புதன், 14 ஆகஸ்ட், 2013

நினைவோட்டம் 68திருச்சி புனித வளவனார் கல்லூரியிலிருந்து,சேர்க்கை அட்டையோடு 
கல்லூரி திறக்கும் நாள் மற்றும் கல்லூரிக்கு கட்டவேண்டிய தொகை 
குறித்த கடிதம் வந்ததும் புதிதாய் வாங்கிய பெட்டியில் எல்லாவற்றையும் 
எடுத்து வைத்துக்கொண்டு, கல்லூரி திறக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு 
முன்னதாகவே திருச்சிக்கு செல்ல தயாரானேன்.

ஏற்கனவே கண்டிப்புக்கு பெயர் போன புனித வளவனார் கல்லூரியில், 
எனது மாமன் மகன்களும் பெரியம்மா மகனும் படித்திருந்ததார்கள். 
அதனால் அந்த கல்லூரியின் கற்பிக்கும் முறையும், ஆசிரியர்கள் 
கண்டிப்பாக இருந்ததால் அங்கு படிக்கும் மாணவர்கள் கட்டுப்பாடுடன் 
இருப்பார்கள் எனத் தெரியுமாதலால் அங்கே எனக்கு இடம் கிடைத்தது 
குறித்து வீட்டில் அனைவருக்கும் சந்தோஷமே.

நான் படித்த அந்த கல்லூரியில் பெற்ற அனுபவம் பற்றி விரிவாக பின்னால் எழுத இருக்கிறேன் என்றாலும் புனித வளவனார் கல்லூரி பற்றிய ஒரு சிறிய 
அறிமுகத்தை இங்கு தரலாம் என நினைக்கிறேன்.

திருச்சி புனித வளவனார் கல்லூரி நான் பிறப்பதற்கு 100 ஆண்டுகள் 
முன்பே, தொடங்கப்பட்ட பழமையான கல்லூரியாகும். 1844 ஆம் ஆண்டு  
Fathers of Society of Jesus (The Jesuits) ஆல் நாகப்பட்டினத்தில் 
தொடங்கப்பட்ட இந்த கல்லூரி ,1866 ஆம் ஆண்டுதான் சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டதாம். பின்னர் 1883 ஆம் ஆண்டுதான் திருச்சிக்கு 
மாற்றப்பட்டதாம்.

(தற்சமயம் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக  திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்)

முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.அப்துல்கலாம் அவர்கள், எழுத்தாளர்கள் சுஜாதா, சாண்டில்யன், நடிகர்கள் அசோகன், நெப்போலியன்  திரைப்பட இயக்குனர்கள் வசந்த், பிரபு சாலமன், நீதிபதி அசோக் குமார் போன்ற பிரபலங்கள் படித்ததும் இந்த கல்லூரியில் தான்.

ஊருக்கு செல்லும் நாள் வந்ததும், எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் டவுன்
இரயில் நிலையம் வரை எங்கள் வீட்டு மாட்டுவண்டியில் பயணம் செய்து, 
அங்கிருந்து மதியம் செல்லும் பாசஞ்சர் இரயிலில் திருச்சி சந்திப்பு சென்றேன். அண்ணன் வீட்டிற்கு சென்ற வழி தெரியுமாதலால், அங்கிருந்து ஒரு வாடகை மாட்டுவண்டியில் ஏறி வீடு போய் சேர்ந்தேன்.

(அப்போதெல்லாம் திருச்சி சந்திப்பில் மாட்டுவண்டிகளும் வாடகைக்கு 
கிடைக்கும்)

மறுநாள் காலை கல்லூரிக்கு சென்று சேர்க்கைத் தொகையை கட்ட கிளம்பினேன். எனக்கு அண்ணன் வீட்டிலிருந்து புனித வளவனார் கல்லூரிக்கு எந்த பேருந்தில் செல்வது எனத் தெரியாததால், எனது மாமா மகனான திரு சீனிவாசன் அவர்களும் கல்லூரி போய் வர வழி காட்ட கூட வந்தார்.

மின் வாரிய துணை மின் நிலைய வளாகம் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று காத்திருந்தோம். அங்கு  இரயில் சந்திப்பிலிருந்து 
உறையூர் வழியாக Main Guard Gate செல்லும் பேருந்து வந்ததும், அதில் ஏறி 
கோட்டை இரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் தாண்டியவுடன் 
மாதா கோவிலின் மதிற் சுவரை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்தத்தில் 
இறங்கினோம்.

அப்போதெல்லாம் அங்கு கடைகள் ஏதும் கிடையாது. (இப்போது மாதா 
கோவில் நிர்வாகமே மதிற் சுவரை இடித்துவிட்டு வரிசையாய் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.)

மாதா கோவிலைத் தாண்டி கல்லூரியை அடைந்து அலுவலகத்தை அடைந்தோம். அங்கு என்னைப்போலவே கட்டணம் கட்ட வந்தவர்கள் கூட்டம் 
இருந்தது. வரிசையில் காத்திருந்து, எனது சேர்க்கை அட்டையை 
காண்பித்து, கட்டணத்தைக் கட்டினேன்.

அலுவலகத்தில் இருந்த எழுத்தர் பணம் பெற்றுக்கொண்டதற்கான வரவுச் சீட்டைக் கொடுத்துவிட்டு, இதில் குறிப்பிட்டுள்ள D. No. ஐ நினைவில் 
கொள்ளுங்கள். என்று கூறினார். அப்போது இருந்த மகிழ்ச்சியான மன நிலையில் அதனுடைய முக்கியத்துவத்தை அப்போது உணர வில்லை!

திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து வரும் பேருந்துகள் நாங்கள் இறங்கிய 
இடத்திலிருந்து Main Guard Gate  தாண்டி சென்று நின்றுவிட்டு, ஒரு வழிப்பாதை காரணமாக இப்ராஹிம் பூங்கா வழியாக, திரும்ப திருச்சி சந்திப்பு 
செல்ல, Holy Cross கல்லூரியை அடுத்து இருந்த பேருந்து நிறுத்தம் 
வழியாக வருமாதலால், வீட்டிற்கு திரும்ப அங்கு காத்திருந்து, வந்த 
பேருந்தில் ஏறி வீடு திரும்பினோம்

கல்லூரி திறந்த அன்று, அண்ணியார் செய்து கொடுத்த மதிய உணவுப் பொட்டலத்தையும், முதல் நாள் என்பதால் ஒரே ஒரு நோட்டு புத்தகத்தையும், 
ஒரு பையில் வைத்துக்கொண்டு காலையில் 9 மணிக்கே பேருந்து நிலையம் 
சென்று, பேருந்தில் ஏறி கல்லூரியை 9.30 மணிக்கு அடைந்தேன்.

கல்லூரி அறிவிப்புப்பலகை அருகே ஒரே கூட்டம். என்னவென்று 
விசாரித்ததில் மாணவர்களின் எடுத்துள்ள Group படி பிரித்து வகுப்புக்கள் ஒதுக்கியிருப்பதாகவும். அந்த வகுப்புக்கள் எந்தெந்த வகுப்பு அறையில் 
நடக்கும் என தட்டச்சு செய்து ஒட்டியிருப்பதாக சொன்னார்கள்.

Group மற்றும் மாணவர்களின் பெயரைப்போட்டு வகுப்பு அறை எண் 
போட்டிருப்பார்கள் என நினைத்துக்கொண்டு, எனது பெயர் எங்குள்ளது என 
அறிவிப்புப் பலகையைப் பார்த்தபோது தூக்கிவாரிப்போட்டது. அங்கே பெயரையும் Group யும் போடாமல் வெறும் D.Number ஐ மட்டும் போட்டு, 
வகுப்பு அறை எண்ணைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது. கல்லூரிக் கட்டணம் கட்டும்போது அந்த 
எழுத்தர் D. No. ஐ நினைவில் வைத்துக்கொள்ள சொன்னது. எல்லோரும் கட்டணம் செலுத்திய வரவு சீட்டைக் கொண்டு வந்திருந்ததால், அவர்களது அறை எண்ணைக் கண்டுபிடித்துப் போய்க்கொண்டிருந்தார்கள். நானோ அந்த 
வரவு சீட்டையும் கொண்டு செல்லவில்லை. அந்த எண்ணையும் நினைவில் வைத்திருக்கவில்லை.

எனக்கு என்ன செய்வது எனத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். 
யாரையாவது கேட்கலாம் என நினைத்தால் அவரவர்கள் தங்கள் அறை 
எண்ணைத் தேடும் வேலையில் மும்முரமாய் இருந்தார்கள். அப்பொது கூட 
அலுவலக அறைக்கு சென்று விசாரிக்கலாம் எனத் தோன்றவில்லை.

அதற்குள் நேரம் 10 மணியை நெருங்கிவிட்டபடியால், வகுப்புத் தொடங்கும் 
மணியை அடித்து விட்டார்கள். அவ்வளவுதான் கூட்டம் முழுதும் திடீரென 
கலைந்து செல்ல, நான் மட்டும் தன்னந்தனியாய் அந்த அறிவிப்புப் பலகையின் 
முன் செய்வதறியாது நின்றிருந்தேன்.    


