1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்.அப்போதைய தஞ்சை
மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள
தலைஞாயிறு என்ற ஊரில் மாநில அரசின்
ஊரக வளர்ச்சித்துறையில் வேளாண் விரிவாக்க
அலுவலராக பணிபுரிந்துகொண்டிருந்தேன்.
(அந்த பணி பற்றி விரிவாக ‘நினைத்துப்பார்க்கிறேன்’
தொடரில் எழுத இருக்கிறேன்.)
புது தில்லியை தலைமையகமாகக் கொண்டு
இயங்கிக்கொண்டிருந்த தேசிய விதைக்கழகத்திலிருந்து
நான் முன்பே விண்ணப்பித்திருந்த, விதைப்பெருக்க
உதவியாளர் (Seed Production Assistant) வேலைக்கு
நடக்க இருந்த, நேர்முகத்தேர்வுக்கு ஹைதராபாத்
வருமாறு அழைப்பு வந்தது.
தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட்டு அப்படியே
சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்ல விரும்பி
அப்போது சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில்
பட்ட மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த எனது அண்ணன்
டாக்டர்.ஞானப்பிரகாசம் அவர்களிடம் ஹைதராபாத்
செல்ல பயணச்சீட்டு வாங்க சொல்லியிருந்தேன்.
அவரும் வாங்கி வைத்திருந்தார்.
குறிப்பிட்ட நாளில் சென்னை சென்று
ஹைதராபாத் செல்ல மதியம் இரயில் ஏறினேன்.
எனது அண்ணன் சென்னை சென்ட்ரல் இரயில்
நிலையம் வந்து வழி அனுப்பினார். என்னதான்
படித்திருந்தாலும், ஆங்கிலம் பேசி சமாளிக்கலாம்
என்றாலும், எனக்கு வெளி மாநிலம் முதன் முறையாக
செல்வதால் ஒரு தயக்கம்/பயம் இருந்தது.
காரணம் இந்தி அல்லது தெலுங்கு தெரியாததுதான்.
நல்ல வேளையாக நான் பயணம் செய்த
அடுத்த பெட்டியில் எனக்கு, அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்த,
திரு ஜெகந்நாதன் அவர்களும், அதே
நேர்முகத்தேர்வுக்கு வருவதாக எனது
அண்ணன் சொன்னதும், புதிய ஊரில்,
தெரியாத மொழியை எப்படி பேசி சமாளிக்க
போகிறோமோ என்ற எனக்கு இருந்த பயம் பறந்தோடிவிட்டது.
காரணம் துணைக்கு நமது ஆசிரியர்தான் இருக்கிறாரே
என்பதுதான். ஆனால் எனக்குத்தெரியாது அவருக்கும்
இந்தி அல்லது தெலுங்கு தெரியாதென்பது!
அவரிடம் ‘சார் ஹைதராபாத்தில் ஒரே இடத்தில்
தங்கலாம். எனவே இரயிலைவிட்டு இறங்கியதும்
தயவு செய்து காத்திருங்கள்’ என கூறிவிட்டு
எனது பெட்டியில் ஏறிக்கொண்டேன். முதல் நாள்
மாலை நேர்முகத்தேர்வுக்காக கையில் கொண்டு
சென்ற புத்தகங்களை படித்துக்கொண்டும்
சன்னல் வழியே ஆந்திர மாநில ஊர்களையும்,
இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டும்
நேரத்தை ஒட்டிவிட்டேன்.
இரவு ‘பிட்டரகுண்டா’ என்ற ஊரில் இரவு
உணவு கிடைத்தது. சாதத்தோடு கோவைக்காய்
(Little Gourd) சாம்பார் கொடுத்தார்கள்.
அது எனக்கு புதிதாய் இருந்தது. கல்லூரியில்,
கோவைக்காய்கள் வணிக முறையில் சமையலுக்காக
பயிரிடுவதைப்பற்றி படித்திருந்தாலும், அங்குதான்
முதன்முறையாக கோவைக்காய் சாம்பார் பார்த்தேன்.
அதை தயக்கத்தோடு சாப்பிட்டேன்.
மிக நன்றாக இருந்தது.
காலை சுமார் 11 மணி அளவில் ‘ஹைதராபாத் டெக்கான்’
(தற்போது ஹைதராபாத் ஜங்ஷன்) இரயில்
சென்றடைந்ததும் கீழே இறங்கி எனது ஆசிரியரைத்தேடியபோது,
அவரும் எனக்காக காத்திருந்தார். அப்போது
அவர் ‘நடனசபாபதி, எனக்கு ஊரும் புதுசு,
மொழியும் புதுசு. எனவே நீங்கள் எங்கு செல்கிறீர்களோ
அங்கேயே நானும் வருகிறேன்’ என்றதும்,
எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
ஒரு வழியாய் சமாளித்துக்கொண்டு அவருடன்
வெளியே வந்தேன்.
எங்களது முகத்தைப்பார்த்தே ஊருக்கு புதியவர்கள்
எனத்தெரிந்துக்கொண்ட ஒரு சைக்கிள் ரிக்சா ஓட்டுனர்
(அப்போது இருந்த ஹைதராபாத் வேறு.டாக்ஸிகளும்
ஆட்டோக்களும் இல்லாத நாட்கள்.)இந்தியில்
‘தங்க அறை வேண்டுமா?நல்ல தங்கும் விடுதிக்கு
அழைத்து செல்கிறேன்’ என்றார்.
எட்டாம் வகுப்பில் படித்த ‘பிராத்மிக்’ எனக்கு
அப்போது 'கை' கொடுத்தது.பேச்சின்போது
‘ரூம் சாஹியே’ என்பதை புரிந்து கொண்டு
தலையை ஆட்டினேன். அப்போது எனது
ஆசிரியர் திரு ஜெகந்நாதன் அவர்கள்
‘பரவாயில்லையே, இந்தி பேசினால்
புரிந்துகொள்கிறீர்களே’ என்று எனது
இந்தி புலமைக்கு நற்சான்றிதழ்
வழங்கினார்!
நான் 'சரி' என சொன்னதும், எங்களை
அருகே உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து
சென்றார்.உண்மையில் அது ஒரு நல்ல
விடுதிதான். இந்தியில் பேரம் பேசும் திறமை
இல்லாததால் அந்த ஓட்டுனர் கேட்ட கட்டணத்தை
கொடுத்துவிட்டு விடுதியில் அறை எடுத்தோம்.
தொடரும்
கோவைக்காயை நான் சமையலில் பார்த்தது முதலில் உடுப்பியில்தான். தினம் ஓட்டலில் கோவைக்காய்ப் பொரியல் போட்டுக் கோவைக்காயே பிடிக்காமல் செய்து விட்டார்கள்! ஆனால் நீங்கள் சாப்பிட்ட கோவைக்காய் சாம்பார் சுவையாக இருந்திருக்கிறதே!
பதிலளிநீக்குபதிவும் சுவையாகத்தான் இருக்கிறது!தொடருங்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குநம் ஊர்களில் அப்போதெல்லாம் கோவைக்கொடிகள் கள்ளிசெடியில் தானே வளர்ந்து காய்த்திருக்கும். அந்த கோவைக்காய்களை பறித்து சிலேட்டு மற்றும் கரும்பலகையை சுத்தம் செய்யமட்டுமே, நாம் உபயோகப்படுத்தியதால்,அதை சாப்பிடும் காய்கறியாக நம்மால் பார்க்கமுடியவில்லை.ஆனால் மற்ற மாநிலங்களில் அவைகள் வயல்களில் பயிரிடப்பட்டு, காய்கறியாக உபயோகப்படுத்தப்பட்டன. இப்போது நம் ஊரிலும் அவைகள் வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றன. நாமும் அவைகளை காய்கறியாக உபயோகப்படுத்ததொடங்கிவிட்டோம்.