சனி, 21 மார்ச், 2009

யாக்கை நிலையாமை

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்றார் கண்ணதாசன்.

அவருக்கு வேண்டுமானால் 'மரணமில்லாமல்' இருக்கலாம்.
ஆனால் நம்மைப்போன்றோர்க்கு ?

பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டும் என்பது இயற்கை.
இதையேதான் கவியரசர் இன்னொரு பாடலில் சொல்லுவார்.

'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது' என்று

நம்மில் பலர் தாங்கள் நிரந்தரமானவர்கள் என எண்ணிக்கொண்டு அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை. இவர்களை சுற்றி இருக்கின்ற துதிபாடிகள் அள்ளி வீசும் புகழ்ச்சியிலேயே மிதந்துகொண்டு இருக்கும் இவர்கள் ஒரு நாள் இவ்வுலைகைவிட்டு மறைய நேரிடும் என்பதும் அப்புறம் இவர்களை யார் நினைத்து பார்ப்பார்கள் என்பதையும் அறிந்தால் இவர்கள் நிச்சயம் அடக்கியே வாசிப்பார்கள்.

மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் மதிப்பு. இறந்த மறு வினாடியே அவன் பிணம் தான். பேச்சு வழக்கில் கூட 'பிணத்தை எப்போது எடுக்கிறார்கள்? என்பார்களே தவிர அவனது பெயரைச்சொல்லி எப்போது எடுப்பார்கள் எனக்கேட்கமாட்டார்கள். எல்லா 'காரியத்தையும்' முடித்துவிட்டு அவனை ஒரேயடியாக மறப்பது தான் உலக வழக்கு.(சில விதி விலக்கு இருக்கலாம்)

இதைப்பற்றி திருமூலர் திருமந்திரந்திலே சொல்லுவார்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

மனிதன் இறந்தபிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டு, பின்பு அவனுக்கு பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றி மறந்துபோகிறார்களாம்.

இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!

7 கருத்துகள்:

  1. Well said. In simple terms.If only everyone realizes this our planet would be a beautiful place to live in. Vasudevan

    பதிலளிநீக்கு
  2. தங்களது வருகைக்கும் ஆதரவான கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. அய்யா,
    திருமூலரின் பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.இதே பாடலைப் பற்றி நான் எனது பதிவில் எழுதியுள்ளேன்.படித்துப் பாருங்கள்.
    http://shravanan.blogspot.com/2007/08/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.திருமந்திர மேற்கோள் அருமை.இதே பாடலை அடிப்படையாகக் கொண்டு நான் எழுதிய பதிவின் சுட்டி-
    http://chennaipithan.blogspot.com/2008/09/blog-post_1311.html

    please remove word verification.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு மதுரை சொக்கன் அவர்களே. தங்களது இரு பதிவுகளையும் படித்தேன். சரியான இடத்தில் திருமந்திரத்தை கையாண்டிருக்கிறீர்கள். மனதை மிகவும் தொட்டது.
    தாங்கள் சொல்லியபடி Word verification ஐ எடுத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் இதற்கு முன்பு நாம் சேர்க்கப் பொருத்தமான பாடல் ஒன்று திருமந்திரத்தில் உண்டு.

    “அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே

    என்பதது.

    இரண்டும் வெவ்வேறு இடத்தில் திருமந்திரத்தில் இருந்தாலும் இணைத்துக் காணத் தோன்றியது.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! திருமந்திரத்தில் உள்ள இன்னொரு பொருத்தமான பாடலை தந்தமைக்கு நன்றி! தங்களின் பின்னூட்டம் மூலம் நானும் தெரியாத பலவற்றை தெரிந்துகொள்கின்றேன்.

      நீக்கு