வெள்ளி, 8 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 2


சேலம் சந்திப்புக்காக ஆகஸ்ட் 27 ஆம் தேதியே முன் பதிவு செய்துவிட்டு, காத்திருந்தபோது, சேலத்திலிருந்து நண்பர் வெங்கடரமணன் 
தொலைபேசியில் ஒரு நாள் கூப்பிட்டார்.  தானும் நண்பர் பழனியப்பனும் 
வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் சந்திப்பு பற்றிய நிகழ்ச்சி நிரலை 
கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தெரிவித்துவிட்டதாகவும், பலர் 
வருவது பற்றி உறுதி செய்துவிட்டாலும் இன்னும் சிலர் சந்திப்புக்கு 
வருவது பற்றி உறுதி செய்யவில்லை என்றார்.

அப்படி உறுதி செய்யாதவர்களின் பெயரை சொல்லி, அவர்களை நீயும் தொடர்புகொண்டு அவர்கள் வருவது பற்றி  உடனே உறுதி செய்யச் சொல். அப்போதுதான் எவ்வளவு பேர் வருகிறார்கள் எனத் தெரிந்தால் 
எல்லோருக்கும் தங்கும் விடுதிகளில் அறைகளை முன் பதிவு செய்யமுடியும். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் தங்க அறை கிடைக்காவிட்டால் 
குடும்பத்தோடு வருபர்கள் கஷ்டப்பட நேரிடும். மேலும் எவ்வளவு பேர் 
எனத் தெரிந்தால் தான் எங்களால் உணவு வசதி, பேருந்து வசதி 
போன்றவைகளை ஏற்பாடு செய்ய தோதாய் இருக்கும்.என்றார்.

2007 ஆண்டு புதுவையில் நடந்த சந்திப்பின் போதே, எல்லோருடைய 
முகவரி தொலைபேசி/கைபேசி எண் மற்றும் யார் யார்  மின்னஞ்சல் 
முகவரி வைத்திருந்தார்களோ அதையெல்லாம் சேகரித்து  
Excel spreadsheet இல், நான் வைத்திருந்ததாலும், அண்ணாமலை 
பல்கலைக் கழகத்தில் படித்தபோது வகுப்பு நண்பர்கள் 
அனைவருடனும் அதிகம் பழகியவன் நான் என்பதாலும், என்னிடம் 
அந்த பணியை ஒப்படைத்தார் போலும்.

நானும் உடனே  அவர் சொன்ன நண்பர்கள் அனைவரையும் 
தொடர்புகொண்டு அவர்கள் சேலம் வருவதை உடனே உறுதி
செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். சிலர் உடனே அதை 
செய்துவிட்டாலும், உறுதி செய்யாத சிலரை நான் இரண்டு அல்லது 
மூன்று முறை தொடர்புகொள்ளவேண்டியிருந்தது.

சிலர் உண்மையிலேயே வர விருப்பம் இருந்தும் ஒரு சில சொந்த 
காரணங்களால் வர இயலாது என்றார்கள். ஆனால் சிலரோ 
கடைசிவரை வருவது பற்றி உறுதிசெய்யாமல் பிறகு சொல்கிறேன். 
என்றே சொன்னார்கள். ஆனால் ஏனோ சொல்லவில்லை!  

படிக்கும்போது என்னுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் கூட, 
நான் வற்புறுத்தி அழைத்தபோதும்  ஏனோ சந்திப்புக்கு வருவதில் 
அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. ஒருவேளை வயதாக ஆக 
சிலருக்கு இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வம் குறைந்துவிடும் 
போலும். அப்போதுதான் தெரிந்தது இது போன்ற சந்திப்பை நடத்துவது, 
நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபம் அல்ல என்று.

அப்போது நினைத்துப் பார்த்தேன் முதன் முதல் புதுவை சந்திப்பை  
2007 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த நண்பர்கள் 41 ஆண்டுகளுக்குப் 
பிறகு, தங்களோடு படித்த நண்பர்களை தொடர்புகொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று. அதே போல் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்த நண்பர்களும் 
நிச்சயம் கஷ்டப்பட்டிருப்பார்கள்.

