திங்கள், 20 ஜூலை, 2015

இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா?



‘கிடப்பதெல்லாம் கிடக்க கிழவனை தூக்கி மணையில் வை’ என சொல்வதுபோல் நாட்டில் தீர்க்கவேண்டிய சிக்கல்கள் எத்தனையோ இருக்க, இப்போது இந்த கேள்வி முக்கியமா என நினைப்போருக்கு தினத் தந்தி நாளிதழில் வந்த ஒரு செய்தி தான் என்னை இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.



இந்த மாதம் சென்ற சனிக்கிழமை அன்று (18-07-2015) வெளியான தினத் தந்தி நாளிதழில், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

அதில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பக்கம் 329 (ஆங்கில வழிக் கல்வி பக்கம் 306) இல் இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற 3 பதில்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டு அதற்கு . ‘இந்தி’ என்ற பதிலைத் தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளதாகவும், இது மிகத் தவறான வழிகாட்டுதல் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் தேசிய மொழி என்று எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை. இந்தியும், ஆங்கிலமும் இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே.என்றும் இந்தியாவில் இந்தி மட்டுமே பேசப்படுகிறது என்ற மாயை, உலகம் முழுவதும் இந்திய அரசால் பரப்பப்பட்டு வருகிற இந்த நிலையில் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தமிழக மாணவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில், மேற்கண்ட கேள்வி இடம் பெற்று இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்தக் கேள்வியை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த தகவல்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்துவதாக அவர் கூறியிருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

உண்மை நிலை என்ன?

நமக்கு தேசிய கொடி உண்டு, தேசிய கீதம் உண்டு, தேசிய விலங்கு உண்டு தேசிய மலர் உண்டு ஆனால் தேசிய மொழி உண்டா என்றால் இல்லை என்பதே உண்மை.

இந்தி ஒரு அலுவல் மொழி மட்டுமே என்பதை ஜனவரி 2010 இல் திரு Suresh Kachhadia என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

திரு Kachhadia தொடர்ந்த பொது நல வழக்கில், நாட்டில் பொருட்களை தயாரிப்போர் தாங்கள் தயாரிக்கின்ற பொருட்களின் விலை அதில் உள்ளடங்கிய பொருட்கள் (Ingredient) மற்றும் தயாரித்த நாள் ஆகியவற்றை இந்தியில் அச்சடிப்பது கட்டாயமாக்க,  மைய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆணையிடவேண்டும் எனக் கேட்டிருந்தார்.

அப்போது அந்த பொது நல வழக்கை விசாரித்த குஜராத் நீதி மன்ற தலைமை நீதியரசர் S.J. முகோபாத்யாயா மற்றும் நீதியரசர் A.S. தவே அடங்கிய அமர்வு, பெரும்பான்மை மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டாலும் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவோ அல்லது ஆணையோ ஆவணங்களில் இல்லை என தனது குறித்துரையில்(Observation) குறிப்பிட்டது.

மேலும் தயாரிப்பாளர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தயாரிப்பு பற்றிய விவரங்களை இந்தியை தேவநாகரி வரிவடிவில் தெரிவிக்க நீதிப் பேராணை (Mandamus) பிறப்பிக்கவும் இயலாது என தீர்ப்பளித்தது.

திரு Kachhadia வின் வழக்கறிஞர் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் அது பெரும்பான்மையோரால் புரிந்துகொள்ளப்படுகிறது என்றும் வாதாடியபோது நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு அளித்தது.

”The Constituent Assembly while discussing the Language Formula noticed the recommendation of the Sub-Committee on Fundamental Rights, which recommended the formula as per which, “Hindustani, written either in Devanagari or the Persian script at the option of the citizen, shall, as the national language, be the first official language of the Union. English shall be the second official language for such period as the Union may, by law, determine.”

The court in its order said Part XVII of the Constitution deals with Official Language. Under Article 343, official language of the Union has been prescribed, which includes Hindi in Devanagari script and English.

