திங்கள், 17 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலும், உறங்கும் அரசு இயந்திரமும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக
வாக்குப்பதிவு இன்று காலை அனைத்து
மாநகராட்சிகளுக்கும் தொடங்கும் என்றும்,
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை இருக்கும் என
தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததை
நம்பி நானும் என் மனைவியும், எதிர்வீட்டில்
இருக்கும் வழக்கறிஞர் நண்பரும் அவர்
மனைவியும் காலை 6. 50 மணிக்கே
வாக்குச்சாவடி அமைந்திருக்கும் முகப்பேர்
வேலம்மாள் பள்ளிக்கு சென்றோம்.

நாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்பே
4 பேர் வரிசையில் நின்று கொண்டு
இருந்தார்கள். இந்த தடவை பெண்களுக்கு
என்று வாக்கு அளிக்கும் அறை தனியாக இருந்தது.
ஆனால் அறிவித்திருந்தபடி காலை 7 மணிக்கு
வாக்களிக்க எங்களை அனுமதிக்கவில்லை
காரணம் அப்போதுதான் அலுவலர்கள்
வாக்களிக்கும் இயந்திரத்தை சரி
செய்து கொண்டு இருந்தார்கள்.

இந்த தடவை சென்னை உயர் நீதி மன்றம்,
சென்னையில் வாக்களிக்கும் இடத்தில் Web Camera
கொண்டு படம் பிடிக்க வேண்டும் என்று ஆணை
இட்டிருந்ததால், அப்பணியை செய்ய அதற்காக
ஒரு Laptop உடனும் Camera வுடன் ஒரு கல்லூரி
மாணவி அங்கே இருந்தார்.

ஆனால் அவரோ காலை 7-15 மணி வரை அதனுடன்
மல்லாடிக்கொண்டு இருந்தார். அவரால் அதை
இயக்க இயலவில்லை. அதற்குள் மணி 7.20
ஆகிவிட்டது. வரிசையில் வாக்களிப்போர் கூட்டம்
அதிகரிக்க தொடங்கியது.

கூட்டதிலிருந்த ஒருவர் நேரே தலைமை அலுவலரிடம்
சென்று சற்றே கிண்டலாகவும் கோபத்தோடும்,
‘வாக்களிப்பு நாள் இன்றா அல்லது நாளையா?’
எனக் கேட்டார்.ஆனால் பதில் எதுவும்
கிடைக்கவில்லை.

எங்களது பொறுமையின்மைக் கண்ட ஒரு காவல்
உதவி ஆய்வாளர் யாரையோ கைப்பேசி மூலம்
தொடர்பு கொண்டார். அங்கே பதில் சொல்ல யாரும்
இல்லையாதலால், அவரால் ஒன்றும் செய்ய
இயலவில்லை.

வேறு வழியின்றி காமிரா மூலம் படம்
எடுக்காமலேயே வாக்களிக்க எங்களை அனுமதித்தனர்.
நாங்கள் வாக்களித்து வெளியே வரும் வரை
அந்த காமிரா இயங்கியதாகத் தெரியவில்லை.

இதேபோன்று சென்ற தடவை சட்டசபை தேர்தலின்
போதும் காலை 8 மணிக்கு வாக்களிக்கலாம்
எனக்கூறிவிட்டு 8.30 மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள்.

எனக்குள்ள சந்தேகம் என்னவென்றால் காலை 7 மணிக்கு
வாக்களிக்கலாம் என்று அறிவித்துவிட்டு வாக்காளர்கள்
வந்தபிறகு வாக்கு இயந்திரத்தில் முத்திரை இடும்
பணியை ஏன் துவங்கவேண்டும்?காலை 6 மணிக்கு
முன்பே இதை யெல்லாம் செய்து வைக்கக்கூடாதா?
அப்படி முடியாதென்றால் நேரத்தை மாற்றி
வைக்கலாமே?

Web Camera பொருத்தும் பணியை முன்பே செய்து
தயாராக வைத்திருக்கலாமல்லவா?

வாக்காளர்களை வாக்களிக்கும் இயந்திரமாக அரசு
நினைக்கிறதோ என்ற ஐயம் எனக்கு.

ஒவ்வொரு தடவையும் காலையிலேயே எனது
ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சீக்கிரமே
சென்றும் தாமதிக்க வைக்கிறார்களே இதை
யாரிடம் சொல்வது?

எனக்கு இந்த நேரத்தில் நினைவுக்கு வருவது
‘எல்லாம் உனக்காக’ என்ற திரைப்படத்தில்
‘கொஞ்சிவரும் நெஞ்சில் இன்று’ எனத் தொடங்கும்
பாட்டில் வரும்,

‘மக்களுக்கு கோபம் வந்தால் மன்னரிடம் சொல்வோம்
கொண்ட மன்னருக்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம்
நான் உன்னிடம் சொல்வேன் கேட்டு சொல்லடா’’


என்ற வரிகள் தான்.

4 கருத்துகள்:

 1. அவ்வளவுதான்.நாமே மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்! இதுதான் நம் மக்களாட்சி!

  பதிலளிநீக்கு
 2. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அதனால்தான் அந்த ஆதங்கத்தை பதிவில் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 3. இதைத்தான் வட மொழியில் " சல்தா ஹை " மனபோக்கு என கூறுவார்கள் . " அரே க்யா பரக் பட்தா ஹை " என்றும் கூறுவார்கள் .எதையும் பொறுத்து
  கொள்ளும் மனபக்குவம் நம் நாட்டவருக்கு இருப்பதுனால் தான் இப்படி எல்லாம் நடக்கின்றன ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு