ஞாயிறு, 12 ஜூலை, 2020

எது சிறந்தது ? 3

தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த நாம், நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் வீட்டில் உணவருந்தும் அறை என்று ஒன்றும் தனியாக இருந்ததில்லை. சமையலறையே பெரியதாக இருக்கும். அங்கேயே தரையில் அமர்ந்து சாப்பிட்டவர்கள்தான் நாம். ஆனால் இப்போது சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாக அநேகம் பேர் ஆகிவிட்டதால் சமையலறை சிறியதாகவும் உணவருந்தும் அறை பெரியதாகவும் இருக்கும்படிதான் வீடுகள் கட்டப்படுகின்றன.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு சேருமுன் தரையில் அமர்ந்து தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபிறகு தான், கற்காரையால் (Concrete) ஆன நீள் இருக்கைகளும் (விசிப்பலகைகள்) சாப்பிடும் மேசைகளும் உள்ள பல்கலைக் கழக விடுதியின் உணவுக் கூடத்தில் இருக்கையில் அமர்ந்து சாப்பிடவேண்டியதாயிற்று. (ஆனாலும் அப்போது சில கல்லூரி விடுதிகளில் தரையில் அமர்ந்து சாப்பிடும் முறையும் இருந்தது.) 

வகுப்புக்கு காற்சட்டையுடன் (Pants) செல்லுமுன் சாப்பிடச் செல்லும்போது இருக்கையில் அமர்ந்து சாப்பிடுவது எளிதாக இருந்ததால் அதுவே பழகிப்போயிற்று, ஆனால் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவேன். 

பின்னர் பணியில் சேர்ந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும்போது உணவகத்தில் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடாமல் போனதால், நாளடைவில் தரையில் அமர்ந்து சாப்பிட இயலாமல் போய்விட்டது. அப்படியே அமர்ந்தாலும் எழுந்திருக்க சிரமப்பட வேண்டியிருக்கிறது. இது போன்ற சிரமங்கள் பலருக்கு இருக்கக்கூடும். 

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வேறு வழியின்றி மேசைமுன் அமர்ந்து நாம் சாப்பிட்டாலும் வீட்டிலாவது மேசைமுன் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து தரையில் அமர்ந்து சாப்பிடலாம். 

நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் வீட்டிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் போது, கால் தொங்கும் நிலையில் இருப்பதால்  ஈர்ப்பு விசை (Gravitational force) காரணமாக கால்களுக்கெல்லாம் இரத்தம் பாயும். இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் இருக்காது.

ஆனால், தரையில் சம்மணமிட்டு அமரும்போது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் இருக்கும். 

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதுமாம். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேலேதான் உள்ளன. 

எனவே காலை தொங்கப்போடாமல் சம்மணமிட்டு அமர்வது  இரத்த ஓட்டத்தை சீராக்கி, அதிகமாக சக்தி கிடைக்க உதவி உடல் நலமுடன் இருக்க உதவும். 

மேலும் சாப்பிடும்பொழுது நாற்காலியில் அமர்ந்து காலைத் தொங்கவைக்கும்போது  இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்வதால். செரிமானம் தாமதமாகும்.காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால், சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆகும்.

காலைத் தொங்கவைத்து அமர்வதை தவிர்த்து குறிப்பாக சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். 

சம்மணமிட்டு தரையில் உட்கார முடியவில்லை என்றால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும்போது காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடலாம். இது போன்று வெளியிடங்களில் செய்யமுடியாது என்றாலும் வீட்டில் சாப்பிடும்போதாவது இந்த முறையை பின்பற்றலாம். 


தொடரும்16 கருத்துகள்:

 1. கீழே உட்கார்ந்து சாப்பிட முடிவதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே! தரையில் உட்காருவதை தொடராவிட்டால் பின்னர் வயதானபிறகு உட்கார சிரமமாகிவிடும். எனவே கவலை வேண்டாம் நீங்கள் நாற்காலியில் அமர்ந்தே சாப்பிடுங்கள். இந்த பதிவை பார்த்த பிறகாவது இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள் என எண்ணுகிறேன்.

   நீக்கு
 2. நான் தரையில் அமர்ந்தே சாப்பிடுகிறேன்.
  உணவகம், திருமண விருந்துக்கு போனால் தவிர்க்க இயலாமல் போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜிஅவர்களே! தாங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. அதையே தொடருங்கள்.

   நீக்கு
 3. தவிர்க்க இயலாத இடங்களில் மேஜை உணவு.

  வீட்டிலும் மேஜை உணவு - நிறைய நாட்களில்! சில நாட்கள் மட்டுமே கீழே அமர்ந்து தான் சாப்பிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! டில்லியில் தரையில் அம்ர்ந்து சாப்பிட இயலாதுதான். ஆனால் ஸ்ரீரங்கம் வரும்போது தரையில் அமர்ந்து சாப்பிடலாம். இல்லாவிடில் பின்னாட்களில் தரையில் அமர்ந்து எழ இயலாமல் போகும்.

   நீக்கு
 4. ஏற்கெனவே சொன்ன மாதிரி இப்போதும் தரையில் அமர்ந்தே சாப்பிடுகிறோம்.  எங்கள் திருமண விழாவில் கூட மேசை நாற்காலிகள் கிடையாது.  தரையில் அமர்ந்தே சாப்பிட்ட திருமணம்!  நீங்கள் சொல்லி இருக்கும் குறிப்பு உபயோகமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ஸ்ரீராம் அவர்களே! தாங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. தங்கள் இல்லத் திருமணங்களில் மேசை நாற்காலி இல்லாமல் தரையில் அமர்ந்தே சாப்பிடும் முறை இருப்பது மிக்க மகிழ்ச்சி! அதையே தொடருங்கள்.

   நீக்கு
 5. இன்னும் நாங்கள் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறோம். அமர்ந்து சாப்பிட மேசை நாற்காலிகள் வாங்குவதற்கான விவாதம் எழுந்தபோது முற்றிலும் மறுத்துவிட்டோம்.
  முடியாதவர்களோ, வயது முதிர்ந்தவர்களோ வீட்டுக்கு வரும்போது தனியாக அவர்கள் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்து தந்துவிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தங்களது வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. அதையே தொடருங்கள்.

   நீக்கு
 6. சொன்ன குறிப்புகள் அனைத்தும் அனைவரும் அறிய வேண்டியது... அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 7. ஐயா, நலமா?
  மறக்க முடியாத அனுபவங்களையும் கலந்து சாப்பிடும் முறையையும் அதன் பலனையும் கூறியுள்ளது சிறப்பு. அதற்கான மேஜை இருந்தும் தரையில்தான் சாப்பிடுகிறோம். அதுதான் வசதியாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஞானசேகரன் அவர்களே! சாப்பிடுவதற்கான மேசை இருந்தும் தங்கள் வீட்டில் அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. அதையே தொடருங்கள்.

   நான் நலமே. தங்கள் நலனையும் அறிய ஆவல்.

   நீக்கு
 8. பயனுள்ள பதிவு அய்யா!
  எங்கள் வீட்டில் இப்போதும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறோம். டைனிங் டேபிள் வாங்கும் வாய்ப்பு பலமுறை வந்தும், வலுக்கட்டாயமாக தவிர்த்து வருகிறேன். காரணம் நீங்கள் பதிவில் சொன்ன உடல் நலமே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே! சாப்பிடுவதற்கான மேசை வாங்காமல், தாங்கள் உடல் நலனைப் பேண தரையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு