ஞாயிறு, 17 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 4



நாங்கள் பயணித்த மூன்று பேருந்துகளும் சேலம் பேருந்து நிலையம் 
அருகில் இருந்து புறப்பட்டு ஃபேர் லாண்ட்ஸ் வழியாக அஸ்தம்பட்டி 
சந்திப்பை அடைந்து  30 கிலோ மீட்டர் தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில்அமைந்திருக்கும்  சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காடு 
மலையை நோக்கி புறப்பட்ட போது, எனது நினைவலைகளும் 
20 ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது.

1993 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் 1998 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 
வரை இதே சேலத்தில் ஐந்து ஆண்டுகள் சிண்டிகேட் வங்கியில் முதுநிலை 
கிளை மேலாளராக பணியாற்றியிருக்கிறேன். அப்போது பல தடவைகள் 
இந்த ஏற்காடு மலைக்கு அலுவலக விஷயமாகவும் தனிப்பட்ட 
முறையிலும் சென்றிருக்கிறேன்.

ஒரு காப்பித் தோட்ட நிறுவனம் தங்களது தோட்டத்தை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நிதி உதவி வேண்டி எங்கள் வங்கியின் உதவியை 
நாடியிருந்ததால் அந்த காப்பி எஸ்டேட்டை ஆய்வு செய்ய  அந்த கிளையில் 
பணியில் சேர்ந்த மறு வாரமே முதன் முதல் ஏற்காடு சென்றது அப்போது 
நினைவுக்கு வந்தது.

இந்த ஏற்காட்டின் அருமை பெருமை பற்றி தெரிந்து கொண்டதுதும் 
அப்போதுதான். ஏரியும் காடும் இருப்பதால் இது ஏற்காடு என 
அழைக்கப்படுவதாக சொன்னாலும் , ஏழு காடுகள் இருந்ததால் 
ஏழுகாடு அழைக்கப்பட்ட இந்த இடம் பின்னால் மருவி ஏற்காடு 
என அழைக்கப் பட்டதாக சொல்வோரும் உண்டு.   

இந்த ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் 
உள்ளது என்றும் இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டபோது அப்போதைய 
பரந்துபட்ட சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த   
சர் தாமஸ் மன்றோ அவர்கள் தான் இந்த மலைவாசஇருப்பிடம்   
இருப்பதை கண்டுபிடித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த பிரிட்டிஷ்கார ஆளுநர் சென்னை வெயிலின் தாக்கத்தை   
தாங்கமுடியாததால், கோடைக்காலத்தில், தான் தங்க இந்த குளுமையான 
இடத்தைத் தேடி கண்டுபிடித்திருந்தாலும், நமக்கு ஒரு நல்ல கோடைவாச இருப்பிடத்தை காண்பித்தற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

‘ஏற்காட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட David CockBurn என்ற 
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தான், காப்பி, பேரிக்காய், 
ஆப்பிள் போன்றவைகளை இங்கு பயிரிட அறிமுகப்படுத்தியவர் என்றும், 
அவரால்தான் ஏற்காடு விரிவாக்கம் அடைந்தது என்றும் பின்னர் 
தெரிந்துகொண்டேன். 

ஏற்காட்டின் வெப்ப அளவு 13 டிகிரி செண்டிகிரேடிலிருந்து  30 டிகிரி செண்டிகிரேடுக்குள் இருப்பதால், இதமாக உள்ள இந்த தட்பவெட்ப 
நிலைக்காக ஆண்டு முழுதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து 
கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஏற்காட்டில் உள்ளே நுழைந்ததும் நம்மை ஈர்த்து வரவேற்கும் அழகான 
ஏரியும் (இதில் பல தடவை நான் படகில் பயணித்து இரசித்திருக்கிறேன்), 
ஏரிக்கு அருகில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவும், சேர்வராயப் பெருமாள் கோவிலும், லேடீஸ் சீட்டும், அருகில் உள்ள ரோஜாத் தோட்டமும், 
பகோடா முனையும், கிள்ளியூர் நீர்வீழ்ச்சியும் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் என்றாலும் இவைகளையெல்லாம் ஒரே நாளில் பார்க்க இயலாது.