எனவே இந்தி நம் நாட்டின் தேசிய மொழி இல்லை என்பதை குஜராத் நீதிமன்றம் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவுக் கூறு (Article) எண் 343 இன் படி இந்தியாவின் அலுவலக மொழியாக தேவநாகரி வரிவடிவில் எழுதப்படும் இந்தி (Khadi boli என அழைக்கப்படும் கிளை மொழி) யும் ஆங்கிலமும் இருக்கும் என சொல்கிறது.

இந்த சட்டம் மய்ய அரசுக்கு மட்டுமே. மாநில அரசுகள் தங்களின் அலுவலக மொழியாக அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழியை வைத்துக்கொள்ளலாம்.இன்றைய நிலையில் நாட்டில் ஆங்கிலம் நீங்கலாக 22 அலுவலக மொழிகள் உள்ளன.

தேசிய மொழிக்கும் அலுவலக மொழிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் தேசிய மொழி என்பது நாட்டுப்பற்று மிக்க தேசியம் சார்ந்த அடையளமாக (Patriotic and nationalistic identity) இருக்கும். ஆனால் அலுவலக மொழி என்பது அலுவலக நிலையில் தொடர்பு மொழியாக இருக்கும்.

நாடு விடுதலை அடைந்து 15 ஆண்டுகளில் இந்தியை பொது மொழியாக (lingua franca) ஆக்குவது என முடிவு செய்யப்பட்டாலும் தென்னக மாநிலங்களின் எதிர்ப்பால் குறிப்பாக தமிழகத்தில் ஜனவரி 1965 ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் காரணமாக அதை நிறைவேற்ற இயலவில்லை. அப்போதைய பிரதமர் இலால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் கூடுதல் அலுவலக மொழியாக இருக்கும் என உறுதி அளித்தார்.

(இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி பின்னர் விரிவாக பதிவிடுவேன்)

எனவே குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதி மன்றத்தாலோ அல்லது பாராளுமன்றத்தாலோ மாற்றப்படும் வரை 22 மொழிகளும் சமதகுதி நிலையில் இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை. அதனால் தான் ரூபாய் தாட்களில் கூட அனைத்து மொழிகளும் இடம் பெறுகின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க இந்தியாவின் தேசிய மொழி இந்தி என 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சொல்லி மாணவர்களை குழப்பவேண்டிய அவசியம் என்ன?

இந்த இமாலயத் தவறை தமிழக கல்வித்துறையினர் தெரியாமல் செய்திருந்தால் வெட்கப்படவேண்டும் நாம். ஏனெனில் தேசிய மொழிக்கும் அலுவலக மொழிக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் கல்வித்துறையில் இருக்கிறார்களே என்பதால். ஒரு வேளை தெரிந்தே செய்திருந்தால் தவறு செய்தவர்கள் கட்டாயம் க(த)ண்டிக்கப்படவேண்டும். மேலும் இந்த தவறை உடனே திருத்தி சரி செய்யவேண்டும்.

செய்வார்களா சம்பந்தப்பட்டவர்கள் ?

38 கருத்துகள்:

  1. கண்டிப்பாக கண்டித்து தண்டிக்கப்பட வேண்டும்... 329-வது பக்கத்தையும் மாற்ற வேண்டும்...

    உண்மை நிலை விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! ஆனால் அந்த திருத்தம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே!

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    உண்மைதான் இவற்றின் ஆணிவேர் யார் என்பதை அறிய வேண்டும் அறிந்துதண்டிக்கப்பட வேண்டும்.. அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா. த.ம 2
    நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ரூபன் அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்தை ஆதரித்தற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  4. பாடக் கேள்வியில் மூன்று பதில்களில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னால் ஆசிரிய கூறுவதைத்தான் மாணவர்கள்செய்வார்கள் நான்காவது பதிலாக எதுவுமில்லை என்றஒன்றும் சேர்க்கப்படவேண்டும் என்னதான் கரடியாய்க் கத்தினாலும் ஹிந்திதான் de facto அரசு மொழியாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M. பாலசுப்ரமணியம் அவர்களே! கேள்வியைத் தயாரித்தவருக்கு பதில் சரியாக தெரியாததால் தானோ அல்லது தெரிந்து தானோ என்னவோ நான்காவது பதிலை தரவில்லை. ஒன்றை மட்டும் சொல்வேன். என்னதான் மைய அரசு இந்தியை பொது மொழியாக்க நினைத்தாலும் அது நடக்கப்போவதில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

