திங்கள், 15 பிப்ரவரி, 2010

நினைவோட்டம் 18

அரியலூரிலிருந்து ரயில் மூலம் பெண்ணாடம் வந்துதான் எங்கள் ஊருக்கு செல்லவேண்டும். பெண்ணாடத்தில் எனது பெரியம்மா வீடு இருந்ததால் , அப்பாவுடன் பெண்ணாடம் வந்து இரவு பெரியம்மாவீட்டில் தங்கிவிட்டு காலை புத்தூர் போக இருந்தோம்.


அப்போது எனது அண்ணன் (பெரியம்மாவின் இளைய மகன்) அப்பாவிடம் 'எங்கு இவனை அழைத்து செல்கிறீர்கள்?' என கேட்டார். அப்பா அவரிடம், என்னை ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்க அழைத்து செல்வதாக கூறியதும், அவர் 'தனியார்பள்ளி வேண்டாம்.இங்கேயே (பெண்ணாடத்தில்) கழக உயர்நிலைப்பளியில் சேர்த்துவிடுங்கள். அடுத்த ஆண்டு வேண்டுமானால் பார்த்துகொள்ளலாம்' என்றார்


அவர் அப்படி சொன்னதிற்கு ஒரு காரணம் இருந்தது. எனது மூன்றாவது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள், அந்த ஆண்டு அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed படித்து வந்தார். மறு ஆண்டு அவர் ஆசிரியராக சேரும் பள்ளியில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தால் அவ்வாறு சொன்னார்.'சரி' என சொல்லிவிட்டு என்னை பெண்ணாடத்தில் விட்டுவிட்டு அப்பா ஊருக்கு போய் விட்டார்கள்.


மறுநாள் எனது அண்ணன் என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று 'Third Form' என அழைக்கப்பட்ட எட்டாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். நான் அரியலூரில் மாவட்ட நிர்வாகத்தின் கீழிருந்த கழக உயர் நிலைப்பள்ளியில் படித்திருந்ததால், வேறு மாவட்டமாயிருந்தாலும் பெண்ணாடத்தில் இருந்த கழக உயர் நிலைப்பள்ளியில் எந்தவித தேர்வும் வைக்காமல் சேர்த்துகொண்டார்கள். பெண்ணாடத்தில் எனது இன்னொரு பெரியம்மா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தேன்.


இந்த சமயத்தில் பெண்ணாடத்தைப்பற்றி பற்றி சொல்லவேண்டும். பெண்ணாடத்தில் உள்ள இறைவனை தேவகன்னியர், காமதேனு பசு மற்றும் இந்திரனின் வெள்ளை ஆனையான ஐராவதமும் வழிபட்டதாக ஐதீகம். அதனால் இவ்வூர் (பெண்++கடம்) பெண்ணாகடம் என அழைக்கப்பட்டதாம். நாளடைவில் இது மருவி பெண்ணாடம் ஆனது. 'சிவஞான போதம்' இயற்றிய மெய்கண்ட நாயனார் அவதரித்ததும் இங்கேதான்.



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. பொதுவாக இதுபோன்ற ஊர்ப்பெயர்களுக்கான புராண விளக்கங்களுக்கு முன்பு உள்ள பெயரே உண்மைப் பெயராய் இருந்திருக்கும்.

    விருதாச்சலத்திற்கு உரிய முதுகுன்றம் என்னும் பெயர் போல...

    இரா.பி. சே . அவர்களின் ஊரும் பேரும் என்ற நூலில் என்ன சொ்லலிி இருக்கிறார் எனப் பார்க்க வேண்டும்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.
      பெண்ணாகடத்தின் பழைய பெயர் திருக்கடந்தை ஆகும். சமயக்குரவரில் ஒருவரான அப்பர் பெருமான் பாடிய பாடலில்
      "பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
      என் ஆவிகாப்பதற்கு இச்சையுண்டேல் இருங்கூற்றகல
      மின்னாரும் மூவிலைச் சூல மென்மேல் பொறி மேவு கொண்டல்
      துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க்கொழுந்தே"

      பெண்ணாகடத்தை கடந்தை என்றே சொல்கிறார்.

      நீக்கு