வியாழன், 17 செப்டம்பர், 2009

தர்மம் தலை காக்குமா? 1

"தர்மம் தலை காக்கும்!' 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.' போன்ற பழமொழிகளை கேட்கும்போது, இவை வெறும் அலங்கார சொற்கள்தானா அல்லது அனுபவத்தின் வெளிப்பாடா என்ற ஐயம் எனக்கு இருந்ததுண்டு.

ஆனால் எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டபோது அந்தபழமொழிகள் நூற்றுக்கு நூறு உண்மை எனத்தெரிந்துகொண்டேன்.

நான் முன்பே எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து பல பேர்களின் உயிரைக்காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக எந்த பணமும் வாங்கியதில்லை. அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் அப்பாவை பார்த்து, "அய்யா நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் நல்லா இருக்கணும்' என வாழ்த்தி செல்லும்போது நான் சிறுவனாக இருந்து வேடிக்கை பார்த்ததுண்டு. அந்த சொற்கள் வெறும் உபசார வார்த்தைகள் என்றும், அவைகளுக்கு எந்த பொருளும் இல்லை என நினைத்ததும் உண்டு. ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னால் அந்த வாழ்த்துகள் தான்என்னைக்காப்பாற்றபோகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை.

1993 டிசம்பர் இறுதியில் எனக்கு பதவி உயர்வு காரணமாக கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊருக்கு மாற்றல் வந்த போது பிள்ளைகளை படிப்பின் காரணமாக நான் மட்டும் சென்று பணியில் அமர்ந்தேன். மிகவும் கஷ்டப்பட்டு (அதைப்பற்றி பின் எழுதுகிறேன்) ஓராண்டிற்குப்பின் வாடகைக்கு, நகரின் மையப்பகுதியில் உள்ள திருநக்கர கோவிலின் தெற்கு வாசலில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினேன். அந்த வீடு சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம். கேரள கட்டிட அமைப்பில் நான்கு பெரிய அறைகளும் பெரிய சமையல் அறையும் குளியல் அறையும் கொண்ட வீடு அது. வீட்டை சுற்றி பெரிய தோட்டமும் அதில் தென்னை மரங்களும், மாமரங்களும், வீட்டை யாரும் சரிவர பராமரிக்காததால் முழங்கால் உயரத்திற்கு செடிகொடிகளும் புதர்போல் இருந்தன நான் ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்ததால், அந்த வீட்டை முழுமையாக உபயோக்கிக்காமல் முன் அறையில் மட்டும் தங்கி அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன்.

காலையில் 7 மணிக்கு வீட்டைவிட்டு சென்றால் இரவு வீட்டிற்கு 8 மணிக்கு தான் திரும்புவேன். பகலில் யாரும் இல்லாததால் வீடு அரவம் இல்லாமலிருந்தது. இரவு திரும்பும்போது நான் வெகு ஜாக்கிரையாகத்தான் செடிகொடிகளை தாண்டி வீட்டைத்திறந்து நுழைவேன். ஒரு நாள் இரவு சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். திடீரென இருமல் வந்ததால் துப்புவதற்காக விளக்கை போட்டுவிட்டு எழுந்தபோது 'பொத்' என சப்தம் கேட்டது.

பொறுத்திருங்கள் !

4 கருத்துகள்:

  1. தர்மம் தலைகாக்கும் ..அதில் சிறுதும் ஐயம் இல்லை .. சம்பவங்களை விவரிக்கும் முறை அற்புதம் வங்கி வென்றதால் ஒரு நல்ல கதாசிரியரை இழந்து விட்டோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது . இது ஒரு புது முறை ஆக உள்ளது .. வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. வாசுதேவன் அவர்களே!தர்மம்தான் தலையைக்காத்தது என்பதை அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். பாராட்டுக்கு நன்றி!.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.
    “““““இரவு வீட்டிற்கு 8 மணிக்கு தான் திரும்புவேன். பகலில் யாரும் இல்லாததால் வீடு அரவம் இல்லாமலிருந்தது. ““““““

    அரவம் இல்லாமல் இருப்பதுதானே நல்லது?

    ஒருவேளை அரவம் வந்ததோ:)

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! சரியாக கணித்துவிட்டீர்கள்!

      நீக்கு