அப்போதெல்லாம் கணித பாடத்திற்கே நூற்றுக்கு 
நூறு மதிப்பெண்கள் தருவது அபூர்வம்.அதிகபட்சம் 
90 மதிப்பெண்கள் தருவார்கள்.தமிழ் ஆசிரியர்கள் 
65 மதிப்பெண்களுக்கு மேல் தரமாட்டார்கள்.
இப்போதெல்லாம் தமிழ் பாடத்திற்கே 100 
மதிப்பெண்கள் தருகிறார்கள்.
நான் முன்பே எழுதி இருந்தபடி எனக்கு ஓராண்டு 
மூத்த மாணவரான நண்பர் திரு பார்த்தசாரதி 
(கல்பனா தாசன்)அவர்கள் தான் S.S.L.C (1959) 
தேர்வில்,மாநிலத்திலேயே சிறப்பு தமிழில் 95 க்கு 
மேல் மதிப்பெண் பெற்று,முதலாம் இடம் பெற்று 
ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தினார். 
பள்ளி இறுதி ஆண்டு வரும் வரை நான் கணக்கு 
பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை. 
பத்தாம் வகுப்பு படிக்கும்போது,ஒரு ஆசிரியர் எனது 
கணித பாட மதிப்பெண்களை கேட்டுவிட்டு,‘என்னப்பா, 
வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு’ 
என்பதை நிரூபித்துவிடுவாய் போல் இருக்கிறதே?’என 
வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் சொன்னது 
எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.அதை என் 
அண்ணனிடம் வேறு சொல்லி வெறுப்பு 
மூட்டியிருக்கிறார்.  
அந்த கேலியும்,கிண்டலும்,எனக்குள் தாக்கத்தை 
ஏற்படுத்தி ஒரு வைராக்கியத்தை 
உண்டுபடுத்தியது.பள்ளி இறுதி ஆண்டில்
கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எல்லோர் 
வாயையும் மூட வைக்க வேண்டும் என்பதே அது. 
 
என் அண்ணன் எனக்கு பள்ளியில் கணித ஆசிரியர் 
அல்ல. அவர் வேறு வகுப்புக்கு கணக்கு பாடம் 
எடுத்துக்கொண்டு இருந்தார்.
என் அண்ணனிடம் தனிப்பயிற்சி(Tuition)பெற 
மாணவர்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒன்பதாவது  
மற்றும் பத்தாவது படிக்கும்போது,நான் அவரிடம் 
Tuition படிக்காவிடிலும் பள்ளி இறுதி ஆண்டு 
(S.S.L.C) படிக்கும்போது,அவர் Tuition 
நடத்தும்போது நானும் அமர்ந்து பயிற்சி 
பெற்றிருக்கிறேன். 
S.S.L.C படிக்கும்போது,நடந்த காலாண்டு தேர்வில் 
என் அண்ணன் கொடுத்த பயிற்சியின்படி தேர்வை 
எதிர்கொண்டு நன்றாக செய்திருந்தேன்.தேர்வு முடிந்து, 
எங்கள் கணித ஆசிரியர் திரு இராசகோபாலன் அவர்கள், 
திருத்திய கணித பாட விடைத்தாளை எங்களிடம் 
கொடுக்கும்போது,‘இந்த தடவை முதல் மதிப்பெண் 
வாங்கியிருப்பவர்.....’ எனச்சொல்லி நிறுத்தினார். 
அவர் முகத்தை ஆவலோடு நாங்கள் பார்த்துக்கொண்டு 
இருக்கும்போது, ‘நடனசபாபதி’ என என் பெயரைச் 
சொன்னதும்,என்னால் நம்பமுடியவில்லை.நல்ல 
மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் 
முதல் இடம் பெறுவேன் என நினைக்கவில்லை.எனக்கு 
ஆசிரியர் 80க்கு மேல் மதிப்பெண்கள் கொடுத்திருந்தார். 
வழக்கமாக முதலில் வரும் நண்பர்களை விட அதிக 
மதிப்பெண்கள் பெற்றது எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.
ஆனால் என் அண்ணனிடம் எனது மதிப்பெண்களைப்பற்றி 
சொன்னபோது அவர் ஒன்றும் சொல்லவில்லை.
 
ஒருவேளை பாராட்டினால் நான் அடுத்து வரும் 
தேர்வுகளில் சுணக்கமாக இருந்துவிடுவேன் என்று 
நினைத்திருப்பார் போலும். 
பெற்ற முதல் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற 
வெறியோடு, அரை ஆண்டுத்தேர்விலும்,(அதை 
Selection தேர்வு என்பார்கள்) கணிதத்தேர்வை நன்றாக
செய்ததால்,89 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைத்
தக்க வைத்துக்கொண்டேன். 
பள்ளி இறுதி ஆண்டு  கணிதத்தேர்வை நன்றாக செய்யத் 
திட்டமிட்டு பல கணக்குகளைப் போட்டு பயிற்சி 
எடுத்துக்கொண்டேன்.அந்த தேர்வில், ஒரு Rider வினாவில்‘ஒரு கோடு ஒரு வட்டத்தை 
இரண்டு புள்ளிகளில் தொடும்போது’என ஆரம்பித்து 
வினா கொடுத்திருந்தார்கள். நான் அதற்கு‘ஒரு 
கோடு ஒரு வட்டத்தை ஒரு புள்ளியில் தொடும் 
அல்லது இரண்டு இடங்களில் வெட்டும்.எனவே 
இந்த கேள்வி தவறு’ என எழுதினேன்.
 