      நீக்கு
  5. நான் கூட ரொம்ப நாள் இந்தி தேசிய மொழி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்! பின்னர் தவறு உணர்ந்தேன்! இது போன்ற தவறான வழிகாட்டுதல்கள் களையப்பட வேண்டும்! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! உண்மை தெரியாதவர்களுக்கு உண்மையை தெரிவிக்க விரும்பியதான் விளைவே இந்த பதிவு,

      நீக்கு
  6. இந்தி இந்தியாவின் தேசியமொழி என்றால் தமிழ்நாடு தனி நாடுதான் அது இந்தியாவின் மாநிலம் அல்ல என்று நாம் உரக்க சொல்ல வேண்டும் அந்த மடையர்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே! இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதை இந்த கேள்வியை தயாரித்த தமிழர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். தெரிந்தோ அல்லது தெரியாமலோ நம்மவர்கள் செய்த இந்த பிழைக்கும் மைய அரசுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை என எண்ணுகிறேன்.

      நீக்கு
  7. சரியான நேரத்தில் உணர்த்தப்படாவிட்டால் நம்மை திசை மாற்றி அழைத்துக்கொண்டு சென்றுவிடுவர். பயனுள்ள பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  9. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு rmn அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. அதுசரி! அந்தத்தீர்ப்பில் **Hindustani, written either in Devanagari or the Persian script at the option of the citizen, shall, as the national language, be the first official language of the Union. English shall be the second official language for such period as the Union may, by law, determine.** "as the national language' என்று வருகிறதே அதன் பொருள் என்ன என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் எழுப்பிய ஐயத்திற்கு நன்றி திரு இமயவரம்பன் அவர்களே! நான் தந்துள்ள அந்த தீர்ப்பின் முழு சொற்களையும் படியுங்கள். நீதிமன்றம் என்ன சொன்னதென்றால், அரசமைப்புச் சட்டப் பேரவை (Constituent Assembly) கலந்துரையாடும்போது அடிப்படை உரிமைகளுக்கான சார் நிலைக்குழு (Sub-Committee) சிபாரிசு செய்ததை கவனத்தில் கொள்வதாக மட்டுமே கூறியுள்ளது. உங்களுக்காக அதை திரும்பவும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      ”The Constituent Assembly while discussing the Language Formula noticed the recommendation of the Sub-Committee on Fundamental Rights, which recommended the formula as per which, “Hindustani, written either in Devanagari or the Persian script at the option of the citizen, shall, as the national language, be the first official language.

      ஆனால் தீர்ப்பில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவோ அல்லது ஆணையோ ஆவணங்களில் இல்லை எனக் கூறிவிட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

      இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவுக் கூறு (Article) எண் 343 இல் இந்தியையும் ஆங்கிலத்தையும் அலுவலக மொழியாகயாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக இதோ அந்த சட்டப்பிரிவின் கூறு.


      PART XVII

      OFFICIAL LANGUAGE

      CHAPTER I.- LANGUAGE OF THE UNION

      343. Official language of the Union.

      (1) The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals.

      (2)Notwithstanding anything in clause (1), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union for which it was being used immediately before such commencement: Provided that the President may, during the said period, by order_306 authorise the use of the Hindi language in addition to the English language and of the Devanagari form of numerals in addition to the international form of Indian numerals for any of the official purposes of the Union.

      (3) Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of-

      (a) the English language, or

      (b) the Devanagari form of numerals, for such purposes as may be specified in the law.



      உங்கள் ஐயம் தீர்ந்திருக்குமென எண்ணுகிறேன். விளக்கம் அளிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!

      நீக்கு
    2. நன்றி! இந்தி பேசுவோர் மட்டும் அல்ல நம்மவரும் இந்தியே நமது தேசிய மொழியென்று எண்ணிக்கொண்டிருப்பதுதான் பல சிக்கல்களை உருவக்குகிறது. அதாவது, இந்தியை தேசிய மொழியாக்கிக்கொள்வதற்கு 15 வருட அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது! அந்த 15 வருடகால அவகாசம் முடிவதற்கு முன்னர் அதை தேசிய மொழியாக்கு வதற்கான முயற்சி நடந்தபோது அதற்கெதிரான கிளர்ச்சி நடந்தது. அதன் பின்னனியில் அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் பயன்பாட்டில் இருக்கும் என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். இதுதான் இன்றைய நிலை. இது சர்யா? நமது ஊரில் ஓர் பழமொழியுண்டு. "வண்ணான் எப்போ பன்னைக்காரன் ஆவது? கழுதை என்னைக்கு முன்னரில் போவது?" என்பதுதான் அது. இந்தி தெசிய மொழியாகும் அளவுக்கு வளரவும் போவதில்லை அது தேசிய மொழியாகவும் போவதில்லை! அதுதான் உண்மை நிலை! நிலைமை இப்படியிருக்க "சோ' போன்றோர் கருணாநிதி "இந்திபடிப்பதற்க்கான வாய்ப்பைக்கெடுத்துவிட்டார்! அதனால் நிறையப்பேருக்கு வேலை கிடைக்கவில்ல என்று பரப்பும் தவறாமன கருத்தை நம்பி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தி படிக்க வைக்கின்றார்கள்! என்ன கொடுமையிது! கனடா நாட்டில் வேலைசெய்யும் ஒரு பெண்மணி தனது குழந்தைக்குத்தமிழ் சொல்லிக்கொடுக்க ஓர் புத்தகம் தேடினால் மதுரையில் கிடைக்கவில்லை! 'ஆங்கிலமோ இந்தி புத்தகமோ வங்கிக்கொள்ளுங்கள்!' என்று கடைக்காரன் கூறியதாக அவர் புலம்புகிறார்! அப்படியிருக்கிறது தமிழ்நாடு. என்ன செய்வது?

      நீக்கு
    3. வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி திரு இமயவரம்பன் அவர்களே! 1965 ஜனவரி 26 அன்று அதாவது இந்திய நாடு குடியரசு நாடாக ஆகி 15 ஆண்டுகள் கழித்து மய்ய அரசு இந்தியை பொது மொழியாக்க முயற்சித்தபோது, அப்போது பிரதமராக இலால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இருந்தார்கள். தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் கரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. (அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.)

      1937 ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநிலத்தை திரு இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆண்டபோது இந்தியை பள்ளியில் கட்டாய பாடமாகக் கொண்டுவந்தபோது இந்தி திணிப்பை முதன் முதலில் எதிர்த்தவர் தந்தை பெரியார் அவர்கள். மூன்று ஆண்டுகள் நடந்த அந்த போராட்டம் பின்னர் அந்த திட்டம் திரும்பப் பெற்றதால் கைவிடப்பட்டது. பின்னாட்களில் திரு இராஜாஜி அவர்களே இந்தி திணிப்பை எதிர்த்தது வேறு கதை. எனவே சிலர் சொல்வதுபோல் திரு மு. கருணாநிதி அவர்கள் தான் இந்தி படிக்கும் வாய்ப்பைக் கெடுத்துவிட்டார் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது ஆகும். இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்பது இன்னொரு மிகப் பெரிய மோசடி.இந்தி தெரியாமலேயே வட நாடு சென்று மூன்று மாதங்களில் இந்தியை கற்று பணிபுரியும் நம்மவர்கள் ஏராளம். அவ்வளவு ஏன். இன்றைக்கு சென்னையில் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் வட நாட்டவர்கள் இந்தி படித்ததாலா பணிபுரிகிறார்கள்? சென்னை முழுதும் கடைகளிலும் உணவகங்களிலும் பணிபுரியும் வட மாநிலத்தவர் இந்தியை தாய்மொழியைக் கொண்டிருந்தாலும் இங்கு வந்து பணி புரிவது ஏன்?

