ஞாயிறு, 5 ஜூலை, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 32



சென்ற பதிவின் முடிவில் ‘தமிழர்களை மூன்று வகையாக பிரிக்கலாமாம்’ என்பதை ஒரு நாளிதழில் படித்ததாக ‘என்று எழுதியிருந்தேன். பதிவைப்படித்த நண்பர்கள் பலர் அது என்ன மூன்று வகை? என அறிந்துகொள்ள விரும்புவதாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.



நமக்கும் எண் மூன்றுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு என எண்ணுகிறேன். அதனால் தானோ என்னவோ முத்தமிழ் என்றும், முக்கனி என்றும் மூவுலகம் என்றும், முக்காலம் என்றும் மூவேந்தர்கள் என்றும் மும்மாரி என்றும் வகைப்படுத்தியிருக்கிறோம்.

அந்த நாளிதழ் வகைப்படுத்தியிருந்த மூன்றுவகை தமிழர்கள் இதோ.

முதல் வகையினர். தீவிர திரைப்பட இரசிகர்கள். தங்களுடைய உள்ளம் கவர்ந்த நடிகர்கள்/நடிகையர்களுக்காக இரசிகர் மன்றம் அமைத்து அதற்காகவே தங்கள் உழைப்பையும் பணத்தையும் வீணே செலவிடுபவர்கள். இவர்களுக்கு தங்களின் அபிமான நடிகர்/நடிகை நடித்த திரைப்படம் வரும் நாளில் முதல் நாள் முதல் காட்சி பார்க்காவிடில் தலையே வெடித்துவிடும். ஒரே படத்தை பலமுறை பார்த்து பெருமை அடைபவர்கள். சிலர் தங்களுடைய அபிமான நடிகர்களுக்கு கோவில் கூட கட்டுவார்கள். நடிகர்கள் தங்களுக்குள்ளே நட்பாய் இருந்தாலும் அவர்களுடைய இரசிகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் அவர்களுக்காக சண்டை போட்டுக்கொள்வார்கள்.

இரண்டாம் வகையினர். இவர்கள் அரசியல் கட்சியின் தொண்டர்கள். வீடு குடும்பம் ஆகியவற்றை மறந்து கட்சி அலுவலகமே கதி என இருப்பவர்கள். தலைவன் சட்டப்படி தண்டிக்கப்பட்டு சிறை செல்ல நேர்ந்தால் தங்கள் குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் தன்னை எரித்துக்கொண்டோ, தூக்கிலிட்டுக்கொண்டோ உயிரை மாய்த்துக்கொள்ளும் இரகத்தினர். தலைவன் தவறு செய்யமாட்டான் என நம்பும் அப்பாவிகள். இவர்களுக்கு கட்சி சொல்வதுதான் வேத வாக்கு.

மூன்றாம் வகையினர். இவர்கள் தீவிர கடவுள் பக்தர்கள். எந்த நேரமும் கடவுளை நினைத்துக்கொண்டு மத சின்னங்களோடு இருப்பவர்கள். இவர்கள் கிடைத்த இடத்திலெல்லாம் (அது நடை பாதையானாலும் அல்லது நடுத்தெருவானாலும்) வழிபாட்டுத் தலங்களைக் கட்டி வழிபடுபவர்கள்.

இவர்களில் சிலர் இரண்டு வகையையும் சேர்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். அதாவது திரைப்பட இரசிகன் அரசியல் தொண்டனாகவோ அல்லது கடவுள் பக்தனாகவோ இருக்கக்கூடும். அதுபோலவே மற்ற இரு வகையினரும் இருக்கக்கூடும்.

அந்த நாளிதழ் வகைப்படுத்தியிருந்த மூன்று வகையான தமிழர்கள் பற்றி படித்தபோது எனக்கு வருத்தம் ஏற்பட்டாலும் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன்.

