சனி, 14 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 2



என் முன்னே வந்தவர் திடீரென அழ ஆரம்பித்ததும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனது ஆய்வக நண்பர்கள் என்னை ஆச்சரியத்தோடு பார்க்க நான் சங்கடத்தில் ஆழ்ந்தேன்.

 

பிறகு திகைப்பிலிருந்து விடுபட்டு, அவரை உடனே அமர சொல்லிவிட்டு, தண்ணீர் கொண்டு வரச்சொன்னேன். தண்ணீரை கொடுத்து குடிக்க சொல்லி அவரை ஆசுவாசப் படுத்தினேன்.

 

நீங்கள் யார்? எதற்காக என்னைப் பார்க்க வந்தீர்கள்? உங்களை இதுவரை பார்த்ததில்லையே. எதற்காக இங்கு வந்து என் முன் அழுகிறீர்கள்? என கேள்வி மேல் கேள்வி கேட்டும் அவரது விசும்பல் நிற்கவில்லை.

 

அப்போது ஆய்வகத்தில் அடுத்த அறையில் கலப்பின்மை பகுப்பாய்வு பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த எனது நெருங்கிய நண்பர் திரு ஜெய் கரன்சிங் சிவால் என் முன்னே யாரோ அழுது கொண்டிருப்பதை பார்த்துவிட்டு என் அருகே வந்தார்.

(திரு சிவால் உத்திரப் பிரதேச மாநிலம் மீரெட்டை சேர்ந்தவர்.)

 

என்னிடம் வந்து சபாபதி. என்ன விஷயம்? இவர் உங்களுக்கு வேண்டியவரா? ஏன் அலுவலகத்திற்கு வந்து அழுகிறார்?’ என்று கேட்டார்.

 

நான் அவரிடம் இவர் யாரென்று எனக்குத் தெரியாது. என்னைப் பார்க்க வந்ததாக சொல்லிவிட்டு அழுது கொண்டிருக்கிறார். என்றேன்.

 

உடனே அவர் என் முன்னே இருந்தவரைப் பார்த்து இந்தியில், இங்கேல்லாம் அழக்கூடாது? என்ன வேண்டும் என்பதை சொல்லிவிட்டு வெளியே கிளம்புங்கள். என்று மிரட்டும் தொனியில் சொன்னார்.

 

அப்போது அவர் என்னிடம் சார் உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். இங்கே ஷாத்ராவில் தங்கியிருக்கிறேன். (ஷாத்ரா என்ற இடம் தில்லியில் யமுனை நதிக்கு அப்பால் கீழ் பகுதியில் உள்ள கிழக்கு தில்லியை சேர்ந்த இடம். எனது ஆய்வகம் இருந்த இடத்திலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரம்) அங்கிருந்து கையில் காசு இல்லாததால் நடந்தே வந்திருக்கிறேன். நீங்கள் தான் உதவ வேண்டும். என்றார்.

 

அதற்கு நான் நீங்கள் யாரென்றே தெரியாத போது நான் எதற்காக உதவ வேண்டும். அப்படி இருக்கும்போது எனது அலுவலகத்திற்கு வந்து அழுது ஆர்பாட்டம் செய்கிறீர்கள். முதலில் உங்களுக்கு எனது முகவரியைக் கொடுத்தது யார் என சொல்லுங்கள்?’ என்றேன்.

 

அவர் உடனே சார். நான் தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். பம்பாயில் நல்லபடியாக தொழில் செய்து நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தேன். சிவசேனைக்காரர்கள் உடுப்பி ஓட்டல்கள் நடத்தும் கன்னடக்காரர்களையும், என்னைப்போல் சிறு வணிகம் செய்து கொண்டிருந்த  தமிழர்களையும் பம்பாயில் மதராசிகளுக்கு இடமில்லை. உங்கள் ஊருக்கே போங்கள். என சொல்லி அடித்து விரட்டிவிட்டார்கள். சம்பாதித்த சொத்துகளையெல்லாம் அங்கேயே விட்டுவிட்டு அநாதை போல் இங்கு வந்துவிட்டேன். நீங்கள் தான் ஏதாவது உதவி செய்யவேண்டும்.என்றார்.

 

நீங்கள் ஏன் சொந்த ஊருக்கு திரும்பாமல் இங்கு வந்து கஷ்டப்படுகிறீர்கள். என்று நான் கேட்டதற்கு, தில்லிக்கு சென்றால் எங்காவது வேலை கிடைக்கும். பிழைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அதனால் அங்கிருந்து இங்கு வந்துவிட்டேன். எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு வேலையும் கிடைக்கவில்லை.சரியாக சாப்பிட்டே இரண்டு நாள் ஆகிறது. எனக் கூறிவிட்டு திரும்பவும் தேம்ப ஆரம்பித்து விட்டார்.

 

நான் அவரிடம் நான் உங்களுக்கு வேலை தருவேன் என்று யார் சொன்னது? உங்களுக்கு வேலை தரும் நிலையில் நான் இல்லை. எப்படி எனது முகவரி உங்களுக்கு கிடைத்தது என்பதை சொல்லுங்கள். என்றேன்.

 

அதற்கு அவர், சார். தமிழனான நான், உங்களைப்போன்ற தமிழரிடம் தானே உதவி கேட்கமுடியும். இங்குள்ள இந்திக்காரர்கள் மதராசி என சொல்லி உதவமாட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர்தான் உங்கள் பெயரை சொல்லி  நீங்கள் கட்டாயம் உதவுவீர்கள் என்று சொன்னார் அதனால் தான் இங்கு வந்தேன்.’ என்றார்.

 

எனக்குத் தெரிந்துவிட்டது. அவர் போடுவது நாடகம் என்று. ஏனெனில் கரோல் பாக்கில் உள்ள மெஸ்களுக்கு சென்றாலே வேலை கொடுப்பார்கள். அங்கே மூன்று வேளை சாப்பாடும் தங்கும் இடமும் நிச்சயம்.அப்படி இருக்கும்போது வேலை கிடைக்கவில்லை என சொல்வது அப்பட்டமான பொய் என தெரிந்தது.

 

நாங்கள் இருவரும் தமிழில் பேசிக்கொண்டிருப்பதை ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் திரு சிவால் எங்களது பேச்சின் இடையில் புகுந்து என்ன சொல்கிறார் இவர்?’ எனக் கேட்டார்.

 

விவரத்தை ஆங்கிலத்தில் அவரிடம் சொன்னதும், அவர் உடனே உங்கள் மொழியில் பேசி உங்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் இது கூட ஒரு வழியில் அனுதாபப் பிச்சைதான். இதெல்லாம் ஏமாற்று வேலை என்பதால் ஒரு ரூபாய் கூட தராதீர்கள். இவரை உடனே வெளியேற்றுங்கள். என்றார்.

 

வட இந்திய நண்பர்கள் முன்னால் அவர் மேலும் அழுது, நம்மவர்கள் பற்றி கேலியாக பேச இடங் கொடுக்கக்கூடாது என்பதாலும், அந்த நேரத்தில் 

உடனே சங்கடத்திலிருந்து விடுபடவும் ,அவர் சொல்வது பொய் எனத் தெரிந்தும், ஏதாவது கொடுத்து அவரை வெளியே அனுப்ப நினைத்தேன். (நம்மவர்கள் பற்றி  வட இந்தியர்கள் எப்படி கேலி செய்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் எழுதுவேன்.)

 

நான் பணம் கொடுக்க பர்ஸ் எடுத்தபோது என் நண்பர் தடுத்தும், நான் அவரிடம் பத்து ரூபாய் கொடுத்து போய் ஏதேனும் வேலை தேடி கௌரவமாக வாழுங்கள். என்று சொல்லி அனுப்பிவிட்டேன். (அப்போது எனது மாத சம்பளமே ரூபாய் நானூறு தான்.)

 

எனது நண்பர் என்னிடம் நான் சொல்லியும் பணம் கொடுத்துவிட்டீரே. இந்த ஆள் நிச்சயம் பொய் சொல்லி பணம் கேட்டிருக்கிறான். உம்முடைய பெயர் எப்படி இந்த ஆளுக்குத் தெரிந்தது என கண்டுபிடிக்கிறேன் பார். என்று கூறிவிட்டு கீழே சென்றார்.