இவைகளையெல்லாம் இப்போது திரும்பவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 
பார்த்து இரசிக்கப்போகிறேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், 
எல்லாவற்றையும் இன்றே பார்க்க முடியுமா என்ற ஐயமும், அப்போது 
பார்த்தற்கும் இப்போது பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்குமோ 
என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது.

எங்கள் பேருந்து அஸ்தம்பட்டி சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி, 
சேலம் நீதிமன்றம் சேலம் ஆட்சித்தலைவரின் இருப்பிடங்களைத் தாண்டி 
சென்றபோது பழைய நீதி மன்ற கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய நீதி மன்ற 
வளாகம் கட்டப்பட்டிருப்பதை கவனித்தேன்.

வழி நெடுக புதிய புதிய கட்டிடங்களும் கல்யாண மண்டபங்களும் எழும்பியிருப்பதையும், அதிக நடமாட்டமே இல்லாத கோரிமேடு 
இப்போது அதிக கடைகளோடு மிகவும் ‘பிஸி’யாக இருப்பதையும் 
கண்டேன்.

அடுத்து நான் பார்க்க விரும்பியது சேலம் என்றால் மாங்கனிக்குப் 
பிறகு எல்லோராலும் நினைக்கப்படும் ‘மாடர்ன் தியேட்டேர்ஸ்‘ இருந்த 
இடத்தை! எல்லோரும் திரைப்படம் எடுக்க சென்னையில் ஸ்டுடியோஸ் 
கட்டியபோது, துணிந்து தன் சொந்த மாவட்டத்திலேயே, ஏற்காடு 
மலையடிவாரம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் 9 ஏக்கர் 
நிலப்பரப்பில் மாடர்ன் தியேட்டேர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திரைப்பட ஸ்டுடியோவைக் கட்டி அந்த காலத்திலேயே  சென்னையில் இருக்கும் 
நடிகர்களை எல்லாம் சேலம் வரவழைத்து படமெடுத்து வியக்க வைத்தவர் கண்டிப்பானவர் என பெயர் பெற்ற T.R.சுந்தரம் என்கிற திருச்செங்கோடு 
ராமலிங்கம் சுந்தரம் அவர்கள். அப்போதே தனது பட்டப்படிப்பை 
U.K வில் உள்ள University of Leeds இல் படித்தவர்.

117 திரைப்படங்களைத் தயாரித்த அந்த நிறுவனம் 1935 இல் 
ஆரம்பிக்கப்பட்டு 1982 இல் மூடப்பட்டாலும், அந்த நிறுவனத்தின் பெயரைத் 
தாங்கிய நுழை வாயில் கம்பீரமாக நிற்பதை நான் எங்கள் வங்கியின் கொண்டப்பநாயக்கன்பட்டி கிளைக்கு செல்லும்போது பார்த்திருக்கிறேன்.
அப்போதே அந்த ஸ்டுடியோவில் இருந்த கட்டிடங்கள் சில இடிக்கப்பட்டு 
வீடுகள் எழும்பிக்கொண்டிருந்தன.

இப்போது அந்த நுழை வாயிலைத்தேடியபோது அதைக் காணவில்லை.
அதுவும்  இடிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்து வருத்தப்பட்டேன். 
அதைப்பற்றி விசாரித்ததில் அந்த இடத்தை வாங்கிய ஒரு வீடு கட்டும் 
நிறுவனம் அந்த நிறுவனத்தின் பெயர்ப் பலகையை மட்டும் சிறிது தூரத்தில் 
தாங்கள் கட்டியுள்ள  Sundar Garden என்ற பெயரிட்ட வாயிலில் 
பதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதைக் கேட்டு வருத்தப்பட்டாலும், 
அந்த மாபெரும் நிறுவனத்தின் பெயர்ப்பலகையாவது மிஞ்சியிருக்கிறதே 
என்று சந்தோஷப்பட்டேன்.