      இது பற்றி விரிவாக பின்னர் எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  11. இப்போது இருக்கிற மோடி அரசு சமஸ்க்ரிதம் தான் இந்தியாவின் தேசிய மொழி என்று அறிவிக்கப் பார்க்கிறது. சமஸ்க்ரிதத்தை கட்டாய பாடமாக்கும் திட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
    காகத்தைக் காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மயில் தேசிய பறவை. அது போல்
    தேசிய மொழி எதுவாய் இருந்தால் என்ன. கட்டாயம் என்று திணிக்கக் கூடாது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! தேசிய மொழி என்று எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. வடமொழியை தற்போதைய அரசு திணிக்க நினைப்பதற்கு, நான் சொல்ல விரும்புவது இந்த பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருப்பதைத்தான்.

      நீக்கு
  12. நல்ல அலசல்; அதிகப்படியான விவரங்கள்.
    ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தி திணிப்பை எதிர்த்தார்கள். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இந்தி திணிப்பை, இந்தி பேசாத பிற மாநிலத்தவர்களும் எதிர்க்க துவங்கி விட்டார்கள். டெல்லி தலைநகரமாக இருப்பதால், இந்தியை தேசிய மொழியாக காட்டும் கூத்து அடவ்வப்போது நடைபெறுகிறது.
    இந்தி திணிப்பு மற்றும் எதிர்ப்பு என்பது நீண்ட விவாதம் உள்ளடக்கியது.
    த.ம. 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! முன்பு இருந்த பிரதமர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து அலுவலக மொழியாக இருக்கும் என நம்புவோம்.

      நீக்கு
  13. Very informative and elaborate. Well written with facts culled from various sources /from Gujarat High court Judgement to proceedings in constituent Assembly..Distinction between National language and official language explained in a manner that could be understood by all. Be that as it may the Govt of TN should take up suitably for removal of passages that convey erroneous facts in text books.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

      நீக்கு
  14. தற்போது தமிழின் நிலை பெருங்காய டப்பா, என்ற அளவில்தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன். என் கருத்தை மற்றவர்கள் ஏற்பது கடினம். தமிழ்நாடு முழுவதும் ஆங்கில வழியில்தான் பாடங்கள் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழனின் இந்தி எதிர்ப்பினால்தான் இன்று நிறைய மொழிகள் பிழைத்தன. இருந்தாலும் அதனால் தமிழனுக்கு கிடைத்ததென்னவோ அவமதிப்புகள்தான். திருக்குறள் போன்ற நூல்களைப் படித்து பின்பற்றாமல் தமிழ் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன?

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் இங்கு தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கவோ அல்லது ஆங்கிலம் கூடாது என்றோ சொல்லவில்லை. தமிழ் நாட்டில் உள்ள கல்வித்துறை அலுவலர்களுக்கு இந்தியாவில் தேசிய மொழி என்று ஒன்று இல்லை என்ற அடிப்படை தகவல் கூட தெரியாமல் மாணவர்களை குழப்புகிறார்களே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு இது. ஆங்கிலம் தெரிந்ததால் தான் இன்றைக்கு சென்னையில் வட மாநிலங்களிலிருந்து வந்து மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. இந்தி படித்தால் இந்தியா முழுதும் பணி புரியலாம் என்ற வாதம் பொய்யாகிப் போய்விட்டது. அதே நிலை தான் மற்ற மொழிகளுக்கும். ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ஐயா வணக்கம்.

    இப்படிப்பட்ட அரும்பதிவொன்றை எப்படித் தவறவிட்டேன்?!

    தாமதமாக வருவதால் கருத்துச் செறிவுமிக்கப் பல பின்னூட்டங்களையும் அதற்கான தங்களின் மறுமொழிகளையும் காண முடிகிறது.

    பாடப்புத்தகங்களின் பிழைகள் அது குறித்து ஒரு புத்தகமே போடலாம் :)

    மாணவர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப் படாத கவலைப்படுவோர் கூறுவதையும் கவனைத்திற் கொள்ளாத கல்விமுறை..

    செவிடன் காதில் ஊதப்படும் சங்கு போன்றதுதான் நம் குரலொலிகள்.

    இந்தி எதிர்ப்புப் போராட்டமெல்லாம் நான் படித்தறிந்ததுதான்.

    ஆனால் அப்படிப்பட்ட எழுச்சியை முன்னெடுத்த நம் தமிழ்நாடா இப்படிப் போய்விட்டது என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு.

    மொழிக்கல்வியைப் பொறுத்தவரை, ஒருவரின் தாய்மொழி அது வே முதன்மொழியாக இருக்க வேண்டும்.

    இந்தி என்ன இன்னும் பலமொழிகளைக் கூடத் தேவைப்படுவோர் கற்றுக் கொள்ளட்டும்.

    ஆனால் அதை அவசியம் கற்க வேண்டும் என்பதோ, அரசு மொழி என்பதோ இந்தியாபோன்ற பல்வேறு கலாச்சாரங்கள் உள்ள ஒரு நாட்டிற்கு அழகல்ல.

    வரலாறு இதை உணர்த்தி இருக்கிறது.

    அவரவர் வசத்திக்கேற்பப் பல நேரங்களில் இதை மறந்து போகிறார்கள்.

    மிகத் தெளிவாக, கூர்மையாகச் சொல்லப்பட்ட கருத்துகள், மறுமொழிகள்.

    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் பாராட்டுடன் கூடிய பொருள் பொதிந்த பின்னோட்டத்திற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

    ஐயா! நாங்கள் பள்ளியில் படித்தபோது விருப்ப பாடமாக இந்தி பாடம் இருந்தாலும் தேர்வு எழுதுவது கட்டாயம் இல்லை.அதனால் ஆசிரியர்களும் பாடம் நடத்தமாட்டார்கள். தேர்வு எழுதுவது கட்டாயம் இல்லை என்பதால் நானும் எனது S.S.L.C தேர்வு எழுதும்போது இந்தி தேர்வை எழுதவில்லை. இது பற்றி நினைவோட்டம் 59 என்ற பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

    அப்போது (காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டபோது) இந்தி படிப்பது கட்டாயம் இல்லை என்றாலும் விருப்பம் உள்ளோர் தனியாக இந்தி படித்து ‘தென்னிந்திய இந்தி சபை’ நடத்திய தேர்வை எழுதி அந்த மொழியைக் கற்று வந்தனர். நான் கூட எட்டாம் வகுப்பு படிக்கும்போது ‘பிராத்மிக்’ எனப்படும் முதல் கட்ட தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன்.

    இந்தி திணிப்பு போராட்டத்திற்குப் பிறகு, 1967 இல் அண்ணா அவர்கள் முதல்வரானவுடன், தமிழக அரசு, மக்களின் உணர்வை மதித்து பாடம் நடத்தப்படாத, தேர்வில் வெற்றிபெறவேண்டிய அவசியம் இல்லாத அந்த விருப்பப் பாடத்தை பள்ளிகளிலிருந்து நீக்கிவிட்டது. அவ்வளவே. அதே நேரத்தில் தனியாக இந்தி படிக்க யாருக்கும் தடை போட்டதில்லை. எனவே இந்தி படிக்காமல் செய்துவிட்டார்கள் என்ற வாதம் சரியல்ல.

    மேலும் நாங்கள் படித்தது தமிழ் வழிக் கல்வியில் தான். ஆங்கிலப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களையெல்லாம் தமிழில் தான் படித்தோம். இருப்பினும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தப்படும் கல்லூரியில் அதுவும் தொழில் கல்லூரிகளில் எந்த வித சிரமமும் இல்லாமல் படித்து மய்ய அரசுப் பணிகளில் சேர்ந்து பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்திருக்கிறோம். எனவே தாய் மொழியில் படித்தால் வெளி மாநிலங்களில் பணி புரிய முடியாது என்பது வெறும் சொற்புரட்டு ஆகும்.

    பணியில் இருக்கும்போது இந்தி, கன்னடம் ,மலையாளம் ஆகிய
    மொழிகளை நான் என் விருப்பத்தின் பேரிலேயே கற்றுக்கொண்டேன். யாரும் கட்டாயப்படுத்தி அல்ல.

    எனவே “இந்தி என்ன இன்னும் பலமொழிகளைக் கூடத் தேவைப்படுவோர் கற்றுக் கொள்ளட்டும்.ஆனால் அதை அவசியம் கற்க வேண்டும் என்பதோ, அரசு மொழி என்பதோ இந்தியாபோன்ற பல்வேறு கலாச்சாரங்கள் உள்ள ஒரு நாட்டிற்கு அழகல்ல.” என்ற உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.

    எனது பதிவைப் படித்து தங்களின் ஆழமான கருத்தை வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  18. மதிப்பிற்குரியீர்!

    வணக்கம்.

    “““““““““““இந்தி திணிப்பு போராட்டத்திற்குப் பிறகு, 1967 இல் அண்ணா அவர்கள் முதல்வரானவுடன், தமிழக அரசு, மக்களின் உணர்வை மதித்து பாடம் நடத்தப்படாத, தேர்வில் வெற்றிபெறவேண்டிய அவசியம் இல்லாத அந்த விருப்பப் பாடத்தை பள்ளிகளிலிருந்து நீக்கிவிட்டது. அவ்வளவே. அதே நேரத்தில் தனியாக இந்தி படிக்க யாருக்கும் தடை போட்டதில்லை. எனவே இந்தி படிக்காமல் செய்துவிட்டார்கள் என்ற வாதம் சரியல்ல. “““““““““““

    சரியல்ல என்ற இந்த நான் எவ்விடத்தும் வாதம் செய்திடவில்லை.

    சொல்லப்போனால், என் கூடுதல் பணிக்காக இந்தி தேவைப்பட்டு அதைக் கற்றுக் கொண்டவன்நான்.

    ““““““நாங்கள் படித்தது தமிழ் வழிக் கல்வியில் தான். ஆங்கிலப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களையெல்லாம் தமிழில் தான் படித்தோம். இருப்பினும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தப்படும் கல்லூரியில் அதுவும் தொழில் கல்லூரிகளில் எந்த வித சிரமமும் இல்லாமல் படித்து மய்ய அரசுப் பணிகளில் சேர்ந்து பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்திருக்கிறோம். எனவே தாய் மொழியில் படித்தால் வெளி மாநிலங்களில் பணி புரிய முடியாது என்பது வெறும் சொற்புரட்டு ஆகும். ““““““““

    நானும் இவ்வாறு படித்தவன்தான். நான் பணியாற்றுமிடத்தில் ஆங்கில வழியில் படித்து, மிகப்பெரிய ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி ப்பேச்சும் மூச்சும் ஆங்கிலமே என்பர்களோடு ஒப்ப அம்மொழியில் என்னால் பேசவும் எழுதவும் முடிந்திருக்கிறது. அதுவும் என் பணிசார்ந்ததே.

    இங்கும், ““நாங்கள் படித்தது தமிழ் வழிக் கல்வியில் தான். ஆங்கிலப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களையெல்லாம் தமிழில் தான் படித்தோம். இருப்பினும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தப்படும் கல்லூரியில் அதுவும் தொழில் கல்லூரிகளில் எந்த வித சிரமமும் இல்லாமல் படித்து மய்ய அரசுப் பணிகளில் சேர்ந்து பல்வேறு மாநிலங்களில் பணி புரிந்திருக்கிறோம். எனவே தாய் மொழியில் படித்தால் வெளி மாநிலங்களில் பணி புரிய முடியாது என்பது வெறும் சொற்புரட்டு ஆகும். ““““ என்னும் கருத்து என் பின்னூட்டத்தில் நான் சொல்லியதன்று.

    முழுக்க முழுக்க வேற்றுமொழி பேசும் சூழலில், தமிழும் ஆங்கிலமும் தெரியாதவர்களோடு குறிப்பிட்ட சில ஆண்டு இடைவெளியில் ஓரிரு மாதங்கள் நான் இருக்கவும், பயிற்சி பெறவும் சூழ்நிலைகள் அமைகின்றன.

    நான் பயிற்சி முடிந்து பணிக்குத் திரும்பிய பின்பும் அவரெவரேனும் தொடர்பு கொள்ளும் போது, அம்மொழியை நான் பேசக் கேட்டு ஆச்சரியப்படும் நண்பரிடத்தில் நான் நகைச்சுவையாய்ச் சொல்வதுண்டு , “ அந்தச் சூழலில் விட்டிருந்தால் உங்களை விட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் சீன மொழியைக் கூடக்கற்றிருப்பீர்கள்“ என்று. :)

    எனது பின்னூட்டத்தில் எங்கேனும் நான் சொல்ல நினையாத இவை போன்ற கருத்துகள் தொனித்திருக்குமாயின் பொறுத்தருள்க.

    நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நான் தங்களது பின்னூட்டதிற்கு கீழே தந்த பதில் தங்கள் கருத்துக்கான பதில் அல்ல. இந்தி படிக்காமல் செய்துவிட்டார்கள் என்ற வாதம் நீங்கள் செய்ததாக நான்சொல்ல வரவில்லை. தாங்கள் அவ்வாறு எண்ணுவதாக நான் நினைக்கவே யில்லை.

      எனது பதிவில் சொல்ல மறந்ததை இதில் சொன்னேன். மற்றபடி தங்கள் கருத்து என்னோடு ஒத்துப் போவதால் அதை வலு சேர்க்கவே அவ்வாறு எழுதியிருந்தேன்.

      ‘’தாய் மொழியில் படித்தால் வெளி மாநிலங்களில் பணி புரிய முடியாது என்பது வெறும் சொற்புரட்டு ஆகும் என்று சொன்னதும் உங்களுக்காக அல்ல.’’ அவ்வாறு தவறாக பரப்புரை செய்துகொண்டிருப்போருக்காகத்தான்.

      நான் செய்த ஒரே தவறு தங்களது பின்னூட்டதிற்கு பதில் எழுதுமுன் ‘எனது பதிவில் விட்டுப்போன கருத்து இது’ என்று சொல்லாததுதான். தங்களின் பின்னூட்டத்திற்கு விரிவான பதில் எழுதவெண்டும் என்ற ஆவலில் ஏற்பட்ட தவறு அது. இனி இப்படிப்பட்ட தவறு நிகழாது என உறுதி கூறுகிறேன்.

      //எனது பின்னூட்டத்தில் எங்கேனும் நான் சொல்ல நினையாத இவை போன்ற கருத்துகள் தொனித்திருக்குமாயின் பொறுத்தருள்க.//


      நீங்கள் எனது கருத்துக்கு மாறாக எந்த கருத்தையும் சொல்லவில்லை. சொல்லப்போனால் அதை ஆதரித்தே எழுதியிருக்கிறீர்கள். எனவே நீங்கள் சொல்ல நினையாத கருத்து ஏதும் இருப்பதாக நான் எண்ணவில்லை.

      எனது பின்னூட்டத்தால் ஏற்பட்ட குழப்பத்திற்கும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கும் மன்னிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. ஐயா,

      வணக்கம். ஏன் இத்துணைப் பெரிய வார்த்தைகள்.

      நான் எழுதுவது சில நேரங்களில் நானே நினைக்காதபடி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுண்டு.

      அப்படி ஏதும் ஆனதோ எனக்கருதியே தொடர்ந்தேன்.

      பொறுத்தருள்க.

      தொடர்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  19. வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி திரு சாமானியன் அவர்களே!

      நீக்கு
  20. முன்னரே எனது கருத்தைப் பகிர்ந்துள்ளேன். அனைவரும் உணரும் வகையில் தெளிவாகப் பகிர்ந்துள்ளீர்கள். இந்த அடிப்படைச் செய்தியைக் கூட தெரிந்திருக்கவில்லை என நினைக்கும்போது எனக்கு வேதனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

    பதிலளிநீக்கு