 

திரும்பி வந்து கீழே சென்று அங்கிருந்த காவலாளியிடம் இப்போது வந்து போனவர் பற்றி விசாரித்தேன். அவரிடம் இந்த ஆள் இந்த அலுவலகத்தில் மதராசி யாராவது வேலை பார்க்கிறார்களா எனக் கேட்டிருக்கிறான். அவருக்கு உம்மைத் தெரியுமாதலால். ஆமாம். ஒருவர் இருக்கிறார். என்றிருக்கிறார்.

 

உடனே அவன் மேலே வந்து நமது ஆய்வகத்தில் முகப்பில் உள்ள ஊழியரிடம் இங்கு வேலை பார்க்கும் மதராசியைப் பார்க்கவேண்டும் என்றதும், என்ன சபாபதியைப் பார்க்கவேண்டுமா? அதோ இருக்கிறார் போங்கள் என அவன் கேட்காமலேயே உமது பெயரைச் சொல்லிவிட்டார். அவன் வந்து உமது பேரை சொல்லி அழுது ஏமாற்றி பணம் பறித்து சென்றுள்ளான். பார்த்தீரா. நான் சொன்னபடியே அந்த ஆள் ஒரு பொய்யன் தான். என்றார்.

 

மேலும் அவர் கீழே உள்ள காவலாளியிடம் இனி யார் வந்து கேட்டாலும் அவர்களை மேலே அனுப்பாமல் எங்களிடம் சொல்லி அனுமதி பெற்றபின்னரே உள்ளே அனுப்பவேண்டும். என நான் சொல்லியிருக்கிறேன் என்றார்.

 

அதற்கு நான், அந்த ஆள் பொய் சொல்கிறான் எனத் தெரியும். பசிக்கிறது என்று சொல்லி அலுவலகத்தில் அழுகிறானே என்று தான் கொடுத்தேன். என்றேன். நீர் ஒரு வினோதமானவர் தான். என சொல்லி சென்றார். 

 


ஒருவேளை அந்த ஆள் வெளியில் இருக்கும்போது கேட்டிருந்தால் கொடுத்திருப்பேனா என்பது சந்தேமே. ஏமாற்றப்படுகிறோம் எனத்தெரிந்தே ஏமாந்தது அங்கேதான். அதற்குப்பிறகு ஏமாறவில்லை.

 


 



        

 தொடரும்

27 கருத்துகள்:

  1. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்பே இந்த அளவுக்கு, வெளியூரில் ஏமாற்ற முயன்றிருப்பது அதிர்ச்சியையே அளிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறதென்றால், அந்தக் காலங்களில் அந்த அளவுக்கு சிந்திக்கும் அளவுக்கு மக்களில் சிலர் இருந்திருக்கின்றனர். இப்பொழுது சமூகமோ, அரசாங்கமோ நடத்தையை ஒரு பொருட்டாக மதிப்பது குறைந்துவிட்டது. கல்வியில் நன்னடத்தை ஒரு கட்டாயப்பாடமாக வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஏமாற்றிப் பிழைப்பதென்பது காலங்காலமாய் நடந்து வருகிறது. நாம் தான் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் சொல்வதுபோல் பள்ளியில் நன்னடத்தை பற்றிய ஒரு பாடம் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும்.

      நீக்கு
  2. இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கின்றன.ஏமாற்றுபவர்களின் modus operandi

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. இரக்கம் கொள்வதுகூட நமது வாழ்வில் இறக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது புரிகிறது ஐயா, கடந்த பதிவில் அவரை அழவிடாதீர்கள் எனக்கேட்டு கொண்டதற்காக வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தேவகோட்டை KILLERGEE அவர்களே! இரக்கப்படலாம் இரக்கப்பட வேண்டியவைகளுக்கு. ஆனால் இது போன்ற ஏமாற்றுப்
      பேர்வழிகளிடம் அது தேவையில்லை.

