திங்கள், 13 ஜூன், 2011

நினைவோட்டம் 46

என் அண்ணனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு.
யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே பதில்
எழுதிவிடுவார்.

அந்த பழக்கம் எனக்கும் தொத்திக்கொண்டது.எந்த
கடிதம் வந்தாலும் அதைப்படித்தவுடனே பதில்
எழுதுவது என் வழக்கமாக ஆகிவிட்டது.

அதுவே பின்னால் வங்கியில் வேலை செய்யும்போது
தலைமை மற்றும் வட்டார அலுவலகத்திலிருந்து வரும்
அஞ்சல்களுக்கு உடன் பதில் எழுதுவது என்பது
தானாகவே வந்துவிட்டது.

இன்றைக்கும் மின் அஞ்சல் மூலம் வரும்
அஞ்சல்களுக்கும் உடன் பதில் எழுதிக்கொண்டு
இருக்கின்றேன்.

(இந்த நேரத்தில் ஒன்றை சொல்லியாகவேண்டும்.
எனக்கு திருமணமாகிய போது புது டில்லியில்
இருந்தேன். காலை 8.30 மணிக்கு அலுவலகம்
கிளம்பினால் மாலை வீட்டுக்கு 6 மணிக்கு மேல்
தான் வருவேன்.வந்தவுடன் காஃபி கூட சாப்பிடாமல்
அன்றைக்கு வந்த கடிதங்களைப் படித்துவிட்டு
உடனே ‘இன்லண்ட் கடிதத்தில்’ பதில்
எழுதிவிட்டுத்தான் மற்ற வேலைகளைப்பார்ப்பேன்.
இது பற்றி இன்றும் என் மனைவி
சொல்லிக்கொண்டிருக்கிறார்.)

என் அண்ணன் தான் செய்யவேண்டிய காரியங்களை
ஒரு சிறிய காகிதத்தில்(Note Pad ல்)வரிசை எண்
இட்டு குறித்துக்கொள்வார்.பின்னால் அந்த காரியங்கள்
முடிந்ததும் அவைகளை குறிப்பு நோட்டிலிருந்து
நீக்கிவிடுவார்.அதனால் நினைத்த காரியங்களை
மறக்காமல் அவர் செய்வதை பார்த்திருக்கிறேன்.

அதையே பின் பற்றி,நானும் பின் நாட்களில் வங்கியில்
வேலை செய்யும்போது செய்யவேண்டிய வேலைகளை
மேசை காலண்டரில் குறித்துவைத்து பணியை
மறக்காமல் செய்து முடித்ததுண்டு.

இன்றைக்கும் ஏதேனும் ஊருக்கு செல்லும்போது எடுத்து
செல்ல வேண்டியவைகளை முன்பே பட்டியலிட்டு
வைத்துக்கொண்டு,கிளம்பும்போது அந்த
பட்டியலைப்பார்த்து எடுத்துசெல்வதை
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

வீட்டில் அண்ணன் எல்லா பொருட்களையும் புத்தகங்கள்
உட்பட அழகாக ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்.
அவருக்கு தெரியாமல் யாராவது எந்த பொருளையாவது
எடுத்திருந்தால் அவருக்கு நிச்சயம் தெரிந்துவிடும்.

காரணம் எடுப்பவர்கள் அவைகளை அந்த இடத்தில்
வைக்க மாட்டார்கள். நான் மட்டும் புத்தகங்களை
எடுத்தால் அதே இடத்திலேயே வைத்துவிடுவேன்.
ஆனால் அவர் போல் பொருட்களை ஒழுங்காக வைக்கும்
பழக்கம் மட்டும் எனக்கு வரவில்லை.

என் அண்ணன் கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர்,
பேச்சாளர் என்று பல முகங்களைக் கொண்டவர்.

பள்ளியில் படிக்கும்போதே எங்கள் ஊர் பள்ளியின்
ஆசிரியர் ஐயா அவர்களைப் பற்றி ‘எங்கள் வாத்தியார்’
என்று 'ஆனந்த போதினி'இதழில் எழுதியிருக்கிறார்.
பின்னால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
படிக்கும்போது 'குழந்தை தெய்வம்’ என்ற
சிறுகதையை ‘ஆனந்த விகடனில்’ மாணவர்
திட்டத்தின் கீழ் எழுதி பரிசும் பெற்றிருக்கிறார்.
அவருடைய கதைகள் குமுதம், ஆனந்த விகடன்
போன்ற இதழ்களில் வந்திருக்கின்றன.

