திங்கள், 1 மார்ச், 2010

காலத்தினால் செய்த நன்றி 3

அந்த பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரில், பழுது நீக்கும் பணியில் தீவிரமாக இரு பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

பக்கத்தில் ஒருநாற்காலியில் ஒருவர் அமர்ந்துகொண்டு என்ன செய்யவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார்.


அவர் என்னைப்பார்த்ததும் தமிழன் என தெரிந்துகொண்டு 'என்ன வேண்டும்சார்?' என்றார். அப்போதுதான் கவனித்தேன் அவருக்கு ஒருகால் ஊனம்

என்பதை. 'மோட்டார் சைக்கிளில் 'கிளட்ச் கம்பி' அறுந்துவிட்டது. சரி செய்து தரவேண்டும்' என்றேன்.


'சார் இங்கே கார்களுக்கு மட்டும்தான் சர்வீஸ் செய்யப்படும்.

மோட்டார்சைக்கிள்,ஸ்கூட்டர் சர்வீசுக்கு நீங்கள் ஹரிநகர்

போகவேண்டும்.இருந்தாலும் இந்தநேரத்தில் நீங்கள் அம்மாவுடன் அங்கு போகவேண்டாம். இங்கேயே உட்காருங்கள்.நான் மெக்கானிக்கை இங்குஅழைத்துவர ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த ஒரு பணியாளரிடம் 'நீ ஹரி நகர் போய் மெக்கானிக்கை அழைத்துவா.வரும்போது புதிய கிளட்ச் கம்பி ஒன்றையும் வாங்கி வா' என சொன்னார்.


பிறகு எங்களிடம் ' ரொம்பவும் குளிராயிருக்கிறது. கொஞ்சம் டீ சாப்பிடுங்கள்.' என வற்புறுத்தி டீ வாங்கி கொடுத்தார்.


ஹரி நகரிலிருந்து மெக்கானிக் வந்து கிளட்சை சரி செய்து கொண்டிருக்கும்போது, அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

'சார், நீங்கள்எந்தஊர்?என்றதும் நான்'விருத்தாசலம் அருகில் உள்ள தெ.வ.புத்தூர்' என்றேன்.


உடனே அவர், 'சார் நீங்க நம்ம ஊர்காரர் ஆகிட்டீங்க. என் ஊர் கூட விருத்தாசலத்தைஅடுத்த முகசாபரூர்தான்.

நான்கூடவிருத்தாசலத்தில் காமாட்சி மோட்டார் சர்வீசில்மெக்கானிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன்.

ஒருவிபத்தில் காலை இழந்ததால் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து இந்த பணிமனையை ஆரம்பித்து நடத்திவருகிறேன்' என்றார்.


அவர் பெயர் கேசவன் என்றும் சொன்னார்.


மெக்கானிக் 'வேலை முடிந்துவிட்டது' என்றவுடன், நான் அவரிடம் 'எவ்வளவு தரவேண்டும்?' எனக்கேட்டதற்கு, 'இதற்கெல்லாம் ஒன்றும் வேண்டாம்சார்,நீங்கள்பத்திரமாக அம்மாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்க' என்றார்.


நான் 'மெக்கானிக்கு தரவேண்டும் அல்லவா?' என்றதும்

'மெக்கானிக்கு மெக்கானிக் ஒன்றும் வாங்க மாட்டார்கள். நீங்கள் போய்வாருங்கள்' என்றார்.

'சரி, கிளட்சுக்கான பணத்தையாவது பெற்றுக்கொள்ளுங்கள்' என்றதும்

'அது ஒன்றும் அதிக விலையில்லை.நேரம் ஆகிவிட்டது, நீங்கள் போய் வாருங்கள்' என்றார்.


எவ்வளவோ சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.


முன் பின் அறியாமல் இருந்தும், எந்தவித சேவைக்கட்டணமும் பெறாமல், அந்த நேரத்தில் அவர் செய்த உதவிக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். வீட்டுக்கு வந்து அவர் செய்த உதவியைப்பற்றி எண்ணியபோது,



காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.


என்ற குறட்பாக்கள்தான் நினைவுக்கு வந்தன.


இன்றைக்கும் கூட திரு கேசவன் அவர்கள், பலனை எதிர்பாராது செய்த அந்த உதவியை நினைத்துப்பார்க்கிறேன்.


அவர் எனக்கு உதவி செய்தது அவருள் இருந்த மனிதாபிமானமா?

அல்லது ஒரே ஊரைச்சேர்ந்தவன் என்பதால் ஏற்பட்ட பாசமா?

அல்லது தமிழன் என்ற உணர்வா?


என யோசிக்கும்போது மூன்றும்தான் என்பதே எனது எண்ணம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

காலத்தினால் செய்த நன்றி 2

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் நான் கிளட்சை வேகமாகவிடவேயில்லை. என்னவாயிற்று என

பார்ப்பதற்காக வண்டியைவிட்டு இறங்குவதற்குள் காரிலிருந்த

சர்தார்ஜிஒருவர்இறங்கிவந்துஹிந்தியில் திட்டதொடங்கிவிட்டார்.


அப்போதுதான் கவனித்தேன் எனது வண்டியில்இருந்த கிளட்ச் கம்பி

அறுந்து இருந்ததை. நான் விவரத்தை சொல்லுமுன்பே அருகே வந்த சர்தார்ஜிஎன்நிலையைப்பார்த்ததும் எனதுநல்லவேளை,வேறு ஒன்றும் சொல்லாமல் 'டீக் ஹை' எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.


எல்லாவாகனங்களும்கடந்தபின் நான்எனதுவண்டியை

தள்ளிக்கொண்டுமனைவியுடன் கேட்டைத்தாண்டினேன். எங்காவது மெக்கானிக் பணிமனை இருந்தால் சரி செய்யலாமே என பார்த்தபோது , கேட்டுக்கு அப்பால் ஒரு சில தேநீர் கடைகள் மட்டும் இருந்தன. அப்போது 'பங்கா ரோட்டில்' இடதுபுறம் கோதுமை வயல்களும், வலப்புறம் டில்லி வீடு வசதி வாரியம் கட்டிக்கொண்டிருந்த முடிவடையா அடுக்ககங்களும் இருந்தன. வேறு எந்த கடையும் தென்படவில்லை.


அங்கிருந்து நான் இருந்த வீடு சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். பகலிலேயே ஆள்நடமாட்டம் குறைவாயிருக்கும். இரவைப்பற்றி சொல்லவே வேண்டாம்.மேலும் சாலை ஓர விளக்குகள் இல்லாததால் ஒரே கும்மிருட்டாய் இருந்தது. வீட்டுக்கு வண்டியை கொண்டுசென்றுமறுநாள்மெக்கானிக்கைதேடலாம்என்றால்,

அந்த இருட்டில் எப்படி வண்டியை தள்ளிக்கொண்டு மனைவியுடன்

செல்வது என்ற கவலை.


ஏதோ குருட்டு நம்பிக்கையில் முன்னேசென்றபோது சிறிதுதூரத்தில்

Madras AutoServiceஎன்றபெயர் பலகையுடன் இருந்தஒருசிறிய

பணிமனையைக்கண்டவுடன்ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மிகவும் நம்பிக்கையோடு அதை நெருங்கினேன்.


தொடரும்