வெள்ளி, 14 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 10

(நிறைவுப்பகுதி)

மதிய(?) உணவை முடித்துவிட்டு,அருகில் இருந்த
அறையில், அடுத்த சந்திப்பை எப்போது, எங்கு
வைத்துக் கொள்ளலாம் என பேசி முடிவெடுக்க
ஒன்று கூடினோம்.

அங்கே,முதல் நாள் எடுத்த குழு புகைப்படங்களின்
நகல்களையும்,மற்றும் சந்திப்பின் போது எடுத்த
மற்ற புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பின்
குறுந்தகடு ஒன்றையும்,எல்லோருக்கும் நண்பர்கள்
நாச்சியப்பனும்,கோவிந்தசாமியும் கொடுத்தார்கள்.

நண்பர்கள் சிலரும்,சிலரின் துணைவியார்களும்
இந்த சந்திப்பை நன்றாக நடத்தியதற்காக,நண்பர்கள்
நாச்சியப்பனையும் கோவிந்தசாமியையும் மனமார
பாராட்டினார்கள்.

வகுப்பு நண்பர்கள் அனைவரையும் சந்திப்புக்கு
அழைக்க எடுத்த முயற்சி, தங்கும் வசதி,
உணவு வழங்குதல்,அழைத்து செல்ல பேருந்து,
அரங்க ஏற்பாடு,புகைப்படம் எடுத்தல்,
எல்லோருக்கும் தர நினைவுப்பரிசுகள்,
ஆசிரியர்களை நேரில் சென்று அழைத்து வந்து
பங்கேற்க செய்தது பங்கேற்ற அனைவரையும்
ஏதாவதொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
செய்தது,என்று ஒவ்வொரு செயலையும்
கனக்கச்சிதமாக செய்து,எவ்வித குறையும் இல்லாமல்
பார்த்துக்கொண்ட நண்பர்கள் நாச்சியப்பன் மற்றும்
கோவிந்தசாமியை,எப்படிப் பாராட்டினாலும் தகும்.
அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட ஒரு மாத
முயற்சி வீண் போகவில்லை

நண்பர்கள் நாச்சியப்பனும் கோவிந்தசாமியும் பணியில்
இருந்தபோது ஈட்டிய நற்பேறுதான்,வேளாண் புலத்தில்
தற்சமயம் பணிபுரியும் பேராசிரியர்கள்
டாக்டர் எம்.இரவிசந்திரன்,மற்றும் டாக்டர் வி.வையாபுரி
ஆகியோர் உடன் இருந்து,சந்திப்பு நன்முறையில்
நடந்தேற உதவியது என்றால் அது மிகை அல்ல.

நண்பர்கள் முருகானந்தமும் ஆர்.பாலசுப்ரமணியமும்
எங்கள் சார்பில் பரிசுப்பொருள் வாங்கி வந்து,
எங்களுக்காக சிரமம் எடுத்து சந்திப்பை நடத்திய
நண்பர்கள் நாச்சியப்பன்,கோவிந்தசாமி மற்றும்
கோவிந்தராஜன் ஆகியோருக்கும் அவர்களுக்கு
துணை நின்ற அவர்கள் துணைவியார்களுக்கும்,
கொடுத்து கௌரவித்தார்கள்.

பின் எங்களை இரண்டு நாட்களும் நன்முறையில்
பேருந்தில் எல்லா இடங்களுக்கு அழைத்து
சென்ற ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கும்
பரிசளித்து கௌரவித்தோம்.

பின் எல்லோரும் கலந்து ஆலோசித்து,அடுத்த
சந்திப்பை சேலத்தில் 2013 ல் நடத்துவது என்றும்
அதை நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும்
நடத்துவது என்றும் முடிவாயிற்று.
நண்பர் இராமச்சந்திரன் கோவையிலிருந்து வந்து
அவர்களுக்கு உதவுதாக சொன்னார்.

பொன் விழா சந்திப்பை 2016 ல் கோவையில்
சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்தோம்.
பின்பு நாச்சியப்பன் நன்றி சொல்லும்போது
பேசமுடியாமல் கண்கலங்கினார்.

மாலை சுமார் 4.30 மணி வாக்கில் கூட்டம்
முடிவடைந்தபோது,எல்லோரும் ஊருக்கு
கிளம்ப வேண்டுமே என்று எழுந்தாலும்,
எல்லோரையும் விட்டு பிரிகிறோமே
என்ற வருத்தமும் அனைவர் முகத்தில் தெரிந்தது.


நண்பர்கள் நாச்சியப்பனிடமும் கோவிந்தசாமியிடமும்
பிரியாவிடைபெற்று, எல்லோரிடமும் தழுதழுத்த
குரலில்‘போய் வருகிறேன்.இனியாவது நாம்
தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்பு
கொள்ளுவோம்.’எனக்கூறி அறைக்கு திரும்பினேன்.

அறையை காலி செய்துவிட்டு,என் துணைவியாருடன்
முதல் தளத்திலிருந்து கீழே வந்தபோது, எங்கள்
நண்பர்களில் சிலர் ஸ்ரீமுஷ்ணம் சென்று
பெருமாள் தரிசனம் செய்ய நண்பர்
ஜெயராமனுடன் ஒரு Van ல் கிளம்பத்தயாராக
இருந்தார்கள். அவர்களுடன் சென்று பேருந்து
நிலயத்தில் நாங்கள் இறங்கிக்கொண்டோம்.
நாங்கள் முன்பதிவு ஏதும் செய்யாததால்
அரசு விரைவுப்பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம்.

(அரசுப்பேருந்து என்றால் வழியில் உணவருந்த
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்‘சேவை’ செய்யும்
பாடாவதி உணவகத்தில்தான் நிறுத்துவார்கள்
என்பது எனக்குத் தெரியும்.இன்றைக்கும் சிதம்பரத்தில்
இருந்து சென்னை செல்லும் பேருந்துகள்,
விக்கிரவாண்டிக்கும் திண்டிவனத்துக்கும் இடையே
உள்ள ஒரு சில குறிப்பிட்ட உணவகங்கள் என
சொல்லப்படுகின்ற இடத்தில் நிறுத்தப்படுகின்றன.

அங்குள்ள உணவின் தரத்தைப்பற்றி சொல்ல
வேண்டியதில்லை.விலையோ அதிகம். அங்கு
விற்கும் பிஸ்கட் கூட MRP விலைக்கு மேல் தான்
விற்கப்படுகின்றன.

யாரும் அவர்களை கேள்வி கேட்கமுடியாது.
அரசை ஆள்பவர்கள் மாறும்போதெல்லாம்,அந்த
உணவகங்களின் பெயரும் அதன் வண்ணமும்
மாறிவிடும்.ஆனால் தரப்படும் உணவின் தரம் மட்டும்
எப்போதும் மாறாது!)

அந்த உணவகங்களில் சாப்பிடமுடியாது என்பதால்
பேருந்து நிலையம் அருகே உள்ள சாரதா ராம் என்ற
உணவகத்தில் இரவுக்கான உணவை வாங்கிக்கொண்டு
பேருந்து நிலையம் வந்தோம்.மாலை 6.50 க்கு
சென்னை கிளம்பும் பேருந்து 6.30 மணிக்கு வந்தது.

சரியாக 6.50 மணிக்கு பேருந்து கிளம்பியதும்
மகிழ்ந்தேன்.ஆனால் அது சில மணித்துளிகள் கூட
நீடிக்கவில்லை.நாங்கள் ஏறியது விரைவுப்பெருந்து
என்றாலும் எல்லா இடங்களிலும் நிற்கும்போலும்.

எல்லா இடங்கள் என்றால் 4 (அ) 5 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள அருகருகில் உள்ள ஊர்களிலும்
நிற்கும் போலும்.அதனால் சிதம்பரம் கடைத்தெருவில்
பேருந்து நின்றபோது நிறைய பேர் ஏறினார்கள்.
யாருக்கும் நிற்கக்கூட இடம் இல்லை.நடத்துனரோ
பானையில் புளியை அடைப்பதுபோல்
எல்லோரையும் ஏற்றிக்கொண்டிருந்தார்.அதனால்
அங்கு ஏறிய பயணிகளுக்கு மட்டுமல்ல
எங்களைப்போல முன்பே ஏறி உட்கார்ந்தவர்கள் கூட
கை கால்களை நீட்டமுடியாமல் அவதிப்பட்டோம்.
இந்த அவஸ்தை பண்ருட்டி செல்லும் வரை இருந்தது.

அதற்கு பிறகு கூட்டம் குறைந்ததால் ஆசுவாசப்படுத்திக்
கொள்ள முடிந்தது.‘அந்த’ உணவகத்தில் பேருந்து
நின்றபோது, நாங்கள் பேருந்தில் அமர்ந்து எங்களது
இரவு உணவை சாப்பிட்டோம்.

பிறகு பேருந்து எங்கும் நிற்கவில்லை.நானும்
கண்ணை மூடிக்கொண்டு இரண்டு நாட்கள்
நடந்தவைகளை ‘அசை’ போட்டேன்.

பழைய நண்பர்களைப்பார்த்து பேசி, கல்லூரி
நினைவுகளில் மூழ்கியது,மகிழ்ச்சியைத் தந்தது
மட்டுமல்லாமல் சில வருடங்கள் வயது குறைந்து
இளமையானது போன்ற உணர்வைத் தந்தது
என்பதும் உண்மை.

பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றவர்கள்,
அடிக்கடி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்
தொடர்புகொண்டு இருக்கவேண்டும்.அப்போதுதான்
எப்போதும் சுறுசுறுப்போடும் சந்தோஷமாகவும்
இருக்கமுடியும்
என்று படித்ததாக நினைவு.
சொல்லப்போனால் இந்த சந்திப்பு சொல்லவொணா
புத்துணர்ச்சியைத் தந்தது என்பது நிச்சயம்.

சரியாக நடு இரவு 1.30 மணிக்கு பேருந்து சென்னை
கோயம்பேடு நிலையத்தை அடைந்ததும் ,இறங்கி ஒரு
‘ஆட்டோ’ பிடித்து நானும் என் மனைவியும் வீடு
வந்து சேர்ந்தோம்.

(ஆட்டோக்காரர்களிடம் நாங்கள் பட்ட அனுபவத்தை
தனியாக எழுத இருக்கிறேன்.)

சந்திப்பின் இனிய நினைவுகளோடு உறங்கச்சென்றேன்.


நிறைவாக:- நான் அண்ணாமலை நகரில் நடந்த
வகுப்பு நண்பர்கள் சந்திப்புக்கு போய் வந்ததை பற்றி,
எனது நண்பரும், பள்ளியில் எனக்கு ஓராண்டு
மூத்தவருமான திரு கல்பனா தாசன் அவர்களிடம்
பேசிக்கொண்டிருந்த போது,‘அண்ணாமலை நகர்
அனுபவத்தை உங்கள் பதிவில் எழுதலாமே?’
என்றார்.‘இதையெல்லாம் எழுதலாமா?’என்றதற்கு,
‘நீங்கள் நினைப்பதை எழுதுவது தப்பில்லை.
நீங்கள் எப்படி எழுத நினைக்கிறீர்களோ அப்படியே
எழுதுங்கள்.’என்று ஊக்கப்படுத்தினார். நண்பர்
திரு சென்னை பித்தனும் உங்கள் சந்திப்பின்
அனுபவத்தை எழுதலாமே.’என்றார். முதலில்
இரண்டு அல்லது மூன்று பதிவுகள் தான் எழுத
இருந்தேன்.ஆனால் என்னையும் மீறி(?) சந்திப்பு
பற்றிய பதிவுகள் 10 ஆகிவிட்டன.பதிவு
சுவாரஸ்யமாக இருந்திருந்தால், எல்லா
பாராட்டுக்களும் திரு கல்பனா தாசன் அவர்களுக்கும்
திரு சென்னை பித்தன் அவர்களுக்கும் உரித்தாகுக.

4 கருத்துகள்:

 1. இன்னும் அதிகமாக எழுதியிருந்தாலும் சுவாரஸ்யம் குறைந்திருக்காது.
  எழுதியது நீங்க.பாராட்டு யாருக்கோவா?

  பதிலளிநீக்கு
 2. எழுதியது நானாலும், எழுதத் தூண்டியவர்களை எப்படி மற(றை)க்கமுடியும். நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. பிரிந்தவர் கூடினால் பகுதி 7 , 8 ,9 10 அனைத்துமே அருமை . முத்து மாலையில் எந்த முத்து நம்மை கவர்ந்தது என்று கூறுவது கடினமோ அது போல எல்லா பகுதிகளுமே நன்றாக தெளிவாக ஆர்பாட்டமில்லாமல் அழகிய நடையில் விவரிக்கபட்டிருந்தன . ஏதோ எல்லாரோடும் நானே பழகியது போல் இருந்தது .. நானே படகில் சவாரி செய்தது போல் உணர்ந்தேன் ..ஆங்காங்கே புகைப்படங்கள் வேறு பதிவின் மெருகை கூட்டின ... கருத்துகளை பகர்ந்து கொண்டதில் எந்த தவறும் எனக்கு தோன்றவில்லை .
  அந்த காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த திரு C .சுப்பிரமணியம் அவர்கள் உலகை சுற்றி பார்த்து அதை பற்றி எழுதவில்லையா ..அதை நாம் ரசிக்கவில்லையா .. தங்கள் இந்த பதிவினை படித்த பலரும் இதே போல் முயற்சியினை துவங்குவார்கள் என்று நினைக்கிறன் .. வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! உங்களது பாராட்டுக்கள் மேலும் எழுத என்னைத்தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

  பதிலளிநீக்கு