முதலில் ‘சபா’ என்ற புனைப்பெயரிலும் பின்பு
வே.சபாநாயகம் என்ற அவரது பெயரிலும் அநேக
கதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார்.போட்டிகளுக்கு
அனுப்பப்பட்ட அவரது நாவல்களும் கதைகளும் பரிசை
வென்றிருக்கின்றன.

என் அண்ணன் எழுத்தாளராக இருந்ததால் அநேகமாக
எல்லா இதழ்களையும் வாங்கிவிடுவார்.எனக்கு தெரிந்து
‘கணையாழி’ இதழ் வெளியான நாள் முதல் அது
நிறுத்தப்படும் வரை வெளிவந்த அனைத்து
இதழ்களையும் அவர் இன்னமும் பேணிப்பாதுகாத்து
வருகிறார்.

அப்போது வெளிவந்த ‘சரஸ்வதி’ மற்றும்
சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ போன்ற இதழ்களை
அவர் வாங்கியதால் அவைகளை படிக்கும் அனுபவமும்
எனக்கு கிடைத்தது.அந்த இதழ்களை அவர்
இல்லாதபோது அவருக்குத் தெரியாமல் படித்துவிட்டு
அந்த இடத்திலேயே வைத்துவிடுவேன்.

திரு சுந்தர ராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின்
கதை’யையும் திரு ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச்சோறு’
கதையையும் அப்படி படித்தது, இன்னும் எனது
நினைவில் உள்ளது.

திரு.புதுமைப்பித்தன் எழுத்தும்,திரு.வல்லிக்கண்ணன்
எழுத்தும், திரு.ஜானகிராமனின் எழுத்தும்,
திரு.தி.ஜ.ர வின் எழுத்தும் எனக்கு அறிமுகமானது
அப்போதுதான்.

என் அண்ணன் நிறைய சிறுகதை தொகுப்புகள்,
நாவல்கள் மற்றும் ‘பைண்ட்’ செய்யப்பட்ட
தொடர் நாவல்கள் என்று ஏராளமான புத்தகங்கள்
எங்கள் ஊரில் உள்ள ‘அலமாரி’யில் வைத்திருப்பார்.

ஏனோ அந்த புத்தகங்கள் மேல் கறையான்களுக்கும்
‘ஆசை’ வந்துவிட்டதால் பாதிக்கு மேல் காணாமல்
போனது துரதிருஷ்டமே.

(இன்றைக்கும் கூட விருத்தாசலத்தில் உள்ள என்
அண்ணனின் மாடி அறை முழுதும் புத்தகங்களே
நிறைந்து இருக்கின்றன.)

ஊருக்கு விடுமுறைக்கு செல்லும்போது, கல்கியின்
‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’,
பார்த்திபன் கனவு’ மற்றும் தேவனின் ‘சி.ஐ.டி சந்துரு’,
’மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ போன்ற
நாவல்களை குறைந்தது 4 அல்லது 5 தடைவையாவது
படித்திருப்பேன்.

சமீபத்தில் கூட தேவனின் மேற் சொன்ன மூன்று
நாவல்களையும் ஒரே மூச்சில் திரும்பவும் படித்தேன்.

என் அண்ணன் கதைகள் எழுதி அனுப்பி, அவைகள்
பிரசுரமாவதைப் பார்த்ததும், எனக்கும் கதைகள் எழுத
ஆசை வந்தது!!


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. //என் அண்ணன் கதைகள் எழுதி அனுப்பி, அவைகள்
    பிரசுரமாவதைப் பார்த்ததும், எனக்கும் கதைகள் எழுத
    ஆசை வந்தது!!//
    எழுதியிருந்தால் அவற்றையும் வெளியிடுங்களேன்,ரசிக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. நான் எழுதிய கதையைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.
    நல்ல பழக்கங்களை நடைமுறைப் படுத்தி விட்டால் வாழ்க்கை எளிதாக இருக்கும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பொறுமையாக சலிக்காமல் ஒவ்வொரு நாளும் தங்கள் பணி புரியும் பாணியை கண்டு தங்களுடன் பணி புரிந்த காலத்தில் அதிசயித்து உள்ளேன் ; பலரிடமும் அதை பற்றி கூறியும் உள்ளேன் . தங்களுக்கு தூண்டுகோலாக தங்கள் அண்ணன் இருந்தது தெரியவருகிறது . அண்ணனிடமிருந்து பல நல்ல பழக்கங்களை கற்றுகொண்டது பாராட்டுக்குரியது . உங்களுடைய சில முகங்களை நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம் . ( ஓவியம் / கட்டுப்பாடு ) . இன்னும் சில பாக்கி உள்ளது ( எழுத்து ) வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
    திரு.வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு