால் அதை
வெளியிட அனுமதிக்கவில்லை. எனவே நானும்
எனது இரண்டாவது இதழை வெளியிடும்
எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டேன்.

இப்போது வரும் இதழ்களில் வரும்
படங்களைப்பார்க்கும்போது நண்பர் தம்புசாமி
வரைந்த படம் நிச்சயம் ஆபாசம் இல்லை
என்றாலும் அன்றைய சூழ்நிலையில்
அது ஒத்துக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

காலம்தான் மக்களின் மனதில்,
பார்வையில்,எண்ணத்தில் எத்துணை
மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை
நினைத்து வியக்கிறேன்!நினைவுகள் தொடரும்வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. //காலம்தான் மக்களின் மனதில்,
  பார்வையில்,எண்ணத்தில் எத்துணை
  மாற்றங்களை ஏற்படுத்துகிறது //
  உண்மையே!காலம் செல்லச் செல்ல சமூகம் அனுமதிக்கும் சமூகமாகி விடுகிறது!பார்வைகள் மாறி விடுகின்றன.
  நல்ல பகிர்வு!
  (இன்னும் பிரச்சினை சரியாகவில்லை. ’hidemyaas’ மூலம் செயல்படுகிறேன்.)

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. "காலம்தான் மக்களின் மனதில்,
  பார்வையில்,எண்ணத்தில் எத்துணை
  மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை
  நினைத்து வியக்கிறேன்!"
  மிகவும் சரியான கூற்று . உதாரணம் அந்த காலத்தில் வந்த திரை பட காதலர்கள் / இந்த கால திரைப்பட காதலர்கள் ...
  அன்பினை பரிமாறும் காட்சி அந்த காலத்தில் இரு பூக்கள் ஒன்றை ஒன்று உரசுவது மூலம் உணர்த்தப்பட்டது .. அல்லது இரு பறவைகள் மூலம் உணர்த்த பட்டது . இலை மறைவு காய் மறைவு என்பார்களே அது போல் .. ஆனால் தற்பொழுது வரும் காட்சிகளை காண முடியாமல் நாம் தான் மறைந்து கொள்ள வேண்டி உள்ளது .. தன் தங்கைகளுடன் திரைப்படம் செல்லும் பாக்யராஜ் படும் அவதி நினைவிற்கு வந்தது ...
  நிற்க படிக்க சுவையாக இருந்தது .. சமயோசிதமாக நடந்து கொண்ட மாணவர் பாராட்டுக்குரியவர் !
  ஆசிரியரை குறை கூறி பயன் இல்லை . அவர் அந்த கால சூழ்நிலைகேற்ப நடந்து கொண்டுள்ளார் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரியே. 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்ற படத்தில் MGR அவர்களும் பானுமதி அவர்களும் 'மாசிலா உண்மைக்காதலே' என்ற பாட்டின்போது கையை மட்டும் பிடித்துக்கொண்டு நடித்திருப்பார்கள். இன்று அம்மாதிரி காட்சிகளை பார்க்கமுடியுமா?

  பதிலளிநீக்கு