புதன், 7 அக்டோபர், 2009

நினைவோட்டம் 14

அப்போதெல்லாம் பொதுத்தமிழ் என்று ஒரு பாடம் எல்லோரும் படித்தாகவேண்டும். சிறப்புத்தமிழ் என்ற பாடம் விருப்ப பாடமாக இருந்தது. சிறப்புத்தமிழுக்கு பதில் வடமொழி(சமஸ்கிருதம்) படிக்கலாம்.

அப்பா எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடுத்திருந்ததால், வட மொழி படிப்பது சுலபமாக இருக்கும் என்று, அதை சிறப்புப்பாடமாக எடுக்க சொன்னார்கள். அப்பா சொன்னதால் நான் வடமொழியை எனது சிறப்பு பாடமாக எடுத்தேன். மேலும் எனது இரண்டாவது அண்ணன் அதே அரியலூர் பள்ளியில் வடமொழியை இரண்டாம் பாடமாக எடுத்து படித்து, பின் இண்டர்மீடியட்டிலிலும் அதையே எடுத்து படித்திருந்ததால் எனக்கு அந்த பாடத்தை எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லாதிருந்தது.

ஆனால் முதன்முதல் வடமொழி வகுப்புக்கு சென்றபோது எனக்கு அந்த ஆசிரியரிடமிருந்து வரவேற்பு சரியாக இல்லை. காரணம் எனக்கு திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாலும், நான் வடமொழி தெரியாத குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், என்னால் அந்த மொழியை படிக்கமுடியுமா என நினைத்ததாலும், 'என்னப்பா, உனக்கு சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தால் வருமா?' என சந்தேகத்தோடே அவர் கேட்டபோது, நான் 'சார் எனக்கு ஹிந்தி எழுத்துகள் தெரியுமாதலால், நிச்சயம் நன்றாக படிப்பேன் சார்' என்றேன். அவர் என்னை எழுதச்சொல்லி பார்த்துவிட்டு, திருப்தி அடைந்தவராய் பாடங்களை தொடர்ந்தார்.

ஆனால் எனது வடமொழி படிப்பு தொடர்ந்து நீடிக்கவில்லை. காரணம், அரியலூருக்கு வந்த எனது பெரியம்மா மகன், என்னிடம் 'ஏன் சமஸ்கிருதம் எடுத்தாய். வேறு பள்ளிக்கு மாற்றி சென்றால், அங்கு அந்த பாடம் இல்லாவிட்டால் உன்னால் அப்போது சிறப்புத்தமிழ் எடுத்து படிக்க முடியாது, காரணம், மேல் வகுப்புக்கு போகப்போக சிறப்புத்தமிழ் கடினமாயிருக்கும். எனவே இப்போதே சிறப்புத்தமிழுக்கு மாறிவிடு.' என அறிவுரை சொன்னார்.

அவர் சொற்படி நான் சிறப்புத்தமிழ் வகுப்புக்கு செல்வதாக கூறியதும், எந்த ஆசிரியர் 'எனக்கு வடமொழி சொல்லிக்கொடுக்க தயங்கினாரோ அவரே 'ஏன் அங்கு போகிறாய்?, நீ நன்றாகத்தானே படிக்கிறாய். வேண்டாம் இங்கேயே இரு' என்றார்.

ஆனால் நான் என் அண்ணன் சொன்னபடி, பள்ளி அலுவலகத்தில் சென்று அனுமதி பெற்று சிறப்புத்தமிழ் வகுப்புக்கு சென்றேன். என்னைப்பார்த்ததும் தமிழ் ஆசிரியர், 'வாப்பா, தமிழ் துரோகி! இப்போதுதான் தமிழ் படிக்க ஆசை வந்ததா?' எனக்கூறி வரவேற்றார். நான் அவரிடம் பொதுத்தமிழ் படிப்பது ஏனோ அவருக்கு அப்போது தெரியவில்லை. என்ன இப்படி சொல்கிறாரே, பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாமோ என நினைத்தாலும், ஒன்றும் சொல்லாமல் வகுப்பில் அமர்ந்தேன்.

ஆனாலும் வேறொரு மொழி கற்க முடியாமல் போனாலும், சிறப்புத்தமிழ் படித்ததால்தான் தாய்மொழி மேல் ஒரு பற்று வந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. அய்யா அவர்களே! தங்கள் பதிவு நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே வருகிறது. தாங்கள் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எங்கள் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களே! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பழைய நிகழ்வுகளை அசை போடுவதே ஒரு சுகம்தான். அப்படி நான் நினைத்துப்பார்ப்பதற்கு உதவிய தங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

    வே.நடனசபாபதி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    தமிழ்த்துரோகி என்ற பட்டம் பெற்ற ஒருவரை அறிவேன்.
    அவர் வையாபுரிப்பிள்ளை.
    தமிழில் அவரளவிற்கு வாசிப்பும் ஆய்வும் கொண்டவர்கள் எனக்குத் தெரிந்தவரை வேறெவரும் இல்லை.

    அப்பட்டம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டதற்காய்ப் பெருமை கொள்ளலாம். :)

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ‘தமிழ்த்துரோகி’ என்ற பட்டம் கிடைத்ததற்கு பெருமைப்படலாம் என்று சொல்லி திரு வையாபுரிப்பிள்ளை அவர்களை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

      நீக்கு