தேர்வை நன்றாக முடித்து வெளியே வந்த போது, 
வெளியே என் அண்ணன் காத்திருந்தார்.நான் அந்த 
கேள்விக்கு பதில் எழுதியது பற்றி சொன்னதும்,அவர் 
‘ஏன் அந்த கேள்வியை எடுத்தாய்.உன் பதில் சரி 
என்றாலும்,திருத்துபவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ?
6 மதிப்பெண்கள் உள்ள கேள்வியாயிற்றே.’ 
என்று கடிந்துகொண்டார். 
ஆனால் பின்னால் இந்த தவறை கல்வியாளர்கள் 
சுட்டிக்காட்டியதும், மாணவர்கள் அந்த கேள்வியின் 
எண்ணை எழுதி பதில் ஏதும் தராமல் வெறுமே 
விட்டிருந்தாலும் முழு மதிப்பெண்கள் தரலாம் 
என அரசு அறிவித்தது.  
தேர்வு முடிவுகள் வந்தபோது,கணிதத்தில் 100க்கு 86 
மதிப்பெண்கள் பெற்று நானே வகுப்பில் முதல் இடம் 
பெற்றிருந்தேன்.  
ஆனால் மாவட்ட(அப்போதைய தென் ஆற்காடு 
மாவட்டம்) அளவில் கணிதத்தில் முதலிடம் 
பெறுவோருக்கு பரிசு உண்டாம். பள்ளி அளவில் 
நான் முதல் இடம் பெற்றிருந்தாலும், மாவட்ட 
அளவில் இரண்டாம் இடத்தை பெற்றதால், 
முதல் இடம் பெறுபவருக்கான பரிசை தவற 
விட்டுவிட்டாதாக என் அண்ணன் சொன்னபோது, 
வருத்தப்பட்டேன்.   
கணித பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் 
வாங்கியதற்கு என் அண்ணன் தந்த பயிற்சி தான் 
காரணம் என்பதை இப்போதும் பெருமையோடு 
சொல்லுவேன். 
நினைவுகள் தொடரும் 
வே.நடனசபாபதி
முதலாவதாக வரவேண்டும் என்ற இந்த வெறிதான் உங்களை வெற்றிகளைக் குவிக்க வைத்திருக்கிறது.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குநினைவோட்டம் எண்கள் 50 to 53 மிகவும் சரியான கருத்துகளை தாங்கி பதிக்கப்பட்டுள்ளன. சரியான ஆசிரியர் முறையாக மனோதத்துவ முறையில் படம் புகட்டினால் Lord Macaulay அவர்கள் கூட ( Lord Macaulay , father of Indian penal code , ) கணிதத்தில் ஆர்வம் காட்டியிருப்பார். இவருக்கு கணிதம் என்பது எட்டிகாய் போல ... ஒரு முறை கணிதத்தின் மேல் இருந்த ஆர்வமின்றி காரணமாக தன்னை நடமாடும் Logritham table போல உணர்வதாக கூறியவர் .
பதிலளிநீக்குநிற்க , தங்கள் அண்ணன் போதித்த முறை காட்டிய வழி சரியான ஒன்றே . ஆசிரியர் மீண்டும் எப்போது வருவார் என்று மாணவர்கள் எப்போது ஏங்க துவங்குகிரார்களோ அப்போதே அந்த ஆசிரியர் வெற்றி அடைந்து விட்டார் என்று கொள்ளலாம் .
மன உளைச்சலுக்கு ஆளான தங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கணிதத்தில் முதல் இடம் பிடித்தது, படிக்கும் பொது மகிழ்ச்சியாக இருந்தது .
பல பிரபலங்கள் இதே போல் துவண்டு விடாமல் மிக உயர்ந்த நிலை அடைந்த சம்பவங்கள் பல உண்டே . திரை உலகத்தை எடுத்துக்கொண்டால் , நடிப்பிற்கே இலக்கணம் வகுத்த சிம்மகுரலோன் முதல் , கனவு கன்னியாக வலம் வந்த ஹேமமாலினி முதல் நமது ஜெய்சங்கர் முதல் பலரை குறிப்பிடலாம் . ஏது ஏது என்னையும் திரை உலக செய்திகள் கூறும் நோய் பற்றிக்கொண்டு விட்டதே !
சுருக்கமாக கூற வேண்டு மென்றால் very inspiring .. வாசுதேவன்
வருகைக்கும், விரிவான தங்களது கருத்துக்கும்,நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.
பதிலளிநீக்குநினைவோட்டம் பார்த்தேன் ,மிக்க நன்று ! பதிவுக்கு நன்றிகள் .
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நடா சிவா அவர்களே!
பதிலளிநீக்கு