நிச்சயம் அந்த பெயர்ப்பலகை Modern Theatres Ltd., என்ற புகழ் பெற்ற 
நிறுவனம் அங்கு இருந்தது என்பதை வரும் தலைமுறைகளுக்கு 
சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும் என்பகில் ஐயம் இல்லை.

சேலத்திலிருந்து 10 கிலோமீட்டர் அதாவது கொண்டப்பநாயக்கன்பட்டி 
வரை தான் சமவெளி. அதற்குப் பிறகு மலை ஏறும் பகுதி வந்துவிடும்.  
20 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் 
20 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும். அதில் பயணிக்கும்போது முதலில் 
சிறிது தூரம் ஒன்றுமே இருக்காது. உண்மையில் அங்கு இருந்த 
மரங்களை நம்மவர்கள் வீணே அங்கு மரம் ஏன் இருக்கவேண்டும் 
என வெட்டிவிட்டார்களாம்!

இப்போது எப்படி இருக்கிறது என பார்த்தபோது அப்படியே தான் இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் முன்பு அநேகம் தடவை சென்றபோது அங்கும் 
இங்கும் சில சந்தன மரங்களை போகும் வழியில் பார்த்திருக்கிறேன். 
இப்போது அவைகளை எல்லாம் காணவில்லை. ஒருவேளை அவைகள் 
வெட்டப்பட்டு அஸ்தம்பட்டியில் உள்ள அரசு சந்தன மர ஏலம் விடும் 
கிட்டங்கிக்கு போய்விட்டதோ அல்லது தனியார்கள் கைக்குபோய் விட்டதோ தெரியவில்லை.

எனக்கு அடுத்த இருக்கையில் நண்பர் திரு D.கோவிந்தராஜன் அவர்கள் அமர்ந்திருந்தார். வெளியே பார்ப்பதை விட்டுவிட்டு, அவரோடு பேச 
ஆரம்பித்தேன். அவர் துணை வேளாண்மை இயக்குனராகப் பணியாற்றி 
ஓய்வு பெற்று தற்சமயம் வேலூரில் வசிக்கிறார். அவருடைய அலுவலக அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே வந்ததால் மலைவழிப்பாதையை   
புகைப்படம் எடுக்க நினைத்ததை நிறைவேற்றமுடியவில்லை.

அதனால் கூகிளார் உபயத்தால் கீழ் கண்ட படங்களை தந்திருக்கிறேன். 
ஆனால் பின் வரும் பதிவுகளில் நான் எடுத்த புகைப்படங்களையும் 
திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் மற்றும்  திரு அய்யம்பெருமாள் 
ஆகியோர் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றுவேன்.  












காலை 10.30 மணி அளவில் ஏற்காடு அடைந்தபோது முன்பே ஏற்பாடு 
செய்திருந்தபடி தேநீர் அருந்துவதற்காக ஏற்காடு ஏரிக்கு அருகே இருந்த 
ஒரு உணவகம் அருகே  எங்களது பேருந்து நின்றது. மற்ற பேருந்துகளும் 
அங்கே நிறுத்தப்பட்டன.  

தொடரும்

செவ்வாய், 12 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 3



அக்டோபர் 10 ஆம் நாள் காலை 5 மணிக்கே  எழுந்து குளித்து 
தயாராகிவிட்டோம். நண்பர் வெங்கடரமணன் சொன்னபடி காலை 
7 மணிக்கே கீழே வரவேற்பறைக்கு சென்று காத்திருந்தபோது, நண்பர் 
வெங்கடரமணன் நான்கு ஐந்து பெரிய பைகளுடன் காரில் வந்து 
இறங்கினார்.

அவைகள் என்னவென்று கேட்டதற்கு  பங்கேற்கும் நண்பர்கள்   
அனைவருக்கும் தர, ஒரு சிறிய குடையும், கை விளக்கும் (Torch Light), குறித்துக்கொள்ள ஒரு சிறிய நோட்டு புத்தகத்தோடு ஒரு Ballpoint  
பேனாவும் அடங்கிய பைகள் அவைகளில்  இருப்பதாகவும், அனைவரும் 
ஏற்காடு கிளம்புமுன் அந்த பைகளை பெற்று கொள்ளுமாறு 
கேட்டுக்கொண்டார். பிறகு அருகில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு 
செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அங்கே காத்திருந்த நண்பர்கள் அனைவரும் அவைகளை பெற்றுக்கொண்டு 
போய் அறையில் வைத்துவிட்டு வந்து,  சிற்றுண்டி சாப்பிட்ட 
தயாரானோம்.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருபுறமும் இருந்த 
சரவண பவன் உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் அவரவர்கள் 
விரும்பியதை சாப்பிடலாமென்றும், சாப்பிட்டதற்கான ‘பில்’லை வாங்கி 
நண்பர் பழனியப்பனிடம் கொடுத்துவிட்டால் அவர் அதற்கான பணத்தை கொடுத்துவிடுவார் என்றும் சொன்னார் நண்பர் வெங்கடரமணன்.

அனைவரும் அந்த நேரம் தற்காலிமாக துணைவியரைப் பிரிந்து, பழைய நண்பர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டே அவரவர்கள் விரும்பியதை 
சாப்பிட்டோம். சாப்பிட்ட ‘பில்’லை அங்கு காத்திருந்த நண்பர் 
பழனியப்பனிடம் கொடுத்தபோது, அவர் எங்களிடம் ‘உணவகத்துக்கு  
அருகில் உள்ள Empire Arcade என்ற கட்டிடம் அருகே காத்திருங்கள். 
ஏற்காடு செல்ல அமர்த்தப்பட்டிருக்கின்ற Mini பேருந்துகள் அங்கு தான் 
வரும். எல்லோரும் வந்தவுடன் கிளம்பலாம்.’ என்றார்.

அதுபோலவே அங்கு சென்றபோது காலை சிற்றுண்டியை முடித்த 
நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர். நண்பர் திரு ஆர்.பாலசுப்ரமணியன் 
அவர்கள் அவரது துணைவியார், மகள், மருமகன் மற்றும் 
பேரப்பிள்ளைகளோடு வந்திருந்தார். 2011 ஆம் ஆண்டிலேயே 
பெரும்பான்மையான வகுப்புத் தோழர்களை அண்ணாமலை நகரில் 
சந்தித்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டுகொள்ள அப்போது 
போல் சிரமப்படவில்லை. எல்லோரிடமும் சென்று நான் 
பேசிக்கொண்டிருந்தேன்.

அண்ணாமலை பல்கலை கழகத்தில் நாங்கள் படித்து வெளியே 
வந்த பிறகு  அங்கு வேளாண் அறிவியல் படித்து பின்பு வேளாண்மைத்  
துறையில் துணை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் 
சேலத்தில் வசித்துவரும் நண்பர் திரு ஜனகன் அவர்களும் எங்களைக் 
காண வந்திருந்தார்.

எல்லோரும் வந்துவிடவே, பேருந்து வரும் வரை காத்திருக்கும் நேரத்தில் அனைவரையும் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்கலாம் என 
நண்பர்கள் சொன்னதால்,அனைவரும் குடும்பத்தோடும் நண்பர் 
ஜனகனோடும் அந்த கட்டிடத்தின் முன்னே நின்று புகைப்படம் 
எடுத்துக்கொண்டோம்.

அப்போது காலை மணி 8.15 தான் என்பதால், அந்த கட்டிடம் 
திறக்கப்படாததால் கட்டிடத்தின் படிகளில் நின்று படம் 
எடுத்துக்கொண்டோம். ஏதோ நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள 
வசதியாக எங்களுக்காவே அந்த கட்டிடத்தின் படிகள் கட்டப்பட்டிருந்தது 
போல் இருந்தது.  

முதலில் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் தான் 
எங்களையெல்லாம் தனது IPad இல் படம் எடுத்தார். பின்பு அவரையும் 
நிற்க சொல்லி எடுத்த புகைப்படம் கீழே 




ஏற்காடு மலையில் பெரிய பேருந்துகள் செல்லாது என்பதால் சிறிய 
பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். அதுவும் மூன்று 
பேருந்துகள். காரணம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 
50 ஐ தாண்டிவிட்டதுதான்.

8.30 மணிக்கு இரண்டு பேருந்துகள் வந்துவிட்டன. மூன்றாவது பின்னால் 
வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள் முதலில் வந்த பேருந்துகளின் 
ஓட்டுனர்கள்.

நண்பர்கள் முத்துகிருஷ்ணன், நாச்சியப்பன் மற்றும் மீனாட்சி சுந்தரம் 
ஆகியோர் என்னை அவர்களோடு பயணிக்க அழைத்தபோது நான் 
ஏறுவதற்குள் இரண்டு பெருந்துகளிலும் முக்கால்வாசி பேர்கள் ஏறி 
அமர்ந்துவிட்டதால் இடம் இல்லை. .

எனவே நானும் என் துணைவியும் நண்பர் பாலு அவர் தம் குடும்பத்தாரும்
நண்பர் அய்யம்பெருமாள் மற்றும் அவரது துணைவியாரும்,மற்றவர்களும் 
மூன்றாவது பேருந்துக்காக காத்திருந்தோம்.எங்கள் பேருந்துவராததால் 
மற்ற இரண்டு பேருந்துகளும் எங்கள் பேருந்துக்காக காத்திருந்தன.

மணி 8.45 ஐ தாண்டியும் பேருந்து வருவதற்கான அறிகுறியே 
தெரியவில்லை.’எப்போது வரும்?’ என மற்ற ஓட்டுனர்களிடம் கேட்டதற்கு, 
அவர்கள் யாரையோ கைபேசியில் அழைத்து பேசிவிட்டு பேருந்து 5 ரோடு 
சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிற்பதாகவும் சில 
விநாடிகளில் வந்துவிடும் என்றார்கள்.

அவர்கள் சொல்லி 20 மணித்துளிகள் ஆகியும் வரவில்லை. எனக்கு 
சந்தேகம் அந்த பேருந்து இன்னும் அவர்கள் சொல்லும் இடத்திற்கு 
வரவில்லை என்று. ஏனெனில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து 5 ரோடு 
சந்திப்பு மிக அருகில் தான். நடந்தால் 5 மணித்துளிகளில் 
அடைந்துவிடலாம். 

நான் அந்த ஒட்டுனர்களிடம் சென்று, ‘நானும் இந்த ஊரில் ஐந்து 
ஆண்டுகள் இருந்தவன் தான். 5 ரோடிலிருந்து பேருந்து இங்கு வர 
இவ்வளவு நேரம் ஆகாது. உண்மையை சொல்லுங்கள் வண்டி 
கிளம்பிவிட்டதா இல்லையா என்று?’  என்றேன். அவர்கள் ‘இல்லை 
சார். கிளம்பிவிட்டது. ‘இதோ வந்துவிடும்’ என்றார்களே தவிர
நேரடியான பதிலை சொல்லவில்லை.

எங்களின் நச்சரிப்பு தாளாமல் சிறிது தூரம் தள்ளி நின்று 
கொண்டார்கள் இருவரும். ஒரு வழியாக காலை 9.30 மணிக்குத்தான்   
அந்த பேருந்து ஆடி அசைந்து வந்தது. பாக்கி இருந்த அனைவரும் 
அதில் ஏறிக்கொண்டதும், மூன்று பேருந்துகளும் 30 கிலோ மீட்டர் 
தொலைவில் இருந்த ஏற்காடு மலையை நோக்கி புறப்பட்டன.



தொடரும்