      நீக்கு
  6. சில சமயம் டீக்கடை பஸ் ஸ்டேண்ட் போன்றவற்றிலும் இதுபோல உரிமையாக வந்து தெரிந்தவர் போல பேசி பணம் கேட்கிறார்கள்! வித்தியாசமான அனுபவம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  7. இரண்டு பதிவுகளையும் ஒன்றாகப் படித்தேன் சரியாகச் சொன்னீர்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். நான் ஏமாந்த கதையை பம்பாய் நினைவுகள் பதிவில் எழுதி இருக்கிறேன் பம்பாயில் மலிவாக டெரிலின் துணி என்று கூறி என்னை ஏமாற்றிய ( நான் ஏமாந்த) கதை பதிவில் . .

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் பம்பாயில் ஏமாந்த கதையை தேடிப் படிக்கிறேன்.

      நீக்கு
  8. இது ஒரு விதமான கௌரவ பிச்சை......

    சென்னை பார்க் ஸ்டேஷனில் ஒரு இளைஞர், ஆங்கிலத்தில் “நான் ஹைதையிலிருந்து வந்தேன். என் பெட்டி, பணம் எல்லாம் திருடு போய்விட்டது, நூறு ரூபாய் கொடுங்கள்” என்று கேட்பார்..... அந்த ஆசாமியை முதல் முறை பார்த்தபோது பரிதாபமாக இருந்தாலும் சந்தேகம் இருந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பார்த்தபோது சந்தேகம் கொண்டது சரிதான் என்பது நிரூபித்தார்!

    வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை மதராசி என அழைத்து கிண்டல் செய்வது இப்பவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! பலர் நம்முடைய இரக்கத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதின் விளைவுதான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம். ஏனோ தெரியவில்லை. வட இந்தியர்களுக்கு நாம் என்றால் இளக்காரம் தான்.

      நீக்கு
  9. நல்ல வேளை பத்து ரூபாயுடன் முடிந்தது. இத்தகையோருக்கு முகராசியும் இருக்குமாம். ஆதலால்தான் அவர்களால் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்க முடிகிறது என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். சிலருக்கு முகராசியோடு, ஏமாற்றும் திறனும் இருக்கிறது என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். அதுபற்றி வரும் பதிவுகளில் எழுதுவேன்.

      நீக்கு
  10. People tend to exploit human weaknesses in numerous ways. Knowing fully well that the person was attempting to con you, you decided to help him out of compassion. But there have been numerous instances of people getting be-fooled in identical ways.throwing caution to winds. Greed is the reason. Do we not read regularly about people getting cheated by Chit funds. Con men appear to be smarter who seem to innovate different ways to fool people. I am reminded of the greatest con man MR.NATWARLAL who was a perverted genius.

    பதிலளிநீக்கு

  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். இரக்கப்பட்டே அவருக்கு பணம் கொடுத்தேன். ஏமாற்றுபவர்கள் மக்களின் இரக்க குணத்தையும், எளிதில் நம்பிவிடும் சிலரையும் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு பணம் பறித்து செல்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் தாங்கள் குறிப்பிட்டுள்ள மோசடிப்பேர்வழியான நட்வர்லால் என்கிற மிதிலேஷ் குமார் ஸ்ரீவத்சவா அருகே கூட வர முடியாது. ஏனெனில் அவர் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும், குடியரசுத்தலைவர் மாளிகையையும் பாராளுமன்ற கட்டிடத்தையும் ‘விற்றவர்’ ஆயிற்றே.

    பதிலளிநீக்கு

  12. இது மாதிரியான ஆசாமிகள் திட்டமிட்டே ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு நொடியில் ஏமாந்து விடுகிறோம். ஒன்று நம்மிடம் பணம் பறிப்பார்கள். அல்லது நமது பெயரைப் பயன்படுத்தி நம்மைச் சார்ந்தவர்களிடம் பணம் பறிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  13. நான் சற்று தாமதமாக தங்களின் இந்த தொடரை படிக்கிறேன்.

    அடடா!!!, இப்படிப்பட்டவர்களால் தான், உண்மையாக இரக்கப்பட வேண்டியவர்களிடம் இரக்கப்படமுடியாமல் போய்விடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  14. அன்புடையீர்,

    தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

    http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

    அன்புடன்,
    எஸ்.பி.செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

      நீக்கு
  15. ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்~ அவர்கள் மனம் அப்படி!
    பரிதாபப்பட்டு பணம் கொடுக்கிறோம் ~நமது மனம் இ்படி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு அ.முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களே!

      நீக்கு