செவ்வாய், 29 செப்டம்பர், 2009

நினைவோட்டம் 13

எனது கடந்த கால நிகழ்வுகளைப்பற்றி மனதில் அசை போடும்போது , எங்கள் அப்பாவைப்பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது.எனவே அவ்வப்போது என் அப்பாவைப்பற்றியும் எழுதுவேன்.

புற்றீசல் போல் இப்போது உள்ள தனியார் பள்ளிகள் அப்போது இல்லை.தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. மேலும் பள்ளிகளில் பாடங்கள் முழுக்க முழுக்க தமிழில்தான் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமே(ஜில்லா போர்டு ) நடத்தி வந்தன. அந்த பள்ளிகள் எல்லாம் கழக உயர்நிலைப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன.

அப்படி அரியலூரில் இருந்த கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்து சென்றபோது ஜூலை மாதம் ஆகிவிட்டது. பள்ளியில் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தன. நான் ஒரு சிற்றூரில் உள்ள பள்ளியில் படித்திருந்ததால் நுழைவுத்தேர்வு வைத்தே என்னை தேர்வு செய்தார்கள்.

ஒருவித தயக்கத்தோடும் பயத்தோடும் 'பர்ஸ்ட் பாரம்' எனப்படும் ஆறாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். அதுவரை தரையில் மணலில் உட்கார்ந்து படித்த எனக்கு, 'டெஸ்க்' எனப்படும் மரத்தால் ஆன இருக்கையில் அமர்ந்து படிப்பதும், கட்டைப்பேனா வைத்து மசிக்கூட்டிலிருந்து மசியை(Ink) தொட்டு எழுதியது போக ஊற்றுப்பேனா(Fountain Pen) மூலம் எழுதுவதும், புதுமையாக இருந்தன.

நான் பாடங்கள் ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து சேர்ந்ததால் வகுப்பு ஆசிரியர் 'உனக்கு எப்படிடா தனியாக திரும்பவும் ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பது?' என சலித்துக்கொண்டார். ஏனெனில் அந்த நாட்களில்,ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எனக்கு அப்பா முன்பே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்திருந்ததால் எனக்கு அந்த பாடங்கள் அவ்வளவு கடினமாகத்தெரியவில்லை.

ஆனால் முதல் நாளே எனக்கு வந்தது "சோதனை". மாலையில் பள்ளி விட மணி அடித்ததும் வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக கிளம்பியபோது பேனாவை எங்கோ விட்டுவிட்டேன். வீட்டிற்கு வந்து பார்த்ததில் பேனாவை தொலைத்துவிட்டேன் என்றதும், அழுதபடி எனது மாமா மகனிடம் சொன்னேன். அவரும் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அவர், மறுநாள் காலையில் பேனா தொலைந்தது பற்றி எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால் அவர் அந்த கடிதத்தை எல்லா வகுப்புகளிலும் காட்ட அனுமதி கொடுப்பார் என்றும் கவலை வேண்டாம் எனக்கூறி அவரே கடிதம் எழுதிக்கொடுத்தார்.

மறுநாள் அதை தலைமை ஆசிரியரிடம் எடுத்து சென்று கையொப்பம் வாங்கி, ஒவ்வொரு வகுப்பாக எடுத்து சென்று காண்பித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் இருந்த, ஆசிரியர்கள் அதை மாணவர்களிடையே படித்து காண்பித்து, பேனா கிடைத்தால் என்னிடம் தருமாறு கூறினார்கள். ஆனால் S.S.L.C எனப்பட்ட பள்ளி இறுதி வகுப்பு ஆசிரியர் ஒருவர் மட்டும் எனது கடிதத்தை சத்தம் போட்டு வாசித்துவிட்டு சொன்னார். 'வைத்தவன் மறந்து போனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்.' என்று.

அதுதான் நான் கற்ற முதல் பாடம். பேனா கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

 1. I have always admired your elephantine memory power.. the ease with which anecdotes appropriate to the occasion used to flow from you used to fascinate me ..Probably the FIRST LESSON assimilated at school was in a way instrumental

  Vasudevan.

  பதிலளிநீக்கு
 2. நன்றாய் சொன்னீர்கள் திரு வாசு அவர்களே!. பள்ளியில் ஆரம்பத்தில் கற்ற பாடம்தான் பிற்காலத்தில் பணியில் இருக்கும்போது உதவியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வே.நடனசபாபதி

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.

  “வைத்தவன் மறந்து போனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்.” என்பதற்கு வேறு பொருளும் இருக்கிறது. :)

  இப்பொழுது, ஆரம்பப்பாட சாலையில் இருந்து உயர்நிலைக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்.


  அக்கால நிகழ்வுகளைக் கற்பனை செய்ய முடிகிறது.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ‘வைத்தவன் மறந்து போனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்’ என்பதற்கான வேறு பொருள் என்னவென்று சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு