ஞாயிறு, 15 நவம்பர், 2009

சிவபூஜையில் கரடி!

நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.

கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

நான் இந்த சொல்லாடலை நினைக்க காரணம் இருக்கிறது. நான் முன்பு எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அவர்களது பூஜை முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அந்த நேரத்தில் யாரும் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆனால் அப்பா பூஜை செய்யும்போது 'கரடி' போல குறுக்கிட்டு இடையூறு செய்தார் ஒருவர்.

அவர் வேறு யாருமல்ல. எங்கள் ஊர் மணியக்காரர் தான். அவர் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊரைச்சேர்ந்தவர். அதோடு எங்களுக்கு தூரத்து உறவினரும் கூட.

(1980 க்கு முன்னால், கிராமங்களில் அரசுக்கு வரவேண்டிய நிலவரி வசூலிப்பதற்கும் மற்றும் மற்றைய வருமான (Revenue) சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிப்பதற்கும் மணியக்காரர் என்றும் கணக்கப்பிள்ளை என்றும் அலுவலர்கள் இருந்தார்கள். 1980 ல் திரு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இந்த பதவிகளை அவசர சட்டத்தின் மூலம் நீக்கிவிட்டு கிராம வளர்ச்சி அலுவலர் என்ற ஒரே பதவியை ஏற்படுத்தினார். அவர்கள் அப்போது முழு நேர அரசு ஊழியர்கள் இல்லை என்றாலும் கிராமத்தில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஏனெனில் அவர்கள் நினைத்தால் ஒன்றுக்கும் உபயோகமில்லாத நிலத்திற்கு வரியை உயர்த்த முடியும். மாட்டு வண்டியை தெருவில் நிறுத்தினால் வரி வசூலிக்க முடியும்.அதனாலேயே அவர்களை யாரும்பகைத்துக்கொளவதில்லை.)

அந்த நிகழ்வு நடந்த நாளில், எங்கள் ஊருக்கு தாசில்தார் தேசிய சேமிப்பு திட்டத்திற்கு வைப்பு நிதி பெற வந்திருந்தார். அவர் வருவதை முன்பே தண்டோரா போட்டு தெரிவித்திருந்தனர். அன்றும், ஏன் இன்றும் கூட அரசின் சேமிப்பு பத்திரங்கள் வற்புறுத்திதான் விற்கப்படுகின்றன! எல்லோரும் தாசில்தார் வந்ததும் சாவடி அருகில் கூடினர். அப்பா பூஜையில் இருந்ததால் உடனே போகமுடியவில்லை.

அப்பா வரவில்லை என கணக்கப்பிள்ளை சொல்லியிருக்கிறார்.
உடனேதாசில்தார் 'ஏன் அவர் வரமாட்டாராமா? போய் அழைத்து வாருங்கள்' என சொன்னதும் மணியக்காரர் 'நானே போய் அழைத்து வருகிறேன்' என சொல்லி எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவிடம் எங்கள் அப்பா எங்கே எனக்கேட்டதும் அவர்கள் பூஜையில் இருப்பதாகக் கூறி, பூஜை முடிந்தும் வருவார் என கூறினார்கள்.

அவர் உடனே.'என்ன பெரிய பூஜை! தாசில்தார் வந்திருக்கிறார். அவர் கூப்பிட்டிருக்கும்போது வரவேண்டாமா? எனக்கூறிவிட்டு விடுவிடு என்று அப்பா பூஜை செய்யும் இடத்திற்கே வந்து சப்தம் போட்டு அப்பாவைக்கூப்பிட்டார்.

அம்மா 'அவர்களை பூஜை செய்யும்போது தொந்தரவு செய்யாதீர்கள்' என சொல்லியும் கேட்காமல் அப்பா பூஜை செய்யும்போது இடையூறு செய்தார். ஆனால் அப்பா எதுவுமே நடக்காதது போல் பூஜையிலே ஈடுபட்டிருந்தார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் சிவ பூஜையை நடக்க விடாமல் இப்படி தடுக்கிறாரே என்ன ஆகுமோ என பேசிக்கொண்டார்கள்.

