வியாழன், 16 ஜூன், 2011

நினைவோட்டம் 47

நான் கதை எழுத நினைத்த நேரம் பார்த்து, கல்கியில்
‘மாவட்டசிறுகதைகள்’ என்ற தலைப்பில் ஒரு போட்டி
வைத்திருந்தார்கள்.

அந்த போட்டிக்கு அனுப்பும் கதைகள் அந்தந்த
மாவட்டத்தின் நிகழ்வுகள்,சம்பந்தப்பட்டிருக்க
வேண்டும் என்பது விதி.

நான் எனது மாவட்டமான தென் ஆற்காடு மாவட்டம்
சார்பாக எழுத ஆசைப்பட்டேன்!!!!

முதல் கதையை அதுவும் பல முது பெரும்
எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் போட்டிக்கு
அனுப்ப நினைத்த எனது எண்ணம் ஆசை
அல்ல பேராசை என்றே எண்ணுகிறேன்.

இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்புதான்
வருகிறது.எனது முயற்சியை அசட்டுத் துணிச்சல்
என்பதா அல்லது அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை(!)
என எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.

என்ன எழுதலாம் என யோசித்த போது, அப்போது
செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது.
பெண்ணாடம்(பெண்ணாகடம்) பக்கம் ஒருவர் தனது
மனைவியின் தலையைத்துண்டித்து எடுத்துக்கொண்டு
வந்து, காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்
என்பது தான் அது.

நாம் ஏன் இந்த நிகழ்வை ‘கரு’வாக எடுத்துக்கொண்டு
எழுதக்கூடாது என எண்ணி எழுதத் தொடங்கினேன்.
கதையின் நாயகன் ஒரு சந்தேகப்பேர்வழி என்றும்,
தினம் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை
போடுபவன் என்றும், ஒருநாள் குடிபோதையில்
மனைவியை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டிவிட்டு,
தலையுடன் வந்து ‘சரண்’ அடைவதாகவும், பின்னால்
தான் செய்த தவறை உணர்ந்து காவல்
நிலையத்திலேயே தூக்கு போட்டு இறந்துவிடுவதாகவும்
கதையை அமைத்திருந்தேன்.

அப்போதெல்லாம் ‘கதை’ எப்படி எழுதுவது
என்பதை பற்றி, திரு எஸ்.ஏ.பி போலவோ,
திரு சுஜாதா போலவோ யாரும் புத்தகம்
எழுதவில்லை.

எனவே கதையை எப்படி ஆரம்பிப்பது என
யோசித்தபோது,‘கல்கி’அவர்கள் பொன்னியின்
செல்வன் நாவலில் முதல் அத்தியாயத்தில்
வந்தியத்தேவன் குதிரையில் வரும்போது,
வீராணம் ஏரியை வர்ணித்திருப்பது நினைவுக்கு
வந்தது.

நாமும் அதுபோல் ஆரம்பிக்கலாமென்று எண்ணி,
பெண்ணாடத்தில் ஓடும் வெள்ளாற்றின் கரையோரம்,
எனது கதையின் நாயகன் வசிப்பதாகவும், ஒருநாள்
வெள்ளம் வருகையில் அவன் குடித்துவிட்டு
ஆற்றைக்கடந்து வீட்டுக்கு வருவதுபோல்
ஆரம்பித்திருந்தேன்.

எனக்கு தெரிந்த நடையில் வெள்ளாற்றின்
வெள்ளத்தை, அதன் வேகத்தை, வெள்ளம்
சுழித்துக்கொண்டு கரைபுரண்டு ஓடியதை
வர்ணித்திருந்தேன்.

கதை முடியும்போது, அவனது பிணத்தை
காவல்துறையினர் அவனது உறவினர்களிடம்
ஒப்படைப்பதாகவும், அவனது உடலை ஆற்றின்
கரையோரம் எரியூட்டியபோது, வெள்ளாறு
சப்தமில்லாமல் ஓடியது, தனது அனுதாபத்தை
தெரிவிப்பது போல் இருந்ததாக,முடித்திருந்தேன்.

நான் அப்போது பள்ளி இறுதி ஆண்டு
படித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணனுக்கு
தெரியாமல் ,அவர் வீட்டில் இல்லாதபோது முழு நீள
வெள்ளைத்தாளில் எழுதி ‘கல்கி’ அலுவலகத்திற்கு
அனுப்பிவிட்டு காத்திருந்தேன்.

முடிவு வருவதற்குள் ஏகப்பட்ட கற்பனைகள். எனது
கதை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது போலவும்.
எனது புகைப்படம் ‘கல்கி’யில் வருவது போலவும்,
அண்ணன் உட்பட அனைவரும் என்னை
பாராட்டுவதுபோலவும் ஏராளமான பகல் கனவுகள்!



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. முழுக்கதையையும் இப்போது வெளியிடுங்களேன்.நன்றாக இருக்கும் போல இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
    அந்த கதையை வெளியிடும் சிரமம் பற்றி அடுத்த பதிவில்!

    பதிலளிநீக்கு