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

16 கருத்துகள்:

 1. அப்பொது கூட
  அலுவலக அறைக்கு சென்று விசாரிக்கலாம் எனத் தோன்றவில்லை.

  யாரையாவது கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! தெரியாதவர்களிடம் கேட்க தயங்கியதால்தான் கேட்கவில்லை.

   நீக்கு
 2. அதுசரி, அட்மிஷன் நாள் அன்று வந்தவர்களில, உங்கள் குரூப் சேர்ந்த யாரையும் நண்பராக்கிக் கொள்ளவில்லையா? இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கலாம், ஆனால் அன்று வயிற்றில் புளியைக் கரைத்திருக்குமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N. பக்கிரிசாமி அவர்களே! அங்கிருந்தவர்களில் யார் எனது Group ஐ சேர்ந்தவர்கள் எனத் தெரியாததால் அவர்களிடம் பேசவே தயங்கினேன். கல்லூரிக்கு சென்றவுடன் ஏற்பட்ட முதல் நாள் பயம் கூட காரணமாக இருந்திருக்கலாம். உண்மையில் இப்போது நினைத்தால் சிரிப்புக்த்தான் வருகிறது.

   நீக்கு
 3. அடப்பாவமே!அப்புறம் எப்படி வகுப்புக்குப் போனீர்கள் என்று தெரிந்து கொள்ளக்காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கு நன்றி திரு குட்டன் அவர்களே!

   நீக்கு
 4. நினைவுகள்.... தொடரினை இப்போது தான் படிக்கிறேன்.... மற்ற பகுதிகளையும் முடியும்போது படிக்கிறேன்...

  கல்லூரியில் சேர்ந்து முதல் நாள் அனுபவம்.....

  D.NO. மறந்து போய்விட்டதா.... பிறகு என்ன ஆயிற்று.... காத்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நேரம் கிடைக்கும்போது எனது மற்ற பகுதிகளையும் படிக்க இருப்பது அறிந்து மகிழ்ச்சி. அப்புறம் என்னவாயிற்று என்பது அடுத்த பதிவில்!

   நீக்கு
 5. ஐயையோ, அப்புறம்?

  நானும் இப்படித்தான், முதல் நாள் zoology practical வகுப்பை கோட்டை விட்டு விட்டு அப்புறம் படாத பாடு பட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! அப்புறம் என்னவாயிற்று என்பதை அடுத்து பதிவிட இருக்கிறேன்.

   நீக்கு
 6. கல்லூரியில் சேர்ந்த நாட்களில் நடந்தவற்றை இத்தனை ஆண்டுகள் கழித்து அதுவும் பேருந்து நீங்கள் இறங்கவேண்டிய இடத்தை தாண்டி சென்றதையும் கூட நினைவில் வைத்து எழுதுவது என்பது உங்களுடைய அபார நினைவாற்றலையும் அதையும் கூட சுவாரஸ்யம் குன்றாமல் அளிக்கவல்ல உங்களுடைய எழுத்தாற்றலையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! ஒரு சில நிகழ்வுகள் எத்தனை ஆண்டுகளானாலும் நினைவில் தங்கிவிடும்அல்லவா? அப்படி நினைவில் உள்ளவைகளைத்தான் திரும்பக் கொண்டு வந்து எழுதுகிறேன்.

   நீக்கு
 7. அப்போதெல்லாம், திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி, கல்லூரி என்றாலே கண்டிப்பு என்று பெயர். இந்த கண்டிப்பு பயத்தினை உங்கள் மனதில் யாரோ சொல்லிச் சொல்லி அதிக பயம் உண்டாக்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு என்ன செய்வது எனத்தெரியாமல் விழித்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும். கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!அப்போது நான் விழித்துக்கொண்டு நின்றதன் காரணம் பயம் மட்டுமல்ல ஆங்கிலத்தில் பேச ஏற்பட்ட தயக்கமும் தான்.

   நீக்கு
 8. Such oversights are common especially at that age and due to the excitement caused by the event. Be that as it may, it is amazing that you are able to recall all events minutely despite the distance of time. Your style of narration is unique and I am tempted to compare the same with Manians' style in tamil ( owner of Idayam pesugirathu Tamil Weekly).Vast and minute details yet interesting ... How did u then manage without D.No. Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! என் பேரில் உள்ள அன்பால், என்னை எழுத்தாளர் திரு மணியன் அவர்களோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அவர் அளவுக்கு நான் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. எப்படி அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டேன் என அறியக் காத்திருங்கள்!

   நீக்கு