அதனால் தானோ என்னவோ அந்த Timeshare ஐ விற்க வந்தவர், நானும் ஒருவேளை திரைப்பட மோகம் கொண்ட தமிழனாக இருக்கக்கூடும் என எண்ணி கமலஹாசன் பெயரைச்சொல்லி விற்கப் பார்த்தார். அவரிடம் சொன்னேன். ‘நண்பரே! கமலஹாசன் பணம் வாங்கிக் கொண்டு வந்துதான் அதிரப்பள்ளி அருவியருகே நடித்திருக்கிறார். ஆனால் நீங்கள் என்னை பணம் கொடுத்துவிட்டல்லவா வர சொல்கிறீர்கள். மன்னித்துக்கொள்ளுங்கள் எனக்கு இந்த திட்டத்தில் சேர விருப்பம் இல்லை. போய் வாருங்கள்.’ என சொல்லி அனுப்பிவிட்டேன். அவரும் ஒரு ‘இரை’ கிடைக்காத ஏமாற்றத்தில் திரும்பிவிட்டார்.

இனி Timeshare என்றால் என்பதைப் பார்ப்போம்.

Timeshare என்பது ஒரு குறிப்பிட்ட அசையா சொத்தில் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட காலம் அனுபவிக்கும் உரிமையை பெறுவது. இந்த அசையா சொத்து என்பது வழக்கமாக உள்ள தங்கும் விடுதிகளில் (Hotels) உள்ளது போன்ற எல்லா வசதிகளும் கொண்ட ஒரு விடுமுறை ஓய்வகம் (Holiday Resort) ஆகும்.இதில் பணம் கட்டி சேருவதன் மூலம் குறிப்பிட்ட நாட்கள் அந்த விடுமுறை ஓய்வகத்தில் தங்கி அனுபவிக்கும் உரிமையைப் பெறலாமே தவிர அந்த சொத்தின் மேல் உரிமை கொண்டாடமுடியாது.

அந்த விடுமுறை ஓய்வகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தங்கும் காலத்தை 52 வாரங்கள் கொண்ட அலகுகள் (Units) ஆக பிரித்திருப்பார்கள். அதில் நாம் வாங்கும் அலகுகளைப் பொறுத்து ஒரு வாரமோ அல்லது அதற்கு மேலோ தங்கும் உரிமையை பெறலாம். இதற்கான பணத்தை மொத்தமாகவோ அல்லது மாதாந்திர தவணை முறையிலோ கட்டலாம்.

பொதுவாக இந்த விடுமுறை ஓய்வகங்கள் மலைவாசத் தலங்களில் இருக்கும். சில நிறுவனங்கள் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களிலும் இதை அமைத்திருப்பார்கள். ஓர் நிறுவனம் பல இடங்களில் இது போன்ற விடுமுறை ஓய்வகங்கள் வைத்திருந்தால் நாம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு இடங்களில் தங்கும் உரிமையைப் பெறலாம்.

ஆனால் நாம் விரும்பும் நாட்களில் அந்த ஓய்வகம் வேறு நபர்களால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் கிடைக்காது. நமது தங்கும் உரிமையை மற்றவர்களுக்கு மாற்றியும் தரலாம். இது போன்ற பல திட்டங்கள் இதில் உண்டு. அதுபற்றி சொல்லவேண்டுமென்றால் தனியாக ஒரு பதிவே எழுதவேண்டும்.

இந்த திட்டம் ஏன் நடுத்தர குடும்பத்தினருக்கு சரிப்பட்டு வராதென்றால், இதற்குள் மறைந்திருக்கும் புலப்படாத செலவினங்கள் (Invisible Expenses) தான். முதலில் சொல்லும்போது ஒரு அலகில் முதலீடு செய்தால் சுமார் 25 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் 5 நட்சத்திர தங்கும் விடுதியின் வசதியை எந்த விட செலவின்றி அனுபவிக்கமுடியும் என்பார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லாதது அல்லது சொல்ல மறைத்தது வேறாக இருக்கும். இந்த மாதிரியான விடுமுறை ஓய்வகங்கள் ஊரை விட்டு அத்துவான காட்டில் இருக்கும். அங்கு சொந்த வாகனம் இல்லாமல் செல்ல இயலாது.இல்லாவிடில் வாடகை மகிழுந்துக்கு செலவிடவேண்டியிருக்கும்.

