திங்கள், 25 ஜூலை, 2011

எல்லா உயிரும் தொழும்! எப்போது? 2

அந்த இறைச்சி வெட்டும் கூடம் கிராமத்து வீடுகளில்,
தாழ்வாரமும் நடுவே முற்றமும் இருக்குமே,
அதுபோல் இருந்தது.முற்றம் கம்பி வலையால்
மூடப்பட்டிருந்தது.

தாழ்வாரத்தின் ஓரம் ஒரு கட்டுமஸ்தான தேகம்
படைத்த ஒருவர் கையில் பெரிய பட்டாக் கத்தியுடன்
உட்கார்ந்திருந்தார்.அவருக்கு உதவியாக ஆட்கள்
நின்றிருந்தனர்.

அவருக்கு எதிரே ஆடுகளை வெட்ட,வட்டமான
மரத்தாலான பலகை போல் ஒன்று இருந்தது.
(இப்போது இறைச்சி கடைகளில் இறைச்சியை
துண்டமாக்கி தர வைத்திருக்கிறார்களே
அதுபோல பெரிய அளவில்)

அவருக்கு அருகில் ஆட்டின் இரத்தத்தோடு கூடிய
ஒரு பெரிய கொப்பரை இருந்தது.அருகில் தேங்காய்
குவியல் போல் அதுவரை வெட்டப்பட்ட ஆடுகளின்
தலைகள் கிடந்தன. பக்கத்தில் வெட்டப்பட்ட
ஆடுகளின் தோல்களும்,எலும்புகளும் கிடந்தன.

கம்பிவலைக்கு கீழே வெட்டப்பற்ற ஆடுகளின்
சதைப்பகுதிகள், நமது வீடுகளில் சட்டைகளை
மாட்டி வைத்திருப்பதுபோல்,வரிசையாய்
தொங்கவிடப்பட்டிருந்தன.

கம்பி வலைக்கு மேலே அநேக காக்கைகள்
உட்கார்ந்திருந்தன. அந்த சதைப்பகுதிகளிலிருந்து
சில துண்டங்களாவது கிடைக்காதா என்ற
நைப்பாசையில் அவைகள் உட்கார்ந்து இருந்தது
போல் தெரிந்தது.

வெட்டப்படாமல் இருந்த இரண்டு ஆடுகளும்
மிரட்சியோடு நின்றிருந்தன.ஒருவேளை அந்த
ஆடுகளால் பேசமுடிந்திருந்தால்,‘எங்களை
விட்டுவிடுங்கள்.’என்று கெஞ்சி இருக்கும்.

அந்த காட்சிகளைப் பார்த்த எனக்கு என்னவோபோல்
இருந்தது.ஏனெனில் அதுபோன்று காட்சிகளை
நான் பார்த்ததில்லை.

எங்களைப் பார்த்ததும்,என் அண்ணனிடம்
‘வெட்டலாமா சார்?’ என அந்த ஊழியர் கேட்டார்.
‘சரி’என என் அண்ணன் சொன்னவுடன்,அந்த
இரண்டு ஆடுகளையும் இழுத்து பலகையில் வைத்து
ஒன்றன் பின் ஒன்றாக கையில் இருந்த கத்தியால்
அவைகளின் கழுத்தை ஒரே வெட்டில் துண்டித்துவிட்டார்.

(ஆடுகள் வெட்டப்படுவதை நான் பார்க்கவேண்டும்
என்பதற்காகத்தான், இரண்டு ஆடுகளை நாங்கள் உள்ளே
செல்லும் வரை வெட்டவேண்டாம் என என் அண்ணன்
சொல்லியிருக்கிறார்.)

அந்த நேரத்தில் பீரிட்டு எழுந்த இரத்தமும்,
அந்த ஆடுகள் துடித்த துடிப்பும் பார்க்க என்னை
என்னவோ செய்தது.மயக்கம் வரும்போல் இருந்தது.

அருகில் நின்ற மற்றொருவர் வெட்டிய தலையை,
இளநீர் வெட்டும் இடத்தில் தூக்கிப் போடுவார்களே,
அதுபோல் போட்டுவிட்டு,முண்டமான உடலை
எடுத்து அருகில் இருந்த கொப்பறையில் கவிழ்த்தார்.

