சனி, 19 பிப்ரவரி, 2011

எத்தனைக்காலம்தான்... ? 3

சிறிது நேரம் கழித்து வண்டி கிளம்பியதும்,
அய்யய்யோ, அவர் வரவில்லையே என்ற
ஆதங்கத்தோடு கதவருக்கே சென்று வருகிறாரா
எனப்பார்த்தேன். அவர் வரவில்லை.

சரி அடுத்த பெட்டியில் ஏறி இருப்பார் வண்டி
நிற்கும்போது மாறி வந்துவிடுவார் என
நினைத்துக்கொண்டு திரும்பவும்
திரு ஜெகந்நாதன் அவர்களுடன் பேச்சைத்
தொடங்கினேன்.ஒரு மணி நேரம் கழித்து
வேறொரு ஊரில் வண்டி நின்று
கிளம்பியபோதும் அவர் வரவில்லை.

அப்போதுதான்,எனக்குள் ஏதோ ஒரு‘பொறி’
தட்டியது.நான் திரு ஜெகந்நாதன் அவர்களிடம்
‘சார் நீங்கள் கொடுத்த சில்லறைக்கு நூறு ரூபாய்
நோட்டு வாங்கிக்கொண்டீர்கள் தானே’
என்றேன்.

அவர்‘இல்லை.இல்லை நீங்கள்
முதலில் சில்லறை கொடுத்ததால்,
நீங்கள் வாங்கியிருப்பீர்கள் என நினைத்து
நான் வாங்கவில்லை’ என்றார்.
எனக்கு பகீரென்றது.

அப்போது நாங்கள் கலவரத்தோடு
பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்த
பயணி ஒருவர்.‘ஆங்கிலத்தில் என்ன
உங்களோடு வந்த நண்பர் வண்டியை
தவற விட்டாரா?’ எனக்கேட்டார்.

‘இல்லையில்லை.அவர் எங்கள் நண்பர்
இல்லை.இங்குதான் பழக்கம்’என்றோம்.
அந்த பயணி நாங்கள் வெகு சகஜமாக
பேசிக்கொண்டிருந்ததை பார்த்திருந்திருக்கவேண்டும்.

‘அவர் ஏதாவது உங்களுக்கு தரவேண்டுமா?’
என்றார். நாங்கள் நடந்ததை சொல்லி
‘பரவாயில்லை.அவரது பொருட்கள்
இங்குதானே உள்ளன.அவற்றை
எடுக்கவரும்போது நாங்கள்
பணத்தை வாங்கிக்கொள்கிறோம்’
என்றோம்.

அவர் சந்தேகத்தொடு எழுந்து அந்த
ரேடியோ இருந்த பெட்டியை தூக்கியபோது
தான் தெரிந்தது,அது ஒரு காலிப்பெட்டி என்று!!

அவர் ‘அடடே அவன் உங்களை ஏமாற்றிவிட்டானே.
நான்கு அல்லது ஐந்து ரூபாய் பெறுமான
பழத்தை வைத்துவிட்டு நூறு ரூபாய் கொண்டு
போய்விட்டானே!என்றதும் எங்களுக்கு பேச்சு வரவில்லை.

அதற்குள் பெட்டியில் இருந்த அனைவருக்கும்
விஷயம் தெரிந்ததும்,எங்களை பரிதாபமாக
பார்த்ததோடு,தெலுங்கிலும் ஆங்கிலத்திலும்
சமாதானம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அங்கிருந்த ஒருவர்,ஏமாறுவதற்கு ஆட்கள்
இருப்பதால்,இந்த மாதிரி ஆட்கள்
ஏமாற்றுவதெற்கேன்றே இருக்கிறார்கள்
என்றதும்,இவ்வாறு ஏமாந்துவிட்டோமே
என்று நினத்த,எங்களுக்கோ ஒரே அவமானம்.

அதற்கு பிறகு நாங்கள் பேசிக்கொள்ளவே
இல்லை.இரவு வந்தபோது நான்
‘சார்.சாப்பிடலாமா?’என்றதற்கு,
திரு ஜெகந்நாதன்,’வேண்டாம்.எனக்கு
பசிக்கவில்லை.’எனக்கூறி மேலே ஏறி
படுத்துவிட்டார். நான் மட்டும் சாப்பிட்டுவிட்டு
படுத்துவிட்டேன்.ஆனால் இரவு தூங்கவில்லை.

மறுநாள் காலையிலும் அவர் எதுவும்
சாப்பிடவில்லை. இப்படி ஏமாந்துவிட்டோமே
என்பதை நினைத்து அவர் சாப்பிடவில்லை.
தனக்கு தானே தண்டித்து கொண்டார்
என நினைத்துக் கொண்டேன்.

காலை பதினொரு மணிக்கு சென்னைக்கு வந்து
சேர்ந்ததும்,அதைப்பற்றி ஏதும் பேசாமல்
‘வருகிறேன்’என சொல்லிவிட்டு,கிளம்பிவிட்டார்.

என்னை அழைத்துபோக எனது அண்ணன் வந்திருந்தார்.
நான் அவரிடமும் அது பற்றி பேசவில்லை.திரும்ப
தலைஞாயிறு வந்தபின் கூட‘திருடனுக்கு தேள்
கொட்டியது போல’ யாரிடமும் சொல்லவில்லை.

அந்த அனுபவம் ஒரு‘புத்தி கொள்முதல்’ என
நினைத்து இருந்துவிட்டேன்.

ஆனால் என்ன! அந்த பாடத்தை கற்றுக்கொள்ள
கொடுத்த விலை தான் அதிகம்.
நான் கொடுத்தது ரூபாய் முப்பத்தி நாலு தானே
என நினைக்கலாம். நான் பணத்தை பறிகொடுத்த
ஆண்டைப் பாருங்கள்.1966 ல் ரூ.34 என்பது,
இன்றைய மதிப்பில் பல நூறு ரூபாய்கள்!

இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்!நாங்கள்
ஏமாந்ததன் காரணம்,‘வெளுத்ததெல்லாம்
பால்’ என்ற எங்களது நம்பிக்கையாலா,
அல்லது தெரியாத ஊரில் நமது மொழி
பேசுகிறாரே என்ற மகிழ்ச்சியாலா அல்லது
எங்களை ஏமாற்றிய அந்த மோசடி
மனிதனின் புத்திசாலித்தனத்தாலா?
இன்னும் விடை கிடைக்கவில்லை!!

எது எப்படியோ. ஏமாறுபவர்கள் இருக்கிறவரையில்
ஏமாற்றுக்காரர்கள் இருந்துகொண்டுதானே இருப்பார்கள் !!


.

4 கருத்துகள்:

  1. //எது எப்படியோ. ஏமாறுபவர்கள் இருக்கிறவரையில்ஏமாற்றுக் காரர்கள் இருந்துகொண்டுதானே இருப்பார்கள்//
    உண்மை!இப்படித்தான் நடந்திருக்கும் என நினைத்தேன்! புத்திக்கொள்முதல்தான்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. பதிவின் தலைப்பிலிருந்தே நடந்ததை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஹைதராபாத் பயணம் பற்றிய சம்பவங்கள் சுவாரசியமாக இருந்தன. இந்த நூதன முறையில் ஏமாற்றும் முறை அந்த காலத்திலேயே இருந்தது என்று தெரிய வந்தது . மற்றபடி ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் யுக்திகளை மாற்றிகொண்டே இருப்பார்கள் என்பது சமீப கால மோசடிகளை பார்க்கும் பொது தெரிகிறது . அனல் அந்த இழப்பிற்கு பின் மறுமுறை நீங்கள் ஏமாந்து இருக்க மாட்டிர்கள் என்று கருதுகிறேன் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    நீங்கள் சொன்னது சரிதான். அதற்கு பிறகு நான் இதுவரை யாரிடமும் ஏமாறவில்லை.

    பதிலளிநீக்கு