அங்கு தங்குவதற்கு பணம் தரவேண்டியதில்லையே தவிர உணவிற்கு தனியாக பணம் செலுத்தவேண்டியிருக்கும். மூன்று வேளை சாப்பாட்டிற்கு அவர்கள் விதிக்கும் கட்டணம் நினைத்துப் பார்க்க முடியாததாய் இருக்கும். மேலும் சில இடங்களில் தண்ணீருக்கென்று தினம் தனியாக 500 ரூபாயும் மின்சாரத்திற்கென்று தினம் 1000 ரூபாயும் பராமரிப்பு செலவிற்கென்று தனியாகவும் அதிகப்படியாக வசூலித்துவிடுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிறுவனம் இது போன்று தண்ணீருக்கென்று கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்று அதை நிறுத்த தடை ஆணை பெற்றிருக்கிறார்கள்.

கடைசியில் தங்குமிடத்திற்கான செலவை கணக்கிட்டால் அதே ஊரின் மய்யத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கினால் ஆகும் எல்லா செலவையும் விட இது அதிகமாகத்தான் இருக்கும். இந்த திட்டத்தில் சேருவதை விட நாம் விரும்பும் இடங்களில் விரும்பும் நாட்களில் ‘கையிலே காசு. வாயிலே தோசை’ என்பது போல அவ்வப்போது பணத்தை கட்டி விடுமுறையை அனுபவித்து வரலாம்.

இந்த விடுமுறை ஓய்வகத்தை நடத்தும் நிறுவனங்கள் ஆரம்பத்தில் சேரும்போது சொல்வார்கள். ‘எந்த ஆண்டு நீங்கள் தங்க வரவில்லையோ அதை முன்பே தெரிவித்துவிட்டால் அந்த நாட்களில் உங்களுடைய தங்கும் உரிமையை பிறருக்கு கொடுத்துவிட்டு, பின்னர் உங்களுக்கு நாள் ஒன்றுக்கு 3000 வீதம் தருவோம்‘.’ என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் தரமாட்டார்கள். ஏன் தரவில்லை என கேட்டால் ‘இந்த ஓய்வகங்களை பரமாரிக்கவே (Maintenance) அதிகம் செலவாகிவிடுகிறது.என் செய்ய.’ என்று கையை விரித்து விடுவார்கள். (என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது)

இதைப் பற்றியெல்லாம் தெரிந்திருந்ததால்தான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக அந்த திட்டம் பற்றி தெரியாது என்று சொன்னேன்.வங்கியில் பணி செய்வதில் சில நன்மைகள் உண்டு. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைப்பதால் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு எல்லோரிடமும் சகஜமாக பழகத் (Extrovert) தெரிந்திருக்கவேண்டும்.



தொடரும்






32 கருத்துகள்:

  1. அந்த நாளிதளின் மூன்று வகையான தமிழர்கள் பற்றி எதுவும் சொல்வதற்கு விரும்பவில்லை... "கையிலே காசு... வாயிலே தோசை..." என்பது தான் எப்போதும் சரி...

    பலரிடமும் விசயத்தை முதலில் அறிந்து கொள்ளவும் தனி ஒரு கலை வேண்டும் தான் ஐயா... அடுத்து அதைப் பற்றி காண ஆவலுடன் உள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருதிண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
    2. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வடிவேலு நகைச்சுவை போல, “ரூம் போட்டு யோசிப்பாங்களோ?”
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஏமாறுபவர்கள் இருந்தால் போதும்

      நீக்கு
  3. ஏமாறுகிற வரையில் ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்
    அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு
  4. இதுபோல் எல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை ஐயா.

    வணிக தந்திரத்தின் இன்னொரு முகம் பார்த்து எவ்வளவு எளிதில் நாம் மடையர்களாய் விடுகிறோம்.

    விழிப்புணர்வு ஊட்டும் தங்களின் பதிவுகளைத் தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே

      நீக்கு
  6. //பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைப்பதால் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு எல்லோரிடமும் சகஜமாக பழகத் (Extrovert) தெரிந்திருக்கவேண்டும். //

    உண்மை தான். நம்மில் பலரால் இப்படி இருக்க முடிவதில்லை.

    உங்களுக்கு கிடைத்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்வதனால் எங்களுக்கும் சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  7. ஐயா

    நீங்கள் இதுவரையிலும் (இந்த வயசு வரையிலும்) ஒரு தடவை போலும் ஏமாந்தது இல்லையா? மற்றவர்கள் ஏமாற்றுவதைப் பற்றி கூறும்போது, நீங்கள் ஏமாந்த கதை எதாவது இருப்பின் அதையும் பதிவிடலாமே. இது வரையிலும் ஏமாந்தது இல்லை என்று எங்களை ஏமாற்றாதீர்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் நீங்கள் எழுப்பியுள்ள ஐயத்திற்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே!

      நான் இதுவரையிலும் (இந்த வயசு வரையிலும்) ஒரு தடவை போலும் ஏமாந்தது இல்லையா? மற்றவர்கள் ஏமாற்றுவதைப் பற்றி கூறும்போது, நான் ஏமாந்த கதை எதாவது இருப்பின் அதையும் பதிவிடலாமே. என்றும் இது வரையிலும் ஏமாந்தது இல்லை என்று ஏமாற்றாதீர்கள் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

      நீங்கள் இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படிக்கவில்லை என நினைக்கிறேன்.அதனால் தான் ஏமாற்றாதீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏமாற்றுவதும் ஒரு கலைதான் 1 இல் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘நாம் ஏமாறாமல் இருக்கவேண்டுமானால் ஒரு முறை நாம் ஏமாறவேண்டும். இதை நான் வேடிக்கையாக சொல்லவில்லை. ஒரு முறை ஏமாந்தால் தான் மறுமுறை விழிப்போடு இருப்போம். இதை நான் எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.’ என்று.

      தயைவு செய்து ஏமாற்றுவதும் ஒரு கலைதான் 1யும் ஏமாற்றுவதும் ஒரு கலைதான் 2
      யும் படித்துப்பாருங்கள்.அதில் சொல்லியிருப்பேன் நான் எவ்வாறு ஏமாந்தேன் என்று.

      இந்த தொடர் எழுது முன்பே 17-02-2011 அன்று எத்தனைக்காலம்தான் ...? 1, எத்தனைக்காலம்தான் ...? 2, எத்தனைக்காலம்தான் ...? 3,
      என்ற தலைப்பி‌ல் எழுதிய தொடர்களில் நான் வேளாண்மை பட்டப்படிப்பை படித்துவிட்டு ஒரு நேர்முகத் தேர்வுக்காக ஹைதராபாத் சென்று திரும்பும்போது இரயிலில் எவ்வாறு ஏமாந்தேன் என்பதையும் விரிவாக எழுதியுள்ளேன்.

      ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் யாரையும் ஏமாற்றுவதற்காக பதிவுகள் எழுதுவதில்லை. எனக்கு மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியே எழுதுகிறேன். மற்றபடி யாருக்கும் அறிவுரை சொல்வதற்காக அல்ல. எனக்குத்தெரியும் யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited Advice) தரக்கூடாது என்பதை தெரிந்துகொண்டவன் நான். .

      நான் கதை விடுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறேர்கள் போலும். நான் எப்படி பதிவிடுகிறேன் என்பதை தொடங்கிய வலைப்பதிவை தொடர்ந்து நடத்துவது எப்படி? என்ற தலைப்பில் எழுதிய பதிவைப் படித்தால் என்னைப்பற்றிஅறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

      தங்களது ஐயத்தை தீர்த்துவிட்டேன் என நினைக்கிறேன். என்னைப்பற்றியும் எனது பதிவு பற்றியும் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி! .

      நீக்கு
  8. எத்தனை சொன்னாலும், எழுதினாலும்,இன்னும் சிலர் ஏமாறத்தானே செய்கிறாரார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  9. உலகம் முழுவதும் எதிர்காலத்தைப்பற்றி ஐயமும், பேராசையையும் அதிகமாகிவிட்டதால் ஏமாறுவதும் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். ஏமாறாமல் இருந்தால் அதிர்ஷ்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும் மற்றவர்கள் ரிஸ்க் எடுத்து பொருளாதார நிலையில் முன்னேறியிருப்பதைக் கண்டால் ஏமாந்துவிட்டோமோ என்றும் நினைக்க வாய்ப்புள்ளது. விலைவாசி அதிகமாவதால் இருப்பதுபோதும் என்று இருக்கவும் முடிவது கடினமாகிறது. மொத்தத்தில் கேட்ச் 22.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ‘பாம்பென்று தாண்டவும் முடியவில்லை. பழுதென்று மிதிக்கவும் முடியவில்லை.’ என்ற இன்றைய நிலையை சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

      நீக்கு
  10. time shere பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது! தங்களின் இந்த தொடர் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும் உதவியாக இருக்கின்றது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  11. இது போன்ற திட்டங்கள் ஏன் நடுத்தர வர்க்கத்துக்குப் பயன்படாது என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்
    த ம 11 :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  12. நீங்கள் கூறி இருந்த அதிரப் பள்ளி அருகே வாழச்சால் அருகே முதியவர்களுக்காக விடுதி கட்டிக் கொண்டு விருப்பம்போல் அங்கு போய்த் தங்கலாம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் இதை யாரோ ஆன்மீகப்பேர்வழி சொல்லி நடப்பதாகவும் கேள்வி. உறுதியான செய்தி இல்லை. உங்களுக்குத் தெரியுமா.? ஒரு முறை ஏமாந்தால்தான் விழிப்புணர்வு வரும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! நீங்கள் சொல்வது சமீபகாலத்திய தகவலாக இருக்கலாம். நான் சொல்லும் நிகழ்வு நடந்தது 1995 ஆம் ஆண்டு.
      ஒரு முறை ஏமாந்தால்தான் மறுமுறை ஏமாறாமல் கவனமாக இருப்போம் என்பது உண்மையே.

      நீக்கு

  13. விழிப்புணர்வு விருந்து படைத்து வருகிறீர்கள் அய்யா!
    எனக்குத் தான் சுடச் சுட உண்ண முடிய வில்லை!
    கணினி பிரச்சனை! பல்வேறு தடங்கல்கள்.சில பதிவுகளை நண்பர்கள் இடங்களில் சென்று இட்டு வருகிறேன். சில நாட்களாக எனது மெயில் திறக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது சரி செய்யப் பட்டு விட்டது. தாமதக் கருத்துக்கு வருந்துகிறேன். நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், தாமதமானாலும் பதிவை தொடர்வதற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  14. ஏமாற்றுபவர்களின் வாய் ஜாலம் எப்படிப் பட்ட வரையும் ஏமாற வைத்து விடும். சிலர் எளிதில் ஏமாந்து போகிறார்கள். சிலர் யோசித்து ஏமாந்து போகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என். முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஆனாலும் ஒரு தடவை ஏமாந்தவர்கள் மறுமுறை சற்று கவனமாய் இருப்பார்கள்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இமயவரம்பன் அவர்களே!

      நீக்கு