இரத்தம் எல்லாம் அதில் வடிந்தவுடன், அருகில்
இருந்த இன்னொருவர் ஆட்டின் உடலின் அடி
வயிற்றை கத்தியால் பிளந்து, உடலிலிருந்த
தோலையும் எலும்புகளையும் இலாகவமாக
எடுத்துவிட்டு, சதைப் பிண்டத்தை அருகில் உள்ள
தொட்டியில் நன்றாக கழுவி விட்டு பின் ஒரு
கொக்கியில் மாட்டி கம்பி வலையில் தொங்கவிட்டார்.

அதன் பிறகு என் அண்ணன்,அங்கு தொங்கிக்
கொண்டு இருந்த ஒவ்வொரு ஆட்டின் சதைப்
பகுதிகளை,உறைகள்(Gloves) அணிந்து
இருகைகளாலும் விலக்கிப் பார்த்து அவைகளில்
நோயுற்றவை ஏதேனும் உள்ளதா என
ஆய்வு செய்தார்.

(வெட்டுவதற்கு முன் ஆட்டின் கண்ணையும்,
காதையும் பார்த்திருந்தாலும்,அங்கே புலப்படாத
நோயின் தாக்கங்கள் உள்ளே சதைப் பகுதியை
ஆய்வு செய்யும்போது தெரியுமாம்.)

அவ்வாறு நோய் தாக்கப்பட்ட சில இறைச்சிகளை
நிராகரித்துவிட்டு மற்றவைகளை ஓ.கே செய்தார்.

அவர் கூடவே சென்ற அவரது உதவியாளர்,
ஓ.கே செய்யப்பட இறைச்சிகளுக்கு சான்றளித்ததன்
அடையாளமாக அரசின் முத்திரையை வைத்தார்.

அதற்குப்பின் தான் அவைகள் விற்பனைக்கு
அனுப்பப்படுமாம். நிராகரிக்கப்பட்டவைகள்
அழிக்கப்பட்டுவிடுமாம்.

ஆய்வு முடிந்ததும் என் அண்ணன் சிற்றுண்டி
உண்ண ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.
ஆனால் அங்கே எனக்குப்பிடித்த பூரி மசாலா
இருந்தும், என்னால் ஏனோ அவைகளை
சாப்பிடப் பிடிக்கவில்லை.

உள்ளிருக்கும் குடல் வெளியே வருவதுபோல்
ஒரு பிரமை. சாப்பிடமுடியாமல் வாந்தி
வருவதுபோல் இருந்தது.சரியாக சாப்பிடவில்லை.

என் கண் முன்னே, அந்த ஆடுகள் உள்ளே
வர அடம் பிடித்ததும், அவைகளின் கண்களில்
இருந்த மிரட்சியும், மரணபயமும், பின்பு அவைகள்
வெட்டப்பட்டபோது,அவைகள் துடித்த துடிப்பும்,
அங்கிருந்த ஆட்டுத்தலைகளின் குவியல்களும்,
இரத்தோடு கூடிய கொப்பரையும்,வந்து வந்து
போயின.

(45 ஆண்டுகள் கழிந்தாலும்,என்னால் அந்த
காட்சியை எனது மனத்திரையிலிருந்து இன்னும்
அகற்ற முடியவில்லை.)

ஒருவேளை சைவ உணவை உண்ணும் வழக்கத்தை
கொண்டு இருந்ததால் அந்த காட்சிகளை
‘ஜீரணிக்க’ முடியவில்லையோ என்னவோ.

இன்றைக்கும் நினைக்கிறேன். அசைவம் உண்ணும்
நண்பர்கள் அநேகம் பேர் இறைச்சிக்காக விலங்குகள்
வெட்டப்படுவதை நேரில் பார்த்திருக்கமாட்டார்கள்.

ஒருவேளை அந்த காட்சியை அவர்கள் பார்க்க
நேர்ந்தால், இவ்வாறு துடிதுடிக்க ஒரு
உயிரைக்கொன்று சாப்பிடவேண்டுமா என
எண்ணி நிச்சயம் அசைவம் உண்ணத்
தயங்குவார்கள் என்பது எனது எண்ணம்.

கொலைக்குற்றம் புரிந்தோருக்கு கூட மரண
தண்டனை அளிக்கக்கூடாது என்றும்,அந்த
தண்டனையை அறவே ஒழிக்கப்பட வேண்டும்
என்றும்,ஒரு உயிரைக்கொல்ல நமக்கு உரிமை
இல்லை என்றும் இப்போது நம்மில் பலபேர்
வாதாடிக்கொண்டிருக்கிறோம்.

அப்படி வாதாடிக்கொண்டு இருக்கிற இந்த
வேளையில்,வாயில்லா ஜீவனை மட்டும்
உணவுக்கே என்றாலும்,கொல்லலாமா என்பதே
எனது கருத்து.

அந்த விலங்குகளை கொல்வதை நிறுத்தினால்,
ஒருவேளை அந்த உயிரினங்கள் பேசமுடிந்தால்,
நம்மை வாழ்த்தும் என்றே நினைக்கிறேன்.

அதனால்தான் தெய்வப்புலவர் அன்றே சொன்னார்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


என்று.

(உணவுப்பழக்கம் என்பது தனிப்பட்டோரின்
விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நான் அறிவேன்.
எனவே இந்த பதிவில், வெளியிடப்பட்டிருக்கும் எண்ணங்கள்/கருத்துக்கள், எனது
கண்ணோட்டத்திலிருந்து எழுதப் பட்டது என்பதை,
புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.)

12 கருத்துகள்:

  1. //உள்ளிருக்கும் குடல் வெளியே வருவதுபோல்ஒரு பிரமை.//

    படித்த எனக்கே அப்படியிருக்கும் போது நேரில் பார்த்த உங்களுக்கு?
    அருமையான பகிர்வு1

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. படித்தவுடன் மனசு வேதனைப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. நீங்க சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மைதான்..
    வாயில்லாததால் என்னைகொல்லாதே என்று சொல்லக்கூட முடியாத ஜீவன்கள்...
    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கும், நன்றி
    திரு விடிவெள்ளி அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. I have read the two articles. Since I am also a vegetarian, I share your views. But there is another side to the same story. The Lord has created the carnivorous only to keep a check on the herbivorous and also to keep a balance of natural resources. If there is a world without the meat eating animals and humans, there would be no grass or plants for us to survive. I was talking to a Jain businessman who is having one of the most modern abattoirs in the country. When I asked him about the contradiction of a Jain in this business, he said that he was only following the natural order. Sorry I have given my views in English as I do not know how to type them in Tamil here.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் தங்களுடைய கருத்துக்கும் நன்றி திரு சாயி அவர்களே! நீங்கள் கூறுவது உண்மையே. ஆனாலும் இந்த நேரத்தில் மிருகங்களுக்கு இருப்பது போன்ற, இறைச்சியை கடிக்கும் பற்கள், பரிணாம வளர்ச்சியில் மனிதன் இழந்துவிட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உணவுப்பழக்கம் என்பது தனிப்பட்டோரின் விருப்பம் என்பதை நான் அறிவேன். அதனால் தான் எனது பதிவில் எனது கண்ணோட்டத்திலிருந்து எழுதியிருப்பதாக சொல்லியிருந்தேன். இருப்பினும் தங்களது மேலான கருத்துக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கின்றேன்.
    தமிழில் எழுதுவது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். கீழே உள்ள Link ஐ பார்க்கவும். அதில் கூறியபடி உள்ள மென்பொருளை பதிவிறக்கம்(Download) செய்து தமிழில் எழுதவும்
    .
    http://specials.msn.co.in/ilit/Tamil.aspx

    சந்தேகம் இருப்பின் திரு சூர்யா கண்ணன் அவர்கள் 16 டிசம்பர் 2010 ல் அவரது வலைப்பதிவில் (http://suryakannan.blogspot.com) எழுதியுள்ளதை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. well written ; deserves to be published widely. I am sure any one who reads would think twice, before venturing to eat non vegetarian stuff. Very descriptive and I could imagine the fear of the goats before being slaughtered. The hope the fear the struggle the helplessness of the goats which might have resigned to their fates has been vividly and graphically narrated. Your observations on the comments of Sh.Sai was very good . Vasudevan

    பதிலளிநீக்கு
  10. வரும் காலங்களில் எல்லா உயிர்களும் அனைவரையும் தொழும் காலம் வரும் என எண்ணுகிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு