சனி, 5 அக்டோபர், 2019

தொடரும் சந்திப்பு 13






வீரப்பக்கௌண்டனூரிலிருந்து பொள்ளாச்சிக்கு திரும்பும்போது நண்பர் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டே உந்துருளியை மெதுவாக  ஓட்டிக்கொண்டு சென்றேன். சிறிது தூரம்  சென்றதும் சாலையின் குறுக்கே நீண்ட கயிறு ஒன்று கிடப்பது போல் தெரிந்தது. 


மிக அருகில் சென்றபோது, அதுவரை கயிறுபோல் தெரிந்த ‘அது’ எங்கள் வாகனத்தின் ஓசை கேட்டதும் திடீரென எழுந்து  இடதுபக்கம் உள்ள வண்டித்தடத்தில் உடலை வட்டமிட்டு படம் எடுத்து நின்றது. அது கயிறல்ல நல்லபாம்பு எனத் தெரிந்ததும்  என்ன செய்வது என்று தெரியவில்லை. 

உடனே அனிச்சையாக உந்துருளியை நடுவில் இருந்த மேடான பாதையிலிருந்து வலது பக்கம் இருந்த வண்டித்தடத்தில் இறக்கி  முடுக்குப்பொறி (Accelerator) விசையை அதிகரித்து நகர்ந்துவிட்டேன். 

அப்போது என்னை அறியாமலேயே இரு கால்களையும் தூக்கிக்கொண்டேன். நண்பர் திரு கிருஷ்ணனும் அவ்வாறே தனது இருகால்களையும் இணைகோடுபோல் தூக்கிக்கொண்டுவிட்டார். 

அந்த பாம்பு வட்டமிட்டு படம் விரித்த நிலையில் இருந்தபோது  நாங்கள் சென்ற பாதையிலே கொஞ்சம் அசந்து அதன் அருகில் சென்றிருந்தால் அதனுடைய விஷப்பல் நிக்சயம் எங்களில் ஒருவரது காலை பதம் பார்த்திருக்கும்.

அப்போது வண்டியை சரியாக ஓட்டும் திறன் பெற்றிராத நான் எவ்வாறு பதட்டப்படாமல் கீழே (அதன் மேல்) விழாமல் தப்பித்தேன் என்பது இன்னும் எனக்குப் புரியாத புதிர். ‘அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது துணிச்சல் மனிதனுக்கு தானாகவே வரும்.’ என்பார்கள். அதுதான் நடந்தது போலும். 

சிறிது தூரம் தள்ளி வண்டியை நிறுத்திப் பார்த்தபோது, எதுவுமே நடக்காததுபோல் அது தனது பயணத்தை தொடர ஆரம்பித்திருந்தது. சிற்றூரிலே பிறந்து வளர்ந்திருந்த எனக்கு, இது போன்ற வயல்வெளிக்கு அருகே உள்ள கள்ளி செடிகளில் பாம்புகள் இருக்கும் என்பதும், அவைகள் வயல்களில் உள்ள தங்கள் இரையான எலிகளைப் பிடிக்க நகர்ந்துக்கொண்டு இருக்கும் என்பது தெரிந்திருந்தும் அன்று ஏனோ பேச்சு சுவாரஸ்யத்தில் பாதையில் கவனம் வைத்திருக்கவில்லை. 

சிறிது நேரம் நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. நண்பர் திரு கிருஷ்ணன் அச்சத்தில் உறைந்துபோய் இருந்தார். 

எனது தந்தை எங்கள் ஊரில் பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து எண்ணற்ற பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். என் தந்தைக்கு யாரோ சொல்லிக்கொடுத்த அந்த வைத்தியத்தை அவர்கள் இறக்கும் வரையில் எந்தவித ஆதாயத்தையும் எதிர்பாராது, எந்த நேரத்தில் வந்தாலும் முகம் சுளிக்காது வைத்தியம் செய்திருக்கிறார்கள்.

பல பேரை பாம்பு கடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களின் வாழ்த்தும், எனது தந்தையின்  பலனை எதிர்பாராத சேவையும்  என்னைக் காக்கும் என்பதில்  எந்த வித ஐயமும் இல்லாததால் பாம்பு கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை எனக்கு அப்போது ஏற்பட்டது. 

அதற்குப்பிறகு இருவருமே பேசிக்கொள்ளவில்லை. நல்லபடியாக பொள்ளாச்சி சென்றடைந்தோம். மறுநாள் நண்பர் கிருஷ்ணன் விடுப்பு எடுத்துக்கொண்டார். 

இந்த நிகழ்வு கிணத்துக்கடவை நான் பயணித்த பேருந்து கடந்தபோது நினைவுக்கு வந்தது. அதை  அசை போட்டுக்கொண்டே  இருந்தபோது பேருந்து ஆச்சிப்பட்டியை நெருங்கியது. அடுத்த ஊர் பொள்ளாச்சி என்பதால்  இறங்கத் தயாரானேன். 

பொள்ளாச்சி நுழையும் முன் அண்ணா நகர் தாண்டியவுடன்  மகாலிங்கபுரம் செல்லும் வளைவு வரும் என்று தெரிந்தாலும், முன்பே ஒட்டுனரிடம் (அந்த பேருந்தில் நடத்துனர் இல்லை.) அந்த வளைவு வந்தால் சொல்லும்படி சொல்லியிருந்தேன். 

அவரும் அந்த இடம் வந்ததும் நிறுத்தி இறங்க சொன்னார். அவர் சொல்லாதிருந்தால் நான் இறங்கியிருக்கமாட்டேன். பொள்ளாச்சி எவ்வளவோ மாற்றங்களை  கொண்டிருந்ததால். என்னால் மகாலிங்கபுரம் செல்லும் வளைவை பார்த்திருக்கமுடியாது. 

பேருந்திலிருந்து இறங்கியவுடன் கைத்தொலைபேசியில் நண்பர் மீனாட்சி சுந்தரத்தை தொடர்புகொண்டு,  ‘ரத்னா ஸ்கொயர்’ விடுதி இருக்கும் இடத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு, அதை  நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

தொடரும்



14 கருத்துகள்:

  1. வியப்பான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து அழகாக விவரித்தீர்கள் நன்றி.

    மறுதினம் தங்களது நண்பர் திரு. கிருஷ்ணன் அவர்கள் எதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டார் என்பதை சொல்லவே இல்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! திரு கிருஷ்ணன் எதற்கு விடுப்பு எடுத்தார் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்பியதால் அதற்கான காரணத்தை சொல்லவில்லை.

      நீக்கு
  2. கிணத்துக்கடவு -- ஊர்ப் பெயர் காரணம் என்னவாக இருக்குமோ?

    இந்தத் தடவை சாலையில் நிமிர்ந்து நின்ற பாம்பின் பின்னணியில் பதிவு ஊர்ந்து போனது.

    ரத்னா ஸ்கொயர் விடுதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.. ஒரு மர்மக்கதையாக இந்த் இடத்தில் தான் தொடரும் போட்டிருப்பார்கள்.
    அது மாதிரியே நீங்களும் சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! கடவு என்பதற்கு வழி, பக்கம், இறங்குதுறை என்று பொருள் கொள்ளலாம். கிணத்துக்கடவுக்கான பெயர் காரணப் பெயராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அந்த காரணத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை.விவரம் தெரியும்போது அறிவிக்கிறேன்.

      கொங்கு நாட்டில் அனிக்கடவு, கக்கடவு, தூணக்கடவு என்ற பெயர்களிலும் ஊர்கள் உண்டு.

      கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவை கடக்கும்போது மறக்கமுடியாத அந்த நிகழ்வு திரும்பவும் மனக்கண்ணில் வந்ததால் அதை எழுதும்படியாகிவிட்டது. மேலும் பதிவு நீண்டுவிட்டதால் தொடரும் என முடித்துவிட்டேன்.

      நீக்கு
  3. பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். நீங்களும் உங்கள் நண்பரும் அச்சத்தில் உறைந்து போனதில் தவறேதும் இல்லை. அன்றாட சாதாரண வாழ்க்கையில் இத்தகைய சம்பவங்கள் தான் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.

    உங்கள் எண்ண பயணத்தில் எங்களையும் அழைத்து செல்வதற்கு உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபி.ஆர்.ஜோசப் அவர்களே!

      நீக்கு
  4. அன்று தந்தை பிறரை காப்பாற்றியதால்,இன்று மகன் காப்பாற்றப்பட்டார் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தங்களின் கருத்தே என் கருத்தும்.

      நீக்கு
  5. Dangerous position while learning bike riding. Your commonsense has saved you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! அந்த நேரத்தில் தப்பித்தது இயல்பறிவாலா (Commonsense) அல்லது கடவுள் செயலாலா எனத் தெரியவில்லை.

      நீக்கு
  6. ஒரு முறை எல் டி சி யில் குடுபட்துடன் பயணித்துக் கொண்டிருந்தபோதுஇரவு மழை வேறு சாலையிலொரு பாம்பு ட்ரைவர் வண்டியை நிறுத்தி விட்டார் பாம்பின் மேல் கார ஏற்றினால் தொடர்ந்து துயர சம்பவங்கள் நிகழும் என்றார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பாம்பு குறுக்கே வந்தால் வண்டியை நிறுத்துவதன் காரணம் அது காரின் முன்பகுதியில் ஏறிவிடக்கூடாதே என்பதால் தான்.

      நீக்கு
  7. நல்ல பாம்பு ரொம்ப நல்ல பாம்பு போலும். ஒரு தொந்தரவும் செய்யாமல் சென்று விட்டது. Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! பொதுவாக பாம்புகள் அவைகளை நாம் சீண்டினாலொழிய அவைகள் நம்மைக் கடிக்கா. அப்படி கடிப்பதும் கூட தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். நாங்கள் அந்த பாம்பிடம் இருந்து விலகி சென்றதால் , அந்த ‘நல்ல’பாம்பு பெயருக்கேற்றார் போல் எங்களை ஒன்றும் செய்யவில்லை.

      நீக்கு