அக்டோபர் 7 ஆம் தேதி நண்பர் அய்யம்பெருமாள் தொடர்புகொண்டு 
கனடாவிலிருந்து வந்துவிட்டதாகவும், 9 ஆம் தேதி காலை நேரே 
என் வீட்டிற்கு தன் துணைவியாருடன் வந்துவிடுவதாகவும், அனைவரும் 
நேரே சென்ட்ரல் இரயில் நிலையம் செல்லலாம் என்றும் கூறினார்.

நான் அவரிடம் நாம் பயணிக்க இருக்கும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு 
இரயில் காலை 11.40 க்கு புறப்படுவதால்,வீட்டிலிருந்து 10.15 மணிக்காவது கிளம்பினால்தான் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் குறித்த 
நேரத்திற்கு முன்பாக செல்லலாம் எனவே காலை 10 மணிக்கு 
வந்துவிடுங்கள். என்றேன்.

சொன்னபடியே அவர் துணைவியாருடன் 10 மணிக்கு வர, தயாராக 
இருந்த நானும் என் துணைவியாரும் அவர்களுடன் முன்பே ஏற்பாடு 
செய்திருந்த Call Taxi யில் பயணித்து 10.45 க்கு சென்ட்ரல் இரயில் 
நிலையத்தை அடைந்தோம்.

இரயில் நிலையத்தை  அடைந்தபோது, அங்கே நடைமேடையில் 
(Platform) எங்கள் வகுப்புத்தோழர் திரு பிச்சைதுரை அவர்களும் 
நாங்கள் பயணம் செய்ய இருந்த அதே இரயிலில் அதுவும் நாங்கள் 
பதிவு செய்திருந்த அதே பெட்டியில் முன்பதிவு செய்திருந்ததால் 
காத்திருந்தார். துணைவியார் வர முடியாததால்  தான் மட்டும் 
வந்திருப்பதாக சொன்னார்.

காலை 11.40 க்கு குறிப்பிட்ட நேரத்தில் இரயில் புறப்பட்டது.
திரு அய்யம்பெருமாள் மற்றும் அவரது துணைவியாருக்கு அதே 
பெட்டியில் வேறு இடத்தில் இருக்கைகள்  இருந்தும் எங்கள் 
இருக்கைகள் அருகே காலியாக இருந்ததால் அங்கேயே 
அமர்ந்துவிட்டார்கள். வீட்டிலிருந்தே மதிய உணவை கொண்டு 
சென்றிருந்ததால் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.
  
திரு அய்யம்பெருமாள் அவர்கள் கனடா பல்கலைக் கழகங்களுக்கு 
விண்ணப்பித்தது பற்றியும், அவருக்கு முனைவர் பட்டம் பெற Toronto 
பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்தது பற்றியும், கனடாவில் 
காலடியெடுத்து வைத்த முதல் நாள் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் 
பற்றியும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் மாலை 4 மணியை 
நெருங்கியது கூட தெரியவில்லை.

திடீரென கைபேசி ஒலித்தபோது எடுத்து பேசியபோது, சேலம் நண்பர் 
திரு செல்லையன் அவர்கள் தொடர்பில் இருந்தார். சிண்டிகேட் வங்கி 
சேலம் கிளையில் நான் முது நிலை மேலாளரக பணிபுரிந்தபோது 
அவர் என்னுடன் பணி புரிந்தவர். பிறகு கிளை மேலாளராக சேலத்தில் 
உள்ள கிளை ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் ஒரு 
நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் சேலம் வருவது பற்றி அவருக்கு முன்பே அறிவித்திருந்தேன். 
அதனால் அவர் என்னை வரவேற்க சேலம் இரயில் சந்திப்பில் வந்து 
காத்திருப்பதாக சொன்னார். எங்கிருக்கிறீர்கள்?’ என்று அவர் 
கேட்டபோது தான் பார்த்தேன் அப்போது நாங்கள் டேனிஷ்பேட்டை 
நிலையத்தை தாண்டிவிட்டோம் என்பதை.

அவரிடம் அதை சொல்லிவிட்டு இன்னும்  சிறிது நேரத்தில் சேலம் 
சந்திப்பில் இருப்போம்.என்றேன் சரியாக மாலை 4.50 மணிக்கு சேலம் சந்திப்பைஅடைந்தோம்.அங்கே காத்திருந்த நண்பர் திரு செல்லையனிடம், 
நண்பர்கள் திரு அய்யம்பெருமாள் மற்றும் பிச்சைதுரை ஆகியோரை அறிமுகப்படுத்தினேன்.  

நான் நண்பரோடு வருவதாக சொல்லியிருந்ததால் பயணிக்கும் நபர்கள் 
அதிகம் என்பதால் அவர் தன் காரை கொண்டுவராமல் தன் நண்பரின் 
Van ஐ கொண்டு வந்திருந்தார். அவருக்கு அவசர வேலை இருந்ததால்,  
Van ஓட்டுனரிடம் எங்களை நாங்கள் தங்க இருக்கும்  விடுதியில் 
விட்டு விட சொல்லிவிட்டு, என்னிடம் பின் வந்து பார்ப்பதாக 
சொல்லிவிட்டு சென்றார்.

நாங்கள் அவருக்கு நன்றி சொல்லி Van இல் பயணித்து சேலம் 
பேருந்து நிலையம் எதிரே இருந்த City Tower என்ற ஓட்டலை 
அடைந்தோம். அங்கே வரவேற்பறையில் நண்பர் வெங்கடரமணன் 
எங்களுக்காக காத்திருந்தார்.

எல்லோரும் வந்துவிட்டார்களா என விசாரித்தபோது ஒரு சிலர்தான் வந்திருப்பதாகவும் மீதி பேர் அனேகமாக இரவு வந்துவிடுவார்கள் 
என்றும் சொன்னார். மேலும் இரவு உணவை நாங்களே 
பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் மறு நாள் முதல் அவர்கள் 
ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்.  

எங்களுக்காக  ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்து பைகளை 
வைத்தபோது, சேலத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியின் கிளை 
ஒன்றில் மேலாளராக இருக்கும் நண்பர் திரு தன்ராஜ் அவர்கள் 
(இவரும் என்னோடு பணியாற்றியவர்)  வரவேற்பு அறையில் 
காத்திருப்பதாக கைபேசியில் சொன்னார்.

அவரை சென்று சந்தித்து, அவரோடு வெளியே சென்று அருகில் 
இருந்த சரவண பவன் ஓட்டலில் காபி அருந்திவிட்டு வந்தபோது, 
பல்கலைக்கழக விடுதியில் எனது அறைத்தோழர்களாக 
இருந்தவர்களும், எனது நெருங்கிய  நண்பர்களுமான நாச்சியப்பன் 
மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வந்திருப்பதாகவும் அவர்கள் 
எனது அறைக்கு வருவதாகவும் சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தங்கள் துணைவியாருடன் 
எங்கள் அறைக்கு வந்தனர். திரு முத்துகிருஷ்ணன் 
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆகையால் எனக்கும் 
நாச்சியப்பனுக்கும் அங்கிருந்து இருவகை அல்வாக்கள் 
வாங்கிவந்திருந்தார். 

பின்னர் நண்பர் கோவிந்தசாமி அவர்களும் தன் துணைவியாருடன் வந்து
எங்களுடன் சேர்ந்துகொண்டார்.அடுத்த அரைமணிநேரம் நாங்கள் 
பழைய நிகழ்வுகளை சொல்லி   ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு இருந்தோம்.எங்களின் துணைவியார்கள் அதை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவு உணவு  சாப்பிடும் நேரம் வந்ததும் வெளியே செல்லலாம் 
என சொன்னபோது நண்பர் நாச்சியப்பன் தான் சாப்பிட்டுவிட்டதாகவும் 
வெளியே சிறிது தூரத்தில் உள்ள சரவண பவன் ஓட்டலின் 
சின்ன சின்ன ஆசை என்ற உணவு விடுதியில் சிற்றுண்டி சுவையாக 
இருப்பதாக சொன்னார்.  

நான் முத்துகிருஷ்ணன் மற்றும் அய்யம்பெருமாள் கோவிந்தசாமி ஆகியோர் 
குடும்பத்தோடு அங்கு சென்று சாப்பிட்டோம். உண்மையில் அந்த 
ஓட்டலில் தரப்பட்டவை தரமாகவும் சுவையாகவும் இருந்தது.  
சென்னையில் கூட அப்படி இல்லை என்பேன்  நான்.

காலையில் 8 மணிக்கு ஏற்காடு செல்ல இருப்பதால்  7 மணிக்கு 
காலை சிற்றுண்டி சாப்பிட அருகில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு வந்துவிடவேண்டும் என நண்பர் சொல்லியிருந்ததால் எல்லோரும் 
அவரவர் அறைக்குத் திரும்பி உறங்க சென்றோம்.   

தொடரும்

12 கருத்துகள்:

 1. என்ன இனிமையான அனுபவம்;அதுவும் அதை அப்படியே நீங்கள் விவரிக்கும் விதம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

   நீக்கு
 3. இனிய சந்திப்பை இனிய தமிழில் தேனின் சுவையாய் ரசிக்க கொடுத்தமைக்கு நன்றி நண்பரே. தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அ.பாண்டியன் அவர்களே!

   நீக்கு
 4. நான் நேற்று இரவே சாம்சங் டேபிலிருந்து ஒரு பின்னூட்டம் இட்டேன் ஏனோ அது போஸ்ட் ஆகவில்லை போலிருக்கிறது.

  முந்தைய பதிவைப் போலவே உங்களுடைய எளிமையான நடை என்னையும் உங்களுடன் சேலம் வரை சென்றுள்ளது.

  இதில் நீங்கள் கூறியுள்ளதைப் போல சிலருக்கு தங்களுடைய கல்லூரி நட்புகளை புதுப்பித்துக்கொள்வதில் அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நாம் ஒருவரை அழைத்து அதில் அவர் அவ்வளவாக விருப்பம் காட்டாதபோது சற்று சங்கடமாகத்தான் இருக்கும். அதை நானும் அனுபவித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும்,எனது எழுத்து நடையை பாராட்டியதற்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. சில நண்பர்களை இரண்டாம் தடவை அல்லது மூன்றாம் தடவை அழைக்கும்போது சிறிது தயக்கத்தோடும் சங்கோசத்தோடும் தான் நான் தொடர்பு கொள்ளவேண்டியிருந்தது.

  பதிலளிநீக்கு
 6. //படிக்கும்போது என்னுடன் நெருக்கமாக இருந்த நண்பர்கள் கூட,
  நான் வற்புறுத்தி அழைத்தபோதும் ஏனோ சந்திப்புக்கு வருவதில்
  அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. ஒருவேளை வயதாக ஆக
  சிலருக்கு இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க ஆர்வம் குறைந்துவிடும் போலும். அப்போதுதான் தெரிந்தது இது போன்ற சந்திப்பை நடத்துவது, நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபம் அல்ல என்று.//

  மாணவப் பருவத்தின் பொழுது, ஒருவருக்கொருவர் அவ்வளவு வேறுபாடு கிடையாது. ஆனால் படித்து, பல வருடங்கள் கழிந்த பிறகு பெரிய வேறுபாடுகள் இருக்குமென்று அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஒருமையில் அழைப்பதா, பன்மையில் அழைப்பதா என்றுவேறு பிரச்சனை. நான் அனேகமாக ஒருமையில் அழைத்தாலும், சிலர் திரும்பவும் பன்மையில் அழைக்க விரும்புகையில், மீண்டும் ஒருமையில் அழைப்பது சிரமமாக இருந்தது. இந்த நிலையில், ஒரு சந்திப்பை செயல்படுத்துவது எளிதான செயல் இல்லை. எப்படியோ ஓரளவுக்காவது வெற்றிபெற்றிருக்கிறீர்கள் என்றே கூறவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்ன பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், சிலர் வருவதற்கு தயங்கியதன் காரணம், அவர்கள் பணி ஓய்வுக்குப்பின் ‘கூட்டுக்குள்’ அடங்கிவிட்டதுதான். இருப்பினும் குடும்ப உறுப்பினர்களோடு மொத்தம் 50 பேர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டது எங்களைப் பொறுத்தவரை ஒரு சாதனையே!

   நீக்கு
 7. இதுபோன்ற சந்திப்புகளை நிகழ்த்துவதில் உள்ள கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களையும் தெளிவாகச் சொன்னீர்கள். பின்னாளில் இதுபோன்ற காரியங்களை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

   நீக்கு