வியாழன், 18 பிப்ரவரி, 2010

காலத்தினால் செய்த நன்றி 1

1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி. பொங்கலுக்கு முந்திய நாள். அப்போது நாங்கள் புது தில்லியில் இருந்தோம். அது எங்களுக்கு 'தலைப்பொங்கல்' என்பதால் நானும் என் மனைவியும் பொங்கலுக்கான பொருட்கள் வாங்க 'ஜனக்புரியில்' நாங்கள் தங்கியிருந்த C 2D பிளாக் வீட்டிலிருந்து 'கரோல் பாக்' போனோம்.

அப்போதெல்லாம் ஜனக்புரி இப்போதுபோல் வளரவில்லை. எதுவேண்டுமானாலும் அருகில் உள்ள 'திலக் நகரு'க்கு தான் போகவேண்டும். நம் ஊர் பொருட்கள் வேண்டும் என்றால் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 'கரோல் பாக்' செல்லவேண்டும்.

அங்கே உள்ள 'அஜ்மல் கான் ரோடை'யும் 'சரஸ்வதி மார்க்' கையும் இணைக்கும் தெருவில் நடைபாதையில் இருக்கும் நம்மூர் கடையில்தான் அவைகள் கிடைக்கும்.

ஜனவரியில் குளிர் அதிகமாக இருக்கும் ஆதலால் மதியம் சாப்பிட்டவுடன் கிளம்பிப்போய் பொருட்களை வாங்கிகொண்டு இருட்டுமுன் திரும்ப எண்ணி எனது மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம்.ஆனால் என்னவோ 'கரோல் பாகை'விட்டு கிளம்பும்போதே மாலை மணி ஆறுஆகிவிட்டது.

அங்கிருந்து 'புத்த பூர்ணிமா' பூங்கா வழியாக 'தௌலத் கான்' வந்து 'கண்டோன்மெண்டை' கடந்து 'பங்கா ரோடு' வரும்போது மணி 6.30 க்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரம் பார்த்து ஏதோ ரயில் வருவதற்காக அங்குள்ள ரயில்வே கேட்டை மூடி விட்டார்கள். அதற்குள் அங்கே அநேக கார்களும், ஸ்கூட்டர்களும் குவிந்துவிட்டன.

ரயில் போனதும் கேட்டைத்திறந்தவுடனே எல்லா வாகனங்களும் ஒரே நேரத்தில் கிளம்பத்தொடங்கினநானும் எனது 'ஜாவா' மோட்டோர் சைக்கிளை இயக்கத்தொடங்கினேன்.

நான்முதல் கியரில் கிளட்சை மெதுவாக விட்டபோது, எனது பைக் திடீரென வேகம் பிடித்து முன்னே சென்ற ஒரு காரின் மீது மோதி இடித்துவிட்டது!

தொடரும்

2 கருத்துகள்:

  1. நினைவலைகளில் என்ன திடீரென இவ்வளவு பெரிய இடைவெளி என நினைத்தேன். :)

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு