செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தர்மம் தலை காக்குமா? 2

சப்தம் கேட்டதும் திரும்பிப்பார்த்தபோது, மேலே உத்திரத்தில் இருந்து ஒரு கட்டுவிரியன் ('வளகழப்பான்' என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது) எனது கட்டிலில் விழுந்து கீழே இறங்கி ஓடியது.

எனக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சுதாகரிப்பதற்குள் அது ஓடி மறைந்துவிட்டது. அன்று இரவு முழுவதும் விளக்கை அணைக்காமல் கட்டிலில் உட்கார்ந்தே இருந்தேன்

இருமல் வராமல் இருந்திருந்தால், என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே அன்று இரவு தூங்கவில்லை. பிறகு அதை மறந்தே போனேன்

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து கதவை திறந்தபோது அதே விரியன் பாம்பு , நடு ஹாலில் ஓடிக்கொண்டிருந்தது. அதை அடிப்பதற்காக கழியைத்தேடியபோது திரும்பவும் அது மறைந்துவிட்டது. அன்று இரவும் தூக்கமில்லை.

மறு நாள் வங்கி நண்பர்களிடம் சொன்னபோது, சார், எப்படி தைரியமாக அங்கு தங்கி இருக்கிறீர்கள். வேறு வீடு மாறிவிடுங்கள்' என்றார்கள். வேறு வீடு கிடப்பது கடினம் என்பது எனக்குத்தானே தெரியும்.நானும் விளையாட்டாக சொன்னேன். 'உங்களோடே இருக்கிறேனே, பாம்போடு இருப்பதா கஷ்டம்" என்று.

அவ்வாறு சொல்லிவிட்டேனே தவிர தினம் எனக்கு சிவராத்திரிதான். எங்கு பாம்பு வந்து கடித்துவிடுமோ என்ற பயம் தான். ஒரு மாதம் கழிந்து காலையில் எழுந்து பல் விளக்க குளியல் அறைக்கு சென்றேன். வலது கையில் பிரஷை எடுத்துக்கொண்டு இடது கையால் குளியல் அறையின் கதவில் இருந்த கொக்கியை தள்ளினேன். கையில் 'ரப்பர் பேண்ட்' (Rubber Band) போன்று ஒன்று நழுவி விழுவதை உணர்ந்ததால் விளக்கை போட்டேன்.
பார்த்தால் என்கையில் இருந்து நழுவியது வேறொன்றுமில்லை 'அந்த' கட்டுவிரியன் தான்.

கதாசிரியர்கள் பயத்தைப்பற்றி வர்ணிக்கும்போது 'வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன' என்றும் தொண்டையில் பந்து அடைத்ததுபோல் இருந்தது என்றும் எழுதுவார்கள். எனக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை எழுத்தில் எழுத இயலாது.

ஏதோ ஒரு சக்தி என்னை உந்த, உடனே அருகில் இருந்த ஒரு உடைந்த நாற்காலியின் கைப்பிடியை எடுத்து இடது கையாலேயே அந்த விரியனின் நடு முதுகில் எனது பலத்தையெல்லாம் கொடுத்து அழுத்தினேன். வலி தாங்காத அந்த விரியன் தனது உடலை அந்த குச்சியில் சுற்றி தப்பிக்க பார்த்தது. நான் எனது அழுத்தத்தை விடாததால் அதனுடைய முயற்சி பலிக்கவில்லை. அதற்கு உயிர் இல்லை என தெரிந்து கொண்டபிறகு அதே குச்சியால் எடுத்து வெளியே போட்டேன். பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.

விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைவிட கடுமையானது என்பதும், விரியன் கடித்தால் உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் நிச்சயம் என்பதும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் இன்று கூட கிராமங்களில் கோபத்தில் திட்டும்போது 'உன்னை விரியன் புடுங்க' என்கிறார்கள்.

அந்த நேரத்தில் எனது அப்பா பல பேரை பாம்பு கடியிலிருந்து காப்பாற்றியதும் அவர்கள் வாழ்த்தியதும் எனது நினைவுக்கு வந்தது. மூன்று முறை அந்த விரியனால் கடிபட இருந்தும், உயிர் தப்பியதன் காரணம் அப்பாவின் பலனை எதிர்பாராத சேவைதான் என்பதில் இன்று வரை எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருவேளை சிலர் இதை நம்ப மறுக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை தர்மம் தலை காத்தது என்பது என் விஷயத்தில் சரியே.

எனவே பழமொழிகள் என்பவை வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல. அவை வாழ்ந்து அனுபவித்தவர்களின் வெளிப்பாடுகள் என்பதே நிஜம்!

பின்குறிப்பு:- நான் பாம்பைக்கொன்றது பற்றி எனது கோட்டயம் வங்கி நண்பர்களிடம் சொன்னபோது, மகிழ்ந்தது மட்டுமல்லாமல், பெருங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும் அரைத்து வீட்டின் சன்னல் மற்றும் கதவருகே வைக்க சொன்னார்கள். அப்படி வைத்தால் பாம்புகள் வராதாம். நானும் அவ்வாறே செய்ததில் பின்பு எந்த பாம்பும் வரவில்லை.

7 கருத்துகள்:

  1. Real thriller.Absolutely no doubt that the good deeds of your father acted like a shield and saved u from many an encounter with the poisonous reptile. Any one who reads this might be tempted to become philanthropic at least momentarily. Vasudevan

    பதிலளிநீக்கு
  2. Real thriller.Absolutely no doubt that the good deeds of your father acted like a shield and saved u from many an encounter with the poisonous reptile. Any one who reads this might be tempted to become philanthropic at least momentarily. Vasudevan

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!.நாம் நன்றாக இருப்பதற்கு காரணம் நமது பெற்றோர்கள் செய்த நல்ல பணிகளே என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. //அந்த நேரத்தில் எனது அப்பா பல பேரை பாம்பு கடியிலிருந்து காப்பாற்றியதும் அவர்கள் வாழ்த்தியதும் எனது நினைவுக்கு வந்தது..... ஆனால் என்னைப் பொறுத்தவரை தர்மம் தலை காத்தது என்பது என் விஷயத்தில் சரியே.//

    பெற்றோர்களின் நல்வினைப்பயன் ஓரளவு பிள்ளைகளுக்கும் சேரும் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நம்பி அவர்களே!.என்னுடைய கருத்தோடு தங்களுடையதும் ஒத்து இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. என் கணிப்பு சரியே!

    இதைவிடக் கொடுமையான அனுபவத்தை வள்ளுவன் சொல்வான்,

    “உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போடு உடனுறைந் தற்று”

    என.

    கற்பனை செய்து பார்த்தேன்.:)

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்த குறள் ஒரு விதத்தில் பொருந்தி வருகிறது. விருப்பம் இல்லாமல் தான் கோட்டயம் சென்று ‘விதி’யே என்று தங்கியிருந்தேன்.அது கூட உடன்பாடு இல்லாமல் வாழ்ந்தது போலத்தான்!

    பதிலளிநீக்கு