அப்பா பூஜை முடிந்தவுடன் தாசில்தாரை போய் பார்த்து வந்தார்கள். அப்பாவும் மணியக்காரரிடம் 'ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' எனக்கேட்கவில்லை. எல்லோரும் அப்பாவிடம் 'அவர் உறவினாயிருந்தும் உங்களைப்பற்றி அறிந்திருந்தும் இவ்வாறு செய்தாரே?' என சொன்னபோதும் அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

இது நடந்து ஓரிரு நாட்களில் அந்த மணியக்காரருக்கு 'பக்க வாத நோய்' வந்து கையும் காலும் செயலிழந்து வாய் பேசமுடியாமல் குழறுகிறார் என செய்தி வந்த போது 'சிவ பூஜையை தடுத்ததால் தான் அவருக்கு இந்த தண்டனை' என்று ஊரே சொல்லியது. அவர் கடைசிவரை அவ்வாறு இருந்தே காலமானார்.

'காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற்போல்' அவருக்கு ஏற்பட்டது அவரது உடற்கூறு காரணமாக நடந்திருக்கலாம். அவர் அப்பாவின் பூஜையை தடுத்ததற்கும் அவருக்கு ஏற்பட்ட வியாதிக்கும் தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம்.ஆனாலும் கூட 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பழமொழி உண்மைதானோ!

9 கருத்துகள்:

 1. மணியக்காரர் தம் கடமையைத் தான் செய்தார் அவரும் உயர்ந்தவர்(இருந்தாலும் சற்று தாமதித்திருக்கலாம்)
  அதைப்பற்றி எதுவுமே கேட்டுக் கொள்ளாமலும் கோபப்படாமலும் அப்படியே விட்டுவிட்ட தங்கள் அப்பா அதைவிட உயர்ந்தவர்.
  மணியக்காரருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை இதற்காக காரணம் காட்டாமல்
  //காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற்போல்' அவருக்கு ஏற்பட்டது அவரது உடற்கூறு காரணமாக நடந்திருக்கலாம். அவர் அப்பாவின் பூஜையை தடுத்ததற்கும் அவருக்கு ஏற்பட்ட வியாதிக்கும் தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம்.//
  என்று யதார்த்தத்தை எழுதியுள்ள தாங்கள் எம் பார்வையில் உயர்ந்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் ஒரு நல்ல ஆன்மீகவாதியின் மகனல்லவா?

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரியே. எங்கள் அப்பா, அவரவர்கள் கடமையை அவரவர்கள் செய்யவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். அவ்வாறே நடந்தார்கள். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே!.

  பதிலளிநீக்கு
 3. அன்பு தோழர் அவர்களுக்கு...

  'சிவ பூஜையில் கரடி' என்ற சொல்லாடலுக்கு விளக்கம் கிடைக்குமோ என ஆவலாய்ப் படித்தேன்... ம்..ம்... பரவாயில்லை..

  என்னிடம் தாங்கள் கேட்ட இரு பாடல்களில் சங்கே முழங்கு பாடலை கொடுத்திருக்கிறேன் சென்று பார்க்கவும்...

  http://moganaraagam.blogspot.com/2009/11/blog-post_30.html

  தாங்கள் கேட்ட மற்றொரு பாடலை நாளை வலையேற்றுகிறேன்...

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள திரு மோகனன்,
  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களது வலைப்பதிவை பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. கண்ணதாசன் எழுதியது நினைவுக்கு வருகிறது . பணக்காரன் ஒருவன் \தன் வேலைக்காரனை இடது காலால் உதைக்கிறான் திருடிய பழி சாற்றி..
  பிறகு அவன் இடது கால் பயனற்று போகிறது காரணம் பணியாள் குற்றம் புரியாதவன். ஏன் இடது கால் ...வாசு

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே.

  பதிலளிநீக்கு
 8. “ சிவ பூசையில் கரடி ”

  இந்தப் பழமொழியைக் குறித்து இது வரை சிந்தித்ததில்லை.

  ஏதேனும் தோன்றினால் பகிர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ‘
   அந்த குறிப்பிட்ட நிகழ்வில் மணியக்காரர் என் தந்தையின் சிவ பூஜையில் குறுக்கிட்டதால் நான் ‘சிவபூஜையில் கரடி’ என்ற தலைப்பில் அது பற்றி இந்த பதிவில் எழுதினேன். சிவபூஜையில் கரடி’ என்று சொல்லாடல் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்


   நீக்கு